Published:Updated:

“சம்மர் திருவிழா... அருண் விஜய் சமையல்... கூட்டுக்குடும்ப ஒற்றுமை!” - டாக்டர் அனிதா விஜயகுமார்

அனிதா, கவிதா, அருண் விஜய், ஸ்ரீதேவி, ப்ரீத்தா
பிரீமியம் ஸ்டோரி
News
அனிதா, கவிதா, அருண் விஜய், ஸ்ரீதேவி, ப்ரீத்தா

நல்லதொரு குடும்பம்

பிரபல குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தில் பலரும் சினிமா பிரபலங்களே. அவர்களில் சினிமா துறைக்கு வராத ஒரே வாரிசு அனிதா. கத்தார் நாட்டில் பிஸியான டாக்டரான அனிதா, உடன் பிறப்புகளுடனான நேசம், கூட்டுக்குடும்ப ஒற்றுமை குறித்து உற்சாகமாகப் பேசுகிறார்.

“அப்பாவின் முதல் படமான ‘பொண்ணுக்கு தங்க மனசு’ ரிலீஸானபோதுதான் நான் பிறந்தேன். பிறகு, ஆறு மாசம் கழிச்சு பட்டுக்கோட்டையில் இருந்து சென்னையில் குடியேறினோம். அம்மா முத்துக்கண்ணுவுக்கு நாங்களும் வீடும்தான் உலகம். சின்ன வயசுல படிப்புதான் முக்கியம்னு மற்ற விஷயங்கள்ல எங்க மனசை அலைபாய விடாம அம்மா பார்த்துக்கிட்டாங்க. ஆனாலும், தம்பி அருண் விஜய்க்கு சினிமால நடிக்க ஆசை. அதனால தம்பியை கோத்தகிரி ஸ்கூல்ல ஹாஸ்டல்ல சேர்த்துட்டாங்க. அப்பா நடிப்பில் பிஸியா இருந்தாலும், குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்குவார். வீட்டுலகூட சினிமா பத்தி அதிகம் பேச மாட்டோம். அப்பாவைத் தவிர, நாங்க யாருமே மீடியா வெளிச்சம் படாம இயல்பா இருந்தோம். அக்கா கவிதா வுக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை. ஆனாலும், பி.வாசு அங்கிள் கேட்டதால ‘கூலி’ படத்துல சரத்குமார் சாருக்கு தங்கையா நடிச்சாங்க. பிறகு, பல பட வாய்ப்புகள் வந்தும்கூட சினிமா வேண்டாம்னு அக்காவே ஒதுங்கிட்டாங்க.

 குடும்பத்தினருடன்...
குடும்பத்தினருடன்...

டாக்டராவது என் இளமைக்கால கனவு. சென்னை ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ்ல எம்.பி.பி.எஸ் படிச்சேன். அப்போதான், பாரதிராஜா அங்கிள் ‘கருத்தம்மா’ படத்துல மகேஸ்வரி ரோல்ல என்னையும், ராஜஸ்ரீ ரோல்ல அக்கா கவிதாவையும் நடிக்க கேட்டார். மறுத்துட்டோம். காலேஜ்ல எனக்கு சீனியரான என் கணவரும் நானும் காதலிச்சோம். வீட்டுல பெரிய எதிர்ப்புக்குப் பிறகு சம்மதிச்சாங்க. படிப்பை முடிச்சதுமே கல்யாணமாச்சு. பிறகு, அதே காலேஜ்லயே எமர்ஜென்சி மெடிசின்ல மேற்படிப்பு படிச்சேன். அப்போ இந்தியாவில் புதுசா அறிமுகமான அந்த கோர்ஸ்ல எங்க காலேஜ்ல படிச்ச மாணவர்கள்ல நான் மட்டும்தான் ஒரே பொண்ணு. அதே காலேஜ்ல நானும் கணவரும் சில வருஷம் பேராசிரியர்களா வேலை செய்த நிலையில், 2007-ல் கத்தார் நாட்டில் குடியேறினோம்” என்கிறார் புன்னகையுடன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சகோதர சகோதரிகளுடனான பாசம் குறித்துப் பகிரும்போது அனிதாவின் முகத்தில் உற்சாகம் கூடுகிறது. “அப்பாவின் துணைவியான மஞ்சு மம்மி (நடிகை மஞ்சுளா) எங்களுக்கும் அம்மாதான். எனக்கும் அக்காவுக்கும் அருணுக்கும் வாழ்க்கையில அவங்க ரொம்பவே வழிகாட்டியிருக்காங்க. அதேபோல மஞ்சு மம்மியின் மகள்களான ப்ரீத்தா, ஸ்ரீதேவி மேல எங்கம்மாவும் அளவுகடந்த அன்பை வெச்சிருக்காங்க. ஆரம்பத்துலயே பெற்றோர் மூவரும் ஒருமித்த கருத்துடன், எங்க அஞ்சு பேரையும் ஒற்றுமையுடன் வளர்த்தாங்க. நாங்களும் சின்ன வயசுல இருந்தே கூடப் பிறந்தவங்க மாதிரி பாகுபாடுகள் இல்லாம பழகறோம். கடைக்குட்டியான ‘ஸ்ரீ பாப்பா’ (ஸ்ரீதேவி), குடும்பத்துல எல்லோருக்கும் ரொம்ப செல்லம்.

 அனிதா, கவிதா, அருண் விஜய், ஸ்ரீதேவி, ப்ரீத்தா
அனிதா, கவிதா, அருண் விஜய், ஸ்ரீதேவி, ப்ரீத்தா

ஸ்ரீ பாப்பா பிறந்தப்போ, அமெரிக்காவுல ரெண்டு குடும்பங்களும் ஒண்ணா வசிச்ச நாள்கள் மறக்கமுடியாதவை. பிறகு, அருண், ப்ரீத்தா, ஸ்ரீதேவி மூவரும் அடுத்தடுத்து சினிமாவில் நடிச்சபோது மொத்தக் குடும்பமும் ஊக்கம் கொடுத்தோம். ப்ரீத்தா, ஸ்ரீதேவி இருவரின் பிரசவ நேரங்கள்லயும் நான்தான் டெலிவரி ரூம்ல துணைக்கு இருந்தேன்.

நாங்க அஞ்சு பேரும் நல்ல ஃபிரெண்ட்ஸ். குடும்பத்துல எந்த விஷயமா இருந்தாலும் அஞ்சு பேரும் ஒண்ணா மீட்டிங் போட்டுடு வோம். அப்பாவுடன் நாங்க அஞ்சு பேரும் வருஷத்துக்கு ஒருமுறை டூர் போவோம். பெற்றோருக்கு 14 பேரக் குழந்தைகள், ஒரு கொள்ளுப் பேத்தி.

 விஜயகுமாருடன் அனிதா
விஜயகுமாருடன் அனிதா

கவிதா அக்காவின் மகளைத்தான், அருண் மனைவி ஆர்த்தியின் தம்பிக்குக் கட்டிக் கொடுத்திருக்கோம். குடும்ப ஒற்றுமையும் சகோதரப் பாசமும் பெற்றோர் மற்றும் எங்க காலத்தைத் தாண்டியும் தொடரணும்னு ஆசைப்படுறோம். எந்த விசேஷமா இருந்தாலும் ஐந்து குடும்பங்களும் ஒண்ணுகூடினாலே திருவிழா மாதிரி இருக்கும். சம்மர் டைம்தான் எங்க குடும்பத்துக்குத் திருவிழா. சில வாரங்கள் அப்பா வீட்டுல எல்லோரும் தங்குவோம். அப்போ, எங்களோட பீச் ஹவுஸ்ல எல்லோருக்கும் அருண் சமையல் செய்றது ஸ்பெஷலா இருக்கும்” - மகிழ்ச்சியுடன் கூறுகிறார் அனிதா.

ஃபிட்னஸில் அதிக ஆர்வம்கொண்ட நடிகர் அருண் விஜய்யின் பிரதான மருத்துவ ஆலோசகர் அனிதாதான். குடும்பத்தில் யாருக்கு எந்த மருத்துவ ஆலோசனைகள் தேவைப்பட்டாலும் முதல் அழைப்பு அனிதாவுக்கே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“கணவர் கோகுலகிருஷ்ணன் கத்தார் தலைநகர் தோஹாவிலுள்ள கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியில எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவரா இருக்கார். நான் இங்குள்ள உலகின் பெரிய எரிவாயு நிறுவன மான ‘கத்தார் கேஸ்’ல மருத்துவரா வேலை செய்றதோடு, பயிற்சி மருத்துவர்களுக்கும் பிற மருத்துவர்களுக்கும் வகுப்புகளும் எடுக்கிறேன். மகள் லண்டன்ல எம்.பி.பி.எஸ் ஃபைனல் இயர், பையன் சென்னை ராமச்சந்திராவுல எம்.பி.பி.எஸ் இரண்டாம் வருஷம் படிக்கிறாங்க. வருஷத்துக்கு ஒருமுறை அம்மாவும் அப்பாவும் கத்தாருக்கு வந்து என் வீட்டில் தங்குவாங்க. அம்மா அப்பா, நான் மூணு பேரும் 2014-ல் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுலா போனது வாழ்நாள் மெமரி.

 கணவர், மகள், மகனுடன் அனிதா...
கணவர், மகள், மகனுடன் அனிதா...

மூணு மாசத்துக்கு ஒருமுறை அப்பா வீட்டுக்கு வந்து ஒருவாரம் தங்குவேன். கொரோனாவால எட்டு மாசமா சென்னைக்கு வர முடியலை. அதனால, லாக்டெளன் ஆரம்பிச்சதில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமை சாயந்திரத்துல மொத்தக் குடும்பமும் ஜூம் மீட்டிங்ல இணைஞ்சுடுவோம். அந்தாக்ஷரி தொடங்கி நிறைய விளையாட்டுகளுடன் அஞ்சு மணிநேரம் கலகலப்பா போகும். அருணின் மனைவி ஆர்த்திதான், எங்க அஞ்சு பேரின் பாசத்துக்கும் இணைப்புப் பாலம். இதேபோல எங்க குடும்பத்தில் எல்லோரும் தலைமுறைகள் பல கடந்தாலும் ஒற்றுமையோடு இருக்கணும் என்பதுதான் எங்க விருப்பம். அதை எல்லாக் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுத்து வளர்க்கறோம்...”

– மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாகக் கூறும் அனிதாவின் விழிகளில் ஈரம்!