Published:Updated:

டிக்கிலோனா: `எங்களுக்கு மானமும் அறிவும் கிடையாதா சந்தானம்?' - கேட்கும் மாற்றுத்திறனாளிகள்

`` `டிக்கிலோனா' திரைப்படத்தில் கம்பூன்றி நடக்கும் எங்களை `சைடு ஸ்டாண்டு' போட்டு நடக்கிறோம் என்று உருவ கேலி செய்துள்ளீர்கள். ஒன்று தெரியுமா சந்தானம் அவர்களே..."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``நகைச்சுவை என்பது எல்லோரையும் சிரிக்க வைக்க வேண்டும். ஒருவரை உருவ கேலி செய்து நோகடித்து அதன் மூலம் மற்றவர்களைச் சிரிக்க வைக்க முற்படும் செயலுக்குப் பெயர் நகைச்சுவையா?" சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள `டிக்கிலோனா' திரைப்படத்தில் நகைச்சுவை என்ற பெயரில் நடிகர் சந்தானம் மாற்றுத் திறனாளிகளை உருவகேலி செய்துள்ளதை முன்வைத்துதான் இப்படியான சர்ச்சை வெடித்திருக்கிறது.

டிக்கிலோனா
டிக்கிலோனா
சந்தானம் என்றாலே 'அந்த' காமெடி தானா? 'டிக்கிலோனா' ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

`காதல் மனைவியுடன் ஏற்படும் கசப்பான அனுபவங்களால், கால எந்திரத்தில் பயணித்து தனது காதல் திருமணத்தை மாற்றியமைக்கும் ஓர் இளைஞன் இறுதியில் என்னவாகிறான்?' என்பதுதான் டிக்கிலோனா திரைப்படத்தின் ஒன்லைன்.  ஹீரோவாக சந்தானம் நடித்திருக்கும் இப்படத்தில் கால எந்திரம் குறித்து ஆராய்ச்சி செய்துவரும் விஞ்ஞானியாக நடித்திருக்கும் அருண் அலெக்சாண்டருக்கு மாற்றுத்திறனாளி கேரக்டர். கைத்தடி ஊன்றியபடி நடக்கும் அருண் அலெக்சாண்டரை சதா கலாய்த்துக்கொண்டே இருக்கும் சந்தானம் ஓரிடத்தில், `சைடு ஸ்டாண்டு' என்று கிண்டலடிக்கிறார். இந்த வார்த்தைதான் மாற்றுத்திறனாளிகள் மனதில் ஈட்டியாய் இறங்கியிருக்கிறது.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகளுக்கான இயக்கமான `டிசம்பர் 3'-ன் தலைவர் பேராசிரியர் தீபக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``நகைச்சுவை என்பது மன இறுக்கத்தை விலக்கி, மனதை இலகுவாக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும், ஒரு குழந்தையின் சிரிப்பைப்போல, தாயின் மடியைப்போல, அன்புக் காதலியின் பொன் முகத்தைப்போல! அப்படி இல்லாமல் மனதை நோகடிக்கும் விஷயமாக இருக்கக் கூடாது. ஏதோ இயற்கையின் வினையால் ஏற்பட்ட உடல் பாதிப்பை, நகைச்சுவைப் பொருளாக்கிக் காட்சிப்படுத்துவது நல்ல சமூகத்தின் பண்பு இல்லை.

பேராசிரியர் தீபக்
பேராசிரியர் தீபக்

3,200 ஆண்டுகளாக இந்த மண்ணில் நாகரிகமாக வாழும் தமிழ்ச்சமூகம், உடல் குறைபாட்டை `கிண்டலடிக்கிறது' என்பது நம்மை நமது வருங்காலச் சந்ததிகள் முற்போக்காளர்கள் என்று அழைக்க வகை செய்யுமா? பகுத்தறிவு வேண்டும் என்று உலகுக்கே எடுத்துச் சொல்லும் நாம், இப்படியா இயற்கை அன்னையின் சரிசமமான பிள்ளைகளான மாற்றுத்திறனாளிகளைக் கிண்டலடிப்பது? மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று சொன்ன அறிவுத்தந்தை பெரியார் வழியாகக் கேட்கிறேன்... எங்களுக்கு மானமும் அறிவும் கிடையாதா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடிகர் சந்தானம் அவர்களே... தற்போது வெளிவந்துள்ள `டிக்கிலோனா' என்ற திரைப்படத்தில் கம்பூன்றி நடக்கும் எங்களை `சைடு ஸ்டாண்டு' போட்டு நடக்கிறோம் என்று உருவகேலி செய்துள்ளீர்கள்.
ஒன்று தெரியுமா சந்தானம் அவர்களே... தமிழ் வளர்த்த மூதாதையர் பலர் கம்பூன்றி வளர்ந்தவர்கள்தாம்! கம்பூன்றி நடக்கும் பல மாற்றுத்திறனாளிகள் நம் நாட்டின் பெருமையை உலக நாடுகள் மத்தியில் சிறப்பாகக் கொண்டு சென்று மெடல் பல பெற்றுவந்துள்ளனர். அதிலும் பாருங்கள் ஊனம் இல்லாதவர்களைவிட எங்கள் மக்கள் அதிகமாக வெற்றி பெற்று வந்துள்ளனர்.

ஐயா! சின்னதாகக் காலில் அடிபட்டாலோ, காலணி கிழிந்தாலோ நடக்கச் சிரமப்படும் மக்களுக்கு நடுவில், கால் பாதிக்கப்பட்டவர்கள் தத்தி தத்தி நடக்கும்போது, ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும்போது தரையை நோக்கி உடலை முன்னோக்கிச் செலுத்தி, அடுத்த அடி எடுத்து வைக்க, உடலைத் திரும்ப மேல் நோக்கித் தூக்கினால்தான் அவரை அவரே நகர்த்த முடியும். இத்தனையையும் செய்து நடக்க வேண்டுமானால் உடலின் தசை நார்கள் எவ்வளவு வேலை பார்க்க வேண்டும் சிந்தித்துப் பாருங்கள்!

டிக்கிலோனா
டிக்கிலோனா

ஓரடி எடுத்து வைக்கவே இவ்வளவு சிரமப்படும் தோழர்கள், இத்தனையையும் ஏற்றுக்கொண்டு வாழ்வில் எதிர்நீச்சல் போடுபவர்கள் உண்மையில் `போராளிகள்'. அவர்களை இப்படி இழிவாக நகைச்சுவைக்கு உட்படுத்துவது ஏற்புடையதல்ல. இதைப்பற்றி நாங்கள் சொல்வதைச் சொல்லிவிட்டோம், அதேநேரம் எங்கள் கண்டனத்தையும் இந்த வேளையில் கனத்த இதயத்துடன் பதிவு செய்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கைதான் இப்போது பெரும் விவாதமாக மாறியிருக்கிறது. ஆனால், இதுகுறித்து சந்தானமோ, `டிக்கிலோனா' படக்குழுவோ பொதுவெளியில் வாய்திறக்கவில்லை.

இதுகுறித்து பேராசிரியர் தீபக்கிடம் பேசினோம், ``ஒவ்வொரு மாற்றுத் திறனாளியும் வாழ்க்கையை எதிர்கொள்ள எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு இங்கே பலருக்கு புரியுறதே இல்லை. உடல் ரீதியான பிரச்னைகளைக் கடந்து போராடி நாங்க மேல வந்தாலும் ஒரு நொடியில கலாய்ச்சுட்டு போயிடுறாங்க. அது எங்களுக்கு எவ்வளவு சங்கடமா இருக்கும், எவ்வளவு வலிக்கும்னு அவங்க யோசிக்கிறதே இல்லை. நாங்க அப்படி என்ன தப்பு செஞ்சுட்டோம்? ஒரு பக்கம் மாற்றுத்திறனாளிகளை சமமா மதிக்கணும்னு நிறைய முன்னெடுப்புகள் நடந்துகிட்டிருக்கு.

மாற்றுத்திறனாளிகளை வெச்சு `ராம்ப் வாக்'லாம் நடத்துறாங்க, மாற்றுத்திறனாளின்னு எழுதச் சொல்லி எந்த அரசாணையும் இங்கே இல்லை. ஆனா, பத்திரிகை உலகம் கடந்த பத்து வருடங்களா ஊனமுற்றோர்ங்கிற வார்த்தையைப் பயன்படுத்துறதே இல்லை. ஏன்னா பலரும் ஆழமாக சிந்திச்சு சமூக முன்னேற்றத்துக்காக வேலை செய்யுறாங்க. இப்படியான சூழல்ல ஒரு படத்துல போறபோக்குல கிண்டல் அடிச்சுட்டுப் போனா, எல்லோருடைய முயற்சியும் வீணாகிடும். இதை ஏன் யாரும் யோசிக்க மாட்டேங்கிறாங்க.

டிக்கிலோனா
டிக்கிலோனா
`எதுக்காக பணத்தைச் சேர்த்து வைக்கணும் சார்!' - கிருமிநாசினியுடன் தெருவில் இறங்கிய மாற்றுத் திறனாளி

மாற்றுத் திறனாளியா பிறந்துட்டாலோ, விபத்துல சிக்கி மாற்றுத் திறனாளியாகிட்டாலோ அவங்க இந்த உலகத்துல வாழவே கூடாதா? இதுபத்தி நான் அறிக்கை வெளியிட்டும்கூட யாரும் ஊடகங்கள்ல பதிலளிக்கலைங்கிறதை நினைச்சா இன்னும் வருத்தமா இருக்கு. படத்தின் டைரக்டர் கார்த்திக் யோகி, `இதை நாங்க உள்நோக்கத்தோட பண்ணலை'ன்னு எனக்கு தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்புறார்.

அதை ஏத்துக்க முடியுமா? தெரியாம செஞ்சிட்டோம்னு ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கணும்ல... அல்லது உடனே அந்தப் பகுதியை ம்யூட் பண்ணிருக்கணும்ல. இது எதுவுமே செய்யாம என்கிட்ட தனிப்பட்ட முறையில சொல்லி என்ன ஆகப் போகுது? படக்குழுவையும் சந்தானத்தையும் விடுங்க... இதை சென்சார் போர்டு எப்படி அனுமதிச்சது? சென்சார் போர்டு இந்த மாதிரியான விஷயங்களையெல்லாம் கவனத்தில் கொள்ளாதா?" எனக் கேட்கிறார் பேராசிரியர் தீபக்.

என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு