Published:Updated:

லக்ஷ்மி, அபர்ணா, தீபிகா, மேக்னா... ஹக்ஸ்!

தீபிகா படுகோன்
பிரீமியம் ஸ்டோரி
தீபிகா படுகோன்

அவள் சினிமா

லக்ஷ்மி, அபர்ணா, தீபிகா, மேக்னா... ஹக்ஸ்!

அவள் சினிமா

Published:Updated:
தீபிகா படுகோன்
பிரீமியம் ஸ்டோரி
தீபிகா படுகோன்

ஒரு பெண் ஆசிட் வீச்சுக்கு ஆளானால், அது நமக்கு ஒரு நாள் தலைப்புச் செய்தி, ஒரு வாரம் மீடியா செய்தி, ஒரு மாதத்தில் மறந்துவிடும் செய்தி. `சப்பாக்' திரைப்படம், அமில வீச்சால் சிதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்வை வாழ்ந்துகாட்டுகிறது; நம்மையும் கொஞ்சம் வாழ்ந்துபார்க்க வைக்கிறது.

லக்ஷ்மி, அபர்ணா, தீபிகா, மேக்னா... ஹக்ஸ்!

தீபிகா படுகோனின் தயாரிப்பு மற்றும் நடிப்பில், மேக்னா குல்சார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் பாலிவுட் படம் `சப்பாக்'. வெறும் 30 ரூபாய் ஆசிட்டால் ஒருவரின் வாழ்வையே அழிக்கலாம் என்கிற நிதர்சனம். நம் பெண் பிள்ளைகளின் பயணத்தில், அமிலத்தை ஆயுதமாக நினைக்கும் ஆண்கள் வந்துவிடக்கூடாதே என்கிற அச்சம். அரை பாட்டில் ஆசிட் அங்கும் இங்கும் என இன்றும் யார் மீதோ வீசப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்கிற பயங்கரம். படம் முடியும்போது, இவ்வளவும் பின்னிக்கொள்கின்றன நம் மனத்தில்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2005-ம் ஆண்டு, தன் 15-வது வயதில், 32 வயதான ஆண் ஒருவனால் ஆசிட் வீச்சுக்கு உள்ளானவர், லக்ஷ்மி அகர்வால். காரணம், அவன் காதலை லக்ஷ்மி ஏற்கவில்லை. நம்மில் சிலருக்கு லக்ஷ்மியின் முகமும், இந்தக் கதையும் இரு வரிகளில் தெரிந்திருக்கலாம். ஆனால், இப்போது 30 வயதாகும் லக்ஷ்மி, இந்த 15 வருட வாழ்வை எப்படியெல்லாம் கடந்திருப்பார் என்பதை அறிந்துகொள்வதில் இவ்வுலகம் விருப்பம் காட்டுவதில்லை. அதை நேர்மையான திரைமொழியில் கொள்ளவும் முடியாத, விடுக்கவும் இயலாததொரு தவிப்புடன் நம்மை உணரச்செய்கிறது `சப்பாக்'.

அமிலம் வீசப்பட்ட நிமிடங்களில் மஞ்சள் சுடிதாரில் `மால்தி'யாக சாலையில் புரண்டு தீபிகா அழும்போது, ஒரு துளி அமிலம் நம் மீதும் பட்டதுபோல சுள்ளென்று இருக்கிறது. மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு தீபிகாமீது செவிலியர் மளமளவென தண்ணீரை ஊற்ற, தீபிகாவின் கதறல் அதிகரிக்கும்போது, சதையை உருக்கும் அந்த அமிலத்தின் கொடூரம் நம் மனத்தையும் பொசுக்குகிறது.

அழகையும் சந்தோஷத்தையும் எதிர்காலத்தையும் அமிலம் எரித்துவிட்டது. முகத்தில் இமை அசைவு, உதட்டசைவுக்கு உடன்படாது இழுத்துக்கொண்டிருக்கும் சருமத்தைச் சரிசெய்து நெகிழ்வுத் தன்மை கொடுக்கவும், கோரமாகிப்போன முகத்தை கொஞ்சம் சரியாக்கவும் ஏழு அறுவை சிகிச்சைகள் நடந்துமுடிந்துவிட்டன. எனினும், கம்மல் மாட்ட காது இல்லை. பள்ளிப் படிப்பு பாதியில் முடிந்துவிட்டது. குடும்பத்தில் வறுமை. அந்தச் சிறுமி என்ன செய்வாள்?

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்

சூடான காபியை ஒருவர் மீது ஊற்று வதற்கும், பொசுக்கும் ஆசிட்டை வீசுவதற்கும் ஒரேவிதமான தண்டனையை வரையறுத்திருந்த சட்டத்தை, தன் வாதத்தால் உடைக்கிறார் தீபிகாவின் வழக்கறிஞர். அமில வீச்சுக் குற்றவாளிக்கு, செக்‌ஷன் 326-ன்படி 10 ஆண்டுக்கால சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படச் செய்கிறார். அமில விற்பனைக்கு தடைகோரி, தீபிகாவை மனு கொடுக்கவைக்கிறார். அது, ஆசிட் விற்பனையை ஒழுங்குபடுத்தச் சொல்லி உச்ச நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிடவைக்கிறது. இத்தனை உரத்துடன் போராடும் அந்தப் பெண் வழக்கறிஞர், `சப்பாக்'கின் இன்னொரு நாயகி. நிஜத்தில் லக்ஷ்மி அகர்வாலுக்கு வழக்கறிஞராக இருந்து, இவற்றையெல்லாம் நிகழ்த்திக்காட்டிய அபர்ணா பட் என்ற சூப்பர்வுமனுக்கு லவ் அண்டு ஹக்ஸ்.

`சப்பாக்' என்பது திரவம் வீசப்படும்போது எழும் ஒலி. `சப்பாக்... என் அடையாளத்தை அழித்துவிட்டான்' - படத்தில் ஆங்காங்கே ஒலிக்கும் இந்தப் பாடல், துயர் இசை.

தீபிகா, வாழ்வை எதிர்கொள்ள ஆரம்பிக்கிறார். ஆசிட்டால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகப் போராடுவது, சட்ட, பொருளாதார உதவிகள் பெற்றுத்தருவது, தொலைக்காட்சியில் நிகழ்ச்சித்தொகுப்பாளர் வேலை கிடைக்க, சம்பளத்தை தன் அம்மாவின் உள்ளங் கைக்குள் கொடுத்துச் சிரிப்பது என, தழும்பைக் கடந்து வாழ்வை நகர்த்துகிறார்.

சக செயற்பாட்டாளர் விக்ராந்த்திடம் தனக்கான காதலைக் கண்டடைகிறார். அமிலம் தெறித்த நொடியில் தீபிகாவின் மேல் ஏற்பட்ட பரிதாபம், படத்தின் இறுதி நொடியில் அவர் மீதான மரியாதையாக உருமாறுகிறது. `யூ கோ கேர்ள்' என்று மனம் அவரை வாழ்த்துகிறது. மறுநொடி...

`இந்தியாவில் சமீபத்தில் நடந்த அமில வீச்சு, 2019 டிசம்பர் 7' என்று சொல்லி முடிகிறது படம்.

லக்ஷ்மி அகர்வால்
லக்ஷ்மி அகர்வால்

லக்ஷ்மி அகர்வால் இப்போது...

க்ஷ்மியின் அமில விற்பனைக்கு எதிரான போராட்டத்தைப் பாராட்டி, இந்திய அரசின் பெண்கள் - குழந்தைகள்நல அமைச்சகம் மற்றும் யுனிசெஃப் அமைப்பு ஆகியவை விருதுகள் வழங்கியுள்ளன. தைரியமான பெண்களுக்கு வழங்கப்படும் சர்வதேச விருதை, மிஷேல் ஒபாமாவிடமிருந்து பெற்றார் லக்ஷ்மி. செயற்பாட்டாளர் அலோக் தீக்‌ஷித்தும் லக்ஷ்மியும் காதலால் இணைந்தனர். திருமணம் தவிர்த்து, `லிவ் இன் ரிலேஷன்ஷிப்'பைத் தேர்ந்தெடுத்தனர். தன் மகள் பிஹு, ‘சப்பாக்’ பார்த்ததும் தன்னையும் தீபிகாவையும் கட்டிப்பிடித்ததை மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார் லக்ஷ்மி!