Published:Updated:

“ஓடி ஒளிஞ்சதுதான் நான் பண்ணின தப்பு!” - ‘காதல்’ சரண்யா

சரண்யா
பிரீமியம் ஸ்டோரி
சரண்யா

நம்பிக்கை நாயகி

“ஓடி ஒளிஞ்சதுதான் நான் பண்ணின தப்பு!” - ‘காதல்’ சரண்யா

நம்பிக்கை நாயகி

Published:Updated:
சரண்யா
பிரீமியம் ஸ்டோரி
சரண்யா

‘காதல்’ பட சந்தியாவைத் தெரிந்தவர்களுக்கு சரண்யாவையும் நினைவிருக்கும். ‘பேராண்மை’யில் ஐந்து பெண்களில் அஜிதா கேரக்டரில் நடித்ததும் நினைவிருக்கலாம். இடையில் சிலகாலம் காணாமல் போயிருந்தவரைக் காட்டிக் கொடுத்தது சமூக ஊடகம்.

பூக்கடை அக்காவுடனும் வாட்ச்மேன் அண்ணாவுடனும் சோஷியல் மீடியாவில் போஸ்ட்டும் வீடியோவும் போட்டுக்கொண்டிருக் கிறார். தன்னுடைய பருமன், பிசிஓடி பிரச்னைகள் பற்றியும் வெளிப்படை யாகப் பேசத் தொடங்கியிருப்பவரிடம் எக்கச்சக்க பாசிட்டிவிட்டி.

‘`2014-ல கடைசியா தெலுங்குப் படத்துல நடிச்சேன். அதுவரைக்கும் நாலுபேர்ல ஒருத்தியா, ரெண்டு ஹீரோயின்ல ஒருத்தியாவே நடிச்சிக் கிட்டிருந்த எனக்கு அப்பதான் ஹீரோயின் கேரக்டர் வர ஆரம்பிச்சது. ஆனா, என் உடல்நிலை அதுக்கு ஒத்துழைக்கலை. திடீர்னு ஸ்ட்ரெஸ் அதிகமாச்சு. உடல் எடையும் தாறுமாறா அதிகமாச்சு. வாழ்க்கையே தலைகீழா மாறின மாதிரி இருந்தது’’- சரண்யாவின் பேச்சினிடையே சின்ன நிசப்தம். நிதானித்துத் தொடர்கிறார்.

சரண்யா
சரண்யா

‘‘எனக்கு அப்பா இல்லை. அம்மாவும் நானும் மட்டும்தான். சின்ன வயசுல அப்பா இல்லாம, அம்மாவோட பார்ட்னரோடு ஒரே வீட்ல இருந்த நாள்கள் கொடுமையானவை. அப்பவே எனக்கு மன அழுத்தம் ஆரம்பிச்சிருக்கணும்.இன்னிக்கு வெளிப்படையா பேசற அளவுக்கு அந்த வயசுல பேசத் தெரியலை. எனக்கு 19 வயசிருக்கும்போது அம்மா, தன் வாழ்க்கைதான் முக்கியம்னு முடிவெடுத்தாங்க. ‘பேராண்மை’ முடிச்சதுலேருந்தே நான் தனியாதான் வாழ்ந்துகிட்டிருக்கேன். ரெண்டுங்கெட்டான் வயசு. `காதல்', `பேராண்மை' மாதிரியான பெரிய படங்கள் அமைஞ்சபோதும் அடுத்தென்னனு வழிகாட்ட யாருமில்லை. சரியான படங்களைத் தேர்ந்தெடுக்க முடியலை. வாழ்க்கையில அடுத்தகட்டத்துக்குப் போக என்ன செய்யணும்னு தெளிவில்லை.

நடிகை, ஃபேமிலி சப்போர்ட்டோ, பெரிய பொருளாதார பின்னணியோ இல்லை. என்னை நானே பத்திரமா பார்த்துக்க வேண்டிய கட்டாயம். பேயிங் கெஸ்ட்டா தங்கறது, ஃப்ரெண்ட்கூட ரூமை ஷேர் பண்றதுனு சில நாள்களை ஓட்டினேன். ‘பேராண்மை’யில் நடிச்சிட்டிருந்தப்போ பவர் பாண்டியன் மாஸ்டர்கிட்ட சிலம்பம் கத்துக்கப் போனேன். என் நடவடிக்கைகளை கவனிச்ச மாஸ்டர், ‘ஏன் எப்போதும் ஒருவித பதற்றத்தோடும் நடுக்கத்தோடும் இருக்கே’னு கேட்டார். என் பர்சனல் பிரச்னைகளை அவர்கிட்ட சொன்னேன். தன் மகள் மாதிரி எனக்கு அட்வைஸ் பண்ணி ஆறுதல் சொல்லிப் பார்த்துக்கிட்டார். மனக் கஷ்டங்களை அவர்கிட்ட ஷேர் பண்ண முடிஞ்ச என்னால, உடல்ரீதியான கஷ்டங்களைச் சொல்ல முடியலை.

ஸ்ட்ரெஸ், தலைமுடி உதிர்வு, வெயிட் போட்டது, பீரியட்ஸ் பிரச்னைனு நிறைய கஷ்டங்களை அனுபவிச்சேன். மூணே மாசத்துல 20 கிலோ வெயிட்போட்டேன்... ஏதோ பிரச்னைனு மட்டும் புரிஞ்சது. முதல்கட்டமா படங்கள்ல நடிக்கிறதை நிறுத்தினேன். நல்ல வாய்ப்புகளை மறுத்தேன். டாக்டர்கிட்ட செக்கப்புக்குப் போனபோதுதான் எனக்கு ஹைப்போதைராய்டிஸமும் பிசிஓஎஸ் பிரச்னையும் இருக்கிறது தெரிஞ்சது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

80 கிலோவுக்கு மேல வெயிட் ஏறினதும் வீட்டைவிட்டு வெளியில வர்றதையே குறைச்சுக்கிட்டேன். நடிக்கிறதை நிறுத்தினதால நட்பு வட்டமும் விலகிப்போயிடுச்சு. தாழ்வு மனப்பான்மை அதிகமானதும் பாண்டியன் மாஸ்டர்கிட்ட பேசறதையும் நிறுத்திட்டேன். ஒரு நடிகை, திடீர்னு இப்படி எக்கச்சமா வெயிட் போட்டு, வெளியில நடமாடினா, சமூகம் கிண்டல் பண்ணுமேனு பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கினேன். சோஷியல் மீடியாவிலும் அமைதியானேன். நம்பரை மாத்தினேன். இப்படி எல்லா வகையிலும் என்னைத் தனிமைப்படுத்திக்கிட்டேன்.

 “ஓடி ஒளிஞ்சதுதான் நான் பண்ணின தப்பு!” - ‘காதல்’ சரண்யா

இதுக்கிடையில எப்படியோ என் நம்பரைக் கண்டுபிடிச்சு பாண்டியன் மாஸ்டர் பேசினார். எனக்கு தைரியம் சொன்னார். மறுபடி சிலம்பம் க்ளாஸுக்கு வரச் சொன்னார். ‘முதல்ல வீட்டைவிட்டு வெளியில வா... அப்புறம்தான் உன் பிரச்னைகள்லேருந்து வெளியே வர முடியும்’னு சொன்னார். முதல் வேலையா கோயம்புத்தூர்ல உள்ள என் ஃபிரெண்ட் வீட்டுக்குப் போனேன். அந்த நாலு நாள் பயணம் எனக்குள்ளே பெரிய மாற்றத்தை ஏற்படுத்துச்சு. இப்படியே என் உலகத்தைச் சுருக்கிக்கிட்டு வாழறது சரியில்லை, இதுலேயிருந்து வெளியில வரணும்னு தோணுச்சு. ப்ளஸ் டூ வரைதான் படிச்சிருக்கேன். நடிப்பைத் தவிர, வேற வேலை தெரியாது. எனக்காக நான் வாழ்ந்தாகணும்னு என்னை நானே மோட்டிவேட் பண்ணிக்கிட்டு வெளியில வந்தேன். எக்சர்சைஸ், சாப்பாடு எல்லாத்தையும் தாண்டி, மனசை ஸ்ட்ரெஸ் ஃப்ரீயா வெச்சுக்கிட்டாதான் வெயிட்டை குறைக்க முடியும்னு டாக்டர்ஸ் சொன்னாங்க. நான் எப்படி இருக்கேனோ அப்படியே என் போட்டோஸை சோஷியல் மீடியாவில் போட ஆரம்பிச்சேன். என் பிரச்னைகளைப் பேச ஆரம்பிச்சேன்.

 “ஓடி ஒளிஞ்சதுதான் நான் பண்ணின தப்பு!” - ‘காதல்’ சரண்யா

நம்மகூடவே இருக்கிறவங்க, பெரிய மனுஷங்கனு நினைச்சிட்டிருக்கிறவங்க பலரும் நாம எதிர்பார்க்காத நேரத்துல நம்மை மட்டம் தட்டுறாங்க, விலகிடறாங்க, புறம் பேசுறாங்க. ஆனா, என் வீட்டு வாசல்ல பூகட்டி விற்கிற அக்காவும் செருப்பு தைக்கிற தாத்தாவும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம என்கிட்ட அன்பா அக்கறையா இருக்காங்க. எதிர்பார்ப்பில்லாத அந்த அன்பும் அவங்களையும் அறியாம கொடுக்கிற ஊக்கமும் தெம்பளிக்குது. அந்தச் சந்தோஷத்தையும் சோஷியல் மீடியாவில் பகிர ஆரம்பிச்சேன். ஓடி ஒளிஞ்சதுதான் நான் பண்ணின பெரிய தப்புன்னு இப்ப புரியுது. தனிமையிலும் கடுமையான ஸ்ட்ரெஸ்ஸிலும் இருந்தபோது அம்மாவைப் பார்க்கணும்போல இருந்துச்சு. பேச முயற்சி செய்தும் அவங்க தரப்புலேருந்து ரெஸ்பான்ஸ் இல்லை. என்னதான் அம்மான்னாலும் அவங்க வாழ்க்கை அவங்க விருப்பம், அதுல தலையிடக் கூடாதுனு முடிவு பண்ணினேன்.

பெண்ணுக்கு குடும்பம் பெரிய சப்போர்ட். டீன் ஏஜ்ல அது மிஸ் ஆகும்போது அவ நிலைகுலைஞ்சு போயிடுவா. குடும்ப ஆதரவு இல்லைனா நல்ல நண்பர்களையாவது சம்பாதிச்சிருக்கணும். சின்ன வயசுல ரெண்டுமே எனக்கு அமையலை. இப்ப சில நல்ல நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. எனக்கு பாசிட்டிவிட்டியைக் கொடுக்கிற நட்பு அது. நான் உடைஞ்சுபோயிடாம பார்த்துக்கிற அக்கறை அது.

இப்போ டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன் சார் ஆபீஸ்ல ஃபினான்ஷியல் பேக்அப் வேலையும் பார்க்கிறேன். வெப் சீரீஸ், சீரியல்ஸ், அட்வர்டைஸ்மென்ட்ஸ்னு நிறைய வாய்ப்புகள் வருது. வெயிட்டும் குறைய ஆரம்பிச்சிருக்கு. அதுல என் இலக்கைத் தொட்டதும் புது வாய்ப்புகளை ஏத்துக்கலாம்னு இருக்கேன். சோகங்களை மட்டுமே பார்த்த என் வாழ்க்கையிலும் நல்லது நடக்க ஆரம்பிச்சிருக்கு.

எதிர்காலம் என்ற பாதை விசாலமா இல்லைன்னாலும் தடைகள் இல்லாம இருக்குனு புரியுது. அது போதும், நான் நினைச்ச இடத்துக்குப் போய்ச் சேர்ந்திடுவேன்ற நம்பிக்கை இருக்கு...’’

- சவால்களை வென்றுவிட்ட சரண்யாவுக்கு இனி எல்லாம் நலமாகட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism