Published:Updated:

`போட்டோஸ் டெலீட் ப்ளீஸ்... எக்ஸாம் எழுதலாம்!' சாய் பல்லவி@திருச்சி

நடிகை சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவி

``பாஸ்… நான் பரீட்சை எழுத வந்திருக்கேன். உங்களால எனக்கும் மத்தவங்களும் எக்ஸாம் எழுதுறதில் பிரச்னை வந்துறக் கூடாது. சோ... ப்ளீஸ் அந்த போட்டோவ டெலிட் பண்ணுங்க."

திருச்சியில் கல்லூரி ஒன்றிற்கு தேர்வு எழுதவந்தபோது, மாணவர்களோடு சாய் பல்லவி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அண்மையில் வைரலாயின. அந்த செல்ஃபி மட்டுமல்ல; தேர்வு எழுத வந்த சக மாணவர்களோடு ஜாலியாக உரையாடியும் சென்றிருக்கிறார் சாய் பல்லவி. அன்றைக்கு அந்த தேர்வு அறையில் நடந்த சம்பவங்கள் இங்கே...

சாய் பல்லவி, நடிகையாவதற்கு முன்பே மருத்துவ மாணவி. 2016-ம் ஆண்டு ஜார்ஜியாவில் மருத்துவப்படிப்பு முடித்த இவர், இன்னும் மருத்துவராகத் தன்னைப் பதிவு செய்துகொள்ளவில்லை. ஜார்ஜியா, ரஷ்யா, வங்கதேசம், சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவுக்கு வரும் மாணவர்கள், இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்றுவதற்கான `FMGE’ தகுதித்தேர்வை எழுதுவார்கள்.

இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற வேண்டும் என்றால் (FMGE- Foreign Medical Graduate Examination) இத்தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும். அதேசமயம் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் இத்தேர்வை எழுதத் தேவையில்லை. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு ஐ.டி நம்பர் வழங்கப்படும். அதன் பிறகு, மருத்துவப் பணியைத் தொடரலாம். அப்படித்தான், திருச்சியில் உள்ள எம்.ஏ.எம் (MaM) கல்லூரியில் எழுதிவிட்டு மாணவர்களுடன் சகஜமாகப் பேசிப் பழகியிருக்கிறார் சாய் பல்லவி.

சாய் பல்லவியுடன் மாணவர்கள் செல்ஃபி
சாய் பல்லவியுடன் மாணவர்கள் செல்ஃபி

கொரோனா பரவல் உச்சக்கட்டம் காரணமாகக் கடந்த ஜூன் மாதம் நடைபெறுவதாக இருந்த இத்தேர்வு, ஒத்தி வைக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெற்றது. நடிகை சாய் பல்லவி, திருச்சியில் உள்ள கல்லூரியில் தேர்வில் பங்கேற்க வந்தபோது, சக தேர்வர்கள், சாய் பல்லவியை அடையாளம் கண்டுகொண்டு அவரைச் சூழ்ந்தனர்.

கல்லூரித் தேர்வு பரபரப்பைவிட சாய் பல்லவியைக் காணக்கூடிய கூட்டத்தின் பரபரப்புதான் உச்சம். ஆட்டோகிராஃபுகள் பெற்றும், செல்ஃபி எடுத்துக் கொண்டும் மகிழ்ந்தார்கள் மாணவர்கள். இதில், சிலர் கையிலேயே ஆட்டோகிராப் பெற்று அதைப் போட்டோவும் எடுத்துக் கொண்டனர்.

`போட்டோஸ் டெலீட் ப்ளீஸ்... எக்ஸாம் எழுதலாம்!'  சாய் பல்லவி@திருச்சி

சாய் பல்லவி தேர்வெழுதிய தேர்வறை கண்காணிப்பாளர் பாரத்திடம் பேசினோம். ``தேர்வுக்கு முன்னர் எக்ஸாம் ஹாலுக்குள் வந்த மாணவர்களிடம் அவரவர் ஐ.டி கார்டை வாங்கி புகைப்படம், பெயர், தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களைச் சரி பார்த்தேன். அப்போ, ஒரு பொண்ணு, ஷால் துணியால முகத்தைப் பாதி மறைச்சுக்கிட்டு, மாஸ்க்கும் போட்டுக்கிட்டு ஐ.டி கார்டை நீட்டுனாங்க. அதை வாங்கிப் பார்த்தபோது பெயர் சாய் பல்லவின்னு இருந்துச்துச்சு. போட்டோவை சற்று உற்றுப் பார்த்தபோது நடிகை சாய் பல்லவி போட்டோ போலவே இருந்துச்சு.

ஆச்சர்யத்துடன், அவரது மாஸ்க்கை கழட்டச் சொன்னேன். அப்போதுதான் அவர், நடிகை சாய் பல்லவியேதான் என்பது தெரிந்தது. அவர பார்த்ததுமே சுற்றி நின்ற மாணவ, மாணவிகள் சந்தோஷத்தில் கூட்டமாகக் கூடி, ஒரு செல்ஃபி எடுக்கணும்னு கம்பல் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.

செல்பி எடுத்துக்கொண்ட நடிகை சாய்பல்லவி
செல்பி எடுத்துக்கொண்ட நடிகை சாய்பல்லவி

அதற்கு அவர், ``இப்போது வேண்டாம் ஃபிரெண்ட்ஸ். எக்ஸாம் முடிஞ்சதும் எடுத்துக்கலாம்” எனச் சொன்னார். அவர் பேசிக்கொண்டு இருந்தபோதே பக்கத்திலிருந்த ஒரு பையன், சாய் பல்லவியோடு சேர்த்து ஒரு செல்ஃபி எடுத்தான். அதற்கு எதுவுமே சொல்லாமல் அவரை அழைத்து, ``பாஸ்… நான் பரீட்சை எழுத வந்திருக்கேன். உங்களால எனக்கும் மத்தவங்களும் எக்ஸாம் எழுதுறதில் பிரச்னை வந்துறக்கூடாது. சோ... ப்ளீஸ் அந்த போட்டோவ டெலிட் பண்ணுங்க. எக்ஸாம் முடிந்ததும் நானே உங்களோட போட்டோ எடுத்துக்கிறேன்னு" சொல்லி சகஜமா பேசினார்.

தேர்வு எழுதிய நடிகை
தேர்வு எழுதிய நடிகை

காலை, மதியம்னு ரெண்டு எக்ஸாம் எழுதினாங்க. எக்ஸாமை முடிச்சிட்டு போகும்போது அவங்களே ஃபோட்டோ எடுக்க ஆசைப்பட்டவங்களை அழைச்சு சகஜமா செல்ஃபி எடுத்துத்துக்கிட்டாங்க. நானும் அதுபோலதான் எடுத்தேன். அப்போது ``ஏன் மேடம்... இவ்ளோ ஃபேமஸான நடிகையா இருக்கீங்க. எதுக்காக டாக்டர் ஆகுறதுக்கு எக்ஸாம் எழுத வந்தீங்க”ன்னு கேட்டோம்.

``சினிமா என்னோட ஹாபி. டாக்டராகி மக்களுக்கு மருத்துவம் பார்க்கணும்ங்கிற ஆசையிலதான் மருத்துவம் படிச்சேன். அதே ஆசையிலதான் இப்போது பரீட்சை எழுதவும் வந்தேன். சினிமாவுக்கு ஒரு காலகட்டத்துல லீவு விட்டுட்டு முழு நேரமாக மருத்துவப்பணியில் இறங்கப்போறேன்” எனச் சொல்லிவிட்டு, அவருக்கு உரிய சிரிப்பைச் சிரித்துவிட்டு கிளம்பினார் சாய் பல்லவி” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு