Published:Updated:

`சிறுநீரக பாதிப்பு; வென்டிலேட்டர் சிகிச்சை’ -பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் வாஜித் கான் மரணம்

வாஜித் கான்
வாஜித் கான்

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் வாஜித் கான் உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று காலை உயிரிழந்துள்ளார்.

சமீபகாலமாகப் பிரபலங்களின் தொடர் உயிரிழப்புகள் மொத்த பாலிவுட்டையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. கடந்த மாத இறுதியில் நடிகர் இர்பான் கான், அதற்கு அடுத்த நாளே பழம்பெரும் நடிகரும் ரன்பீர் கபூரின் தந்தையுமான ரிஷி கபூர் ஆகியோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சோகமே இன்னும் மறையாக நிலையில் அதற்குள் பாலிவுட் இசையமைப்பாளரும் பாடகருமான வாஜித் கான் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

வாஜித் கான்
வாஜித் கான்

இந்தத் தகவலைப் பாடகர் சோனு நிகாம் தன் இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அதில், `என் சகோதரர் வாஜித் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், வாஜித்தின் இறப்பு தொடர்பாக பி.டி.ஐ ஊடகத்திடம் பேசியுள்ள இசையமைப்பாளர் சலிம் மெர்சண்ட், ``வாஜித்துக்கு உடலில் பல பிரச்னைகள் இருந்தது. சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

`2 வருடப் புற்றுநோய்; திடீர் சுவாசக் கோளாறு’ - பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் காலமானார்

அவரது சிறுநீரகத்தில் நோய்த் தொற்று இருந்தது இப்போதுதான் கண்டறியப்பட்டது. அவரது உடல்நிலை மோசமாகத் தொடங்கியதும் கடந்த 4 நாள்களாக வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார். சிறுநீரக பாதிப்பு ஆரம்பக் கட்டத்தில்தான் இருப்பதாகக் கூறினார்கள். ஆனால், திடீரென மிகவும் மோசமாகி உயிரிழந்துவிட்டார்’ எனத் தெரிவித்துள்ளார்.

வாஜித் கான்
வாஜித் கான்

1998-ம் ஆண்டு சல்மான் கான் - கஜோல் நடிப்பில் வெளியான `பியார் கியா தோ தர்ணா கியா’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினார் வாஜித். சோரி சோரி, ஹலோ பிரதர்ஸ், வாண்டட், முஜ்ஷோ ஷாதி கரோகி, தபாங், ரவுடி ரத்தோர், ஏக் தா டைகர் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் சல்மான் கான், அக்‌ஷய் குமார் ஆகிய பல நடிகர்களுக்குப் பின்னணிப் பாடலும் பாடியுள்ளார். தன் சகோதரரான சஜித்-உடன் இணைந்து சஜித் - வாஜித் என்ற பெயரில் பாலிவுட்டில் இசையமைத்து வந்தார் வாஜித். இந்தக் காம்பினேஷன் பாலிவுட்டில் செம ஃபேமஸ்.

கடந்த வாரம் வெளியான சல்மான் கானின் `பாய் பாய்’ மியூசிக் ஆல்பத்துக்கும் வாஜித் தான் இசையமைத்திருந்தார். இந்த நிலையில்தான் சிறுநீரக பாதிப்பினால் தன் 42 வது வயதில் உயிரிழந்துள்ளார் வாஜித். வாஜித் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார் எனக் கூறப்படுகிறது. ஆனால், அதன் உண்மைத் தன்மையை வாஜித் தரப்பினர் யாரும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இவரது மறைவுக்கு மொத்த பாலிவுட் திரையுலகமும் அஞ்சலி செலுத்தி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு