Published:Updated:

அஜித்தின் ‘துணிவு' பட போஸ்டர் தாக்கம் - பழைய 10 ரூபாய்க்குப் பிரியாணி; அட்டகாசம் செய்யும் ரசிகர்!

அஜித் ரசிகரின் ஹோட்டல்

"என் ஹோட்டலில் வேலை பார்க்கும் 44 பேரும் அஜித் ரசிகர்கள்தான். அவர் நடித்த படங்களின் பாடல்களைப் போட்டுக் கேட்டுக் கொண்டேதான் அனைவரும் வேலை செய்கிறோம்." - காளிதாஸ்

அஜித்தின் ‘துணிவு' பட போஸ்டர் தாக்கம் - பழைய 10 ரூபாய்க்குப் பிரியாணி; அட்டகாசம் செய்யும் ரசிகர்!

"என் ஹோட்டலில் வேலை பார்க்கும் 44 பேரும் அஜித் ரசிகர்கள்தான். அவர் நடித்த படங்களின் பாடல்களைப் போட்டுக் கேட்டுக் கொண்டேதான் அனைவரும் வேலை செய்கிறோம்." - காளிதாஸ்

Published:Updated:
அஜித் ரசிகரின் ஹோட்டல்
நடிகர் அஜித் குமாருக்குப் பெருமளவில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர் துப்பாக்கிப் பயிற்சி, பைக் ரைடிங் என எங்குச் சென்றாலும் பின்தொடரும் ரசிகர்கள் அவரைக் கொண்டாடித் தீர்க்கின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தீவிர அஜித் ரசிகர் ஒருவர் நடத்தும் ஹோட்டல்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஏன் எதனால் என்பதை அறிய சின்னமனூர் சென்றோம்.

சாரல் மழையின் ஊடே பயணித்து மேகங்கள் தழுவிச் செல்லும் மலை அடிவாரமான மேகமலை செல்லும் பிரிவில் 'வீரம்' ஹோட்டல் என்ற பெயர்ப் பலகையில் முறுக்கு மீசையுடன் சிரித்த முகத்தில் இருக்கும் அஜித் இருகரம் கூப்பி நம்மை வரவேற்கிறார். 

காளிதாஸ்
காளிதாஸ்

வீரம் ஹோட்டல் உரிமையாளரும், அஜித் ரசிகருமான காளிதாஸிடம் பேசினோம். "அப்பா பால் வியாபாரம் செய்து வந்ததால் சிறுவயதிலிருந்தே அவருடன் சேர்ந்து பால் வியாபாரத்தில் ஈடுபட்டேன். சொந்தமாக 13 மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்தோம். அப்போது செழியன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, ரியல் எஸ்டேட் தொழிலிலும் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கினேன். இதற்கிடையே திருமணம் முடிந்து இரு குழந்தைகள் பிறந்தன.

ஹோட்டல்
ஹோட்டல்

ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் போது பல்வேறு இடங்களில் உணவு சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நிறையப் பணம் கொடுத்தும் மனம் நிறைவாகச் சாப்பிட முடியாத நிலை இருந்தது. இப்படிக் குறைபட்டுக் கொள்வதற்குப் பதிலாக நாமே ஏன் குறைந்த விலையில் தரமான உணவை வழங்க ஹோட்டல் தொழில் செய்யக் கூடாது என்ற எண்ணம் உருவானது. 

சிறுவயதிலிருந்து நடிகர் அஜித் படங்கள் என்றால் விரும்பி பார்ப்பேன். தொடர்ந்து அவருடைய படங்கள் தோல்வியைச் சந்தித்த நிலையில் 'தீனா' போன்ற படத்தின் மூலம் மிரட்டலான வெற்றியைப் பதிவு செய்தார். அந்தக் காலகட்டத்தில் நானும் வாழ்க்கையில் சில சறுக்கல்களைச் சந்தித்தேன். நடிகர் அஜித்தை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு உழைக்கத் தொடங்கினேன்.

பழைய ரூபாய் நோட்டுகள்
பழைய ரூபாய் நோட்டுகள்

அவர் நடித்த படங்களில் அறிவுரை கூறுவது போன்ற தன்னம்பிக்கை வசனங்கள் என்னை மிகவும் ஈர்த்தன. குறிப்பாக 'எண்ணம் போல் வாழ்க்கை', 'வாழு வாழ விடு', 'நம்முடன் இருப்பவர்களைப் பார்த்துக்கொண்டால் நம்மை மேலே இருப்பவர் பார்த்துக்கொள்வார்' போன்ற வசனங்கள் என்னுள் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தின. 

இதனால் 'வீரம்' என்ற பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் 'வலிமை' படம் வெளியான அன்று ஹோட்டலைத் திறந்தேன். முதலில் ஒரு ரூபாய் டீ, ஐந்து ரூபாய்க்குப் பரோட்டா, 60 ரூபாய்க்குப் பிரியாணி வழங்கினேன். இதையடுத்து பழைய சோறும் பச்சை மிளகாயும், 3 வகை கருவாடும் 99 ரூபாய்க்குக் கொடுத்தேன். இந்த மாதிரியான அறிவிப்புகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தன.

காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பரிசுப் பொருள்கள்
காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பரிசுப் பொருள்கள்

நான் 10-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள போதிலும் ஹோட்டல் என்னுடைய ஐடியாவில் வடிவமைக்கப்பட்டது. குடும்பங்கள் தனித்தனியாக அமர்ந்து சாப்பிட வசதியாகக் குடில்கள் அமைத்தேன். அந்த குடில்களுக்கு அமர்க்களம், ஆசை, அட்டகாசம், ரெட், முகவரி என அஜித் நடித்த படங்களின் பெயரைச் சூட்டினேன். மேலும் ஹோட்டலில் எங்கு் திரும்பினாலும் அஜித் படப் பேனர்களையும், ஓவியத்தையும் வரைந்து வைத்தேன். என் ஹோட்டலில் வேலை பார்க்கும் 44 பேரும் அஜித் ரசிகர்கள்தான். அவர் நடித்த படங்களின் பாடல்களைப் போட்டுக் கேட்டுக் கொண்டேதான் அனைவரும் வேலை செய்கிறோம். 

முதலில் ‘இது என்ன முட்டாள்தனம்‘ என்று பேசிய என் நலம்விரும்பிகள் போகப்போக அஜித் மீது நான் கொண்டுள்ள பிரியத்தைப் புரிந்து கொண்டனர். அஜித் பிறந்த தினமான மே 1-ம் தேதி இலவச கண் பரிசோதனை முகாம், முழு உடல் பரிசோதனை முகாம், ரத்ததான முகாம்களை நடத்தி வருகிறேன். தினந்தோறும் 60 ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறேன். என்னுடைய பேக்கரிக்குத் தேவையான அனைத்து பொருள்களையும் நாங்களே தயார் செய்கிறோம். அதன் பேக்கிங்கில் கூட அஜித் படத்தை இடம்பெறச் செய்கிறேன். 

ஹோட்டல் ஊழியர்களுடன் காளிதாஸ்
ஹோட்டல் ஊழியர்களுடன் காளிதாஸ்

தற்போது அஜித் நடிக்கும் 61-வது படமாக 'துணிவு' விரைவில் வெளியாக உள்ளது. அதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பழைய ரூபாய் நோட்டு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே பழைய 10 ரூபாய் நோட்டுகளைக் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அந்த விலைக்கே பிரியாணி வழங்கி வருகிறேன். தற்போது 500-க்கும் மேற்பட்டோடர் 10 ரூபாய் நோட்டு கொடுத்து பிரியாணி வாங்கிச் சென்றுள்ளனர்.

அதேபோல அஜித் நடித்த படங்களை வரிசைப்படுத்தி அவருடைய படங்களுடன் ஆல்பம் தயார் செய்து கொடுத்தால் ஒரு ரூபாய்க்குப் பிரியாணி வழங்குகிறோம். அஜித்தின் 61 படப்பெயர்களையும் வரிசைப்படுத்தி எழுதிக் கொடுப்பவர்கள் 61 ரூபாய் கொடுத்தால் பிரியாணி கொடுக்கிறோம். மேலும் தீபாவளியை முன்னிட்டு ஹோட்டலுக்கு வருவோர் 61 ரூபாய்க்கு மேல் சாப்பிட்டால் அவர்களுக்கு ஒரு கூப்பன் வழங்கப்படும். அதில் அவர்களின் விவரங்களைக் குறிப்பிட்டு வெளியே வைக்கப்பட்டிருக்கும் பரிசுப் பெட்டியில் போட்டுச் செல்லச் சொல்கிறோம்.

ஹோட்டல்
ஹோட்டல்

தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூப்பன்களைப் பூர்த்தி செய்து பெட்டியில் போட்டுச் சென்றுள்ளனர். அதில் குலுக்கல் முறையில் 61 பேரைத் தேர்வு செய்து பரிசுகள் வழங்க உள்ளோம். முதல் பரிசு பைக், இரண்டாம் பரிசு எல்.இ.டி டிவி, 3-ம் பரிசு சைக்கிள், 4-ம் பரிசு வாசிங் மெஷின் எனத் தரமான பரிசுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளேன். தற்போது குமுளி பைபாஸில் பெரிய ரெஸ்ட்ராண்ட் ஒன்றைத் தொடங்க உள்ளேன்.

காளிதாஸ்
காளிதாஸ்

அஜித் பெயரை விளம்பரத்திற்காகவும், வியாபார நோக்குடனும் பயன்படுத்தவில்லை. அவர் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாகவே பயன்படுத்துகிறேன். ரசிகர் மன்றத்தைக் கலைத்துவிட்டுப் படிப்பைப் பாருங்கள், வேலையைப் பாருங்கள், குடும்பத்தைப் பாருங்கள், படத்தைப் படமாக மட்டும் பாருங்கள் என்ற அஜித் குமாரை நடிகராகப் பார்க்கவில்லை நல்ல மனிதராகப் பார்க்கிறோம். அவரை நேரில் காணும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்" என்றார்.