சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

"டிக்டாக் பிடிக்காது; பப்ஜி விளையாடியதில்லை!"

பிரியா ஆனந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
பிரியா ஆனந்தி

படம்: கிரண் சா

சினிமாத்துறையில் 10 வருடங்களைக் கடந்திருக்கும் நடிகை பிரியா ஆனந்த், மொத்தம் 5 மொழிகளில் நடித்திருந்தாலும் கலவையான படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். இந்த லாக்டெளனில் ஹைதராபாத் வீட்டில் தன் பாட்டியுடன் நேரத்தைச் செலவழித்துவரும், பிரியா ஆனந்திடம் பேசினேன்.

``உங்க நடிப்பில் `சுமோ’ திரைப்படம் ரிலிஸுக்கு ரெடியாக இருக்கு; அந்தப் படத்தைப் பற்றிச் சொல்லுங்க..?’’

`` ‘வணக்கம் சென்னை’ படத்துக்கு அப்பறம் ரெண்டாவது முறையா சிவாவுடன் இந்தப் படத்தில் நடிச்சிருக்கேன். இந்தப் படத்தோட கான்செப்ட்டே ரொம்பப் புதுசாகவும் ஜாலியாகவும் இருக்கும். ராஜீவ் மேனன் சாரோட ஒளிப்பதிவில் நடிக்கிறது புது அனுபவமா இருந்துச்சு.’’

``பாலிவுட் நடிகர் சுஷாந்தின் தற்கொலைக்குப் பிறகு நெபோடிசம் பற்றி அதிகமாகப் பேசுகிறார்கள். நீங்கள் பாலிவுட்டில் நடிக்கும்போது அந்த மாதிரியான பிரச்னைகளைச் சந்தித்தீர்களா..?’’

``அரசியல்வாதிகளோட மகன்களும் மகள்களும் அவங்க அப்பாவோட கட்சியைப் பார்த்துக்கிறது இல்லையா. அதே மாதிரி தொழிலதிபர்களோட பிள்ளைகள், அவங்க அப்பாவோட பிசினஸை எடுத்து நடத்துறது இல்லையா. அந்த மாதிரி, சினிமா நடிகர்களோட மகன்களும் மகள்களும் சினிமாவில் நடிக்க வருவதும் இயல்புதான். நான் ஜெய், விக்ரம் பிரபு, அதர்வா, கெளதம் கார்த்திக், த்ருவ் விக்ரம்னு பல ஸ்டார் கிட்ஸோடு நடிச்சிருக்கேன். அத்தனை பேரும் திறமையானவங்கதான். ஆனால், ஸ்டார் கிட்ஸ் வளரணும்னு திறமையான முதல் தலைமுறை நடிகர்களை வளரவிடாமல் தடுத்தால், அது மிகப்பெரிய தவறுதான். ஆனால், ஒரு தமிழ்ப் பொண்ணா எனக்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்புதான் கிடைச்சது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்லணும்னா, தமிழைவிட எனக்கு இந்தியில்தான் நல்ல நல்ல கேரக்டர்களில் நடிக்கிறதுக்கு வாய்ப்பு வருது.’’

பிரியா ஆனந்தி
பிரியா ஆனந்தி

“சூர்யாவுடனும் அனிருத்துடனும் விளம்பரப் படங்களில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?”

``நான் மாடலிங் பண்ணிட்டிருந்த சமயத்தில் சூர்யா சார்கூட ஒரு விளம்பரத்தில் நடிச்சேன். நான் அமெரிக்காவில் படிச்சிட்டிருந்தப்போ, அங்க சூர்யா சாரோட படங்களுக்கு பெரிய ஓப்பனிங் இருக்கும். அதையெல்லாம் பார்த்து அவருக்கு நான் மிகப்பெரிய ரசிகையா இருந்தேன். அப்படி நான் பிரமிச்சுப் பார்த்த ஒரு நடிகரோடு என் கரியர் ஆரம்பத்திலேயே நடிச்சது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அதே மாதிரி, அனிருத்தோடு சமீபத்தில்தான் மூணு விளம்பரத்தில் நடிச்சேன். அதில் ஒண்ணு இப்போ ரிலீஸாகிடுச்சு. `எதிர்நீச்சல்’, `வணக்கம் சென்னை’ன்னு நான் நடிச்ச படங்களுக்கு அவர் இசையமைச்சிருந்தனால, எங்களுக்குள்ள ஏற்கெனவே நல்ல அறிமுகம் இருந்துச்சு. அதனால, இந்த விளம்பரத்தை சீக்கிரமாகவே நடிச்சு முடிச்சிட்டோம்.’’

``கன்னடத்தில் புனீத் ராஜ்குமாரோடு நீங்க நடிச்ச படம் செம ஹிட். இப்போ சிவ ராஜ்குமாரோடு நடிக்கப்போறீங்க. அதைப் பற்றி..?’’

``மூணு வருஷத்துக்கு முன்னாடி புனீத் ராஜ்குமார் சாரோடு `ராஜகுமாரா’ படத்தில் நடிச்சேன். அதில் நடிக்கும்போது, `இப்படி ஒரு நல்லவர் இருப்பாரா’ என்கிற அளவுக்கு என்னை ரொம்பவே ஆச்சரியப்படுத்தினார், புனீத் சார். இதை நான் கன்னட சினிமாவில் இருக்கிற என் நண்பர்கள்கிட்ட சொன்னபோது, `அப்போ நீங்க கண்டிப்பா அவரோட அண்ணன் சிவ ராஜ்குமாரோடும் நடிக்கணும். அவர் உங்களை இன்னும் ஆச்சரியப்படுத்துவார்’னு சொன்னாங்க. இப்போ அந்த வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கு. தமிழில் `ஈட்டி’, `ஐங்கரன்’ படத்தை இயக்கிய ரவி அரசுதான் இந்தப் படத்தை இயக்குறார்.’’

``நீங்க பாட்டி செல்லமாமே..?’’

``அப்பா, அம்மாவோடு அமெரிக்காவில் செட்டில் ஆனதுக்கு அப்பறம், நான் மட்டும் நடிக்கிறதுக்காக இந்தியா வந்துட்டேன். சென்னையில ஷூட்டிங் இருந்துச்சுன்னா, அண்ணா நகரில் இருக்கிற பாட்டி வீட்டில்தான் தங்குவேன். இந்த லாக்டெளன் ஆரம்பிச்சதும் பாட்டி தனி ஆளா சென்னையில மாட்டிக்கிட்டாங்க. அப்பறம் அவங்களை ஹைதராபாத்திற்கு அழைச்சிட்டு வந்து என்கூடவே வெச்சுக்கிட்டேன். லாக்டெளனில் பல பேர், `புதுசா இந்த வெப் சீரிஸ் பார்க்குறேன், புத்தகங்கள் படிக்கிறேன்; ஆன்லைன் க்ளாஸ் போறேன்’னு பல விஷயங்கள் சொன்னாங்க. ஆனால், எனக்கு அதுக்கெல்லாம் நேரமே இல்லை. எனக்கு என் பாட்டியைப் பார்த்துக்கிறது மட்டும்தான் முழு நேர வேலை. காலையில் எழுந்திருச்சதும் அவங்களைக் குளிப்பாட்டி விட்டு, சாப்பாடு ஊட்டி விட்டு, மருந்து மாத்திரைகள் கொடுப்பேன். அவங்களோடு இருந்து அவங்க கேட்கிற உதவிகளைப் பண்ணிட்டிருப்பேன்.’’

`` ‘ஆதித்யா வர்மா’ படம் ரிலீஸான பிறகு இயக்குநர் பாலா எடுத்த ‘வர்மா’ படத்தைப் பார்க்கணும்னு பல பேர் சொல்றாங்க. அதைக் கேட்கும்போது உங்களுக்கு என்ன தோணுது..?’’

``ஒரே கதையை வெச்சு தெலுங்கு, இந்தி, தமிழ்னு மூணு மொழிகளில் படமா எடுத்து, அதை எல்லாரும் பார்த்துட்டாங்க. மறுபடியும் அதே கதையில் இன்னொரு படத்தைப் பார்க்கணும்னு எப்படி ஆசைப்படுறாங்கன்னே எனக்குத் தெரியலை. பாலா சார் அந்தப் படத்தை எப்படி இயக்கியிருக்கார்னு பார்க்கிறதுக்கு எல்லாருமே ஆர்வமா இருக்காங்கன்னு நினைக்கிறேன். ஆனால், ஏதோ சில காரணங்களுக்காகத்தான் அந்த வெர்ஷனை ரிலீஸ் பண்ணாமல் புதுசா எடுத்தாங்க. அதனால், அதை அப்படியே மறந்திடணும்னு நினைக்கிறேன்.’’

``டிக் டாக், பப்ஜி ஆப்களைத் தடை செய்ததற்கு உங்களுடைய ரியாக்‌ஷன் என்ன..?’’

``எனக்கு டிக் டாக் ஆப் சுத்தமா பிடிக்காது. அதுல பல பேர் தங்களோட நேரத்தைச் செலவிட்டாங்க. ஆனால், எனக்கு ஆரம்பத்தில் இருந்து அந்த ஆப் பிடிக்கவே செய்யாது. அதுக்கு என்ன காரணம்னு எனக்குத் தெரியலை. அதே மாதிரி, பப்ஜியும் நான் விளையாடியதே இல்லை. பப்ஜி விளையாடுற நண்பர்களுக்கும் எனக்கில்லை. எனக்கு இருக்கிற நண்பர்கள் எல்லாருமே புத்தகங்கள் படிக்கிறவங்கதான்.’’