Published:Updated:

"இரண்டு நாள்களுக்கு முன் கைலாசாவிலிருந்து போன்..."- நித்தியானந்தா விருது குறித்து இயக்குநர் பேரரசு

நித்தியானந்தா, இயக்குநர் பேரரசு

நித்தியானந்தா, இயக்குநர் பேரரசுக்கு 'கைலாச தர்ம ரட்சகா விருதினை' வழங்கியுள்ளார். "இதற்காகத்தான் இந்த விருது...!"- நித்தியானந்தா தன்னிடம் பேசியது குறித்து பகிர்ந்து கொள்கிறார் இயக்குநர் பேரரசு.

"இரண்டு நாள்களுக்கு முன் கைலாசாவிலிருந்து போன்..."- நித்தியானந்தா விருது குறித்து இயக்குநர் பேரரசு

நித்தியானந்தா, இயக்குநர் பேரரசுக்கு 'கைலாச தர்ம ரட்சகா விருதினை' வழங்கியுள்ளார். "இதற்காகத்தான் இந்த விருது...!"- நித்தியானந்தா தன்னிடம் பேசியது குறித்து பகிர்ந்து கொள்கிறார் இயக்குநர் பேரரசு.

Published:Updated:
நித்தியானந்தா, இயக்குநர் பேரரசு

இயக்குநர் பேரரசு, சமீபகாலமாக பா.ஜ.க, இந்துத்துவா சித்தாந்தங்களுக்கு ஆதரவாகப் பேசிவருகிறார். அண்மையில் 'ராஜராஜ சோழன் இந்து இல்லை' என்ற சர்ச்சை குறித்தும் இவர் பேசியது பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது. இந்நிலையில் நித்தியானந்தா, இயக்குநர் பேரரசுக்கு 'கைலாச தர்ம ரட்சகா விருதினை' வழங்கியுள்ளார். மேலும் பேரரசை வாழ்த்தி, அவருக்கு ஆதரவாக கைலாசா என்றும் துணை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பேரரசு பெற்ற கைலாசா தர்ம ரட்சகா விருது
பேரரசு பெற்ற கைலாசா தர்ம ரட்சகா விருது

இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இயக்குநர் பேரரசுவைத் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது இதுபற்றி பேசிய அவர், "இதை நான் எதிர்பார்க்கவில்லை. இரண்டு நாள்களுக்கு முன் எனக்கு ஒரு போன் வந்தது. கைலாசாவிலிருந்து பேசுகிறோம் என்று சொன்னார்கள். அப்போது கைலாசா என்று அவர்கள் கூறியது எனக்குப் புரியவில்லை. பிறகு விளக்கமாக நித்தியானந்தா ஆசிரமமான கைலாசாவிலிருந்து பேசுகிறோம் என்று சொன்னதும் புரிந்துகொண்டேன். 'இந்து மதத்திற்காக நீங்கள் தொடர்ந்து யூடியூப் மற்றும் ஊடகங்களில் பேசுவதை சுவாமி நித்தியானந்தா அவர்கள் கேட்டார். எனவே உங்களைப் பாராட்டும் விதமாக சுவாமி நித்தியானந்தா அவர்கள் தீபாவளி அன்று விருது ஒன்றினை வழங்க இருக்கிறார்' என்று என்னிடம் கூறினார்கள். மேலும், 'வீடியோ (Zoom) காலில் வர முடியுமா' என்று கேட்டார்கள். அண்மையில் சுவாமி நித்தியானந்தா உடல் நிலை இல்லாமல் இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம். எனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. பின்னர் சரி என்று ஒப்புக்கொண்டேன். பின்னர், வீடியோ (Zoom) கால் மீட்டிங்கில் கலந்துகொண்டேன். என்னுடன் தயாரிப்பாளர்கள் எஸ்.கே.கோபி, வீர முருகன் அவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள். வீடியோ காலில் சுவாமி நித்தியானந்தா என்னுடைய படங்களின் பெயர்கள் அனைத்தையும் வரிசையாகச் சொன்னார். திருவண்ணாமலை, பழனி, திருத்தணி, திருப்பதி என என்னுடைய படங்களின் பெயர்கள் அனைத்தும் ஆன்மிக ஸ்தலங்களகின் பெயர்களில் இருக்கின்றன என்று அவர் பார்வையில் ஒரு கருத்தைச் சொன்னார். என் படத்தில் நல்ல கருத்துகளை நான் கூறி வருவதாகச் சொன்னார்.

இயக்குநர் பேரரசு
இயக்குநர் பேரரசு

மேலும், 'சமீபமாக நீங்கள் இந்து மதத்துக்கு ஆதரவு கொடுத்து வருகிறீர்கள். இந்துக்களுக்குப் பிரச்னை என்றால் களத்தில் இறங்கி பேசுகிறீர்கள். உங்களுக்கு ஆதரவையும் பாராட்டையும் தெரிவிக்கும் வகையில் நாங்கள் உங்களுக்கு 'கைலாசா தர்ம ரட்சகா விருதினை' வழங்குகிறோம்' என்று கூறினார். அதுமட்டுமின்றி 'நானும், கைலாசமும் உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம்' என்று கூறினார். 'விருது E-mail வழியாக வரும். விரைவில் நேரில் கைலாசாவில் சந்திப்போம்' என்று சொன்னார்கள். இந்து மதத்தில் முக்கியமானவர் நித்தியானந்தா. அவருக்கென்று நிறைய பத்தர்கள் கூட்டம் இருக்கிறது. அவர் மீது வழக்குகள் இருப்பதால் அவர் கைலாசாவில் இருக்கிறார். இந்தியாவிற்கு வெளியில் இருந்து கொண்டு, இந்தியாவை மட்டுமல்ல தமிழ்நாட்டில் என்னைப் போன்றவர்களையும் அவர் கவனித்து வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்து மதத்திற்கு ஆதரவாக நான் பேசிவருவதைப் பாராட்டி, எனக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சுவாமி நித்தியானந்தா இந்த விருதை எனக்கு அளித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சிதான். இதன் மூலம் அவர் இந்து மதத்தின் மீது எவ்வளவு ஈடுபாட்டுடன் இருக்கிறார் என்பது தெரிகிறது. நல்ல திரைப்படங்கள் எடுத்திருக்கிறேன் என்பதற்காக இந்த விருது கொடுக்கப்படவில்லை. மதப் பற்றாளன் என்ற முறையில் நான் இந்த விருதைப் பெற்றதில் எனக்கு மகிழ்ச்சிதான். இது நேற்று மாலைதான் எனக்கே உறுதியாகத் தெரியும். அதனால் யாரிடமும் இதைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளவில்லை. குறிப்பாக, இது பற்றி பா.ஜ.க என்னிடம் எதுவும் பேசவில்லை" என்று கூறினார்.