Published:Updated:

அடங்கிப்போக தயாராக இல்லை! - அசுரன் சொல்லும் அரசியல்

தனுஷ்
பிரீமியம் ஸ்டோரி
தனுஷ்

தமிழ் சினிமாவின் நிறம், சமீபகாலமாக மாறத் தொடங்கியிருக்கிறது. பகட்டான ஜிகினா பொய்களும் அதிகார மிடுக்குகளும் நிறைந்த தமிழ் சினிமா, மக்களின் வாழ்க்கையை அதன் பிரச்னைகளுடன் சித்திரிக்கத் தொடங்கியிருக்கிறது. அசலான அரசியல் சினிமாக்களில் புதுவரவு, வெற்றி மாறனின் ‘அசுரன்’.

அடங்கிப்போக தயாராக இல்லை! - அசுரன் சொல்லும் அரசியல்

தமிழ் சினிமாவின் நிறம், சமீபகாலமாக மாறத் தொடங்கியிருக்கிறது. பகட்டான ஜிகினா பொய்களும் அதிகார மிடுக்குகளும் நிறைந்த தமிழ் சினிமா, மக்களின் வாழ்க்கையை அதன் பிரச்னைகளுடன் சித்திரிக்கத் தொடங்கியிருக்கிறது. அசலான அரசியல் சினிமாக்களில் புதுவரவு, வெற்றி மாறனின் ‘அசுரன்’.

Published:Updated:
தனுஷ்
பிரீமியம் ஸ்டோரி
தனுஷ்

ரு நாவலை சினிமாவாக மாற்றுவது மிகப்பெரிய சவால். அதை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன். ஒரு கொலையை நிகழ்த்தும் சிறுவன் சிதம்பரம், பதிலுக்கு அவன் கொலைசெய்யப்படாமல் காக்கத் துடிக்கும் சிவசாமியின் குடும்பம் என்ற ‘வெக்கை’ நாவலின் கதையை மையமாகவைத்து உருவாகியிருக்கிறது ‘அசுரன்’. அது, வெறுமனே சிதம்பரத்தின், சிவசாமியின் கதையை மட்டும் சொல்லவில்லை. ஆயிரம் ஆண்டுக்கால சாதிய வரலாற்றையும் சமீபகால நிகழ்வுகள் அதில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களையும் சேர்த்து சொல்கிறது.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர் வெற்றி மாறன், தனது நுட்பமான உத்திகள் மூலமாகவும், தனித்துவமான இயக்கத்தின் மூலமாகவும் கவனிக்கவைப்பவர். அசுரனிலும் அப்படியான விஷயங்கள் இருக்கின்றன. முன்பாதியில் பல காட்சிகளில் செருப்பு ஒரு பாத்திரமாகவே வருகிறது. வயலில் போதையில் படுத்திருக்கும் சிவசாமி, களவு செய்யக் கிளம்பும் கூட்டத்திடம், ஒருவரைக் குறிப்பிட்டு அவர் வரவில்லையா என்று கேட்பார். “அவங்களைப் பார்க்காமலே எப்படிப்பா சொல்றே?” என்று மகன் கேட்க, “அவர் செருப்புச் சத்தம் கேட்கலையே!” என்பார் சிவசாமி. தன் அப்பாவை ஊரார் காலில் விழவைத்தவனை சிவசாமியின் மூத்த மகன் செருப்பால் அடிப்பான். கொலை செய்துவிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழும்போது, ‘ஏன் செருப்பு போடலை?’ என்று தன் மகன் சிதம்பரத்தைக் கடிந்துகொள்வார் சிவசாமி. இப்படி முன்பாதியில் கேட்கும் செருப்புச் சத்தங்களுக்குப் பின்னால் உள்ள ரத்தம் தோய்ந்த காலடிச்சுவடுகளின் கதை, பின்பாதியில் விரியும். காலில் செருப்பு அணிய அனுமதி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்கதை அது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெகுண்டெழ வேண்டிய தருணங்களில் எல்லாம் அமைதி காக்கும் நாயகனுக்கு என்று ஒரு பின்கதை இருக்கும். ஒரு கணத்தில் அவன் வெடித்தெழுவான் என்பது பெரும்பாலான வெற்றிப் படங்களின் கதைதான். இதைவைத்து அசுரனும் ஒரு ‘தலித்திய பாட்ஷா’ என்று போகிறபோக்கில் சொல்லிவிடலாம்தான். ஆனால், இது தனிமனிதனுக்கு ஏற்படும் சோகத்தையும் சாகசத்தையும் பற்றிய, வழக்கமான ஹீரோயிசக் கதையல்ல. சாதி அதிகாரத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழும் ஒருவன், தன் உறவுகளை இழக்கிறான். அதனாலேயே நிகழ்காலத்தில் சில விஷயங்களைப் பொறுத்துக்கொண்டு வாழ்கிறான். ஆனால், அடுத்த தலைமுறை அடங்கிப்போகத் தயாராக இல்லை. அது நடுவீதியில் அதிகாரத்தைக் கேள்வி கேட்கிறது; செருப்பால் அடிக்கிறது; ஆயுதத்தால் வீழ்த்துகிறது. இது இந்தியச் சமூகத்தின் சமகாலக் கதை.

அசுரன் படக்காட்சி
அசுரன் படக்காட்சி

சமூக இயக்கங்களாலும் இடஒதுக்கீட்டாலும் கல்வி கற்று அரசு வேலைக்குப் போன ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்கள், தங்கள் தந்தைமார்கள் சாவு வீட்டில் பறை அடிப்பதைத் தடுத்தார்கள்; ஆண்டை வீட்டுச் செத்த மாட்டைத் தூக்கிச் சுமப்பதைத் தடுத்தார்கள். தந்தைகளுக்குப் புது செருப்பு வாங்கிக் கொடுத்து தெருக்களில் நடக்கவைத்தார்கள். கக்கத்தில் கிடந்த தந்தையின் துண்டை தோளுக்கு மாற்றினார்கள். அதுவரை வராத கோயில் தேர், தங்கள் சேரித் தெருக்களில் நுழைய வேண்டும் என உரிமைக்குரல் எழுப்பினார்கள். இதுவரை தங்களுக்கு அடங்கிக் கிடந்தவர்கள் மெல்ல தலை தூக்கியபோது அதிகாரத்தில் இருந்தவர்கள் வன்முறையை ஏவினார்கள். அதுவரை தாக்குதலுக்கு மட்டுமே உள்ளான ஒடுக்கப்பட்டவர்கள், திமிறி எழுந்து திருப்பி அடித்தார்கள். இந்தச் சமூகக் கதைதான் அசுரனின் கதையும்.

இதில் வன்முறை அதிகம் இருக்கிறதுதான். ஆனால், அரிவாளும் ரத்தமும் மட்டும் வன்முறையல்ல. ஒருவரை அடிமை என உணர முடியாமலேயே அடிமைப்படுத்துவதும் வன்முறைதான். எல்லா சாதிகளுக்கும் கீழே ஒருவரையும், மேலே ஒருவரையும் உருவாக்கியதும் வன்முறைதான். அது கண்களுக்குத் தெரியாத கருத்தியல் வன்முறை. அதனுடன் ஒப்பிடும்போது ஆயுத வன்முறை ஒன்றுமே இல்லை. தமிழ் திரைத்துறையில் பஞ்சமி நிலம் பற்றி இவ்வளவு விரிவாகப் பேசிய சினிமா, வேறு எதுவும் இல்லை. அதற்காகவே வெற்றி மாறனுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் சொல்ல வேண்டும்.

1891-ல் செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு ஆட்சியராக இருந்த ஜேம்ஸ் திரமென்ஹீர், ‘பறையர்கள் பற்றிய குறிப்புகள்’ என்ற பெயரில் பட்டியலின மக்கள் குறித்த அறிக்கை ஒன்றைத் தயாரித்து ஆங்கிலேய அரசிடம் தாக்கல் செய்தார். அதில் `பறையர்கள்’ என்று அழைக்கப்படும் மக்களின் அவலநிலையை விரிவாகப் பதிவுசெய்ததுடன், ‘நிலம் என்பது அவர்களின் மேம்பாட்டுக்கு உதவும்’ என்ற பரிந்துரையையும் செய்தார். 1892-ல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் தான் பஞ்சமி நிலங்கள் அளிக்கப்பட்டன. நான்கு வருணங்களுக்கு வெளியே ஐந்தாவது வருணமாக நிறுத்தப்பட்ட பஞ்சமர்களுக்கு வழங்கப்பட்ட நிலம், `பஞ்சமி நிலம்’. பறையர்களுக்காக உருவாக்கப்பட்ட அறிக்கை, பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்குமானது. பஞ்சமி நிலம், `டிசி லேண்ட்’ (Depressed Class Land) என்றழைக்கப்பட்டது.

தனுஷ்
தனுஷ்

பிறகு, இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் பொதுவாக ‘பட்டியலினச் சாதிகள்’ என்ற வரையறை உருவாக்கப்பட்டது. ஆனால், மெல்ல பஞ்சமி நிலங்கள் சில நூறு, சில ஆயிரம் கடனுக்காகவும் ஏமாற்றி குறைந்த விலை பேசியும் மற்றவர்களால் அபகரிக்கப்பட்டன. இந்தப் பஞ்சமி நிலங்களை மீட்பதற்காக, பட்டியலின இயக்கங்கள் தொடங்கி சி.பி.எம் கட்சியின் ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ வரை பல இயக்கங்கள் போராடு கின்றன. இதில் 1994-ம் ஆண்டு ஜான் தாமஸ், ஏழுமலை என்ற இரு இளைஞர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

இந்த விரிவான வரலாறு ‘அசுரன்’ பார்வை யாளர்களுக்குச் சென்று சேர்ந்ததா என்பதுதான் முக்கியமான கேள்வி. ஏதோ அது ஏழைகளிட மிருந்து நிலப்பிரபுக்கள் நிலத்தைப் பறிக்கும் பிரச்னை என்பதாகவே சென்று சேர்ந்திருக்கிறது என்பதுதான் வருந்தத்தக்க உண்மை. சமீபமாக நில உரிமைகுறித்து தமிழ் சினிமாக்கள் தொடர்ச்சி யாகப் பேசிவருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், எட்டுவழிச் சாலைக்காக நிலங்கள் பறிக்கப்படும் பிரச்னையும், வடசென்னையில் வாழும் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு அவர்கள் புறநகர்ப் பகுதிகளில் குடியமர்த்தப்படுவதும் வெவ்வேறு பிரச்னைகள். சென்னையில் ‘நிலம்’ என்பது, வசிப்பதற்கும் வருமானத்துக்குமான பகுதி. ஆனால், சென்னையைத் தாண்டி உள்ள ஊர்களிலோ அது விவசாயத்துடன் தொடர்புடையது. பஞ்சமி நிலப் பகுதி என்பது, இவை இரண்டிலிருந்து முற்றிலும் வேறு பிரச்னை. ‘காலா’, ‘வடசென்னை’யுடன் அசுரனின் பஞ்சமி நிலப் பிரச்னையையும் ஒன்றாகப் பார்க்கும் குழப்பம் பார்வையாளர்களிடம் இருக்கிறது. இதை இன்னமும் விரிவாகத் தெளிவுபடுத்தி யிருக்கலாம் வெற்றி மாறன்.

‘இது ஒரு ஹீரோயிசப் படம்தானே’ என்று கேட்கப்படுகிறது. உண்மைதான். ஆனால், யார் இங்கே ஹீரோ, எது ஹீரோயிசம் என்பதில் இருந்துதான் அசுரனை மதிப்பிட வேண்டும். நீண்டகாலமாகவே தமிழ் சினிமாக்களில் பட்டியலின மக்கள் பண்ணையார்களுக்குக் குடைப் பிடிப்பவர்களாகவும், செருப்பைக் கக்கத்தில் இடுக்கி மரியாதை செலுத்துபவர் களாகவும், ஆதிக்கச் சாதிகளின் பங்காளிச் சண்டையில் எஜமான விசுவாசம் காட்டுபவர் களாகவுமே சித்திரிக்கப்பட்டார்கள். இவர்கள் இப்போது நாயகர்களாகி இருக்கிறார்கள். அதற்கான சூழல் உருவாகியிருக்கிறது. தமிழ் சினிமா நாயகர்களைக் கொண்டாடுவதை நிறுத்தும்போது, ஒடுக்கப்பட்ட ஹீரோக்கள் உருவாவதையும் நிறுத்திக்கொள்ளலாம். அதுவரை இவர்கள் தங்களுக்கான அடையாளங்களுடன் வரட்டுமே!

ஒடுக்கப்பட்ட மக்களின் நாயகப் பாத்திரங் களுக்கு வன்முறை என்பது தவிர்க்க முடியாத தாகவும் திணிக்கப்பட்டதாகவும் இருக்கிறது. அவர்கள், சாதிப் பெருமிதம் பேசவில்லை; மற்ற சாதிகளைத் தாழ்த்தவில்லை. எந்தச் சாதிப் பெண்களையும் இழிவுப்படுத்த வில்லை. தங்களின் உரிமையை நிலைநாட்ட சில சமயம் ஆயுதம் ஏந்த வேண்டியிருக்கிறது என்பதையும் அவர்கள் மறைக்கவில்லை.

‘அசுரன்’ படத்தின் முக்கியமான அம்சம், இறுதியில் சிவசாமி தன் மகன் சிதம்பரத்திடம் சொல்லும் வசனம். “நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துக்கிடுவானுவ... ரூவா இருந்தா பிடுங்கிக் கிடுவானுவ... படிப்பை மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது சிதம்பரம். அதிகாரத்துக்குப் போ. ஆனா, அவங்க நமக்குப் பண்ணதை நீ யாருக்கும் பண்ணாதே!”

இதைத்தான் அம்பேத்கர் சொன்னார், பெரியார் சொன்னார், அயோத்திதாசர் சொன்னார், அசுரனும் சொல்கிறான்.

அசுரன், ஆயுதம் ஏந்தியவன் மட்டுமல்ல... அறமும் ஏந்தியவன்!