Published:Updated:

ஒரிஜினல் இந்திரன்... ‘செளத்’ சந்திரன்!

தாதா சாஹேப் ‘சௌத்’ விருது
பிரீமியம் ஸ்டோரி
தாதா சாஹேப் ‘சௌத்’ விருது

இறுதியாக... என்னத்த சொல்ல... தாதா சாஹேப் ‘சௌத்’ விருது வென்றவர்களுக்கு வாழ்த்துகள்!

ஒரிஜினல் இந்திரன்... ‘செளத்’ சந்திரன்!

இறுதியாக... என்னத்த சொல்ல... தாதா சாஹேப் ‘சௌத்’ விருது வென்றவர்களுக்கு வாழ்த்துகள்!

Published:Updated:
தாதா சாஹேப் ‘சௌத்’ விருது
பிரீமியம் ஸ்டோரி
தாதா சாஹேப் ‘சௌத்’ விருது
விருதுகள் ஒரு படைப்புக்கான அங்கீகாரத்தை மேலும் வலுப்பெறச் செய்யும் ஒரு கௌரவம். உலகின் மக்கள்தொகையை நெருங்கும் அளவுக்கு நாள்தோறும் புதுப்புதுப் பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டுக் கொண்டேவருகின்றன. இதுவொரு பக்கமிருக்க, இன்னொரு புறம் ஏற்கெனவே பிரபலமாக இருக்கும் விருதுகளின் பெயர்களில் வெவ்வேறு நிறுவனங்கள் விருதுகளை வழங்க ஆரம்பித்திருக்கின்றன. ‘வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்று ஒரிஜினல் விருது தருபவர்கள் போர்டு மாட்டவேண்டும்போல.

‘அஜித்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது’ என்ற செய்தியைத் தொலைக்காட்சிகளிலும் சமூகவலைதளங்களிலும் பார்த்தவுடன் ‘அப்டியே ஷாக் ஆகிட்டேன்’ மொமண்ட். ‘இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதை இந்தச் சின்ன வயதிலேயே அஜித் வாங்கிவிட்டாரா’ என்பதுதான் முதல் காரணம். தமிழில் சிவாஜி, கே.பாலசந்தருக்குப் பின்னர் யாருக்குமே இவ்விருது தரப்படவில்லையே என்ற திகைப்பு இரண்டாவது காரணம். பிறகு பார்த்தால், வரிசையாக தனுஷ், ஜோதிகா, ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா, மோகன்லால் என ‘முடியை விரித்துப் போட்டு வந்தால் மிக்ஸி தருவோம்’ கதையாக எல்லோருக்கும் விருதுகள் வழங்கி கௌரவித்திருந்தார்கள்.

சரி, இணையத்திலேயே தேடுவோம் எனத் தேடினால், இது தாதா சாஹேப் பால்கே - தென்னிந்திய விருதுகளாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளை அள்ளி வழங்கியிருக்கிறார்கள். அவர்களின் வலைதளத்துக்குச் சென்று பார்த்தால் பிரதமர் மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஹர்ஷவர்தன் என ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையும் வாழ்த்துமழையைப் பொழிந்திருக்கிறார்கள். அந்தத் தளத்திலேயே துழாவி அதிகாரபூர்வ எண்ணுக்கு அழைத்தால், “தென்னிந்தியாவில் கடந்த ஆண்டிலிருந்து இந்த விருதுகளைக் கொடுக்கிறோம். வடக்கில் கடந்த ஐந்தாண்டுகளாக இந்த விருதுகளைக் கொடுத்துவருகிறோம்’’ என்கிறார்கள்.

தாதா சாஹேப் ‘சௌத்’ விருது
தாதா சாஹேப் ‘சௌத்’ விருது

‘எந்த அடிப்படையில் விருதுகளை அறிவிக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். “சார், அதாவது பார்த்தீங்கன்னா, அது எங்க நடுவர்களோட முடிவு. இதே பெயரில் பலர் விருதுகள் நடத்துகிறார்கள். ஆனால், நாங்கள் மட்டும்தான் முறையான அனுமதியைப் பெற்றிருக்கிறோம். தாதா சாஹேப் பால்கேவின் பேரன்கூட எங்கள் நடுவர் குழுவில் இருக்கிறார்” என்று அவர் சொல்லி முடித்ததும் ஒரே நேரத்தில் கமலின் 30 ட்வீட்கள் படித்ததைப்போல் குழம்பிப்போனேன்.

‘இந்திய சினிமாவின் தந்தை’ எனப் போற்றப்படும் தாதா சாஹேப் பால்கே பெயரில் இதற்கு முன்பும் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் அடுத்த அதிர்ச்சிகரமான செய்தி. 2019-ம் ஆண்டு ஸ்ரீதேவி மகள் ஜான்விக்கு தாதா சாஹேப் எக்ஸலென்ஸ் விருது என்னும் பெயரில் வேறொரு நிறுவனம் விருது வழங்கியது. தாதா சாஹேப் ஃபிலிம் பவுண்டேஷன் விருதுகள் என்னும் பெயரில் வேறொரு விருது விழாவும் நடைபெற்று வருகிறது. ‘‘திரைத்துறையின் உயரிய விருதை இப்படிக் களங்கப்படுத்துவது வருத்தத்திற்குரியது. இந்தப் பிரச்னையில் அரசாங்கம் தலையிட வேண்டும்’’ என ஏற்கெனவே ஒருமுறை கோபப்பட்டிருந்தார் ஒரிஜினல் தாதா சாஹேப் விருது வென்ற முதுபெரும் இயக்குநரான ஷியாம் பெனகல்.

2018-ம் ஆண்டு IARA என்னும் பெயரில் விஜய்க்கு சர்வதேச அளவில் சிறந்த நடிகர் என்னும் விருது வழங்கப்பட்டது. 2019-ம் ஆண்டு யாருக்கு என்ன விருதுகள் என அந்நிறுவனம் ஒரு செய்தியும் வெளியிடவில்லை. அந்நிறுவனத்தின் இணைய பக்கங்களில் நிறுவனத்துக்கான வலைதளம்கூட இல்லை. இப்படியாக விருதுகள் வெறுமனே அந்நாளுக்கான சமூக வலைதள டிரெண்டு செய்தியாக மாறிவிட்டதுதான் பெருஞ்சோகம்.

இதுமட்டுமல்ல, சமீபகாலமாக பேப்பரைத் திறந்தால் சினிமா விளம்பரங்களிலும், சுவரை முறைத்தால் சினிமா போஸ்டர்களிலும் ‘........ஃபிலிம் ஃபெஸ்டிவல் விருது’ என்ற வாசகங்கள் காணப்படுகின்றன. ஆனால் அந்தப் படங்கள் விருது வெல்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வெறுமனே திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டாலே இப்படி விளம்பரப்படுத்திவிடுகிறார்கள். மேலும் ஆஸ்கர், கேன்ஸ் போல நூற்றுக்கணக்கில் பல உப்புமா விருது விழாக்கள் உலகமெங்கும் நடக்கின்றன. அவற்றில் கலந்துகொண்டாலோ, ஆறுதல் பரிசாக வெங்கலக் கிண்ணியைப் பெற்றாலோ ‘அவார்டு படம்’ என்று போட்டுக்கொள்கிறார்கள். இத்தனைக்கும் ஒருகாலத்தில் ‘அவார்டு படம்’ என்றாலே ஆடியன்ஸ் அலறிய பூமிதான் இது.

இறுதியாக... என்னத்த சொல்ல... தாதா சாஹேப் ‘சௌத்’ விருது வென்றவர்களுக்கு வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism