'ஆடுகளம்', 'ஆரம்பம்','காஞ்சனா 2' ,போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமான நடிகை டாப்ஸி தற்போது இந்தியில் அதிக படங்களில் நடித்து வருகிறார்.
டாப்ஸி வெளியே போகும்போது ரசிகர்களும் ஊடகத்தினரும் புகைப்படம் எடுப்பதும் ,அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிப்பதும் வழக்கமாக ஒன்றாகவே இருந்து வருகிறது. பத்திரிகை புகைப்படக் கலைஞர்களிடம் டாப்ஸி அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் அவரை சமூக வலைதளத்தில் பலரும் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இதுகுறித்து டாப்ஸி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், "நான் கடந்த 10 வருடங்களாக இந்தி படங்களில் நடித்து வருகிறேன். எனது ஆளுமை பற்றி ஊடக பிரிதிநிதிகளுக்கு தெரியும், படப்பிடிப்பில் மட்டுமே நான் கேமரா முன் நிற்பேன்.

நான் வீட்டை விட்டு வெளியே வரும்போது மற்றவர்கள் என்னைப் புகைப்படம் எடுப்பதை நான் விரும்பவில்லை. சில நேரங்களில் கார் கண்ணாடி முன் கேமராவை வைத்து வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். எனக்கு அது பிடிக்கவில்லை. நான் நடிகையாக இருந்தாலும் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. நான் எந்த ஒரு பாதுகாவலரும் இல்லாமல்தான் தெருக்களில் நடக்கிறேன். அதற்காக என் சுதந்திரத்தைப் பறிப்பதை அனுமதிக்க முடியாது. நடிகையாக இருப்பதால் மோசமான விஷயங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. என்னை கேமராவுடன் பின் தொடர்கிறீர்களே, நான் என்ன மிருகக் காட்சிசாலையில் உள்ள மிருகமா?" என்று டாப்ஸி என்று கோபமாக பேசியுள்ளார்.