Published:Updated:

பெரும்வதையின் கூடாரத்தில் சில நாள்கள்! - இயக்குநர் வசந்த பாலன்

முதல் ஆம்புலன்ஸ் பயணம். மனம் கடந்து போகும் ஒவ்வொரு மரத்தையும் கட்டடத்தையும் வரிசைப்படுத்தி எண்ணியபடி, எங்கு நோக்கிப் போகிறோம் என்று கணக்கிட்டபடியிருக்கிறது.

பிரீமியம் ஸ்டோரி
சென்ற ஆண்டு கொரோனா முதல் அலை ஊர்முடக்கத்தின்போது தன் ஃபேஸ்புக் பக்கத்தில் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி நடத்தும் அறிவிப்பை வெளியிட்டார் இயக்குநர் வசந்தபாலன். கொரோனாவின் இரண்டாவது அலையோ அவரை பெரிதும் பாதித்து முடக்கிப்போட்டது. மரண விளிம்புவரை சென்று மீண்டுவந்த, துயரமும் நம்பிக்கையும் கலந்த அனுபவத்தைப் பகிர்கிறார் வசந்தபாலன்...

பெரும்வாதையின் கூடாரத்தில் பொல்லாப்பிணி ஒரு பூதம்போலச் சூழ்ந்திருந்த ஒரு நேரத்தில் நான் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். பிராணவாயு என் மூக்கின் வழியாகச் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. குப்புறப் படுக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தேன். மேல்மூச்சு வாங்கியது. கனவுகள் எட்டுத் திசைகளும் சென்று முட்டிக்கொண்டிருந்தன. நேர்மறைச் சிந்தனைகளும் எதிர்மறைச் சிந்தனைகளும் கலந்து என்னை ஒருவாறு திரிசங்கு சொர்க்கத்தில் நிலைகொண்டிருக்கச் செய்தன.

கொரோனாத் தொற்று ஏற்பட்ட 11-வது நாள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏழாவது நாள். என் உடல்நிலைக்கு நான் தொற்று ஏற்பட்ட மூன்றாவது நாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இரண்டாவது அலையின் தீவிரமும், அதனால் அலைமோதும் நோயாளிகள் நிறைந்த மருத்துவமனைகளும் மனதில் ஒருவித இனம்புரியாத கலவரத்தை உண்டுபண்ணியதால் வீட்டிலிருந்தே அலோபதி மருந்துகள் எடுத்துக்கொண்டேன். அதில் ஏற்பட்ட உடல்நலப் பின்னடைவு, மருத்துவமனையில் சேர எடுத்துக்கொண்ட தாமதம் முற்றிலும் கோணலாகி, நான் சுவாசத்திற்குப் போராடிக் கொண்டிருக்கிறேன்.

மருத்துவமனையில் நான் மூச்சுத்திணறுவதை மறைவாக தூரத்தில் இருந்து பார்த்த நண்பன் வரதன் மருத்துவரைச் சந்தித்து ``எனக்கு என்னமோ அவன் மூச்சு விடுவதைப் பார்க்க ரொம்ப பயமா இருக்கு… ஸ்கேன் எடுத்துப் பாக்கலாமா சார்?’’ என்று கேட்டிருக்கிறார். உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்படுகிறது. அந்தச் சிறிய மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸில் பயணிக்கிறேன்.

முதல் ஆம்புலன்ஸ் பயணம். மனம் கடந்து போகும் ஒவ்வொரு மரத்தையும் கட்டடத்தையும் வரிசைப்படுத்தி எண்ணியபடி, எங்கு நோக்கிப் போகிறோம் என்று கணக்கிட்டபடியிருக்கிறது.சிறிய துண்டு வானத்தைப் பார்க்க மாட்டோமா ஒரு சிறு பறவையையாவது பார்ப்போமோ என்று வழிநெடுகத் தேடியபடி பயணிக்கிறேன்.

பெரும்வதையின் கூடாரத்தில் சில நாள்கள்! - இயக்குநர் வசந்த பாலன்

என் ஆம்புலன்ஸைக் கடந்து விரைந்து போகும் ஆம்புலன்ஸ் ஒலிகள் கேட்டவண்ணம் இருக்கிறது. சாலையைக் கடக்கும்போது எங்காவது ஆம்புலன்ஸ் ஒலி கேட்டால் என் இரண்டாவது மகன் ரிஷி அந்த நோயாளிகளுக்காக பிரார்த்தனை செய்துகொள்வான். ‘உன் அப்பாவே ஆம்புலன்ஸில் செல்கிறார். என் செல்லக்குட்டி... இந்த சப்தம் உனக்குக் கேட்காமல் இருப்பதாக. நீ எந்த மனச்சஞ்சலமுமின்றி வீட்டில் நிம்மதியாக இருப்பாய் என் செல்லமே’ என்று மனதில் அரற்றிக்கொண்டே வந்தேன்.

ஆம்புலன்ஸ் ஆற்காட்டுச் சாலையின் ஓரத்தில் நின்றது. எதிரே ஸ்கேன் சென்டர், ஐந்தாறு ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளுடன் காத்திருந்தன. நானும் சாலையில் காத்திருந்தேன்.

‘வானமகள் நாணுகிறாள்

வேறு உடை பூணுகிறாள்’


என்று காலத்துக்கேற்ப இளையராஜாவின் பாடல் வானொலியில் ஒலித்தது. சிறிது நேரத்தில் ஸ்ட்ரெச்சரோடு பாதாள உலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன்.

ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் நிறைய வயர்கள் சூழ அழைத்துச் செல்லப்பட்டேன். சில நாள்களுக்கு முன் சினிமாவில் நான் படம்பிடித்த காட்சி போன்று இருந்தது. இருப்பினும் இங்கு நான் கதாபாத்திரமாக இருப்பது ஒரு மாய அனுபவம்தான்.

ஸ்கேன் எடுப்பதற்காக ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் நோயாளிகள் கவலை தோய்ந்த முகத்துடன் காத்துக்கொண்டிருந்தனர். ஸ்கேன் அறை. பெரிய பெரிய இயந்திரங்கள் எனைப் பார்த்து உறுமிக்கொண்டிருந்தன. அந்த இயந்திரத்திற்குள் இங்குபேட்டருக்குள் உள்ள ஒரு குழந்தையைப் போல கால், கைகள் ஒடுக்கப்பட்டுப் படுக்க வைக்கப்பட்டேன். ஒரு மஞ்சள் வெளிச்சம் மட்டும் ஒளிர்ந்துகொண்டிருந்தது. அந்த மிஷின் பெரிய கிழட்டு முதலையின் வாயைப்போல பிளந்து இருந்தது.

அதற்குள் உட்செலுத்தப்பட்டேன். முதலையின் வாய்கள் 360 டிகிரி என்னைச் சுற்றின. அவை எனைக் கடித்துத் தின்னப்போகின்றன என்று தோன்றியது. எங்கோ காற்றுப் போகாத ஆழத்தில் சிக்கித் தவிக்கிறேன் என்று மட்டும் தோன்றியது.

என் பெயர் மறந்துபோனது. பாலகுமாரனின் ‘கரையோர முதலைகள்’ கதை நினைவுக்கு வந்து சென்றது. முதலையின் வாய் திறந்து எந்திரம் என்னிடம் பேசத் தொடங்கியது. "சிறிது நேரத்திற்கு உன் மூச்சுக்காற்றை வெளியே விடாமல் உள்ளேயே இருத்திவைத்துக்கொள்" என்று கட்டளையிட்டது. மிகக் கஷ்டப்பட்டு என் நுரையீரல் துடிப்பதை நிறுத்தினேன். அந்த விநாடி என் உடல் அறுந்து நான் என் தாயின் கருவறையில் விழுந்து கிடந்தேன். பாதுகாப்பான துள்ளலான பாலன் நிர்வாணமாய் என் தாயின் வயிற்றுக்குள் விளையாடிக் கொண்டிருந்தான். ``இங்க பாருங்க... இங்க பாருங்க... பையன் மிதிக்கிறான் மிதிக்கிறான்’’ என்ற அம்மாவின் குரல் கேட்டது. இன்னும் துள்ளிக்குதித்தேன். சட்டென எந்திரத்தின் குரல் ``மூச்சை வெளியிடுங்கள்’’ என்றது. அழுக்கு சகதியான கூவத்தின் ஓரிடத்தில் விழுந்து கிடந்தேன். கண்களைத் திறக்க இயலவில்லை.

மருத்துவர் கு.சிவராமன் - வரதன்
மருத்துவர் கு.சிவராமன் - வரதன்

அடுத்த கணம் மீண்டும் எந்திரத்தின் ஆணை, “மூச்சை பிடித்துக்கொள்ளுங்கள்.” காதலின் முதல் சுகந்தத்தை உணர்ந்த அந்த வாலிபனாய் விருதுநகர் தெருவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன்.எனைச்சுற்றி ஆயிரம் தட்டான்கள் பறந்தன. மழை வரும் என்று தோன்றியது. “மூச்சை வெளியிடுங்கள்” என்றது எந்திரத்தின் குரல்… சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே கண்ணீர்மல்க நின்றிருந்தேன். உதயம் தியேட்டர் வாசல் அது. ‘ஏன் என் படம் இன்னும் திரையிடப்படவில்லை’ என்ற கேள்விகள் எழுந்தன.

“மூச்சை அடக்கிக்கொள்ளுங்கள்” என்றது எந்திரம். ‘டாடி... டாடி...’ என்ற என் இரு மகன்களும் என்மீது படுத்து முத்தமிட்ட வண்ணம் இருக்கிறார்கள்... ``உங்களுக்கு ஒண்ணுமில்லப்பா... சீக்கிரம் வந்துருவீங்க’’ என்றபடி முத்தங்கள் என் உடல் முழுக்கச் சிந்தப்பட்ட வண்ணம் இருக்கிறது.

குழந்தைகளின் கைகளில் குழந்தையாய்க் கிடப்பது எத்தனை பேரானந்தம் என்று எனக்குத் தெரியும்.

கலையாக்கனவே வருக…

காணாக்காட்சி தருக…

ஸ்கேன் முடிந்து மீண்டும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தேன். ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்த வரதன் அதிர்ந்துபோனான். அளவுக்கு அதிகமாக என் நுரையீரல் தொற்று கண்டுவிட்டது. மிக அபாயக்கட்டம். ஸ்கேனை மருத்துவர் சிவராமனுக்கு அனுப்புகிறான். அதைப் பார்த்த மருத்துவர் சிவராமன் மிகவும் பதறி, ``வரதன், மிக அவசரம்! மிக அவசரம்! தவற விடும் நொடிகள் மிக ஆபத்தானவை. உடனே ஏதாவது ஒரு பெரிய மருத்துவ மனைக்கு மாற்ற வேண்டும்’’ என்று அறிவுறுத்தி போனைத் துண்டிக்கிறார்.

சிவராமன் அவர்கள் எட்டுத் திசையும் எனக்கான மருத்துவ மனைக்குப் போராடி, கடைசியில் ஐ.ஏ.எஸ் அதிகாரி மதிப்பிற்குரிய ராதாகிருஷ்ணன் அவர்களைத் தொடர்புக்கொள்ள முயலும் நேரம் இரவு மணி 11.

பலமுறை முயன்று போன் அழைப்பு செல்லவில்லை. ராதாகிருஷ்ணன் அவர்களின் நண்பரைத் தொடர்புகொண்டு ``நண்பருக்கு மிக உடனடி மருத்துவ உதவி! அவசரம்! உடனே அப்போலோ மருத்துவமனையில் அனுமதி வேண்டும்’’ என்கிறார். ``ராதா சார் தூங்கச் சென்றிருப்பார் ஆகவே குறுஞ்செய்தி அனுப்பு கிறேன்’’ என்று நண்பர் சொல்லி யிருக்கிறார். ராதா கிருஷ்ணன் சாருக்கு ‘அங்காடித்தெரு திரைப்பட இயக்குநர் ஆபத்தான கட்டத்தில் உள்ளார், உடனே அழைக்கவும்’ என்ற குறுஞ்செய்தி அனுப் பப்பட்டது.

‘அங்காடித் தெரு’ திரைப்படம் வெளியாகி தங்கள் கஷ்டம் இப்போதாவது உலகிற்குத் தெரிந்து விடிவு வந்ததே என்று வாழ்த்திய அத்தனை ஆத்மாக்களின் வாழ்த்தும் ராதாகிருஷ்ணன் அவர்களின் தூக்கத்தை ஒரு நல்ல கொசுவாய் மாறிக் கலைத்தது. சில நொடிகளில் மருத்துவர் சிவராமனை ராதாகிருஷ்ணன் சார் அழைத்து, ``பேசிவிட்டேன். படுக்கையை ஏற்பாடு செய்துவிட்டு அப்போலோவிலிருந்து அழைப்பார்கள்’’ என்றார்.

காலை 5.30 மணிக்கு மருத்துவமனையில் எனக்கான ஒரு படுக்கை தயாரான தகவல் கிடைக்கிறது. நான் ஆபத்தான கட்டத்தில் உள்ள தகவலை வரதன் நடு இரவு கோயமுத்தூரில் உள்ள என் தம்பியை அழைத்துச் சொல்ல, கெட்ட கனவு கண்டதைப்போல அவன் கதறி அழுது அதிகாலை பஸ் பிடித்து சென்னை விரைகிறான். என் மனைவியை அழைத்து வரதன் சொல்கிறான். என் மனைவி கடந்த ஏழு நாள்களாய் என் இரண்டு குழந்தைகளுடன் மிதமான கொரானாத்தொற்றுடன் உடல்நலமின்றி இருக்கிறாள்.அழுவதற்குக் கண்ணீரின்றி அழுது தீர்க்கிறாள். இரு மகன்களும் `டாடிக்கு ஒன்றும் ஆகாதும்மா...நீங்க அழாதீங்கம்மா...’ என்று அம்மா வாய் மாறி என் மனைவியைத் தேற்றுகின்றனர். மூத்த மகன் காபி போட்டுத் தந்து என் மனைவியின் கண்ணீரைத் துடைத்து, குடும்பத்தலைவனாய் நம்பிக்கை தருகிறான்.

இயக்குநர் ஷங்கர் சாருக்கும் லிங்குசாமிக்கும் தகவல் பரிமாறப்படுகிறது. ``என்ன செலவானாலும் பரவாயில்லை, காப்பாற்றிவிடவேண்டும். வரதன், என்ன உதவி என்றாலும் அழையுங்கள்’’ என்று இருவரும் உடைந்த குரலில் நம்பிக்கை ததும்பப் பேசுகிறார்கள்.

அதிகாலையிலே எனை எழுப்பி மருத்துவமனை மாற்றும் முயற்சி பற்றி நண்பர் வரதன் சொன்னான். ``அப்போலோல்லாம் நமக்கு சரியா வருமாடா... நாமெல்லாம் மிடில்கிளாஸ், என்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்த்துவிடு’’ என்று கெஞ்சினேன். ``வாயப் பொத்திக்கிட்டு சும்மா இரு’’ என்றபடி நான் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டேன்.எனைப் பரிசோதித்த மருத்துவர் ராமசுப்ரமணியம், ஒரு உயிர்காக்கும் மருந்தின் பெயரை உச்சரித்து, ‘‘இந்த மருந்து எங்கள் மருத்துவமனையில் இப்போது ஸ்டாக் இல்லை. எங்கிருந்தாவது 24 மணி நேரத்திற்குள் தருவியுங்கள்... ஆபத்தான கட்டத்தில் உள்ளார்’ என்று அறிவுறுத்தினார்.

மீண்டும் எட்டுத்திசைக்கும் வரதனுக்குப் போராட்டம்…திசையெங்கும் கைகளை நீட்டியிருக்கிறான். தன் போனில் உள்ள அத்தனை போன் நம்பர்களுக்கும் இரவு தகவலைப் பரிமாறியிருக்கிறான். ஒரு பக்கம் இயக்குநரும் என் குருவுமான ஷங்கர் சார் , லிங்குசாமி, இன்னொரு பக்கம் தயாரிப்பாளர்கள் உயர்திரு JSK சதீஷ்குமார், T. சிவா சார் , மதுரை நாடாளுமன்ற எம்.பி. சு.வெங்கடேசன், நடிகர் பார்த்திபன், நடிகர் அர்ஜுன்தாஸ் எனத் தொடங்கி அனைவரும் அந்த மருந்தைத் தேடிப் பல மருத்துவமனைகள், மருத்துவர்கள், கள்ளச்சந்தை என மிக விசாலமான அத்தனை இடங்களிலும் விசாரித்திருக் கிறார்கள்.

மருத்துவர் சிவராமனின் இடையறாத போராட்டத்தில் உயர்திரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ராம்நாத் மற்றும் உதயசந்திரன் அவர்களின் தயவில் அந்த உயிர்காக்கும் மருந்து மருத்துவமனைக்கு ஐந்து மணி நேரத்திலே வந்து சேர்ந்தது.என் ரத்த நாளங்களில் ஏற்றப்பட்ட 48 மணி நேரம் கழித்து நான் அபாயக் கட்டத்தைக் கடந்தேன். வரதன் அழைத்தான், ‘பொழச்சுக்கிட்ட’ என்றான். ‘தெரியும்’ என்றேன். ‘இதற்கு முழுக் காரணம் ஒரே பெயர், அது டாக்டர் கு.சிவராமன்’ என்று அழுத்திச் சொன்னான். நன்றி நவின்று மருத்துவர் சிவராமன் அவர்களுக்கு வாட்ஸப் செய்தி அனுப்பினேன். நன்றி என்று சொல்லிவிட்டு ``வரதன் அலைஞ்ச அலைச்சல்கள் இருக்கே பாலன்! நீங்கள் கொடுத்து வைத்தவர், இவ்வளவு ஒரு ஆருயிர் நண்பனைப் பெற!” என்று வரதனுக்குப் புகழாரம் சூட்டினார்.

வரதராஜன் - கல்லூரி நண்பன். என் முதல் படத்திலிருந்து என் எல்லா சுக துக்கங்களிலும் உடன் நிற்பவன். என் வெற்றிகளில் அவனுக்குப் பெரும்பங்குண்டு. என் உடல்நிலையை மொத்தமாக வரதன் பார்த்துக்கொள்வான் என மருத்துவமனையில் நிம்மதியாகத் துயில் கொண்டேன். நான் மட்டுமன்றி என் மனைவிக்கும் கொரோனாத்தொற்று ஏற்பட்டது. அதற்கும் மருத்துவம் பார்த்து என் இரு குழந்தைகளையும் தனிமைப்படுத்தி சாத்தூருக்கு என் மச்சானுடன் பாதுகாப்பாக அனுப்பி வைத்து நேற்று, இன்று, நாளை என என் நிழலுடன் இருக்கும் உயிர்த்தோழன். ‘என்ன வேண்டும் நண்பா உனக்கு, எடுத்துக்கொள்’ என்றால், ‘எழுந்து வாடா! வேலைகள் கிடக்கிறது’ என்கிறான்.

ஆருயிர் நண்பர்களை நீங்கள் ஒருநாளும் தேடமுடியாது, அதுவாக உங்கள் இதயம் தேடி வரும். நான் கொடுத்து வைத்தவன். அப்படியொரு இதயத்தின் பக்கத்தில் இருக்கிறேன்.திசையெங்கும் உள்ள தெய்வங்களுக்கு நன்றி!

‘என்ன செலவானாலும் பரவாயில்லை பாலனைக் காப்பாற்றிவிடு, நாங்கள் செலவு செய்கிறோம்’ என்று நின்ற ஆருயிர்த் தோழர்கள் அமெரிக்காவில் உள்ள பள்ளித்தோழன் முருகன், சென்னையில் உள்ள கிருஷ்ணகுமார், நட்பின் கரங்கள் எனை அன்பின் சிப்பியில் அடைகாத்து அருளியதால் சுகமாய் இல்லம் திரும்பியிருக்கிறேன்.

இங்கே நான் சொல்ல விழைவது ஒன்றுதான். மருத்துவ மனையில் ஒருபோதும் என் மனம் சோர்வடையவில்லை. ‘எனக்கு ஒன்றும் ஆகிவிடாது’ என்ற அதீத நம்பிக்கையில் இருந்தேன். மருத்துவமனையில் நான் கண்ட காட்சிகளை இடையறாது வெறித்தனமாக எழுதி முகப்புத்தகத்தில் பதிவேற்றிய வண்ணம் இருந்தேன்.பெரும் மனவூக்கமாக இருந்தது. ஐபேடில் தரவிறக்கம் செய்யப்பட்டிருந்த கி.ராஜநாராயணன், ஜெயமோகன் சிறுகதைகளைப் படித்தவாறு இருந்தேன். மனம் படைப்பூக்கத்துடன் இருந்தது. இலக்கியமும் வாசிப்பும் மருத்துவமனையின் எவ்வித வாசமும் படாமல் எனை தேன்குடித்துத் திரியும் வண்டாக மாற்றியிருந்தது.

24 மணி நேரமும் தன் உயிரையும் பணயம் வைத்து கொரானா நோயாளிகளின் அறைக்குள் தன்னலமற்று சேவை செய்யும் மருத்துவர்களின், செவிலியர்களின் சேவையை, பேரன்பை உணர்ந்த வண்ணம் இருந்தேன். தினமும் காலை மாலை முகம் சுளிக்காது முழு உடலையும் வெந்நீரால் துடைப்பது. அவ்வப்போது வெளியேறும் சிறுநீரையும் மலத்தையும் துடைத்தெடுத்துச் சுத்தப்படுத்திப் படுக்க வைப்பது என ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் மற்றும் உதவியாளர்களின் பணி எனைப் பெறாத அம்மாக்களுக்கு சமம்.

கொரானாப் பெருந்தொற்றை வென்று மனிதத்தின் பெரு மலர் உலகெங்கும் பூத்தவண்ணம் இருக்கிறது. சக மனிதர்களின் மீதுள்ள கசப்பு குறைந்தவண்ணம் இருப்பதைக் காண முடிகிறது. எத்தனையோ தடைகளை மிக அனாயாசமாகக் கடந்துள்ள மானுடம் இதையும் தாண்டி மீண்டு எழும்.

திசையெங்கும் நேர்மறைத் தீவிரம் பரவுக! எட்டு உலகிலும் பேரன்பு பரவுக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு