கட்டுரைகள்
Published:Updated:

இப்போது ஆரம்பித்தது அல்ல பயோவார்!

எஸ்.பி.ஜனநாதன்
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.பி.ஜனநாதன்

கொரோனா வைரஸ் பிரச்னை.

‘இயற்கை’, ‘பேராண்மை’, ‘ஈ’, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ எனத் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன், தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ‘லாபம்’ படத்தை இயக்கிவருகிறார். கம்யூனிச சிந்தனையாளரான ஜனநாதனிடம் இன்றைய கொரோனா சூழலில் பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

“ கொரோனா வைரஸ் பிரச்னைக்குச் சீனாதான் காரணம் என்கிற பேச்சுகள் பரவிவருகின்றன. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“பொருளாதாரத்தில் முன்னேற இயலாத நாடுதான் இன்னொரு நாட்டை பயோவார் மூலமாக அழிக்கத் துடிக்கும். பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்த சீனா எந்த நாட்டின் மீதும் பயோவார் தொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதாரணமாகக் கொசு மருந்து அடிப்பது என்றாலும் சீனாவில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் ஒரேநாளில் மருந்து அடிப்பார்கள். சில நாடுகளில் இருப்பதுபோல் ஆளாளுக்கு ஒருநாள் மருந்து அடித்துக்கொள்வது என்பது அங்கே நடக்காது. ஒரேநாள் என்பது அரசின் ஆணை. அதை சிரமேற்கொண்டு கடைப்பிடிப்பதுதான் சீனாவின் சிஸ்டம். கொரோனா வைரஸால் கொத்துக் கொத்தாய் சீனர்கள் இறந்துபோய், நிலைகுலைந்துபோன வூகான் நகரைச் சீனாவின் சிஸ்டத்தால்தான் அவசர அவசரமாக மீண்டும் மீட்டெடுக்க முடிந்தது.

எஸ்.பி.ஜனநாதன்
எஸ்.பி.ஜனநாதன்

இந்திய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். இந்திய விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவித்த விவசாயப் பொருள்களை, தானியங்களை இங்கிலாந்துக்கும், ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்தது ஆங்கிலேய அரசு. உணவுப்பொருள்கள் கண்ணெதிரே இருந்தும் உண்ண வழியில்லாமல் பறிகொடுத்துவிட்டுப் பட்டினியால் கோடிக்கணக்கில் செத்துப்போனார்கள். இயற்கையான பஞ்சம், பட்டினி அல்ல, செயற்கையான பஞ்சத்தை உருவாக்கினார்கள். ஆக அப்போதே பயோவார் ஆரம்பித்துவிட்டது. பொருளாதாரத்தில் சீனா அசுர வளர்ச்சி அடைந்துவிட்டது. எங்கே சீன நிறுவனங்கள் நம் நாட்டில் நுழைந்துவிடுமோ என்கிற அச்சம் நிறைய நாடுகளிடம் நிலவிக்கொண்டிருப்பது நிஜம். சீனா பயோவார் ஏவுகிறது என்று சொன்னால் அது காழ்ப்புணர்ச்சியே தவிர உண்மை அல்ல.”

“சீனாவின் மீது எந்தத் தவறும் இருக்காது என்கிறீர்களா? கொரோனா விஷயத்தில் இந்தியா என்ன ஆகும்?’’

“சிலரைப்போல கண்ணை மூடிக்கொண்டு சீனாவை ஆதரிப்பவனல்ல நான். ‘மார்க்சியம் என்பது இறக்குமதி செய்யப்பட்ட தத்துவம்’, ‘கம்யூனிசம் வெற்றிபெறவில்லை’ என்றெல்லாம் பலரும் மேம்போக்காகப் பேசுவதைப்போல் நான் பேச விரும்பவில்லை. பொதுவுடமை என்பது ஏதோ பொழுது போக்குக்காக அனுப்பிவரும் வாட்ஸப் குறுஞ்செய்தி அல்ல; அது மாபெரும் தத்துவம்.

இந்திய தேசம் 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு. இங்கே வெவ்வேறு மாநிலங்கள், வெவ்வேறு மொழி பேசும் மக்கள் இருக்கிறார்கள். ஆனால் சீனாவின் அரசியல் அமைப்பும், நில அமைப்பும் அப்படியல்ல. எல்லா மாநிலமும், எல்லா மக்களும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறார்கள். 1949-ம் ஆண்டில் இருந்தே மருத்துவம் பற்றிய ஒரே நடைமுறையைப் பின்பற்றி வருகிறது சீனா. இந்தியாவைப் பொறுத்தவரை அடர்த்தியான மக்கள் ஒரே பகுதியில் வாழும் சூழலில் இருக்கிறோம். இங்கே சீனாவைப்போல் உடனே வைரஸ் தாக்குதலிலிருந்து மீட்சி பெறுவது இயலாத காரியம். இப்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சரும் கொரோனா ஒழிப்பு குறித்துப் பேசிவருகிறார்கள். நல்லதே நடக்கும் என நம்புவோம்.”

“ ‘ஈ’ படம் மருத்துவக்குற்றம், உயிரியல் யுத்தம் பற்றியது... ஏன் இந்தக் கதையைப் படமாக எடுக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது?”

“நான் கல்லூரி வாசலையே மிதிக்காதவன். ஆனால், பள்ளியில் படிக்கும்போதே அறிவியல் மேல் ஆர்வம் அதிகம். தமிழ்சினிமாவில் வில்லன் என்றால் கொள்ளைக்காரன், ஆயுதங்களைக் கடத்துகிறவன், நாட்டைக் காட்டிக்கொடுக்கிறவன் என்று இலக்கணங்களை வகுத்து வைத்திருக்கிறார்கள். இதுபோல எதுவுமே இல்லாமல் ‘ஈ’ பட வில்லனை வேறுமாதிரி வித்தியாசமாக யோசிக்க ஆரம்பித்தேன். விஞ்ஞான ரீதியான வில்லனை உருவாக்கிவிட்டு என்னுடைய எண்ணத்தை கோவையில் உள்ள ஒரு அறிவியல் ஆசிரியரிடம் சொன்னேன். அதற்கு அவர் ‘நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கற்பனையில் உருவாக்குங்கள். எல்லாவற்றுக்குமே என்னிடம் ஆதாரம் இருக்கு’ என்று தைரியம் கொடுத்தார். இந்தியாவில் பட்டாச்சார்யா என்றொரு ஆய்வாளர் மனித உடலில் மருத்துவச் சோதனை செய்தபோது அந்த மனிதர் செத்துப்போனார். அதை எதிர்த்து கோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடுத்தார். ‘பட்டாச்சார்யா ஓர் ஆய்வாளர். அதனால் சோதனை செய்ததில் தவறு இல்லை’ என்று வழக்கைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம். இந்த நிகழ்வை ‘ஈ’ படத்தில் வைத்திருப்பேன். புதிதாக ஒரு மருந்தைக் கண்டுபிடித்தால் அதை முதலில் நாய், பூனையிடம் செலுத்தி சோதனை செய்வார்கள். அடுத்து மனிதக்குரங்குக்குக் கொடுப்பார்கள். அதன்பிறகே மனிதனுக்குக் கொடுத்துப் பரிசோதிப்பார்கள். அதுவும் கேட்பாரற்றுக் கிடக்கும் ஏழைகளின் உடம்பில் செலுத்திப் பரிசோதனை செய்வார்கள். அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான மருந்துகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் பல இங்குள்ள மருந்துக்கடைகளில் கிடைக்கின்றன. மக்கள் வாங்கி சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏதோ கற்பனையில் மட்டும் ‘ஈ’ படத்தை இயக்கவில்லை. டாக்டர் வீ.புகழேந்தி, பேராசிரியர் அ.மார்க்ஸ், கே.சண்முகம், டாக்டர் சத்யமூர்த்தி என்று பலரிடமும் ஆலோசனை நடத்திய பிறகே கதை, திரைக்கதை வசனம் எழுதி ‘ஈ’ படத்தை இயக்கினேன்.’’

எஸ்.பி.ஜனநாதன்
எஸ்.பி.ஜனநாதன்

“வரலாற்றில் அதிக ஈடுபாடு கொண்ட நீங்கள் கொரோனா பிரச்னை எப்போது தீரும் என நினைக்கிறீர்கள்?”

“கிறிஸ்து பிறப்புக்கு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே ‘அரசர் நாட்டில் உள்ள நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும். சுத்தமான நீரை மக்களுக்குக் கொடுங்கள். தண்ணீர் வழியே கிருமிகள் பரவக்கூடும். தவறினால் மக்கள் உயிரிழக்க நேரிடும்’ என்று அரிஸ்டாட்டில் எழுதி வைத்திருக்கிறார். அதை அப்போதே அரசாங்கத்துக்கு எடுத்துச் சொல்கிறார் சாக்ரடீஸ். இது வரலாறு. அந்தக் காலத்திலேயே பயோவார் நடந்திருக்கிறது. அதாவது ஒரு நாட்டை அபகரிக்கப் போர் நடக்கும் காலங்களில் அந்நாட்டு மக்களைக் கொல்ல மக்கள் குடிநீர் அருந்திவரும் ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் செத்துப்போய் அழுகிப்போன மாடுகளைப் போட்டுவிடுவார்கள். அந்தத் தண்ணீரை அருந்தும் மக்கள் கொத்துக்கொத்தாய் செத்துப்போவார்கள். உலகத்தில் மாபெரும் வீரன் என்று இப்போதும் கொண்டாடப்படும் மாவீரன் அலெக்ஸாண்டரை சாதாரண வைரஸ் காய்ச்சல்தான் கொன்றது. கொரோனா ஏதோ புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் அல்ல. 1952-ம் ஆண்டிலிருந்தே கொரோனா வைரஸ் இருந்துவருகிறது. சாதாரணமாகக் குழந்தைகளுக்குப் பிடிக்கும் ஜலதோஷத்தில்கூட கொரோனா இருக்கிறது. இப்போது உருவாகியுள்ள புதுவகைக் கொரோனா அபாயகரமான, ஆபத்தான வைரஸாக உலகையே மிரட்டி வருகிறது. இதுகுறித்து கொரோனா ஆய்வாளர் பவித்ரா விரிவாகப் பேசிவருகிறார் அவரைப் போன்ற நிபுணர்கள்தான் இது எப்போது முடியுமென்று சொல்ல முடியும். இனிவரும் காலங்களில் கொரோனாவைவிடக் கொடூரமான வைரஸ்கள் வரப்போவது உறுதி. அவற்றை எதிர்கொள்ள உலகம்தான் தயாராகிக்கொள்ள வேண்டும்.”