Published:Updated:

`எனக்கும் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது!' - தன் #MeToo அனுபவம் பகிர்ந்த அனுஷ்கா

Anushka
Anushka

"சினிமா துறையில் பட வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் எல்லா காலத்திலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது."

ஹாலிவுட்டில் ஆரம்பித்து பாலிவுட், கோலிவுட் என்று பலருடைய முகமூடியைக் கிழித்தெறிந்து நிஜ முகத்தை உலகுக்குக் காட்டியது மீ டூ ஹேஷ்டேக். சமூகத்தால் கொண்டாடப் பட்டவர்கள் தங்களுக்குக் கொடுத்த பாலியல் தொல்லைகளை இந்த ஹேஷ்டேக்கில் உலகம் முழுக்க பல பெண்கள் பகிர்ந்து கொண்டார்கள். கொரோனா, லாக்டெளன் போன்ற காரணங்களால் சமூக வலைதளங்களில் சத்தமில்லாமல் இருந்த மீ டூ ஹேஷ்டேக் மறுபடியும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த முறை மீ டூ ஹேஷ்டேகில் 'பாகுபலி' புகழ் அனுஷ்கா ஷெட்டியும், முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ராவும் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்கள்.

அனுஷ்கா ஷெட்டி
அனுஷ்கா ஷெட்டி

தன்னுடைய பேட்டியொன்றில், ''சினிமா துறையில் பட வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் எல்லா காலத்திலும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படி நடக்கவே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். நடிக்க வந்த புதிதில் எனக்கும் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அந்த அழைப்புக்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். அதன் பிறகு, யாரும் என்னைத் தொல்லை செய்யவில்லை'' என்றிருக்கிறார் நடிகை அனுஷ்கா ஷெட்டி.

நடிகை பிரியங்கா சோப்ராவோ, ''நான் மிஸ்.வேர்ல்டு பட்டம் பெற்ற பிறகு, சினிமாவில் நடிப்பதற்காக மேனேஜர் மூலமாக ஒரு டைரக்டரை சந்திக்கச் சென்றேன். அப்போது அவர், `உங்கள் உடல் கரெக்டான ஷேப்பில் இல்லை. உங்கள் மார்பகங்களையும் பின்பக்கத்தையும் சற்று பெரிதாக்கினீர்களென்றால் கரெக்டான ஷேப்புக்கு வந்து விடுவீர்கள். அப்போதுதான் உங்களுக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வரும்' என்று சொன்னார். அவர் சொன்னதையே அந்த மேனேஜரும் வழிமொழிந்தார். அதனால், அவர்கள் இருவருடனும் வேலைபார்க்க விருப்பமில்லாமல் வெளியேறிவிட்டேன்'' என்று கோபம் காட்டியிருக்கிறார்.

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா

அழகும் திறமையும் அமையப் பெற்ற நடிகைகளான அனுஷ்கா ஷெட்டி, பிரியங்கா சோப்ரா போன்றோரே ஆரம்ப காலத்தில் காஸ்ட்டிங் கவுச் பிரச்னையைச் சந்தித்திருக்கிறார்கள் என்ற அதிர்வலை தற்போது சோஷியல் மீடியாவெங்கும் பரவி வருகிறது.

சென்னை: மாணவிகள், பெண்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தொழிலதிபர் மகன்! - போலீஸாரிடம் சிக்கியது எப்படி?
அடுத்த கட்டுரைக்கு