Published:Updated:

மாநடிகப் பேரரசன் எஸ்.வி.ரங்காராவ்

எஸ்.வி.ரங்காராவ்
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.வி.ரங்காராவ்

அப்பணசாமி - படங்கள்: ஞானம்

மாநடிகப் பேரரசன் எஸ்.வி.ரங்காராவ்

அப்பணசாமி - படங்கள்: ஞானம்

Published:Updated:
எஸ்.வி.ரங்காராவ்
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.வி.ரங்காராவ்

“ஏதோ ஒன்றை நீ (நடிகர்) தேடுவாயானால் கடற்கரையில் சென்று அமர்ந்துகொண்டு அதுவே உன்னைத் தேடிவரும் என எண்ணிக்கொண்டிராதே. தேடு, உனக்குள்ளிருக்கும் அனைத்து தீர்க்கத்தோடும் தேடு… தேடு… தேடிக்கொண்டே இரு.”

“ஒரு நடிகரின் மொழியில், (பாத்திரம்) அறிதல் என்பது உணர்தலோடு ஒருங்கிசைவதுதாம்.”

- ‘ஒரு கதாபாத்திரத்தைக் கட்டமைத்தல்’ (Building A Character) நூலிலிருந்து…

மாநடிகப் பேரரசன் எஸ்.வி.ரங்காராவ்

டிப்பு என்பது உண்மையில் பன்மைத் திறன்கள்கொண்ட கலை. அத்திறனில் ஒன்று எம்பதி (Empathy). இந்திய சினிமாவின் மையநீரோட்டப் படங்களில் பெரும்பான்மையாக இந்த ஆற்றலே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. அதாவது, நடிகர் சிரித்தால் பார்வையாளரும் சிரிக்க வேண்டும். நடிகர் அழுதால் பார்வையாளரும் அழ வேண்டும். அந்த அளவுக்கு உணர்ச்சிகளை உடலாலும் உள்ளத்தாலும் கொட்டி நடிக்க வேண்டும். ‘எம்பதி’ எனும் நாடகக் கலைச்சொல்லுக்கு, தமிழ்ச்சொல் என்னவென்று தெரியவில்லை. சிவாஜி,

எம்.ஜி.ஆர்., சாவித்திரி, விஜயகுமாரி, பானுமதி, எஸ்.வி.சுப்பையா போன்றோரை எம்பதி நடிப்புக்கு உதாரணமாகச் சொல்லலாம் என்றால், எம்.ஆர்.ராதா போன்றவர்களை இதற்கு விலக்காகச் சொல்லலாம். அது பற்றிய விவாதத்துக்குள் செல்வது இங்கு நோக்கமல்ல. எம்பதி வகை நடிப்பை மிகைநடிப்பு (மெலோ டிராமா) என்று சொல்வதும் சரியல்ல.

அது, கூடுவிட்டுக் கூடு பாயும் கலை. ஒரு கதாபாத்திரம் கற்பனைதான் என்றாலும், அக்கதாபாத்திரம் உண்மையிலேயே வாழ்ந்தால் எந்தெந்த சந்தர்ப்பங்களில் என்னென்ன ‘விதங்களில்’ எதிர்வினை யாற்றும் என அறிந்து, அதற்கேற்ப எதிர்ப் பாத்திரங்களின் வினைகளுக்கு எதிர்வினை ஆற்றுவது ஆகும். ஆனால், இது அவ்வளவு எளிதானது அல்ல.

இந்த எம்பதி நடிப்புக்கு இலக்கணம் கற்பித்தவர், ரஷ்ய நாடக மேதை ஸ்தானிஸ்லாவ்ஸ்கி. தம்மைச் சுற்றியுள்ள உலகத்தை ஐம்புலன்களாலும் கூர்ந்து உள்வாங்க வேண்டும் என்பதே அடிப்படை. இதைத்தான், ‘பாத்திரம் அறிதல் என்பது, உணர்தலோடு ஒருங்கிசைவது’ என்கிறார் ஸ்தானிஸ்லாவ்ஸ்கி. ‘பாத்திரத்தை அறிதல் என்பது, கடற்கரையில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது அல்ல; முழு ஆற்றலோடு தேடுவது. நடிகருக்கு அது சுவாசம்போல நில்லாமல் இயங்கும் அனிச்சைச் செயல்’ என்கிறார். இவ்வாறு தேடுவதற்கு ஸ்தானிஸ்லாவ்ஸ்கி, தனது குருவிடம் இருந்து பெற்றுக்கொண்ட பயிற்சி, மிக அகலமான ஒரு கம்பளியில் ஓர்ஊசியைச் செருகி தேடச்சொல்வது ஆகும். இப்பயிற்சியைக் கற்பனை செய்து பாருங்கள். அந்த அளவுக்கு ஒரு நடிகர் உற்றுநோக்கும் திறன்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக இப்பயிற்சியை அவர் தனது குருவிடம் எடுத்துக்கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாநடிகப் பேரரசன் எஸ்.வி.ரங்காராவ்

எஸ்.வி.ரங்காராவ், அவ்வழியில் தேடியடைந்த மகா கலைஞன். தெலுங்குத் திரையுலகம் ‘மகா நடி’ சாவித்திரிக்குப் பின்னர் எஸ்.வி.ரங்காராவுக்குத்தான் ‘விஸ்வ நட சக்கரவர்த்தி’ (மா நடிகப் பேரரசன்) என்று பட்டம் கொடுத்துக்கொண்டாடியது. இன்னமும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. அத்தகைய மகா கலைஞரை அவரது நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் அறிமுகம் செய்ய இத்தகைய ஆலாபனை பொருத்தம்தான்.

‘விஸ்வ நட சக்கரவர்த்தியின் ஆதி ஊற்று, நாடகம்தான். தெலுங்கு பேசும் கிழக்கு கோதாவரி மண்ணில், ராஜமுந்திரி அருகிலுள்ள தவுலேஸ்வரம் எனும் கிராமத்தில் 1918-ம் ஆண்டு, ஜூலை 3-ம் தேதி, சுங்கத்துறை ஆய்வாளர் சாமர்லா கோட்டீஸ்வர ராவ் – சாமர்லா லட்சுமி நரசாயியம்மா தம்பதியின் மகனாகப் பிறந்தார். தாயார் இட்ட பெயரும் குடும்பப் பெயருமாக இணைந்து ‘சாமர்லா வெங்கட ரங்காராவ்’ என அழைக்கப்பட்டார். இதன் சுருக்கப் பெயராக ‘எஸ்.வி.ரங்காராவ்’ எனும் பெயர் நிலைத்துவிட்டது. அவரது பள்ளிப் படிப்பு தவுலேஸ்வரம் பிறந்த கிராமத்திலும் சென்னையிலும் கழிந்தது. விசாகப்பட்டணம், காக்கிநாடாவில் கல்லூரி வாழ்க்கை. இளங்கலை அறிவியல் பட்டம் பெற்று தீயணைப்புத் துறையில் பணியில் சேர்ந்தார். பள்ளிக்கல்வியில் தொற்றியது நடிப்புக் கிறுக்கு. பள்ளி நாடகத்தில் அவர் போட்ட முதல் வேடம், பில்லி சூனிய மந்திரவாதி பாத்திரம். காக்கிநாடாவில் தொழில்முறை யற்ற (அமெச்சூர்) நாடகக்குழு ஒன்றில் இணைந்து தன்னை வளர்த்துக்கொண்டார். இங்கு இவரது சம பங்காளிகளாக இருந்தவர்கள், பின்னாளில் புகழ்பெற்ற நடிகரும் இயக்குநருமான பி.எஸ்.சுப்பாராவ், அஞ்சலி தேவி, ஆதி நாராயணராவ் போன்றவர்கள். இந்த நாடகக்குழுதான் இவருக்கு நாடகப் பள்ளியாக அமைந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1940களின் மத்தியில் தனது சக பங்காளிகளுடன் சினிமா வாய்ப்புத் தேடி மதராஸப் பட்டணம் வந்தார். அவரது முதல் திரை நுழைவு, 1946-ல் ‘வரோதினி’ எனும் தெலுங்குப் படம். இப்படம் எடுபடவில்லை. அடுத்த வாய்ப்பு 1947-ல் உருவானது (மன தேசம்). அடுத்து ‘பல்லேட்டூரி பில்லா’ படத்தில் நடித்தார். இதுபோன்ற சில படங்கள், அவருக்கு ‘பாதாள பைரவி’ பட வாய்ப்பு கிடைக்க உதவின.

தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் 1950-களில் மறுமலர்ச்சி இயக்கங்கள் வளர்ந்தபோதும், எதிர் நீரோட்டமாகப் புராணக்கதைகளும் அதிகமாகப் பேசப்பட்ட காலம் அது.

1951-ல் வெளியான ‘பாதாள பைரவி’ படத்தில், அவர் ஏற்ற நேபாள மாந்திரீகன் வேடம்தான் எஸ்.வி.ரங்காராவ் கற்ற வித்தைகளைக் கொட்டும் பாத்திரமாக அமைந்தது. மறைந்து வாழும் நேபாள மாந்திரீகவாதியாக எஸ்.வி.ரங்காராவ், அவரிடம் சிக்கிக்கொள்ளும் துடிப்பு மிக்க வீரனாக என்.டி.ராமாராவ். வீரனின் காதலியாக மாலதி. என்.டி.ஆரின் வீர தீர சாகசங்களே கதை என்றாலும், அவரை மிரட்டும் கொடூர மாந்திரீகவாதியாகவும் இளவரசி மாலதியை அடைய நினைக்கும் தந்திரனாகவும் எஸ்.வி.ரங்காராவ் மிரளவைத்தார். தெலுங்கு, தமிழ் இரு மொழிகளிலும் வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் வெற்றி. தெலுங்கில் 25 வாரங்கள் ஓடிய முதல் படமும் இதுதானாம். வெற்றியின் ரகசியம் நேபாள மாந்திரீகவாதி.

மாநடிகப் பேரரசன் எஸ்.வி.ரங்காராவ்

இந்த நேபாள மாந்திரீகனை தமிழ், தெலுங்குத் திரை உலகங்கள் திரும்பிப் பார்த்தன. ஒரு மாந்திரீகனின் உளவியலையும் உன்மத்தத்தையும் இவ்வளவு நுட்பமாக வெளிப்படுத்த முடியுமா என வியந்தனர். எஸ்.வி.ரங்காராவின் உடல்மொழியும் குரல்மொழியும் ஒருங்கிணைந்து மாயாஜாலம் காட்டின. அதேசமயம் மிக இயல்பான நடிப்பு, அலட்டல், மிரட்டல். இதற்கான தடயங்களை அவர் ஷேக்ஸ்பியரிடமிருந்து எடுத்துள்ளார்.

எஸ்.வி.ரங்காராவ் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கில் எழுதியுள்ள

எஸ்.வி.ராமாராவ் கூறுகிறார்:

மாநடிகப் பேரரசன் எஸ்.வி.ரங்காராவ்

“எஸ்.வி.ரங்காராவ் தன்னைச் சுற்றியுள்ள உலகினை உற்று கவனித்து தனது பாத்திரங்களைச் செதுக்கிக்கொள்வார். அது மட்டுமல்லாமல் அவர் ஒரு நல்ல வாசகர். ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களை வாசித்துள்ளதுடன் அவரது நாடகம் எங்கு நடந்தாலும் காண்பதை வழக்கமாக வைத்திருந்தார். குறிப்பாக ஷேக்ஸ்பியரை மையப்படுத்திய ஹாலிவுட் படங்கள் அவருக்குப் பிடித்தவை. ஷேக்ஸ்பியரின் பாத்திரங்களாக நடித்து உயிர்கொடுத்த சலிவன், ரங்காராவின் ஆதர்ச நாயகன்.

ஷேக்ஸ்பியரின் ‘மெர்ச்சன்ட் ஆஃப் வெனிஸ்’ நாடகத்தின் ஷைலாக், அவரைக் கவர்ந்த பாத்திரம். அந்நாடகத்தில் ஒரு நீதிமன்றக் காட்சி. அதில் “ஓ! டானியல் இஸ் கமிங் டு ஜட்ஜ்மென்ட்” என்று ஒரு வசனம். பேரி சலிவன் (Barry Sullivan) என்ற உலகப் புகழ்பெற்ற நடிகர் இந்த வசனத்தைப் பேசுவார். அதே குரல் ஏற்ற இறக்கத்துடன் நேபாள மாந்திரீகனாக, என்.டி.ராமாராவுக்கு எதிராக, “ஹாஹாஹா! ஈ ஜம்ப கொடுகு...” எனத் தொடங்கி, நீண்ட அந்த வசனத்தைப் பேசிக் காட்டியதை, இயக்குநர் கே.வி.ரெட்டி பாராட்டி ஏற்றதால், அதே மாடுலேஷனில் அந்தப் பாத்திரத்தில் நடித்தார்” என்கிறார் எஸ்.வி.ராமாராவ்.

அதேபோல ‘பாண்டவ வனவாசம்’ படத்தில் துரியோதனனாக நடித்த ரங்காராவ், ‘ஹாம்லட்’ நாடக வசனமான “வீ ஆர் நாட் டு பி” என்ற வசனத்துக்கான மாடுலேஷனில் “அவமானம், மாபெரும் அவமானம்” என்று பேசி நடித்ததாகவும் ராமாராவ் கூறுகிறார்.

மாநடிகப் பேரரசன் எஸ்.வி.ரங்காராவ்

எஸ்.வி.ரங்காராவ் நடித்த படங்களை வரலாற்றுப் படங்கள், புராணப் படங்கள், சமூகப் படங்கள் என வளமையான சினிமா ஆய்வாளர்கள் பிரிக்கின்றனர். ‘பார்த்திபன் கனவு’ படத்தில் நரசிம்ம பல்லவன், ‘அனார்கலி’ படத்தில் அக்பர், ‘சாரங்கதாரா’ படத்தில் நரேந்திர மன்னர் உள்ளிட்ட சில வரலாற்றுக் கதைகளில் நடித்துள்ளார். இவற்றில் ‘பார்த்திபன் கனவு’ மட்டுமே இவருக்குப் பெயர் சொல்லத்தக்க படம். மன்னர் நரசிம்ம பல்லவராகவும் சந்நியாசியாகவும் மறைந்து வாழ்ந்து படம் முழுக்க பார்வையாளர்களுக்கு இருவரும் ஒருவரா அல்லது இருவரா என அறிய முடியாமல் அற்புத நடிப்பை வழங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், புராணப் படங்களே அவருக்குப் பெரும்புகழ் ஈட்டித் தந்தவை. தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் 1950-களில் மறுமலர்ச்சி இயக்கங்கள் வளர்ந்தபோதும், எதிர் நீரோட்டமாகப் புராணக்கதைகளும் அதிகமாகப் பேசப்பட்ட காலம் அது. இக்காலப் புராணப் படங்களில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், சிவாஜி, ஜெமினி, அஞ்சலி தேவி, ஜி.வரலட்சுமி, எஸ்.வரலட்சுமி, சாவித்திரி போன்றவர்கள் நாயக, நாயகிகளாக நடித்தனர். என்.டி.ஆரை ‘தேவுடு’ எனத் தெலுங்கு தேச மக்கள் வணங்கியதற்கு புராணப் படங்களே அடித்தளம். இருந்தாலும் துரியோதனன், கீசகன், கடோத்கஜன், இரணியன், கம்சன், தட்சன், நரகாசுரன், மாயாசுரன், ராவணன், எமன் எனப் பல வகையான பராக்கிரமப் பாத்திரங்களையும் ஏற்று ஒற்றையாளாக பிரமாண்டம் காட்டியவர், எஸ்.வி.ரங்காராவ் ஒருவரே.

ஒவ்வொரு முறை பேசியதும் அல்லது பேச்சினூடே கழுத்தை லேசாக வெட்டிச் சுளுக்குவார், ஒரு கண்ணை மட்டும் ஓரமாகச் சிமிட்டுவார்.

மாயாபஜாரில் ஆஜானுபாகுவாகக் கையில் கதாயுதத்துடன் கௌரவர் கூட்டத்தைக் கலக்கும் கடோத்கஜன் வேடத்தில், ‘கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்... ஹஹ்ஹ்ஹ்ஹஹா... ஹஹா ஹஹா’ என மேற்கத்திய மெட்டு கலந்த பாடலில், மெல்லுணர்வின் மூலமாக நகைச்சுவையையும் வழங்கினார். அவரது முக்கியமான பல படங்களுக்கு ஒளிமேதை மார்க்கஸ் பார்ட்லே ஒளிப்பதிவு என்பது அவரது திரைப்பிம்பத்துக்குக் கூடுதல் முக்கியத்துவத்தைக் கூட்டியதும் கவனிக்கத்தக்கது.

இதன் உச்சமாக ‘நர்த்தனசாலா’. இதில் போக்கிரி அரசன் கீசகன் வேடம். விராட அரண்மனையில் வனவாசம் மேற்கொண்டு மறைந்து வாழ்கிறார்கள் பாண்டவர்களும் பாஞ்சாலியும். சைரந்தரி எனும் பெயரில் மறைந்து வாழ்கிறார் பாஞ்சாலி. சைரந்தரியாக சாவித்திரி. அதுவரை தந்தை – மகளாகவே இருவருக்குமிடையில் உருவாகியிருந்த கெமிஸ்ட்ரி, கீசகன் – சைரந்தரி எதிர்நிலை உறவில் என்ன ஆகுமோ என்று பயந்தனர் தயாரிப்புத் தரப்பினர். ஆனால், பாத்திரமாகவே இருவரும் மாறி அதற்கு முற்றிலும் நேர்மை செய்தனர். இக்காட்சியில் சைரந்தரி, “நான் பதிவிரதை” என்பார். இதைக் கேட்டு வெடிச்சிரிப்பு சிரிக்கும் கீசகன், “நீ என்ன சீதையா நளாயினியா அனுசுயாவா?’ என்று அடுக்கிக்கொண்டே போய் சட்டென நிறுத்தி, குரலை வெட்டி அமர்த்தி ‘சாவித்திரியா?’ என்று கேள்வி எழுப்பியதை மக்கள் அமோகமாக ரசித்தனர்.

‘நர்த்தனசாலா’ படம்தான் உலக சினிமா விமர்சகர்களின் பார்வையை ரங்காராவ் பக்கம் இழுத்தது. 1963-ல் ஜகர்தலாவில் நடைபெற்ற மூன்றாவது ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில், ‘நர்த்தனசாலா’ படத்தின் கீசகன் பாத்திரத்துக்காக எஸ்.வி.ரங்கா ராவ் சிறந்த நடிகர் விருதினைப் பெற்றார். முன்னதாக ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்காக சிவாஜிக்கு இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிறந்த இயக்குநருக்கான பிரிவின் கீழ் ‘சதுரங்கம்’ படத்துக்கு ‘நந்தி விருது’ பெற்றவர். ‘விஸ்வ நட சக்கரவர்த்தி’, ‘நட சிம்ஹா’, ‘நட சர்வபூமா’ ஆகிய பட்டங்களையும் பெற்றவர். தொடர்ந்து ‘அன்னை’, ‘சாரதா’, ‘நானும் ஒரு பெண்’, ‘கற்பகம்’, ‘நர்த்தனசாலா’ ஆகிய படங்களுக்குக் குடியரசுத் தலைவர் விருதும், ‘பந்தவயலு’ படத்துக்குச் சிறந்த நடிகர் விருதும் பெற்றவர்.

புராணப் படங்களில் ரங்காராவின் செல்வாக்கை அறிய, கம்சனாக கறுப்பு வெள்ளை ‘கிருஷ்ண லீலா’, கலர் ‘யசோதா கிருஷ்ணன்’, இரணியனாக கறுப்பு வெள்ளை ‘செஞ்சு லட்சுமி’, கலர் ‘பக்த பிரகலாதா’, துரியோதனனாக கறுப்பு வெள்ளை ‘பாண்டவ வனவாசம்’ கலர் ‘பால பாரதம்’ என ஒரே பாத்திரத்தில் இரண்டுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளதையும் இதை மக்கள் வரவேற்று ரசித்ததையும் குறிப்பிடலாம். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தில் நடிக்க, ஒரு குறிப்பிட்ட நடிகரை அழைப்பது நமது தொன்மையான நாடக மரபாகும்.

