Published:Updated:

`நைட்டியும் பூவும் தோல்விக்கான அடையாளமா?' - `டாக்டர்' சர்ச்சைக்கு நெல்சனின் பதில்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இயக்குநர் நெல்சனுடன் சிவகார்த்திகேயன்
இயக்குநர் நெல்சனுடன் சிவகார்த்திகேயன்

``கோமதி என்கிற பெண் பெயரும், பெண்களின் ஆடையான நைட்டியும், அவர்கள் சூடிக்கொள்கிற பூவும் தோல்வியின் அடையாளங்களாக எந்த அடிப்படையில் `டாக்டர்' படக்குழுவினருக்குத் தோன்றியது என்பது புரியவில்லை."

எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் திரைத்துறையினருக்கு இன்னமும் தன் சக மனுஷியை மதிப்பது தொடர்பான ஞானம் உதிக்கவில்லை என்றே தோன்றுகிறது. `பொம்பளை மாதிரி அழாத', `பொம்பளை மாதிரி புறம் பேசாத', `தோத்துட்டா புடவையைக் கட்டிக்க இல்லன்னா வளையல் போட்டுக்கோ' என்று அறிவு போதாமையுடன் எங்கோ ஒருசிலர் பேசிய வார்த்தைகளையெல்லாம், உங்கள் சினிமாக்களில் வெளிச்சம் போட்டுக் காண்பித்து, ஒட்டுமொத்த சமூகத்துக்கும் `சக மனுஷியை மதிக்கத் தெரியாத தொற்றுநோயை' நீங்கள் பரப்பிக்கொண்டிருக்கிறீர்கள். போதாக்குறைக்கு, `பொம்பளைன்னா கோபப்படக் கூடாது', `புடவை கட்டினாதான் அவள் குடும்பப் பொண்ணு' என்பதுபோன்ற பொன்மொழி(?)களையும் சமூகத்துக்கு வாரி வழங்கிக்கொண்டிருக்கிறீர்கள்.

டாக்டர்
டாக்டர்
Vikatan

அந்த வகையில், கடந்த சனிக்கிழமையன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த `டாக்டர்' திரைப்படத்தின் சில காட்சிகளும், பெண்கள் மீதான திரைத்துறையினரின் பார்வையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதற்குச் சாட்சியாக அமைந்துவிட்டன. படம் பார்க்காதவர்களுக்கு அந்தக் காட்சிகள் தொடர்பான சிறிய விளக்கமிது.

`டாக்டர்' படத்தின் சில காட்சிகளில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு விளையாட்டு ஒன்றை விளையாடுவார். அந்த விளையாட்டில் தோற்றுப்போன ஆண்கள் நைட்டி அணிந்து, தலையில் கனகாம்பரம் சூடிக்கொள்ள வேண்டும். அவர்களை மற்றவர்கள் `கோமதி' என்று அழைப்பார்கள்.

கோமதி என்கிற பெண் பெயரும், பெண்களின் ஆடையான நைட்டியும், அவர்கள் சூடிக்கொள்கிற பூவும் தோல்வியின் அடையாளங்களாக எந்த அடிப்படையில் `டாக்டர்' படக்குழுவினருக்கு தோன்றியது என்பது புரியவில்லை. ஒருவேளை `டாக்டர்' படக்குழுவினரில் ஒருவருக்கு நைட்டி, கனகாம்பரம், கோமதி என்ற அடையாளங்களுடன் கூடிய தனி நபர்மீது வருத்தமிருந்தாலும், அந்த விஷத்தைத் தமிழ்நாட்டில் இருக்கிற அத்தனை கோமதிகளின் மேலும் இறக்கி வைத்திருக்கக் கூடாது. ஒருவேளை, `டாக்டர்' பட புரமோஷனுக்கான முயற்சிகளில் இந்தக் காட்சிகளும் ஒன்றா என்பது படக்குழுவினருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

டாக்டர்
டாக்டர்
Vikatan

`டாக்டர்' படம் தொடர்பான தன்னுடைய விமர்சனத்தை ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்த பெண்ணிய ஆர்வலரும் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவருமான ராஜேஸ்வரி பிரியா அவர்களிடம் பேசினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``சிவகார்த்திகேயன் தன்னுடைய மகனுக்கு `பெண்களை மதிப்பதற்குச் சொல்லித்தருவேன்' என்று பேட்டி கொடுக்கிறார். ஆனால், அவருடைய படங்களில் இப்படிப்பட்ட காட்சிகளை அனுமதிக்கிறார். பெண்களை இப்படி இழிவுபடுத்துவது அவருக்குத் தவறாகத் தோன்றவில்லையா அல்லது பெண்கள் இதை நகைச்சுவையாகக் கடந்துவிடுவார்கள் என்று அவராகவே முடிவெடுத்துவிட்டாரா என்பதும் புரியவில்லை.

ராஜேஸ்வரி பிரியா
ராஜேஸ்வரி பிரியா

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான கோமதிகள் இருக்கிறார்கள். உங்கள் படத்தின் வசனம் அத்தனை கோமதிகளுக்கும் கோபத்தை வரவழைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல நெல்சன், கோமதிகளுக்காக மற்ற பெண்களும் கோபத்தில் இருக்கிறார்கள்'' என்று ஆவேசப்படுகிறார் ராஜேஸ்வரி பிரியா.

இது தொடர்பாக `டாக்டர்' படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரிடம் பேசியபோது, ``படத்தோட கருவே பெண்களை மரியாதைக்குறைவா காட்டறதா இருந்தா நீங்க அப்படிச் சொல்லலாம். ஆனா, அந்தக் காட்சியில் இருக்கிறவங்க ஒரு கேம் விளையாடுறாங்க. அதுல அவங்க நாலெட்ஜ்க்கு தகுந்த மாதிரி சில விஷயங்கள் செய்றாங்க. அவ்வளவுதான். என்னோட படங்கள்ல பெண்கள் கேரக்டர் வலுவானதா இருக்கணும்னு நினைப்பேன். `கோலமாவு கோகிலா'வுலகூட தன்னோட அம்மாவைக் காப்பாத்த எந்த எல்லைக்கும் போவேன்கிறதுதான் நயன்தாராவோட கேரக்டர். இந்தப்படத்துலேயும் நான் பர்பஸ்ஃபுல்லா எதுவும் செய்யலை. நைட்டி போட்டு, பூ வெச்சுக்கிற சீனை, அதுல நடிச்ச நாலு கேரக்டரோட நாலெட்ஜா மட்டும் பார்த்தா நல்லாயிருக்கும்'' என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு