Published:Updated:

எங்களுக்குப் பிடித்த எஸ்.பி.பி. ஸ்பெஷல்!

எஸ்.பி.பி.
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.பி.பி.

வானத்துல நட்சத்திரக் கூட்டத்தைக் காட்டி எது சிறந்த நட்சத்திரம்னு கேக்கற மாதிரி இருக்கு. 40,000 பாட்டுக்கு மேல பாடியிருக்கார்

காதல், பிரிவு, துயரம், மகிழ்ச்சி, விரக்தி, உற்சாகம் என எல்லா உணர்ச்சிகளுக்கும் ஆன்மாவாக இருந்தவை எஸ்.பி.பி-யின் பாடல்கள். `உங்களால் மறக்கமுடியாத எஸ்.பி.பி. பாடல் எது?’ என பிரபலங்கள் சிலரிடம் கேட்டோம்.

கே.ஆர். விஜயா

‘நெஞ்சிருக்கும் வரை’ ஷூட்டிங் ஸ்பாட்ல அவரை முதன்முதலாப் பார்த்திருக்கேன். இரண்டாவது தடவையா அவரைச் சந்திச்சது ஒரு விழா மேடையில். எனக்கும் அவருக்கும் டாக்டர் பட்டம் தந்தாங்க. ‘அறிமுகமான கொஞ்ச நாள்களிலேயே அவருடைய குரலுக்கு அவ்வளவு வரவேற்பு கிடைச்சிருச்சே. இவர் மட்டும் பெண்ணாப் பிறந்திருந்தா நமக்குக் குரல் கொடுத்திருப்பாரே’ன்னுகூட நினைச்சிருக்கேன். நிறைய பாடல்களை திரும்பத் திரும்பக் கேட்டிருக்கேன். குறிப்பிட்டுச் சொல்லணும்னா, அவருடைய முதல் இரண்டு பாடல்களையே சொல்லலாம். ’ஆயிரம் நிலவே வா’, ‘இயற்கை எனும் இளைய கன்னி’ இரண்டு பாட்டும் எல்லாத்் தலைமுறைக்குமே பிடிக்கும்!’’

பாக்யராஜ்

“வானத்துல நட்சத்திரக் கூட்டத்தைக் காட்டி எது சிறந்த நட்சத்திரம்னு கேக்கற மாதிரி இருக்கு. 40,000 பாட்டுக்கு மேல பாடியிருக்கார். படம் ஓடுதா இல்லையாங்கிறது வேற விஷயம். டைரக்டர், மியூசிக் டைரக்டர் என்ன எதிர்பார்க்கிறாங்களோ, புரிஞ்சு தன்னுடைய முழு உழைப்பைத் தர்ற ஒருத்தர்னு அவரைச் சொல்வேன். சரியான திறமைசாலி. வேற ஒண்ணும் வேணாம்... ‘மாங்குயிலே பூங்குயிலே’வுல ‘எம்மா’னு இழுப்பாரு பாருங்க, அதுதான் அவரோட டச்.

எங்களுக்குப் பிடித்த எஸ்.பி.பி. ஸ்பெஷல்!

ஸ்பெஷலா சொல்லணும்னா என்னுடைய படத்துல இருந்தே ‘சங்கீதம் பாட ஞானம் உள்ளவர்கள் வேண்டும்’ பாடலைச் சொல்லலாம். ஏன்னா எம்.எஸ்.வி., ராஜா சார் மாதிரியானஇசையமைப்பாளர்கள்கிட்டதான் அவர் பேப்பர் பேனா எடுத்து நோட் பண்ணி வச்சுகிட்டுப் பாடுவார். நான் ஏதோ `தத்தக்கா பித்தக்கா’ மியூசிக் பண்ணினா அப்பவும் நோட் பண்ணிகிட்டார். எனக்கு ஒரே சந்தோஷம். ஆனா அதைப் பத்திக் கேட்டதுக்கு அவர் சொன்ன பதில்தான் ஹைலைட். ‘குருநாதரே, நான் கரெக்ட்டான ஸ்வரம் பாடியே பழகியிருக்கேன். நீங்க தப்பா பாடச் சொல்றீங்க. அதனால எழுதி வச்சுப் பாடினாதான் சரியா வரும்னார். சத்தியமங்கலத்துல நடந்த அந்த ஷூட் நினைவுதான் இப்ப மனசுல வந்துட்டே இருக்கு!”

ராதிகா

‘‘எஸ்.பி.பி. சார் பாடல்களில் எல்லாருக்கும் பிடிச்ச ‘மண்ணில் இந்தக் காதலின்றி’தான் என் மனசுக்கும் நெருக்கமானது. அந்தப் பாடலின் காட்சியில நடிச்ச நடிகைங்கிறது எனக்கு இன்னும் பெருமை. மகாபலிபுரத்துல ஷூட்டிங் நடந்தது. எப்பவுமே ஜோக் அடிக்கறதும், கலாய்க்கிறதுமா ஷூட்டிங் ஸ்பாட்டையே கலகலன்னு வச்சிருப்பார். அந்தத் தருணங்கள் பசுமையா அப்படியே நினைவிருக்கு!”

குஷ்பு

“ஒண்ணு இல்ல, ரெண்டு பாட்டு என்னுடைய ஆல் டைம் பேவரிட். ‘மௌன ராக’த்துல ‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘நிழல்கள்’ல ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது’. ‘மௌன ராகம்’ சாங்ல ஓபனிங்ல வர்ற அந்த ஹம்மிங் போர்ஷன்... ஆஹா..! அவரை எங்காச்சும் நேர்ல பார்த்தேன்னா, ‘சார் ப்ளீஸ்’னு கேட்பேன். உடனே பாடிடுவார். இனி லைவா கேட்க முடியாதுங்கிற நினைப்பே மனசை அழுத்துது!”

எங்களுக்குப் பிடித்த எஸ்.பி.பி. ஸ்பெஷல்!

சாரு நிவேதிதா

‘‘ ‘மலரே மௌனமா’ பாடலை ஆயிரம் தடவைக்கு மேல கேட்டிருப்பேன். எப்பெல்லாம் மூடு `டௌன்’ ஆகிறமாதிரி தெரியுதோ அப்பெல்லாம் கேட்பேன். கர்வம் இல்லாத மனுஷன். கிரேட் ஹ்யூமன்!”

ஹரிஷ் கல்யாண்

`மறுபடியும்’ படத்துல வர்ற ‘நலம் வாழ’ சாங் என் பேவரிட். வரிகளுமே ரொம்பப் பிடிக்கும். கார்லகூட இந்தப் பாட்டைத்தான் அடிக்கடி கேப்பேன். மிஸ் யூ எஸ்.பி.பி. சார்!”

தங்கம் தென்னரசு

“கல்லூரி நாள்களில் எனக்கு அறிமுகமான, ‘பட்டுக் கன்னம் தொட்டுக் கொள்ள’ பாட்டை இப்பவும் எப்பவாவது கேட்டா, எவ்ளோ அவசரத்துல இருந்தாலும் கொஞ்ச நேரம் அப்படியே நின்னுடுவேன். ஏன்னா, அதுல இடையில ஒரு சிரிப்பு வரும் பாருங்க... அந்தச் சிரிப்புக்காக வெயிட் பண்ணுவேன். அந்த செகண்டை மிஸ் பண்ணிடக்கூடாதுன்னு நினைப்பேன். அவருடைய நிறைய பாடல்களில் இந்த மாதிரிச் சிரிப்பு இருக்கும். ஆனா எனக்கு இந்தப் பாட்டு ஸ்பெஷல்!”

ரோகிணி

“எனக்கு ஒரு பாட்டு இருக்குங்க. அந்தப் பாட்டு படத்துல இடம்பெறலை. பிக்சரைஸ் பண்ணாத பாட்டுங்கிறதாலேயே எனக்கு அந்தப் பாட்டு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. ‘அன்பே சிவம்’ படத்துக்காகப் பாடின ‘மௌனமே பார்வையாய்’ங்கிற பாட்டு. கேக்கறப்ப பாலு சார் மட்டும்தான் நம்ம ஞாபகத்துக்கு வருவார்.”

எங்களுக்குப் பிடித்த எஸ்.பி.பி. ஸ்பெஷல்!

சொர்ணமால்யா

“ `நினைவெல்லாம் நித்யா’வுல ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ பாட்டை அப்பா டேப் ரெக்கார்டர்ல அடிக்கடி கேட்பார். அப்ப எனக்கு சினிமாப் பாட்டை விரும்பிக் கேக்கற வயசு இல்லைன்னாலும், இந்தப் பாட்டு என்னைக் கவனிக்க வச்சது. ரொம்ப உருக்கமா பாடியிருப்பார். `பந்துவராளி’ ராகம். அடிக்கடி குடும்பத்துடன் கொடைக்கானல் போறவங்க நாங்க. அப்பெல்லாம் அந்த மலைச் சரிவுகளில் இந்தப் பாட்டை ஒலிக்கவிட்டுக் கேட்போம். செம ஃபீலிங்கா இருக்கும்.”

டிடி

“எஸ்.பி.பி. சார் பாட்டுல ஒண்ணு ரெண்டுன்னு கேட்டீங்கன்னா எதைன்னு சொல்றது? நிறைய பாட்டு இருக்கு. உட்கார்ந்து லிஸ்ட் போட்டா, எதை முதல்ல கேக்கறது, எதைப் பிறகு கேக்கறதுன்னே முடிவு பண்ண முடியாது. தூங்குறப்ப, உற்சாகமா இருக்கிறப்ப, மனசு லேசா கவலையில இருந்தா கேட்கன்னு எல்லாத்துக்கும் பாடியிருக்காரே! ஸ்பெஷலா சொல்லித்தான் ஆகணும்னா ரஜினி சார்க்கு அவர் பாடின ஓப்பனிங் சாங்ஸ் அடிக்கடி கேட்பேன்.”

யுகபாரதி

“ ‘சிம்லா ஸ்பெஷல்’ படத்துல வர்ற ‘உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா’ பாட்டு ரொம்பவே பிடிக்கும். காரணம், இந்தப்பாட்டுல `ழ’ அதிக இடத்துல வரும். அந்த உச்சரிப்பு ரொம்பவே நல்லா இருக்கும்!”

மனுஷ்யபுத்திரன்

`சிப்பிக்குள் முத்து’ படத்துல வர்ற ‘துள்ளித்துள்ளி நீ பாடம்மா’ பாட்டை என் பதின்ம வயதுல கேட்டேன். அந்தப் பருவத்துல ஒருவித மன அழுத்தத்துல இருந்தேன். அதனால பின்னிரவு தொடங்கி மறுநாள் அதிகாலை வரை டேப் ரிக்கார்டர்ல திரும்பத் திரும்ப இந்த ஒரு பாட்டையே கேட்டுட்டு இருந்திருக்கேன். ‘கண்ணீர் விட்டால் மனம் தாங்காதம்மா’ன்னு அவர் பாடறப்ப, யாரோ ஒருத்தர் வந்து என்னை அரவணைச்சுக்கற மாதிரி ஒரு உணர்வு வந்திடும். ஒரு ஹீலரா இந்தப் பாட்டு இருந்திச்சு.

அவர் குரல்ல இன்னொரு பாட்டையும் என்னால மறக்க முடியாது. எம்.எஸ்.வி இசையில அவர் பாடின `வான் நிலா... நிலா அல்ல’ பாட்டு. என் வாழ்க்கையில ரொம்ப முக்கியமான ஒரு காலகட்டத்துல ஒரு ரோல் ப்ளே பண்ணின ஒரு பெண் அறிமுகப்படுத்தி வச்ச பாட்டு இது!”

அட்டை ஓவியம்: ஹாசிப்கான்