சமூகப் பாத்திரங்களில் ‘பெள்ளி சேசு சூடு’ (தமிழில் ‘கல்யாணம் பண்ணிப் பார்’ -1951). இதில்தான் சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த சாவித்திரி, இரண்டாவது நாயகியாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இதில் சாவித்திரியின் தந்தை 54 வயது ஜமீன்தார், ஜில்லா போர்டு மெம்பர், பஞ்சாயத்து பிரசிடென்ட் தணிகாசலம் பிள்ளையாக ரங்காராவ் நடித்தார். அப்போது, அவரது உண்மையான வயது வெறும் 34தான். நொடித்துப்போன அதேநேரம் தான தர்மத்தை விட்டுக்கொடுக்காத ஜமீன் வேடம். பெரிதான ஒப்பனை கிடையாது. ஆறடி உயரத்தில் வெடவெடத்த உடல், பஞ்சகச்ச வேட்டி, தொளதொள ஜிப்பா, தோளில் ஒரு துண்டு. ஊருக்குள் யார் வந்தாலும் முதல் விருந்து ஜமீன் வீட்டில்தான். இதற்காகவே ஊர் எல்லையில் காத்திருந்து பிடித்து வர இரண்டு வேலையாள்கள். அதேநேரம் விருந்தளித்தே நொடித்துப்போனதால், தன் ஒரே மகளுக்குத் திருமணம் செய்துவைக்க சல்லிக்காசுகூட ரொக்கமாக இல்லாத நிலைமை. நகைச்சுவை உணர்வுகொண்ட இப்பாத்திரத்துக்காகவே ஒரு மேனரிசம் பின்பற்றுவார் ரங்காராவ்.

ஒவ்வொரு முறை பேசியதும் அல்லது பேச்சினூடே கழுத்தை லேசாக வெட்டிச் சுளுக்குவார், ஒரு கண்ணை மட்டும் ஓரமாகச் சிமிட்டுவார். சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் ரயிலுக்காகக் காத்திருந்த ஓர் உயர் அதிகாரி, இவ்வாறு பேச்சினூடே அடிக்கடி சேட்டை செய்ததாகவும் இதை நன்கு கவனித்துவைத்துக்கொண்டு, அதையே ‘பெள்ளி சேசு சூடு’ படத்தில் பயன்படுத்திக்கொண்டதாகவும் கூறியுள்ளார் ரங்காராவ்.

மாநடிகப் பேரரசன் எஸ்.வி.ரங்காராவ்

இந்தப் பாத்திரம்தான் தமிழ், தெலுங்குத் திரையுலகினில் நிரந்தர ஜமீனாகவும் அப்பாவாகவும் ரங்காராவை நிலைக்கச் செய்தது. எத்தனைவித ஜமீன்கள்? எத்தனைவித செல்வந்தர்கள்? எத்தனைவித அப்பாக்கள்?

செல்வச் செருக்குமிக்க செல்வந்தராக ‘இரும்புத்திரை’, நகைச்சுவை மிளிரும் செல்வந்தராக ‘சபாஷ் மீனா’, ‘மிஸ்ஸியம்மா’, பழைமை வாதமும் சாதிப்பெருமிதமும் மிக்க செல்வந்தராக ‘சாரதா’, ஓஹோவென வாழ்ந்தபோது மிடுக்கும் நொடித்துப்போனதும் கவலை ரேகைகளும்கொண்ட ஜமீனாக ‘படிக்காத மேதை’.

தனது மகளின் வெகுளித்தன்மையைப் பயன்படுத்தி எவனோ ஒருவன் புகைப்படம் எடுத்து மிரட்ட, அவள் திருமணம் தடைப்படுகிறது. ஊரே அந்த வெகுளிப்பெண் கெட்டுப்போனவள்(!) என்கிறது. இதை அவளது சகோதரனும் நம்புகிறான். அவளுக்குத் திருமணம் நடந்தால்தான் இளைய மகளுக்கும் திருமணம் சாத்தியப்படும். இத்தகைய உணர்ச்சிமிக்க பாத்திரத்தில் குமுறும் தந்தையாக ‘கைகொடுத்த தெய்வம்’.

மகள் சம்பாத்தியத்தில் வாழும் சுயநல அப்பாவாக ‘குலவிளக்கு’, சூழ்நிலையால் தடுமாறி மறைந்து வாழும் தந்தையாக ‘குங்குமம்’, வாழ்ந்து கெட்ட சிடுசிடுக்கும் ஜமீன் தந்தையாக ‘பந்தபாசம்’, நேர்மையான ரயில்வே அதிகாரியாக ‘பச்சை விளக்கு’, மிடுக்கு நிறைந்த காவல்துறை அதிகாரியாக ‘சிவந்த மண்’, மனைவியின் சொல்லைத் தட்ட முடியாத சூழ்நிலைக் கைதியாக ‘வசந்த மாளிகை’ (பிரேமா நகர்), மிகப்பெரிய செல்வந்தராக இருந்தாலும் தம்மிடம் பணிபுரிபவரும் முன்னேற வேண்டும் என்ற தாராள எண்ணம்கொண்ட ‘செல்வச்சீமான்’, ‘வாழையடி வாழை’ எனத் தமிழ் மற்றும் தெலுங்கில் 100-க்கும் அதிகமான படங்களில் விதவிதமான அப்பாக்களாக வாழ்ந்துகாட்டினார். எஸ்.வி.ரங்காராவ் படங்களில் நான்கு படங்களை வித்தியாசமானவை எனக் கூறலாம் அவை, ‘சௌகார்’, ‘அந்தரு தொங்காலே’, ‘நம்நாடு’, ‘ராஜா’.

‘சௌகார்’ (1950) படத்தில் ஒரு ரௌடியாக நடித்தார். கட்டுக்கோப்பான உடலும் முறுக்கிய மீசையும் தலப்பாக்கட்டுடன் கையில் ஐந்தே முக்கால் அடி உயரக் கம்புடன் அடக்கமான கட்டைக் குரலில் கிராமத்துப் போக்கிரியாகப் படம் முழுவதும் மிரட்டினார்.

‘அந்தரு தொங்காலே’ இந்தியில் அசோக் குமார், பிரான் நடித்த நகைச்சுவை சூப்பர் ஹிட் படமான ‘விக்டோரியா 203’ படத்தின் தெலுங்கு மறு தயாரிப்பு. தொடக்கம் முதல் முடிவுவரை விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் ‘நான் ஸ்டாப் நான்சென்ஸ் காமெடி’ படத்தில் அசோக்குமார் ஏற்ற பாத்திரத்தில் ரங்காராவ் கலக்கினார்.

அதேபோல ‘நம்நாடு’ படத்திலும் மாநகராட்சி தலைவரையே ஆட்டிப் படைக்கும் வில்லனாக பயமுறுத்தினார். அவரது கடைசிப் படங்களில் ஒன்றான ‘ராஜா’வில் மிகப்பெரிய கள்ளக் கடத்தல் கும்பலின் தலைவனாக மறைந்து வாழும் டானாக மிரட்டினார். இதன் பிறகு, சிறிது காலத்திலேயே 1974-ல் மாரடைப்பு ஏற்பட்டு 53 வயதில் காலமானார்.

எஸ்.வி.ரங்காராவ் என்ற ஆளுமையைப் பற்றிய பார்வைக்கு வெளியே, அந்தக் காலகட்ட சினிமாவின் மீதான ஒரு விமர்சனப் பார்வையையும் இங்கே குறிப்பிட வேண்டும். எத்தனை இனிமையான ஜமீன்கள் அக்காலத்துப் படங்களில்... ஆனால், நாற்பது ஐம்பதுகளில் தஞ்சைத் தரணியிலும் தெலங்கானாவிலும் விவசாயத் தொழிலாளர்கள் பண்ணை அடிமைகளாக, சாணிப்பால் சவுக்கடிக்கு ஆளாகினர். அதற்கு எதிரான போராட்டங்களும் தொடர்ச்சியான அடக்குமுறைகளும் நிகழ்ந்த காலம் அது. ஆனால், அன்றைய திரைப்படங்கள் சித்திரித்த ஒரு ஜமீன் பாத்திரம்கூட இந்த ஏழைகளுக்கு ஆதரவாகப் பேசவில்லை என்பது எவ்வளவு பெரிய நகைமுரண்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism