Published:Updated:

``என் சோகம் எந்த தாய்க்கும் வரக்கூடாது!" - ரஜினி, கமலை ஆட வைத்த புலியூர் சரோஜாவின் கண்ணீர்க்கதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மகனின் புகைப்படத்துடன் புலியூர் சரோஜா
மகனின் புகைப்படத்துடன் புலியூர் சரோஜா

`சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா' என ரஜினியைத் துள்ளலாக ஆட வைத்தவர். `இளமை இதோ இதோ' எனப் பாடியபடியே கமலை பைக் சாகசமும் செய்ய வைத்தார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் துள்ளியாடிய அவரை வீட்டிலேயே முடக்கியிருக்கிறது காலத்தின் மறுபக்கம்.

ஒருகாலத்தில் சினிமா நட்சத்திரங்களின் படையெடுப்பால் பரபரப்புடன் இருந்த அந்த வீடு, இன்று ஆள் ஆரவாரமில்லாமல் நிசப்தமாகக் காட்சியளிக்கிறது. சென்னை, வளசரவாக்கத்திலுள்ள அந்த வீட்டில் தனிமையை மட்டுமே துணையாகக் கொண்டிருந்தார் புலியூர் சரோஜா. தென்னிந்திய சினிமாக்களில் ஜொலித்த ஏராளமான நட்சத்திரங்களின் வளர்ச்சியில் இவரின் பங்கு முக்கியமானது. இந்திய சினிமாவில் கோலோச்சிய நடன இயக்குநர்களில் முக்கியமானவர்.

புலியூர் சரோஜா
புலியூர் சரோஜா
`சிவாஜியால் வந்த அழுகை; இளையராஜா சொன்ன ஜானகியம்மா ரகசியம்!' - `தேவர் மகன்' அனுபவங்கள் பகிரும் ரேவதி

`சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா' என ரஜினியைத் துள்ளலாக ஆட வைத்தவர். `இளமை இதோ இதோ' எனப் பாடியபடியே கமலை பைக் சாகசமும் செய்ய வைத்தார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் துள்ளியாடிய அவரை வீட்டிலேயே முடக்கியிருக்கிறது காலத்தின் மறுபக்கம். நம் வருகைக்காகக் காத்திருந்தவர், சூடிய மல்லிகையின் பிரகாசத்துடன் நம்மை வரவேற்றார். சரோஜாவுக்கு வயது 83. ஆனால், அதைப் பொய்யாக்குகின்றன இவரின் தடுமாற்றமில்லாத பேச்சும் நடையும்.

எம்.ஜி.ஆர் உடனான பந்தத்திலிருந்தே தனது சினிமா அறிமுகத்தை அசைபோட்டார் சரோஜா. ``ஆரம்பத்திலிருந்தே என்னோட டான்ஸ் திறமையைக் கவனிச்சுகிட்டு வந்தார் எம்.ஜி.ஆர் அண்ணன். `தோழா'ன்னு என்கிட்ட உரிமையா பழகுவார். `இதய வீணை' படத்துல எம்.ஜி.ஆர் குதிரையில வந்து நடிகை லட்சுமியைத் தூக்கிட்டுப் போற மாதிரியான காட்சியில என்னை டூப்பா பயன்படுத்தினார். அந்த சீனை எடுத்து முடிச்சதும், ஆனந்த விகடன் மணியனைக் கூப்பிட்டு, `சரோஜாவுக்கு 5,000 ரூபாய் கொடுத்திடுங்க’ன்னு சொல்லியிருக்கார். அதன்படி அந்தத் தொகை எனக்குக் கிடைச்சதும் பயங்கர அதிர்ச்சியானேன். மதியம் சாப்பிட்டுகிட்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

புலியூர் சரோஜா
புலியூர் சரோஜா

அவரோட ரூமுக்குப் போனேன். அப்போ நான் குரூப் டான்ஸர். அதனால, `ஒரு பாட்டுல குரூப் டான்ஸ் ஆடுனா, பிடித்தம் போக 225 ரூபாய்தான் எங்களுக்குக் கொடுப்பாங்க. எனக்கு ஆயிரக்கணக்குல இதுவரைக்கும் யாருமே சம்பளம் கொடுத்ததில்ல. இவ்வளவு பணம் வாங்க பயமா இருக்கு’ன்னு தயக்கத்துடன் சொல்லிக்கிட்டே அவர் முன்னாடியிருந்த டேபிள் மேல பணத்தை வெச்சேன். `ரிஸ்க்கான அந்த சீன்ல நீ டூப் போட்டு நடிச்சதாலதான் இந்தப் பணம்’னு அவர் சொல்லி அந்தப் பணத்தை என்கிட்ட கொடுத்ததுடன், அவர்கூட உட்கார வெச்சு என்னைச் சாப்பிட வெச்சார். அப்போதிலிருந்து அவருடன் என் நட்பு இன்னும் நெருக்கமாச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1970-கள்ல எம்.ஜி.ஆருக்கு ஜோடியா நடிச்ச லதா, மஞ்சுளா உள்ளிட்ட புதுமுக நடிகைகளுக்கு டான்ஸ், முக பாவனைக்கான பயிற்சி கொடுக்குற பொறுப்பை எனக்குக் கொடுத்தார் எம்.ஜி.ஆர் அண்ணன். அதுக்காக விடியற்காலை என் வீட்டுக்கு கார் வரும். எம்.ஜி.ஆருக்காக காஷ்மீர்லேருந்து ஸ்பெஷலா மாதுளம்பழம் வரும். அதுலயே எனக்கும் ஸ்பெஷல் ஜூஸ் தரச் சொல்வார் அவர். காலையில அந்த நடிகைகளுக்கு ரிகர்சல் கொடுத்துட்டு, என்னோட ஷூட்டிங் வேலைக்குப் போவேன். ஜெயலலிதாவை காலையில சீக்கிரமே எழுப்பி, அவரை வாக்கிங் கூட்டிட்டுப்போகுற பொறுப்பையும் என்கிட்ட ஒப்படைச்சார் எம்.ஜி.ஆர்" என்று ஆரம்பகால நினைவுகளைப் பகிர்ந்தவர், 1980, 90-களில் நடன இயக்குநராகத் தமிழ் உட்பட ஐந்து மொழி சினிமாக்களில் பணியாற்றினார்.

புலியூர் சரோஜா
புலியூர் சரோஜா

நாம் முணுமுணுக்கும் 1980'ஸ் காலகட்ட பெரும்பாலான பாடல்களையும் சரோஜாதான் கோரியோகிராபி செய்திருக்கிறார். அந்த அனுபவங்களைச் சொல்லும்போது, வழக்கத்தைவிட சரோஜாவின் முகத்தில் புத்துணர்வு கூடுகிறது. `` `நேத்து ராத்திரி யம்மா' பாட்டுல சில்க் ஸ்மிதா சரியா எக்ஸ்பிரஷன்ஸ் கொடுக்கல. முதல் டேக் சரியா வரல. அப்பல்லாம் ஃபிலிம் ரோலைக் கூடுமானவரை விரயம் செய்ய மாட்டோம். டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சார் என்னைப் பார்த்து முறைச்சார். ரெண்டாவது டேக் போகலாம்னு சொல்லி, ஸ்மிதாவோட தொடையைப் பிடிச்சு கிள்ளி விட்டேன். அந்த வலியிலேயே அவளும் சிணுங்கலா எக்ஸ்பிரஷன்ஸ் கொடுக்கவே, டேக் ஓகே ஆகிடுச்சு. பெரும்பாலும், அதிகமா செலவு வைக்காம, சிம்பிளாவும் சீக்கிரமாவும் பாட்டு எடுத்து முடிச்சுடுவேன்.

அதுக்கு உதாரணம்தான் `நிலா காயுது' பாட்டு. `ஒரு கயித்து கட்டில், வெத்தலைப் பாக்கு, தண்ணீர் செம்பு இருந்தா போதும்'னு முத்துராமன் சார்கிட்ட சொல்லி, சீக்கிரத்துலயே அந்தப் பாட்டை முடிச்சுக் கொடுத்தேன். `குரு சிஷ்யன்’ படத்துல ஆறு பாடல்களையும் பெங்களூர்ல ஒரே நாள்ல கோரியோகிராபி செஞ்சு முடிச்சேன். `சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா...' பாடல் ஷூட்டிங் நேரத்துல ரஜினிக்கு தோள்பட்டையில காயம் இருந்திருக்கு. அது தெரியாம, ஹெவி மூவ்மென்ட்ஸ் கொடுத்து விடாப்பிடியா அவரை ஆட வெச்சுட்டேன். அதன் பிறகுதான் அவருக்குக் காயம் இருக்குற விஷயம் எனக்குத் தெரிஞ்சது. உடனே, `ஸாரிடா தம்பி'ன்னு அவர்கிட்ட சொன்னேன்.

ரஜினியுடன் சரோஜா
ரஜினியுடன் சரோஜா

என் வீட்டுக்கு சைக்கிள்ல வந்து ரிகர்சல் பண்ணிட்டுப் போவா ராதிகா. `கிழக்கே போகும் ரயில்'ல விரட்டி விரட்டி அவளை டான்ஸ் ஆட வெச்சேன். நானே ஆச்சர்யப்படுற அளவுக்குப் பெரிய நடிகையா வளர்ந்தா. `பெண்மணி அவள் கண்மணி' படத்துல சின்ன ரோல்ல நடிக்க வேண்டிய ஆர்ட்டிஸ்ட் வரல. அதனால, பாட்டு சொல்லிக்கொடுத்துகிட்டிருந்த என்னைத் திடீர்னு அந்த ரோல்ல நடிக்கச் சொல்லிட்டார் விசு. அப்படித்தான் சில படங்கள்ல கெஸ்ட் ரோல்கள்ல நடிக்கவும் செஞ்சேன். ஏ.வி.எம் நிறுவனத்தோட செல்லப் பொண்ணு மாதிரி, அவங்களோட படங்கள்ல யார் மாறினாலும் நான்தான் பிரதான டான்ஸ் மாஸ்டர். அதேபோல, பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன், பாக்யராஜ், விசு, வி.சேகர்னு பல இயக்குநர்களோட படங்கள்லயும் நான்தான் பிரதான கோரியோகிராபர். அப்போ பீக்ல இருந்த எல்லா ஆர்ட்டிஸ்டுகளுமே என் மேல அவ்ளோ அன்பா இருப்பாங்க. என் வாழ்க்கையில அது ஒரு பொற்காலம்!

கமலை வெச்சு `அம்மம்மா வந்தந்திந்த சின்னக் குட்டி' பாட்டுக்கு கோரியோகிராபி செஞ்சுகிட்டிருந்தேன். அங்க வந்த ஸ்டில் போட்டோகிராபர் ஒருத்தர், `உங்களையும் உங்க மருகனையும் போட்டோ எடுக்கிறேன்'னு சொன்னார். கமலும் நானும் போஸ் கொடுத்துகிட்டிருந்தோம். பக்கத்து செட்டுல ஷூட்டிங்ல இருந்த ரஜினி, நானும் கமலும் ஒண்ணா வேலை செய்யுறதைக் கேள்விப்பட்டு அங்க வந்தார். `அக்கா, நான் இல்லாம போட்டோ எடுக்குறீங்களே'ன்னு கேட்க, `நீங்க ரெண்டு பேருமே என் ரெண்டு கண்கள் போலடா'ன்னு சொல்லி அவங்க கூட எடுத்துகிட்டதுதான் இந்த போட்டோ." - வரவேற்பறையை அலங்கரிக்கும் அந்தப் புகைப்படத்தைக் காட்டி, அதன் பின்னணிக் கதையைக் கூறுகிறார் சரோஜா. அதில், கமலுக்கும் ரஜினிக்கும் இடையே பாந்தமாக அவர் காட்சிதரும் புகைப்படம், அவருக்கான முக்கியத்துவத்தையும் திரை நட்சத்திரங்கள் அவர்மீது வைத்திருந்த பாசத்தையும் ஒருசேர உணர்த்துகின்றன.

ரஜினி-கமலுடன் சரோஜா
ரஜினி-கமலுடன் சரோஜா

பெரிதாகப் போட்டிகள் இல்லாமல் நடனத்துறையில் வெற்றி வலம் வந்த சரோஜாவின் மொத்த வாழ்க்கையையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டிருக்கிறது, அவருடைய மகனின் இழப்பு. ஒரே மகன் சத்தியநாராயணனை விபத்து ஒன்றில் பறிகொடுத்தவர், அதன் பிறகு சினிமாவிலிருந்து விலகிவிட்டார். அந்தச் சோக அத்தியாயத்தைக் கூறும் சரோஜாவின் கண்களில் நீர் அருவியாகக் கொட்டுகிறது. ``நான் உயிரையே வெச்சிருந்த பையனோட எதிர்காலத்துக்காக, கால்ல சக்கரம் கட்டுன மாதிரி அப்போ ஓடி ஓடி உழைச்சேன். என் பையன் சத்யாவோ, `இந்தச் சொத்து எதையுமே நான் அனுபவிக்க மாட்டேன்'னு அடிக்கடி சொல்லுவான். காலேஜ் ஃபைனல் இயர் படிச்சுகிட்டிருந்தான். தஞ்சாவூர்ல ஒருநாள் தன் நண்பனுடன் ரோட்டோரத்துல நின்னு இளநீர் குடிச்சுகிட்டிருந்திருக்கான். அந்த வழியே வேகமா போன பஸ் ஒண்ணு அவன் மேல ஏறினதுல சம்பவ இடத்துலயே என் புள்ளை இறந்துட்டான். அந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதுக்கு அப்புறமா என்ன நடந்துச்சுனு தெரியாத அளவுக்கு பிரமை பிடிச்ச மாதிரி ஆகிட்டேன்.

அவனே போனபிறகு சொத்து சுகம் எதையும் அனுபவிக்க விருப்பமில்ல. `இதெல்லாம் நீ சம்பாதிச்சு சேர்த்த சொத்து. உன் விருப்பம்போல செய்'ன்னு என் வீட்டுக்காரர் சொன்னார். இப்போ வசிக்குற இந்த வீடு உட்பட எங்களோட எல்லாச் சொத்துகளையும் தானம் செய்யுறதா எழுதி வெச்சுட்டோம்" என்று உருக்கமாகச் சொல்பவர், மகனின் நினைவாகப் பள்ளி ஒன்றை நடத்திவருகிறார். அதில் குறைந்த கட்டணத்தில் ஏழைக் குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்.

கணவர் சீனிவாசனுடன் சரோஜா...
கணவர் சீனிவாசனுடன் சரோஜா...

`` `என் சோக கதையைக் கேளு தாய்க்குலமே' பாட்டுக்கு நான்தான் கோரியோகிராபி செஞ்சிருந்தேன். அதுபோலவே, என் கதையும் பெரும் சோகமா மாறும்னு நான் நினைக்கல" என்று தன் உணர்வுகளைப் பாடல் மூலமாக வெளிப்படுத்திய சரோஜா, மென்சோகத்துடன் தொடர்ந்தார்...

``பையனோட இழப்பை என்னால தாங்கிக்க முடியல. அந்தத் தாக்கத்துல சுயநினைவு தவறிடுச்சு. என்னை மகிழ்ச்சிப்படுத்த நினைச்சு, ஆஸ்பத்திரியில ஒரு குழந்தையை என் மடியில உட்கார வெச்சிருக்காங்க. பக்கத்திலிருந்த கத்தரிக்கோலை எடுத்து அந்தக் குழந்தையின் முடியைத் தாறுமாறா வெட்டிவிட்டுட்டேன். அந்த அளவுக்கு மோசமான மனநிலையில இருந்திருக்கேன். ரஜினி, கமல், சத்யராஜ், டைரக்டர் ப்ரியதர்ஷன் உட்பட பல மொழி நட்சத்திரங்கள் ஏராளமானோர் என் வீட்டுக்கு வந்து என் நிலையை எண்ணி வருந்தினதோடு, என்னைக் குணப்படுத்தவும் மெனக்கெட்டாங்க. தினமும் என் வீட்டுக்கு வந்து எனக்குச் சாப்பாடு ஊட்டிவிட்டு, `வா ஷூட்டிங் போகலாம்'னு வாஞ்சையா கூப்பிடுவாங்க மனோரமா. `மாமியாரே... மருமகன் வந்திருக்கேன். நீ மறுபடியும் வந்து வேலை செய்யணும்'னு கமல் உருக்கமா சொல்லுவான். என்னைக் குணப்படுத்தினதுல என் கோடம்பாக்கம் தம்பிகள் மற்றும் மகன்களோட பங்கு முக்கியமானது.

பள்ளிக் குழந்தைகளுடன் சரோஜா...
பள்ளிக் குழந்தைகளுடன் சரோஜா...
என் கணவர் எனக்கு அப்பா;  என் அம்மாவுக்கு மகன்! - ஆனந்தம் பகிரும் சாண்டி மாஸ்டர் மனைவி

`அக்கா, மாமா... நீங்க ரெண்டு பேரும் என் வீட்டுக்கே வந்திடுங்க'ன்னு என்னையும் என் வீட்டுக்காரரையும் விஜயகாந்த் வலியுறுத்திக் கூப்பிட்டான். நாங்க மறுத்துட்டோம். `என் வீட்டுக்கதவு உங்களுக்காக எப்போதும் திறந்திருக்கும்'னு பாசமா சொன்னான். அவனுக்கு இப்போ உடம்பு சரியில்லைனு கேள்விப்பட்டேன். விஜயகாந்தை ஒருமுறை பார்க்கணும்னு ஆசைப்படுறேன். எனக்கு ஒண்ணுன்னா என்மேல அன்பு வெச்சிருக்குற பலரும் ஓடி வந்திடுவாங்க. ஏற்கெனவே அவங்கள்லாம் என்மேல காட்டின அன்புக்கே இன்னும் கைம்மாறு செய்ய முடியாம தவிக்குறேன்.

அதனால, யாருக்கும் தொந்தரவு கொடுக்காம நானும் என் வீட்டுக்காரரும் அமைதியா வாழ்ந்துகிட்டிருக்கோம். நாங்க நடத்துற ஸ்கூலுக்கு, என் பையன் பிறந்தநாள், நினைவுநாள், முக்கியமான பண்டிகை சமயத்துல மட்டும் போய் குழந்தைகளோடு நேரம் செலவிடுவேன். மத்தபடி இந்த வீடுதான் எனக்கான கூடு!" - கட்டுப்படுத்த முடியாத கண்ணீருடன் முடிக்கிறார் சரோஜா. சினிமாவில் பல தலைமுறைகளைக் கண்டவர், தன் மனதில் பொதிந்துக்கிடக்கும் வலிகளையும் பாரத்தையும் ஓரளவுக்காவது இறக்கி வைத்த உணர்வில் நமக்கு விடைகொடுத்தார்.

கமலுடன் சரோஜா...
கமலுடன் சரோஜா...

புலியூர் சரோஜாவின் வீடியோ பேட்டி, அவள் விகடன் யூடியூப் சேனலில் அண்மையில் வெளியானது. அதன் பிறகு, கமல் உள்ளிட்ட பலரும் சரோஜாவிடம் பேசியுள்ளனர். இதுகுறித்து சில தினங்களுக்கு முன்பு போனில் தொடர்புகொண்டு நம்மிடம் பேசிய சரோஜா, ``அந்த வீடியோ பேட்டியைப் பார்த்துட்டு சினிமாத்துறையினர் உட்பட பலரும் என்கிட்ட மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமா பேசினாங்க. அந்த வரிசையில நான் எதிர்பார்க்காத வகையில கமல் எனக்கு போன் செஞ்சான். ரெண்டு பேரும் தமாஷா அரை மணி நேரத்துக்கு மேல பேசினோம். `உனக்கு செல்போன் இல்லையா?'ன்னு அவன் கேட்க, `பல் இருக்கு. என்கிட்ட செல் இல்ல'ன்னு சொன்னேன். `நான் ஒரு போன் வாங்கித்தரட்டுமா?'ன்னு கேட்டான். `அந்தப் பணத்துல யாருக்காச்சும் தர்மம் பண்ணிடுடா. எனக்கு லேண்ட்லைன் போனே போதும்பா'ன்னு சொன்னேன்.

`குணா' படத்துல கமலுக்கு அம்மாவா வரலட்சுமி நடிச்சிருப்பாங்க. அந்த ரோல்ல என்னை நடிக்கச் சொல்லி கமல் பலமுறை வலியுறுத்தினான். ஆனா, அப்போ எனக்கு நேரம் இல்லாததால அந்த வாய்ப்பை மறுத்துட்டேன். அதை மறக்காம நினைவுபடுத்தி, `எனக்கு நிறைவேறாத ஆசைகள்ல, நீ என்கூட நடிக்காததும் ஒண்ணு'ன்னு ஏக்கமா சொன்னான். `அது போயிட்டுப்போகுது. உன்னோட அடுத்த படத்துல உனக்குப் பாட்டியா நடிக்குறேன்'ன்னு நான் சொல்ல, கமல் சிரிச்சுட்டான்.

`உன்னையும் மாமாவையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும் மாமியாரே. ஒருநாள் சர்ப்ரைஸா உன் வீட்டுக்கு வருவேன். உன்கூட ரொம்ப நேரம் அன்பா நேரம் செலவிடப்போறேன். தயாரா இரு'ன்னு சொன்னான். `நீ எப்போ வேணாலும் வாடா மருமவனே'ன்னு சொன்னேன். இந்தப் பேட்டி என் மனசுல இருந்த பாரத்தை ரொம்பவே குறைச்சிருக்கு" என்று சந்தோஷமாகப் பேசினார்.

புலியூர் சரோஜாவின் விரிவான பேட்டியை, தற்போதைய அவள் விகடன் இதழில் படிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு