தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும் நடிகருமான அமீர், தொடர்ச்சியாக நடைபெறும் பள்ளி மாணவிகள் மரணம் குறித்துப் பேசியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காகப் புதுச்சேரி சென்ற அமீர், செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு பேசியிருந்தார். "பள்ளி மாணவிகள் மரணம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இது மாநில அரசுக்கு அவமானம். தி.மு.க, அ.தி.மு.க என எந்த ஆட்சியாக இருந்தாலும் இதே நிலைமைதான் தொடர்கிறது. இதனைப் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. பள்ளி மாணவிகளின் தொடர் மரணங்களுக்குத் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்துத் தடுத்து நிறுத்த வேண்டும்.

இல்லையெனில் மாநில அரசுக்கு இது மிகப்பெரிய தலைகுனிவாகத்தான் மாறும். பள்ளி நிர்வாகத்தின் மீது எடுக்கும் நடவடிக்கையை விடப் போராட்டக்காரர்கள் மீது எடுக்கும் நடவடிக்கை அதிகமாக உள்ளது. இது வருத்தத்திற்குரியது’’ என்று கூறியுள்ளார்.
மேலும் தற்போது நடந்து கொண்டிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றிப் பேசிய அவர், "தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பான முறையில் நடந்து வருகிறது. இதற்காகத் தமிழக அரசுக்கும், போட்டியில் பங்கேற்க வந்துள்ள வீரர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
