சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“விஜய் சேதுபதி, யோகிபாபுவுக்கு ஹெல்ப் பண்ணியிருக்கேன்!”

அட்ரஸ் கார்த்தி
பிரீமியம் ஸ்டோரி
News
அட்ரஸ் கார்த்தி

அப்ப சினிமான்னா கோடம்பாக்கம்தான். கோடம்பாக்கத்தில் டாடா உடுப்பி ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்தேன். முதன்முதல்ல ‘மந்திரன்’ல அட்மாஸ்பியர்ல வந்தேன்

அட்ரஸ் கார்த்தி - தமிழ் சினிமாவின் உதவி இயக்குநர்கள், ஆபீஸ் பையன்கள், நடிக்க வாய்ப்புத் தேடி அலைவோர் என அத்தனை பேருக்கும் டார்ச் லைட் இவர்தான். துணை நடிகராக (ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்) கூட்டத்தில் ஒருவனாக (அட்மாஸ்பியர்) ஏராளமான படங்களில் நடித்தவர் என்பதாலோ என்னவோ பலருக்கும் இலவச சேவையாக சினிமாத் தகவல்கள், தொடர்புகள், முகவரிகளைக் கொடுத்து உதவும் கார்த்தி, ‘அட்ரஸ் கார்த்தி’ ஆகிவிட்டார்.

நாளிதழில் பட பூஜை விளம்பரமோ, அல்லது, ‘இன்று முதல் படப்பிடிப்பு துவக்கம்’ என வரும் விளம்பரங்களையோ வைத்துக் கொண்டு அந்தத் தயாரிப்பு நிறுவனம் எந்தத் திசையில் இருக்கிறது எனத் தெரியாத சூழலில் தெருத் தெருவாகத் திரிந்து வாய்ப்பு கேட்டு அலையும் ஒருவருக்கு, ஏற்கெனவே அதே கம்பெனிக்கு வாய்ப்பு கேட்டுச் சென்றவர் கொடுத்து உதவும் ஒரு தொடர்பு எண், கார்த்தியின் மொபைல் நம்பர்தான்.

சினிமா டைரக்டரியிலும் இடம்பெறாத நடிகர்களிலிருந்து, அவர்களது தொடர்பு எண்கள், முகவரிகள் தாண்டியும் சில அப்டேட்களை வைத்திருப்பவர். உதாரணமாக, ‘ஷங்கர் இப்ப ஆபீஸ் மாத்திட்டாரா... அவரது பழைய ஆபீஸில் எந்த கம்பெனி இயங்குது?’, ‘அட்லீ ஷூட்டிங் கிளம்பிட்டாரா?’, ‘கொடைக்கானல் போன யூனிட் திரும்பி வந்திடுச்சா?’ போன்ற தகவல்களையும் தெரிந்து வைத்திருப்பவர். இப்போது வேண்டுமானால் நடிக்க ஆட்கள் தேவையெனில் ‘காஸ்ட்டிங் கால்’ என டைட்டிலோடு வாட்ஸ் அப்பில் போஸ்டர்கள் உலாவலாம். அதெல்லாம் உண்மையா என்ற தகவல்கூட, அட்ரஸ் கார்த்திக்குத்தான் தெரியும்.

‘`என்னோட பெயர் கார்த்திகேயன். புதுக்கோட்டையில் உள்ள திருக்கோகர்ணம்லதான் பிறந்தேன். சினிமாவில் நடிக்கணும்னு சென்னை வந்தேன். இங்கே தங்கும் இடம், சாப்பாட்டுக்காக கே.கே.நகர்ல உள்ள டாடா உடுப்பி ஹோட்டல்ல சர்வரா வேலை பார்த்தேன். ஒரு தடவ, எங்க ஹோட்டலுக்கு சினிமா ஸ்டில் போட்டோகிராபர் கே.ஆர்.விமல், குடும்பத்தோடு வந்திருந்தார். அவர்கிட்ட நடிக்க விரும்புற ஆசையைச் சொன்னேன். ‘ஒவ்வொரு கம்பெனியிலும் போட்டோ கொடுத்து வை. அவங்களுக்குத் தேவையான கேரக்டருக்கு நீ செட் ஆகிறதா நினைச்சா உன்னைக் கூப்பிடுவாங்க’ன்னு சொன்னதோடு மட்டுமல்லாமல், அவரோட கேமராவுல போட்டோ எடுத்து மேக்ஸி சைஸ் பிரின்ட்களும் போட்டுக்கொடுத்து ஆசீர்வசிச்சார். ஹோட்டல்ல வேலை பார்த்துக்கிட்டே சினிமா வாய்ப்பு தேடுவேன்.

“விஜய் சேதுபதி, யோகிபாபுவுக்கு ஹெல்ப் பண்ணியிருக்கேன்!”

அப்ப சினிமான்னா கோடம்பாக்கம்தான். கோடம்பாக்கத்தில் டாடா உடுப்பி ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்தேன். முதன்முதல்ல ‘மந்திரன்’ல அட்மாஸ்பியர்ல வந்தேன். அடுத்து ‘வேல்’, ‘பீமா’ல நடிச்சேன். எல்லாமே கூட்டத்தில் ஒருத்தன்தான். சாப்பாடு போட்டு, சம்பளம் கிடைச்சிடும். பேரரசின் ‘தர்மபுரி’யில் நடிக்க வாய்ப்பு வந்துச்சு. அவுட்டோர் ஷூட்டிங். 15 நாள்கள் கேட்டாங்க. ஹோட்டல்ல லீவு கேட்டேன். ‘எக்ஸ்ட்ராவா 15 நாள்கள் லீவு எடுத்துட்டு அடுத்த மாசம் வந்தா போதும்’னு சொல்லிட்டாங்க. 15 நாள்கள் ஷூட்டுக்கு மீதிநாள்களுக்கு வேலை இல்லாமல், தினமும் சினிமா கம்பெனி தேடுதல் வேட்டைதான். அதுக்கு அடுத்த மாசம்தான் ஹோட்டல்ல மறுபடியும் வேலை. இப்ப நைட் 11 மணியில் இருந்து ராத்திரி ஒரு மணி வரை வேலை. நடிக்க வாய்ப்பு தேட வசதியான டைம். பகலெல்லாம் அலைஞ்சதுலேயும், நைட்டெல்லாம் ஹோட்டல்ல கால்கடுக்க நின்னதுலேயும் ரெண்டு கால்களும் வலி பின்னியெடுக்கும். இதையெல்லாம் நேர்ல பார்த்த சரக்கு மாஸ்டர், ‘நீ இப்படித் தலை காட்டிட்டு நடிச்சா, காணாமப்போய்டுவே. டயலாக் பேசுற மாதிரி நடி’ன்னார். எனக்கும் நல்ல யோசனையாயிடுச்சு. முதன்முதல்ல டயலாக் பேசி நடிச்சது ‘வேல்’ல தான். ‘எந்திரன்’ ஷூட்டிங் பெரம்பூர்ல நடந்துச்சு. அதுல நடிக்க ஜிம்பாய்ஸ் மாதிரி ஐந்நூறு பேர் தேவை. எல்லாமே அட்மாஸ்பியர் சீன்கள்தான். நல்ல சம்பளம்னாங்க. ஆனா, 499 பேர் அந்த சீனுக்கு செலக்ட் ஆகிட்டாங்க. அவங்கள செலக்ட் பண்ணின அசிஸ்டென்ட், என்னை மட்டும் வேண்டாம்னு சொல்லி அனுப்பிட்டாங்க. அந்த சீன்ல நடிச்சு முடிச்சதும் சாயந்திரமா சம்பளம் கிடைச்சிடும். பஸ் செலவுக்குக் காசு இருக்கும்னு நினைச்சு வந்தேன். ஆனா, வேலை இல்லைன்னு சொல்லி வெளியே அனுப்பிட்டாங்க’’ - கண்களில் திரளும் நீரைக் கட்டுப்படுத்தித் தொடர்கிறார் கார்த்தி.

‘`சினிமாவுல தொடர்புகள் ரொம்ப முக்கியம். என்னை மாதிரி நடிகர்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கணும்னா, இயக்குநர்களைத் தெரிஞ்சு வெச்சுக்கிறதைவிட உதவி இயக்குநர்களைத் தெரிஞ்சுவெச்சுக்கிறது முக்கியம். சென்னை வந்த புதுசுல நடிக்க வாய்ப்பு கேட்டு இயக்குநர் ஹரி ஆபீஸுக்குப் போனேன். அப்ப ‘தாமிரபரணி’ பட வேலைகள் நடந்திட்டிருந்துச்சு. அங்கே உள்ள அசிஸ்டென்ட், ‘ஒரே ஒரு பாட்டு சீன் மட்டும்தான் எடுக்க வேண்டியிருக்கு’ன்னு சொன்னார். உடனே நான் ‘அந்தப் பாட்டு சீன்ல தலைகாட்டுற சீனாவது குடுங்க’ன்னு கேட்டேன். ஏன்னா, சில படங்கள்ல ஹீரோ, ஹீரோயின் லவ் பண்றப்ப இடையே வாட்ச்மேன் கிராஸ் பண்ணிப் போவார். ஐஸ்வண்டிக்காரர் மணி அடிச்சிட்டுப் போவார்... இப்படி அட்மாஸ்பியர் ஆட்கள் ரோல் இருக்கும். அந்த ரோல்கூட எனக்குக் கிடைக்கல. இருந்தாலும், மனம் தளராம என் போட்டோக்கள குடுத்துட்டு வந்துட்டேன். ஆனா அவங்க ‘வேல்’ படம் பண்றப்ப எனக்கு ரோல் குடுத்தாங்க. சூர்யா, கலாபவன் மணி காம்பினேஷன்ல சின்ன டயலாக் பேசுற சீன் கிடைச்சது, என்னோட அதிர்ஷ்டம். அந்த சீனப்ப நான் ஓடி வருவேன். அது போஸ்டர்லேயும் வந்திருந்துச்சு. ஊர்ல அந்தப் போஸ்டரைப் பார்த்த எங்க அம்மா, சொந்த பந்தங்கள் எல்லாருக்கும் ‘சினிமால நான் ஏதோ பண்றேன்’னு என்மீது நம்பிக்கை வந்துச்சு. ‘டேய் போஸ்டர்ல பாத்தோம், கலக்குறே’ன்னு சொன்னாங்க.

சென்னையில நான் தாக்குப்பிடிக்க, அந்தப் போஸ்டர்தான் காரணம். ஒரு கம்பெனியில ஏறி இறங்கி வாய்ப்பு கிடைக்கலன்னா, சோர்ந்து போகக்கூடாது. அடுத்த படத்துக்குக் கூப்பிட்டு அனுப்புவாங்க. பொதுவா நடிக்க வாய்ப்பு கேட்டுப் போனா நான் முதல்ல பேச்சு கொடுக்கிறது அங்கே உள்ள டீ, காபி கொடுக்கற ஆபீஸ் பையன்கள் அல்லது உதவி இயக்குநர்கள்கிட்டதான். ‘அந்தக் கம்பெனியில இப்போ என்ன படம் பண்றாங்க? யார் இயக்குறாங்க? யாரெல்லாம் மெயின் ரோல்?’னு கேட்டுத் தெரிஞ்சுக்குவேன். அங்கே வாய்ப்பு கேட்டு வந்திருக்கும் மத்த ஆட்கள்கிட்டேயும் பேச்சு கொடுத்து அவங்க போயிட்டு வந்த கம்பெனி அட்ரஸ்களையும் கேட்பேன். ஆனா, யாருக்குமே சரியான முகவரி சொல்லத் தெரியாது. பஸ் ஸ்டாண்ட்ல இருந்து இறங்கி, லெப்ட்ல போய், ரைட்ல வந்து அப்படி இப்படின்னு தோணுறத சொல்வாங்க. அவங்க சொன்னது மாதிரியே அந்தந்த இடங்களுக்குப் போய், வாய்ப்பு கேட்டுட்டு வருவேன். ஒரு நாளைக்குப் பத்து கம்பெனி அலைஞ்சு திரிஞ்சா, ஒரு கம்பெனியில அட்மாஸ்பியர்ல நடிக்க வாய்ப்பு கிட்டும். ஒவ்வொரு நாளும் நான் படியேறின கம்பெனி முகவரியை எல்லாம் அன்னிக்கு ராத்திரியே வீட்டுக்குப் போனதும் எழுதி வச்சிடுவேன். இதுவரை பத்து டைரிகளுக்கு மேல இருக்கும். எல்லாமே அட்ரஸ்களும் போன் எண்களும்தான்.

“விஜய் சேதுபதி, யோகிபாபுவுக்கு ஹெல்ப் பண்ணியிருக்கேன்!”

இதுவரை என்கிட்ட ஐந்நூறு உதவி இயக்குநர்கள் நம்பர்கள் சேர்ந்திருக்கும். படம் பண்ணின, படம் பண்ணுற இயக்குநர்கள்னு நூறு பேராவது இப்பவும் என் தொடர்பில் இருப்பாங்க. விஜய்சேதுபதி, யோகிபாபுன்னு இன்னிக்கு முன்னணியில இருக்கற பலரும் நடிக்க வாய்ப்பு தேடி அலைஞ்சப்ப, அவங்களுக்குத் தொடர்புகள் கொடுத்திருக்கேன். தலைகாட்டின படங்களின் பட்டியல் ரொம்பப் பெருசு. யாருக்கும் சொன்னாக்கூட ஞாபகம் இருக்காது. இருபது வருஷ போராட்டத்துக்குப் பின், இப்ப கேரக்டர் ரோல்கள் அமையுது. சமீபத்திய ‘திட்டம் இரண்டு’ல ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பா கேரக்டர்ல நடிச்சிருக்கேன். அடுத்து ‘பொன்மாணிக்க வேல்’, ‘ராஜபீமா’, ‘பெல்’னு படங்கள் நடிக்கறேன். சில பெரிய நிறுவனங்களும், பெரிய இயக்குநர்களும்கூட, ‘உங்க தொடர்புகளைக் குடுங்க. வெப்சைட் ஆரம்பிச்சுக் காசு பார்க்கலாம்’னு ஆசை காட்டினாங்க. அவங்க நம்பரை எல்லாம் பிளாக் பண்ணிட்டேன்.

ஒருநாள் நானும் பெரிய நடிகன் ஆவேன். இந்த எண்ணம் மட்டும்தான் வாழ்க்கையை ஓட வெச்சுக்கிட்டிருக்கு!’’ - கண்கள் மின்னச் சொல்கிறார் கார்த்தி.