Published:Updated:

எம்.ஜி.ஆரின் முட்டை போண்டாவும் பாதுஷாவும்...

ஏ.வி.எம் ராஜேஸ்வரி தியேட்டர்
பிரீமியம் ஸ்டோரி
ஏ.வி.எம் ராஜேஸ்வரி தியேட்டர்

பாக்கியம் சங்கர்

எம்.ஜி.ஆரின் முட்டை போண்டாவும் பாதுஷாவும்...

பாக்கியம் சங்கர்

Published:Updated:
ஏ.வி.எம் ராஜேஸ்வரி தியேட்டர்
பிரீமியம் ஸ்டோரி
ஏ.வி.எம் ராஜேஸ்வரி தியேட்டர்
யோசித்துப் பார்க்கிறேன். ஆச்சர்யமாகத் தானிருக்கிறது. அறிமுகமற்ற ஒரு மனிதன் என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறான். அவனும் நானும் ஒரே காட்சியைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

முடியவில்லைதான், உள்ளிருந்து ஒரு துளி கண்ணீர் எட்டிப்பார்த்து விடுகிறது. நல்ல இருட்டு என்பதால் யாரும் பார்த்திடா வண்ணம் துடைத்துக்கொள்கிறேன். பக்கத்திலிருக்கும் மனிதரும் அவ்வாறே துடைத்துக்கொள்கிறார். கண்ணீரின் விசும்பல் சத்தம் கொஞ்ச நேரத்தில் இருவருக்கும் வேறொரு காட்சியில் சிரிப்பாய் மாறி அதே கண்ணீர்த் துளி இம்முறை ஆனந்தமாய் வெளிப்படுகிறது.

திரையரங்குகளைவிட இப்படியான ஒருமித்த உணர்வுகளை வேறெங்கும் நாம் பார்த்துவிட முடியாது. ஆற்றுப்படுத்துவதற்கான இடமாகவே எனக்குத் திரையரங்குகள் இருந்திருக்கின்றன. எந்தச் சூழ்நிலையிலும் உங்களை நீங்கள் பொருத்திக்கொள்ளலாம். டிக்கெட் எடுக்கும்போது “இன்னா படம் மாமே...” என்று கேட்டால் “உள்ள போயி தூங்கத்தான போற... இன்னா படம்னு தெரிஞ்சுக்குனுதான் தூங்குவியா...? ச்சீபோ...” கலாய்த்து சிரிக்கும் டிக்கெட் கிழிப்பவர் அதே தியேட்டரில் எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்தே கிழித்துக் கொண்டிருக்கிறார். ‘இன்னாத்த படிச்சுக் கிழிச்சியோ’ என யாரும் சொல்லிவிடாதபடிக்கு வாழ்ந்துகொண்டிருப்பவர் நமது மாமு செங்கப்பன். ‘மகாராணி’ செங்கப்பன் என்றால் பேட்டை பிரசித்தம். பேட்டை சுறா பான வியாபாரிகளுக்கு ரஜினி, கமல் பட டிக்கெட்டை ஓசியில் கொடுத்து சுறா பானத்தை லபக்கிவிடும் வித்தைக்காரர். இவருக்குச் சற்றும் குறையாதவர்கள்தான் எம்.ஜி.ஆர், சிவாஜி. பெயர் என்னவோ ராமர் லட்சுமணன்தான். நாங்கள் வைத்த பெயர்தான் எம்.ஜி.ஆர், சிவாஜி. இரட்டையர்கள். ‘மகாராணி’ தியேட்டரில் ஸ்டால் வைத்திருப்பவர்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆரம்பத்தில் பேட்டையில் அரங்கு அமைத்து வேஷம் கட்டியவர்கள் என்று அம்மை சொல்லு வார். ரோஸ் பவுடரைக் குழைத்துக் கழுத்துவரை பெயின்ட் போல அடித்து மையினால் மீசை வரைந்து வாளைச் சுழற்றுபவர்களாம். அரங்கு ஓய்ந்து திரையரங்கு வந்தபின் முதலாளியிடம் அடம்பிடித்து இந்த ஸ்டாலை வாங்கினார்கள் என்பது எம்.ஜி.ஆர் - சிவாஜியின் முன்கதைச் சுருக்கம்.

மகாராணி
மகாராணி

அரங்கு இல்லையென விசனப்படாமல் திரையரங்கின் சலனத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டார்கள் எம்.ஜி.ஆரும் சிவாஜியும். ஸ்டாலை காலையில் சிவாஜி பார்த்துக் கொண்டால், மாலையில் எம்.ஜி.ஆர் கவனித்துக்கொள்வார். இருவரும் சேர்ந்தாற்போல பிரசன்னமாவது ரெண்டாம் ஆட்டத்தில்தான். ‘மகாராணி’ தியேட்டருக்கென்றே ஒரு விசேஷம் இருக்கிறதென்றால் அது எம்.ஜி.ஆர் ரசித்துப் போடும் முழு முட்டை போண்டாதான். அதற்காகவே புள்ளீங்களோடு ரெண்டாம் ஆட்டத்திற்கு வீட்டிற்குத் தெரியாமல் போய்விடுவோம். அந்த இரவிலும் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் முழு ஒப்பனையோடுதான் இருப்பார்கள். இரவில் மட்டுமா... இருவரையும் ஒப்பனையில்லாமல் ஒருதடவைகூட நாங்கள் பார்த்ததில்லை. ரோஸ் பவுடரைக் குழைத்து முகத்தில் வண்ணம் தீட்டுவதில் சிவாஜியைவிட எம்.ஜி.ஆர் பிரித்துவிடுவார். எம்.ஜி.ஆரின் முட்டை போண்டாவிற்கு எங்கள் நாக்கு அடிமை என்றால்... சிவாஜியின், பிய்த்தால் ஜீரா வழிந்தோடும் பாதுஷாவிற்குக் கொத்தடிமை என்றே சொல்லலாம். முட்டை போண்டா வானாலும், பாதுஷாவானாலும் முதலாளிக்கும் செங்கப்பனுக்கும், ஆப்பரேட்டருக்கும் முதல் போணி சென்றுவிடும்.

திரையரங்கம் என்பது கொண்டாட்டத்தின் மற்றுமொரு சொல். வாரந்தோறும் நடக்கிற திருவிழா. முதல்நாள் முதல் காட்சி பார்ப்பதென்பது பேட்டையின் கௌரவங்களில் ஒன்று. வஸ்தாதுகளுக்கு முறையாக டிக்கெட் சென்றுவிடும். தலைக்கு மேல் தலையாய் நடந்து டிக்கெட் வாங்கி சட்டையைப் பிழிந்து காயப்போட்டு வெற்றுடம்பில் வெறித்தனமாய் பார்த்துப்கொண்டிருக்கும்போது சிவாஜியின் பாதுஷாவின் மணம், இருண்டு கிடக்கும் அரங்கத்தின் கதவுகளின் சன்னமான ஓட்டைகளின் வழியே காற்றில் மிதந்து நாசியைக் கவ்வும். அப்போதுதான், “நிலா காயுது... நேரம் நல்ல நேரம்... நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்...” என்று தலைவன் காம பானங்களை அள்ளி வீசிக்கொண்டிருப்பார். அப்போது சிவாஜியின் பாதுஷாவா, கமலின் காம பானமா என்று நெளியும் தருணங்கள் எவ்வளவு அழகானவை!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பேட்டைகளின் தியேட்டர்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. வீட்டிற்குள் நுழைவதைப் போல அத்தனை இயல்பாய்ப் போய் உட்கார்ந்துகொள்வோம். பசிக்குமோ வென மம்மது கடை பிரியாணியைப் பொட்டலம் கட்டிக்கொண்டுபோய் இடை வேளையில் திரையின் முன்னால் இருக்கும் திண்டில் உட்கார்ந்து சாப்பிட்டுப் பசியாறிக் கொள்வோம். இப்படியெல்லாம் கட்டிக் கொண்டு வந்தால் வியாபாரம் நடக்காமல் போகுமென்று எம்.ஜி.ஆரோ சிவாஜியோ எப்போதும் நினைத்ததில்லை. ஏனென்றால், இருவரின் முட்டை போண்டாவுக்கும், பாதுஷாவிற்கும் தியேட்டருக்கு வெளியேயும் ஏக கிராக்கி உண்டு. “சரக்கு நல்லாருந்தா எங்கிருந்தாலும் தேடி வருவாண்டா...” என்றார் எம்.ஜி.ஆர்.

ஏ.வி.எம் ராஜேஸ்வரி தியேட்டர்
ஏ.வி.எம் ராஜேஸ்வரி தியேட்டர்

பாதுஷாவின் மாவை சுருதி பிசகாமல் பிசைந்துகொண்டிருக்கும் சிவாஜி தனது தெத்துப்பல் சிரிப்பில் அதை ஆமோதித்தார். “இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு... சாம்பல் மேடுகளும்... சூழும் புகை மண்டலமும்...” பஞ்சு போன்ற நுரையீரலைப் பிழிந்துகொண்டிருக்கும் காட்சி என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. “என்ன வாத்யாரே... படம் ஆரம்பிச்சுட்டான்... உள்ள போல?” அவித்த முட்டைகளை மேலுக்கு வலிக்காமல் ஓட்டை உரித்துக்கொண்டே என்னைப் பார்த்தார் எம்.ஜி.ஆர் “இன்ட்ரோல் வரைக்கும் பாத்ததுக்கே அவன்தான் எனக்குக் காசு தரணும்... இதுக்கு மேலயும் உள்ள போனன்னு வையி... நம்ம நொர டப்பாவப் புழிஞ்சிடுவானுங்க...” முழு முட்டைகளை ஒரு அன்னக்கூடையில் லாகவமாகப் போட்டதும் அதுவும் பதுவிசாகப் போய் சொன்ன இடத்தில் உட்கார்ந்து கொண்டது.

பம்ப் ஸ்டவ்வைப் பற்றவைத்துக் கொண்ட சிவாஜி பெரிய இரும்புக் கடாயை ஸ்டவ் மேல் வைத்தார். வனஸ்பதியை எடுத்து சூடான கடாயில் ஊற்றினார். பிடித்து வைத்த பாதுஷாவைக் கடாயினுள்ளே போட்டதும் அவனவன் வெளியே வந்தே ஆக வேண்டும். “ஏண்டா பையா... உங்காளு படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆவுதே... கட் அவுட்டுக்கு மொதலாளிகிட்ட சொல்லிட்டீங்களா...” வட்டமாய்ப் பிடித்திருந்த தலைவனை பதமாய் எண்ணெயில் நைஸாக உள்ளே தள்ளினார் சிவாஜி.

“அத ஏன் கேக்குற... போன தடவ அவனுங்க முப்பதடி கட்டவுட் வச்சி ஏரியாவ ஒரே குபார் ஆக்கிட்டானுங்க... அதான் நம்மாளு ரிலீஸுக்கு நாப்பதடி வச்சு மவன ஏரியாவ அந்தர் பண்ணலாம்னு யோசிச்சினுருக்கம்...” தக தகத்து ஊறி உப்பிக்கொண்டு வந்ததை ஒரு நீளக் கம்பியால் திருப்பிக்கொண்டே “அதெல்லாம் சரிதான்... லாட்ரி சீட்ட கொஞ்சமா போடுங்கடா... பெருக்குற கெய்வி இடுப்பு செத்துப்போவுது...” பொறுப்பாகப் பேசிய சிவாஜி தலைமுடியை மேலே தள்ளிக்கொண்டார். “அதெப்பிடி போன தடவ அஞ்சு மூட்ட லாட்ரி உட்றுகானுங்கோ... நாங்க ஒரு ஆறு மூட்ட கூட உடலன்னா... ஏரியால காறித்துப்ப மாட்டானுங்க... இன்னா எம்.ஜி.ஆரே...” கடலை மாவோடு கதகளியில் இருந்த எம்.ஜி.ஆர் சரிதான் என்பதாகத் தலையசைத்தார். “பையா செங்கப்பன் வரானா பாரு...” பாக்காமலே சிவாஜி சொன்னதும் செங்கப்பன் சரியாக பாதுஷாவிற்கு ஆஜராகிவிடுவார். “இன்னா சிஷ்யா பாதுசாக்கு வெயிட்டிங்கா...” செங்கப்பன் பட்டரையைப் போட்டு உட்கார்ந்துகொண்டார். “எம்.ஜி.ஆரே... இந்த வாரம் சரக்க கம்மியா போடு... படம் ஊத்திக்கிச்சு... அடுத்த வாரந்தான் கூட்டம் ஏறும்...” ஜீராவில் மிதந்துகொண்டிருந்த பாதுஷாவை வெறியோடு பார்த்தார் செங்கப்பன். “செங்கா, கவுன்சிலர் பொண்ணு உக்காந்துச்சாம்... எர்நூறு பாதுசா ஆர்டரு குத்தாப்ல அதான் போட்னுகிறன்...” சிவாஜி வேலையில் கருத்தாய் இருந்தார். “உங்களுக்கு இன்னாப்பா... உள்ளயும் தொழிலு... வெளியயும் தொழிலு... நம்மல்லாம் இங்க கிழிக்கலன்னா... வேற எங்கயும் கிழிக்க முடியாது...” தையல் இலையில் சூடாக குளு குளுவென பாதுஷா செங்கப்பனுக்கு வைத்துக் கொடுத்தார் சிவாஜி. எனக்கும்தான். பாதுஷாவின் ஒரு பக்கத்தைப் பிட்டு ஜீரா வழிய வாயில் போட்டேன். சூடும் சுவையுமாக அப்படியொரு ரசவாத சுவையை எம்.ஜி.ஆர் சிவாஜியைவிட வேறு யாரால் எனக்குத் தர முடியும்.

ஒருதடவை எம்.ஜி.ஆர்தான் கேட்டார் “இந்த உலகத்துல சகிப்புத்தன்மையான ஆளுனா நீ யார சொல்லுவ வாத்யாரே...” நான் யார் யாரையோ சொல்லிப் பாத்தேன். எம்.ஜி.ஆர் ஒத்துக்கொள்ளவேயில்லை. “நீதான்... சொல்லுயா” கடுப்பானதற்கு “படம் பாத்துகினுருக்கும்போது கரண்டு போயி ஸ்கிரீனு பிளாக்கானா அந்தப் பையா... இந்தப் பையான்னு ஆப்பரேட்டர் பரம்பரையையே வுட்டு ஆட்டுவீங்களே... அவ்ளோத்தையும் தொடச்சிப் போட்டுட்டு திரும்பவும் படத்தப் போடறானே... அவன விடவாடா...” என்று எம்.ஜி.ஆர் சிரித்தார். “ஆமால்ல” என்று ஆச்சர்யமானேன்.

இப்படியாகத்தான் சிரித்து அழுது சம்சாவிற்காக ஒருவனின் மண்டையை உடைத்து, ஒன்றுகூடி சாப்பிட்டு ருசித்து எப்போது தியேட்டருக்குள் சென்றாலும் உற்சாகத்தைத் தவிர வேறொன்றையும் தராத திரையரங்கம் என்பது நமது வாழ்வு முறைகளின் கலாசாரங்களில் ஒன்று. நூறு நாள்கள் ஒரு திரைப்படம் ஒரு தியேட்டரில் ஓடியிருக்கிறது என்றால், அந்தப் படமும் அந்த தியேட்டரும் அந்த நகரத்தின் துன்பத்தைக் கொஞ்சமாவது துடைத்திருக்கிறது என்றுதானே பொருள். வட்ட முகத்தில் ரோஸ் பவுடரைத் தடவி, கணக்காய் மீசை வரைந்து ஜம்மென்று நிற்கும் எம்.ஜி.ஆர், சிவாஜியை எப்போது பார்த்தாலும் உற்சாகம் மனதில் தோன்றும். நாம் ஒன்றுகூடி காணுகிற ஒரு கனவு திரையரங்கம். இப்போதுதான் சொன்னார்கள் மகாராணி தியேட்டரை மூடப்போகிறார்கள் என்று.

பேட்டையின் அடையாளத்தில் ஒன்று இல்லாமற்போகிறது. இல்லாமற்போவது கட்டடம்தானே தவிர ஒருபோதும் நினைவின் சித்திரங்கள் அல்ல. நமக்கான தியேட்டர்கள் நம்மை விட்டுச் சென்றுகொண்டிருக்கின்றன. வெறும் பொழுதுபோக்கு என்று தியேட்டரைச் சொல்லிவிடாதீர்கள். எல்லோரின் பொழுதையும் சந்தோஷக் களிம்புகளால் தடவி, துன்பத்தை ஆற்றுப்படுத்துவது ஒன்றும் சாதாரண காரியமல்ல.

இல்லாமற்போவதற்கு முன்னால் ஒரு தடவை பார்த்துவிட்டு வரலாமென்று தோன்றியது. அப்போதுதான் ஒரு உதவி இயக்குநரிடமிருந்து போன் வந்தது. “அண்ணே ஏ.வி.எம் ராஜேஸ்வரி தியேட்டர குளோஸ் பண்ணிட்டாங்கண்ணே... எந்தப் படமா இருந்தாலும் அறுபது ரூபால பாத்துடலாம்... அதையும் மூடிட்டாங்க... ப்ச்...” என்றார். பதிலுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் போனை வைத்துவிட்டேன். வெறுமை சூழ்ந்து நடந்து சென்றேன். மகாராணி தியேட்டரைப் பார்த்தபோது தேரை இழுத்துத் தெருவில் விட்டதுபோல் வெறிச்சோடி இருந்தது. எத்தனையோ சப்தங்கள் என்னுள் எழுந்தது. அங்கிருந்து நகர்ந்தேன். காற்றில் மிதந்துகொண்டு வந்தது. வட்ட வட்டமாய் ஜீரா வழிந்தோடும் சிவாஜியின் பாதுஷாவும். எம்.ஜி.ஆரின் மொறு மொறு முட்டை போண்டாவின் வாசனையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism