Published:Updated:

அன்பிற்கினியாள் - சினிமா விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு

அன்பு அறையில் மாட்டிக்கொண்ட பின்னர்தான் கதையே தொடங்குகிற உணர்வு தருவதால், அதுவரை வந்த காட்சிகள் அயர்ச்சியையே ஏற்படுத்துகின்றன.

பிரீமியம் ஸ்டோரி
க்கட்டான இடத்தில் மாட்டிக் கொண்டு உயிருக்காகப் போராடும் ஒரு பெண்ணை, அவள் எல்லோரிடமும் காட்டிய அன்பு எப்படி மீட்கிறது என்ற உணர்ச்சிப் போராட்டமே இந்த ‘அன்பிற்கினியாள்.’

நர்ஸிங் முடித்த அன்பிற்கினியாள் (கீர்த்தி பாண்டியன்) கனடா செல்லும் கனவுடன் வாழ்கிறார். கோச்சிங் க்ளாஸ், ஃபாஸ்ட் புட் கடை ஒன்றில் பார்ட் டைம் வேலை, அப்பாவுடன் செல்லச் சண்டைகள், காதலனுடன் டேட்டிங் என்று நீளும் வாழ்வில் ஒரு பிரச்னை எட்டிப்பார்க்கிறது. மனிதர்களின் மேல் அவர் கொண்ட கரிசனமும், அப்பாவின் பாசமும், காதலனின் போராட்டமும் ‘அன்பை’ மீட்கிறதா என்பதே இந்த சர்வைவல் கதையின் சாராம்சம்.

அன்பிற்கினியாள் - சினிமா விமர்சனம்

அப்பா அருண் பாண்டியனே தயாரித்து நடிக்க, மகள் கீர்த்தி பாண்டியனுக்கு நாயகி ‘அன்பாக’ படத்தையே தாங்கும் கனமான பாத்திரம். தொடக்கத்தில் சிறிது சறுக்கினாலும், குளிர்சாதன அறைக்குள் நடக்கும் போராட்டக் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். கடுங்குளிரில் துடிக்கும் உதடுகள், நகரக்கூட முடியாமல் கெஞ்சும் உடல்மொழி, மூக்கிலிருந்து வழியும் ரத்தம், அடிபட்ட கைகால்கள் எனப் பதைபதைக்க வைத்திருக்கிறார். இதற்கு ஏற்றவாறு ஒப்பனை செய்த ரோஷனின் உழைப்பும், அந்த அறையையே வித்தியாசக் கோணங்களில் வட்டமடிக்கும் மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவும் போராட்டத்தின் நம்பகத்தன்மையைக் கூட்டியிருக்கின்றன.

அப்பா சிவமாக அருண் பாண்டியன் ஈர்க்க மறுக்கிறார். சில ஜாலி கேலி காட்சிகளில் ஸ்கோர் செய்தாலும், மகளைக் காணாது பரிதவிக்கும்போது அவரின் நடிப்பு, எந்தவித உணர்ச்சியையும் கிளப்பாத செயற்கையான ஒன்றாகவே படுகிறது. அன்பின் காதலன் ‘டயானா’ சார்லஸாக வரும் பிரவீன் ராஜா தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். நெகட்டிவ் இமேஜில் வரும் சப்-இன்ஸ்பெக்டர், நல்லது செய்ய நினைக்கும் ஹெட்-கான்ஸ்டபிள், அன்பு நிறைந்த பக்கத்து வீட்டு மனிதர்கள், மால் வாட்ச்மேன், உடன் வேலை செய்யும் பெண்கள் என எல்லாக் கதாபாத்திரங்களும் கதைக்குள்ளே உலவுவது நல்ல எழுத்துக்கான சாட்சி.

அன்பிற்கினியாள் - சினிமா விமர்சனம்

அனா பென் நடிப்பில் மலையாளத்தில் ஹிட்டடித்த ‘ஹெலன்’ படத்தை ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் கோகுல். ஒரிஜினலின் காட்சியமைப்புகளைப் பெரிதாக மாற்றாமல் தமிழ்ப்படுத்தியிருந்தாலும் மலையாள நெடி எங்கும் இல்லாமல், ஒரு தமிழ்க் குடும்பத்தின் கதையாகவே இது இருப்பது சிறப்பு. ஜாவேத் ரியாஸின் பாடல்கள் ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசை பல்ஸைக் கூட்டியிருக்கிறது.

அன்பு அறையில் மாட்டிக்கொண்ட பின்னர்தான் கதையே தொடங்குகிற உணர்வு தருவதால், அதுவரை வந்த காட்சிகள் அயர்ச்சியையே ஏற்படுத்துகின்றன. சர்வைவல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, முதல் பாதியின் நீளத்தைச் சற்றே குறைத்திருந்தால், இந்த ‘அன்பிற்கினியா’ளுக்குக் கூடுதலாக ஹார்ட்டின் விட்டிருக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு