சினிமா
Published:Updated:

கடவுளின் மடியில் அமர்ந்தவன்!

பகத் பாசில்
பிரீமியம் ஸ்டோரி
News
பகத் பாசில்

பகத்தின் மற்றொரு பலம் எழுத்தாளர்களை மதிப்பது. கதை, திரைக்கதை எழுதும் ஸ்யாம் புஷ்கரன் போன்றவர்கள் பலமுறை பகத்தை சிலாகித்துப் பேசியுள்ளனர்.

"சிறுவயதில் சினிமாவுக்கும் எனக்குமான தொடர்பு என்பது என் தந்தையின் மடியில் அமர்ந்து, செட்டில் ஷூட்டிங்கை ரசிப்பது என்ற வகையில்தான் இருந்தது. அங்கே அவர் மைக்கில் `மழை' என்றால் மழை பெய்யும். `பாடல்' என்றால் பாடல் ஒலிக்கும். மக்கள் அதற்கு ஏற்ப நடனமாடுவார்கள். நான் அப்போதெல்லாம் கடவுளின் மடியில் அமர்ந்துள்ளதாய் நினைத்துக்கொண்டேன்.’’

பகத் பாசில் சில்வர் ஸ்பூனுடன் பிறந்தவர்தான். மலையாளத்திலும் தமிழிலும் பல கிளாசிக் படங்களை இயக்கிய இயக்குநர் பாசிலின் மகன். அவருக்கு அறிமுகம் அவசியமில்லை. பகத்துக்கும் தற்போது அந்த முகத்தில் அறையும் புகழ் வெளிச்சம் சாத்தியப்பட்டுவிட்டது. இந்தியத் திரையுலகமே இன்று திரும்பிப் பார்க்கும் ஒரு நடிகராய் அவர் மாறிவிட்டார். பகத் படமென்றால் அதில் நிச்சயம் ஏதாவது ஒன்றிருக்கும் என, பிறமொழி பேசுபவர்கள்கூட டியூனாகிவிட்டனர். ஓடிடியோ, தியேட்டரோ, ஒவ்வொருமுறை அவரின் படம் வெளிவரும்போதும் அதற்கான விமர்சனக் கட்டுரைகள், வீடியோக்கள் விந்திய மலைக்கு அப்பாலிருந்தும் வருவதே அதற்கான சாட்சி!

கடவுளின் மடியில் அமர்ந்தவன்!

மலையாள சினிமாவின் புதிய அலை, ஸ்டார் என்ற அந்தஸ்தின் பின்னால் ஓடாத ஒன்றாக பரிணமித்திருக்கிறது. அப்படியான இந்தப் புதிய அலையில் துடுப்பை வீசியவர்களில் முதன்மையானவர் பகத். நாயக பிம்பம் என்பதைத் தூள் தூளாக்கிவிட்டு, கதையில் நாயகன் என்பவன் ஒரு பிரதான பாத்திரம் மட்டுமே எனக் கதைக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து அதன் போக்கில் செல்பவர். கதையில் தன் பாத்திரம் எத்தகையது என்பதைப் பார்க்காமல், கதை எப்படிப்பட்டது, அந்தப் பரப்பில் தன்னால் என்ன புதிதாகச் செய்ய முடியும் என யோசித்து அதைச் செய்யும் கலைஞனாக வந்து நிற்கிறார்.

கடவுளின் மடியில் அமர்ந்தவன்!

எம்.ஜி.ஆர் காலம் முதல் கதையின் நாயகன் என்றால் அவன் நல்லவன், அப்பழுக்கற்றவன்; தவறு செய்யும் கெட்டவன் ஒருவனை அழித்து நீதியை நிலைநாட்டுபவன். இல்லையென்றால், கெட்டவனாக வந்தாலும் பாதிப் படத்திலோ க்ளைமாக்ஸிலோ திருந்தி மக்களுக்கு நல்லது செய்பவனாகிவிடுவான். பெரும்பாலான வணிக ரீதியிலான படங்கள் இன்று நடிகரையும், அவருக்கு இருக்கும் மார்க் கெட்டையும் வைத்தே அதன் கதையைக் கட்டமைத்துக் கொள்கின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்களில் இந்தக் கலாசாரம் வெளிப்படையாகத் தெரியும். மலையாளத்திலும் இப்படியான சினிமாக்கள் உண்டு. பகத் இந்த டெம்ப்ளேட்களைத்தான் முதலில் உடைத்தார். பகத் கதையில் பகத்தாக வரமாட்டார். அந்தப் பாத்திரமாக மட்டுமே நம் கண்களுக்குத் தெரிவார்.

கடவுளின் மடியில் அமர்ந்தவன்!

`கும்பளங்கி நைட்ஸ்' ஷம்மியின் அடாவடித்தனம், பெண்களை உடைமையாக எண்ணும் அவனின் கீழான உணர்வு இப்போதும் நமக்குக் கோபத்தை வரவழைக்கும். `பெங்களூர் டேஸ்' தாஸ் தன் மனைவியிடம் காட்டும் இறுக்கம் நமக்கே வருத்தத்தைக் கொடுக்கும். `மகேஷிண்டே பிரதிகாரம்' மகேஷ் செருப்பை அணியாமல் தன் அவமானத்தைத் துடைக்க, பழிவாங்க நடத்தும் போராட்டம் நமக்கும் அவன்மீது பரிதாபத்தை வரவைக்கும். `தொண்டிமுதலும் த்ரிக்‌ஷாக்‌ஷியும்' பிரசாத் செய்யும் தகிடுதத்தங்கள் அந்தப் பலே திருடனை வசீகரமானவனாக மாற்றிவிடும். அவரின் கதாபாத்திரங்களையும் அதன் தன்மைகளையும் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

கடவுளின் மடியில் அமர்ந்தவன்!

பகத் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களும் கதைகளும் பேசப்படுவதன் முக்கிய காரணம், அவை ஒன்றுபோல என்றுமே இருக்காது. உதாரணமாக, உழைப்பில்லாமல் பொருள் ஈட்ட முனையும் இரண்டு பாத்திரங்கள் `டிரான்ஸ்' விஜு பிரசாத், `கார்பன்' சிபி செபாஸ்டியன். இந்த இரண்டு கதாபாத்தி ரங்களின் தன்மைகளும் ஒன்றுதான் என்றாலும், கார்பனில் விஜுவையோ, டிரான்ஸில் சிபியையோ நம்மால் பொருத்திப் பார்க்க முடியாது. அதே போல் மற்றொரு சுயநலக் காரனான ‘ஜோஜி'யை சிபியுடன் நம்மால் ஒப்பிடவே முடியாது. இருவரின் தன்மை, இலக்கு எல்லாம் ஒன்றுதான் என்றாலும், அவர்கள் வெவ்வேறு உலகத்தவர்கள் என்பதை மறுக்க முடியாது. பகத் இப்படி உருவாக்கிச் சென்றிருக்கும் பாத்தி ரங்களும் அவர்களுக்காகக் கட்டமைக்கப் பட்டிருக்கும் வெளிகளும் வேறு யாருக்கும் பொருத்த மில்லாதவை.

கடவுளின் மடியில் அமர்ந்தவன்!

பகத் பெரிய அளவில் தன் உடலமைப்பில் மாற்றம் செய்து கொள்வ தில்லை. சிக்ஸ் பேக்ஸ், எய்ட் பேக்ஸ் அவருக்கு அவசியமில்லை. ஆனால், அவருக்கு வேறொரு மேஜிக் கைகூடி வருகிறது. தான் ஏற்கும் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் பொருத்தமானவர் என்பதை நம்ப வைக்க அவரின் கண்களை அதிக அளவில் பயன்படுத்து கிறார். ஆம், பகத்துக்கு க்ளோஸ் அப் வைக்கப்படும் ஷாட்கள் அனைத்துமே பல கதைகள் பேசிவிடும். பகத் பாத்திரம் பேச நினைக்கும் பல விஷயங்களை அவை உணர்வுகளாக நமக்குக் கடத்திவிடும். முக்கியமான காட்சிகளில் அவரின் கண்களுக்கு வைக்கப்படும் க்ளோஸ் அப் காட்சிகள் ஏதோ ஒரு முக்கிய முடிவு, ஒரு மனமாற்றம், கதை சூடுபிடிக்கிறது போன்றவற்றைக் குறிப்பால் உணர்த்துபவை.

கடவுளின் மடியில் அமர்ந்தவன்!

‘அன்னையும் ரசூலும்' என்ற அமரகாவியத்தில் தன் காதலி ஆண்ட்ரியாவைத் திருமணத்துக்கான வெள்ளை உடையில் பார்க்கும் ரசூலின் முகபாவங்களில் அத்தனை காதல் குடிகொண்டிருக்கும். அந்தப் படத்தில் அவர்களின் விதி வேறானது என்றாலும், அவர்களுக் கிடையே நடக்கும் இந்த மணக்கோல காதல் பரிமாற்றத்தில் பகத் தன் உணர்வுகளை வசனமின்றிக் கண்களில் கொண்டு வந்து நிறுத்திவிடுவார். இதேபோல் `கும்பளங்கி நைட்ஸ்' படத்தில் கதவிடுக்கிலிருந்து அவர் எட்டிப்பார்க்கும் அந்த ஷாட்டில் அவர் வெளிப்படுத்துவது வாஞ்சை என்பதான தோற்றத்தில் இருந்தாலும், கதையின் போக்கை அறிந்தவர்களுக்கு அது அச்சத்தைத் தருவிக்கும் ஒன்றாகத்தான் இருக்கும்.

கடவுளின் மடியில் அமர்ந்தவன்!

பகத்தின் நடிப்புத் திறனைத் தாண்டி அவரின் வெற்றிக்கு முக்கியக் காரணம் அவர் சம்பாதித்து வைத்திருக்கும் மனிதர்கள். கதையின் நாயகன் என்றில்லை, கதைக்கு அவசிய மானது, தன்னுடைய தனித் தன்மையைப் பதிவுசெய்ய உதவும் ஒன்று என்றால் தயங்காமல் ஒரு காட்சியில்கூட வந்து போவார். சீனியர்களான சத்யன் அந்திக் காடு, ஷ்யாமா பிரசாத், வேணு போன்ற இயக்கு நர்களுடனும் பணியாற்றியுள்ள பகத், புதிய முயற்சிகளுக்கும் என்றுமே தயங்கியதில்லை. கேரள சினிமாவில் புது ரத்தம் பாய்ச்சிய இளம் படைப்பாளிகளில் முக்கியமானவர்களான திலீஷ் போத்தன், ஸ்யாம் புஷ்கரன், ஆஷிக் அபு, அமல் நீரட், மகேஷ் நாராயணன், அன்வர் ரஷித் போன்றவர்களின் படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். பகத் திரைப்பட வரலாற்றை இந்தப் பெயர்களின்றிப் பதிவுசெய்யவே முடியாது. ‘அடுத்தது என்ன’ என ஓடும் ஒரு கலைஞனுக்கு ஏற்றவாறு அவர் களும் புதுப்புதுச் சவால்களுடன் கைகோக்கிறார்கள். இதுதான் லாக்டௌன் காலத்திலும் அவரை `C U Soon', `இருள்', `ஜோஜி' போன்ற வித்தியாசமான முயற்சிகளை எடுக்கவைக்கிறது. கேரள மாநில அரசின் விருதுகள், பிலிம்பேர் விருதுகள், பல சர்வதேச விருதுகள் என வாங்கிக் குவித்திருப்பவர், `தொண்டிமுதலும் த்ரிக்‌ஷாக்‌ஷியும்' படத்துக்காக தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்.

தற்போது `ப்ரேமம்' இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனுடன் நயன்தாராவுக்கு ஜோடியாக `பாட்டு' படத்திலும் தமிழில், `வேலைக்காரன்', `சூப்பர் டீலக்ஸ்' படங்களுக்குப் பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் `விக்ரம்' படத்திலும் நடித்துவருகிறார். தெலுங்கிலும் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனாவின் `புஷ்பா' படம் மூலமாகத் தடம் பதிக்கவிருக்கிறார். மேலும் இரண்டு மலையாளப் படங்கள் இறுதிக் கட்டப் படப்பிடிப்பை நெருங்கியுள்ளன.

பகத்தின் மற்றொரு பலம் எழுத்தாளர்களை மதிப்பது. கதை, திரைக்கதை எழுதும் ஸ்யாம் புஷ்கரன் போன்றவர்கள் பலமுறை பகத்தை சிலாகித்துப் பேசியுள்ளனர். ``கதாபாத்திரங்கள் என்னை ஈர்ப்பதில்லை, கதையே பிரதானம்’’ என்று சொல்லும் பகத் இதுவரை தன்னிடம் வந்த 80 சதவிகிதக் கதைகளை ஒப்புக்கொண்டு படமாக்கியுள்ளார். கதை எழுதும், இயக்கும் அவரின் நண்பர்களின் சவால்கள்தான் அவரை இன்னும் வேகமாக ஓட வைக்கின்றன. நண்பர்களே அவரின் இந்த உயரத்துக்குக் காரணம் என்பதை அவருமே பல இடங்களில் பகிர்ந்துள்ளார். அது சரி, இதுவரை ஐந்து படங்களைத் தன் மனைவி நஸ்ரியா நசீமுடன் இணைந்து தயாரித்திருக்கும் பகத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் என்ன தெரியுமா? ‘பகத் பாசில் அண்டு ப்ரெண்ட்ஸ்’!