Published:Updated:

ஒரே நாடு... ஒரே குழந்தை... 60,000 கொலைகள்!

‘ஒன் சைல்டு நேஷன்’ படத்தை சீன ஊடகங்கள் தவிர்ப்பது சீன அரசின் கோபத்தை சம்பாதித்து விடக் கூடாது என்பதால்தான்.

பிரீமியம் ஸ்டோரி
சீன ஊடகங்கள் இந்த ஆண்டு ஆஸ்கர் இறுதிச்சுற்றை அடைந்த 14 ஆவணப் படங்களின் பட்டியலை வெளியிட்டன. உண்மையில் அந்தப் பட்டியலில் 15 படங்கள் இருந்திருக்க வேண்டும். ‘ஒன் சைல்டு நேஷன்’ என்ற சீனாவைப் பற்றிய படத்தையே ஒதுக்கிவிட்டார்கள்.

90 நிமிடப் படத்தை இயக்கிய நான்ஃபூ வாங், லிங் ஜாங் ஆகிய இரு பெண்களும் ஆவணப் படம் எடுப்பதில் புகழ்பெற்றவர்கள். பிறப்பால் சீனர்கள்; வசிப்பது அமெரிக்காவில். நான்ஃபூவின் ஆவணப்படங்கள் பல சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கின்றன. இவர்களது ‘ஒன் சைல்டு நேஷன்’ படத்தை சீன ஊடகங்கள் தவிர்ப்பது சீன அரசின் கோபத்தை சம்பாதித்து விடக் கூடாது என்பதால்தான்.

லிங் ஜாங், நான்ஃபூ வாங்
லிங் ஜாங், நான்ஃபூ வாங்

1970களில் சீனாவின் வருங் காலத்தைப் பல அரசியல் விமர்சகர்கள் எதிர்மறையாகக் கணித்தார்கள். ‘சீனாவில் மக்கள்தொகைப் பெருக்கம் இந்த விகிதத்தில் அதிகமானால் இன்னும் முப்பது ஆண்டுகளில் அதன் பொருளாதாரம் மண்ணோடு மண்ணாகிவிடும்’ என்றார்கள். உடனடியாக சீன அரசு 1980-ல் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்பதைத் தனது கொள்கையாக அறிவித்தது. ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை இனி பிறந்தாலும் அது சட்ட மீறல் என்றது. பதாகைகள், பாடல்கள், தீப்பெட்டி மற்றும் சீட்டுக்கட்டின் மேலுறைகள் அனைத்திலுமே சிறு குடும்பத்தால் ஏற்படும் நன்மைகள் சித்திரிக்கப் பட்டன.

நான்ஃபூ வாங் ஒரு சீனக் குடும் பத்தின் இரண்டாவது குழந்தையாகப் பிறந்தவர். (அவர் பிறந்தபோது, பிரசார நிலையில் இருந்த ‘ஒரு குழந்தை’ முழக்கம் பின்னர்தான் கடுமையான சட்டம் ஆக்கப்பட்டது).

‘ஒரு குழந்தை’ கொள்கை காரணமாக அங்கு மனித உரிமைகள் வேரோடு சாய்க்கப்பட்டன. இந்த ஆவணப்படத்தில் இன்றுவரை அதன் தாக்கம் எந்த அளவில் இருக்கிறது என்பதையும் அலசியிருக்கி றார்கள். இதற்காக சீனாவுக்குச் சென்று சம்பந்தப்பட்ட பலரையும் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டிருக்கிறார்கள். தேசியக் கொள்கை என்பது மனித உயிர்களைவிட முன்னுரிமை பெற்ற அவலத்தை இந்த ஆவணப்படம் தெளிவாக விளக்குகிறது.

ஒரே நாடு... ஒரே குழந்தை... 60,000 கொலைகள்!

அப்போதைய அரசில் இருந்த ஒவ்வொருவரும் இந்தக் குடும்பக் கட்டுப்பாட்டு விஷயத்தில் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டிருந்தார்கள். அந்தந்தப் பகுதி பெண்களுக்கு மாதச் சுழற்சி சரியாக வருகிறதா என்பது பற்றிய தகவல்களெல்லாம் திரட்டப்பட்டன. எந்தப் பெண்ணாவது கருவுற்று இருந்தால் அதை உடனடியாக அரசிடம் தெரிவிக்க வேண்டும். முதல் குழந்தை பிறந்த ஒரே மாதத்திற்குள் அவர்கள் நிரந்தரக் கருத்தடை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவார்கள். இதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலோ அல்லது வேறொரு நகரத்துக்கு ரகசியமாகச் சென்று அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டாலோ மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கட்டாயக் கருத்தடை நடத்தப்படும்.

இயக்குநர் நான்ஃபூவின் அம்மாவுக்குப் பிரசவம் பார்த்த செவிலியின் பெயர் ஹுவாரு யுவான். இவர் அந்தக் கால கட்டத்தைப் பற்றிக் கூறும்போது “சுமார் 60,000 கட்டாயக் கருச்சிதைவுக் கொலைகளை நான் செய்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என் கைகள் நடுங்கும். ஆனால் வேறு வழியில்லை. அது அரசின் கொள்கை அல்லவா?’’ என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘ஒரே குழந்தை’ கொள்கையைப் பல சீனர்கள் வெறுத்ததற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று ‘முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்துவிட்டால்?’ என்ற பயம்தான். சீனாவைப் பொறுத்தவரை ஆண், பெண்ணைவிட உயர்ந்தவன். எனவே, முதலில் பெண் குழந்தை பிறந்தால் அதை ‘எப்படியாவது’ வெளியே அனுப்பிவிட்டு மகனுக்காகக் காத்திருந்தார்கள்.

“என் சித்தப்பா தனக்குப் பிறந்த பெண் குழந்தையைக் கடைத்தெருவில் வைத்துவிட்டு வந்துவிட்டார். அந்தக் குழந்தை யாராலும் எடுத்துக்கொள்ளப்படாமல் இறந்துவிட்டது’’ என்கிறார் இயக்குநர். “அந்தச் செயலை நினைக்கும்போது இன்றுவரை என் மனது வலிக்கிறது’’ என்று ஆணவப்படத்தில் தெரிவிக்கிறார் அந்தச் சித்தப்பா.

ஒரே நாடு... ஒரே குழந்தை... 60,000 கொலைகள்!

“இந்த ஆவணப் படத்திற்காக நான் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டபோது அந்தக் காலத்தில் பல சீன அலுவலர்கள் மேற்படி கொள்கை காரணமாக லாபம் ஈட்டியதை அறிய முடிந்தது. சில மாகாணங்களில் அந்தப் பகுதியில் உள்ள பெண்கள் கருவுற்றது தெரியவந்தால்கூட அந்த அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். பிரசவம் நிகழவும் துணை நின்றனர். பிரசவமான பிறகு அந்தக் குழந்தையை அங்கிருந்து வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்று ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிடுவார்கள். “அந்தக் குடும்பம் ‘ஒரு குழந்தைக் கொள்கையை’ மீறியதால் அதை இங்கு கொண்டுவந்து விட்டுவிட்டோம்’’ என்பார்கள். அந்தக் குழந்தை பின்னர் சர்வதேச அளவில் யாருக்காவது பெரும் தொகைக்குத் தத்துக் கொடுக்கப்படும்.

ஒரே நாடு... ஒரே குழந்தை... 60,000 கொலைகள்!

ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் காவல் துறைக்குமிடையே ஓர் எழுதப்படாத ஒப்பந்தம் இருந்தது. “காவல் துறையினர், தெருவில் காணப்படும் பச்சிளம் குழந்தைகளை ஆதரவற்றோர் இல்லங்களில் விடுவார்கள். இது தொடர்பாக ஓர் அறிக்கையு​ம் வெளியிடப்படும். அந்தக் குழந்தைகள் பற்றிய விவரங்கள் மிகக் குறைவானவர்களே படிக்கும் நாளிதழில் குழந்தையின் புகைப்படத்தோடு வெளியிடப்படும். செய்தி வெளியான அறுபது நாள்களுக்குள் யாரும் குழந்தையை மீட்க வராவிட்டால் தத்துக் கொடுக்கப்படும். இதுதான் அந்த ஏற்பாடு. இப்படி 1,30,000 குழந்தைகள் தத்துக் கொடுக்கப்பட்டுள்ளனர்.

மனித உரிமை மீறப்பட்டது என்றெல்லாம் கூறினாலும் இன்றளவும் சீனாவின் மேற்படி கொள்கையை ஏற்றுக்கொள்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது மேற்படி ஆவணப்படம். இயக்குநர் நான்ஃபூவின் அம்மாவேகூட “அந்தக் கொள்கை அப்போது தேவைப்பட்டது. இல்லையென்றால் மனிதனை மனிதன் கொன்று தின்னும் அவலநிலை ஏற்பட்டிருக்கும்’’ என்கிறார். மேலும் “நான்ஃபூவுக்கு அடுத்ததாகப் பிறந்ததும் பெண் குழந்தை என்றால் அந்தக் குழந்தையைக் கூடையில் போட்டு மார்க்கெட்டுக்கு வெளியே வைத்துவிட்டு வந்திருப்போம்’’ என்கிறார்கள் அவரின் பெற்றோர்கள்.

“மேற்படி கொள்கை தங்கள் சமூகத்திற்குப் பெருந்தீங்கு விளைவித்தது என்பதைச் சீன அரசு ஒருகாலத்திலும் ஏற்றுக்கொண்டதே இல்லை’’ என்கிறார் இயக்குநர். இந்தத் திரைப்படம் பெருமளவு பேசப்படுவதால் சீனாவிலும் பலர் இதைப் பார்க்கிறார்கள், பதறுகிறார்கள் – ரகசியமாகத்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு