Published:Updated:

`என்னிடம் கேளுங்கள், நான் பதில் தருகிறேன்!' - அமீர்கான் வதந்தி பற்றி `தங்கல்' நடிகை சொன்னது என்ன?

Fatima sana shaikh
Fatima sana shaikh ( Photo: Instagram / fatimasanashaikh )

``முன்னதாக, சின்னச் சின்ன பாதிப்புகளைக் கையாளப் பழகியிருந்தேன். ஆனால் இப்போது நான் மோசமாக உணர்கிறேன். ஏனென்றால், இதுபோன்ற பெரிய விஷயங்களை நான் ஒருபோதும் கையாண்டதில்லை."

இந்தி நடிகர் அமீர்கான், மற்றும் நடிகை பாத்திமா சனா ஷேக் இருவரும் காதலிக்கின்றனர் என்ற வதந்திகள் மீண்டும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

பிரபல இந்தி நடிகர் அமீர்கான் மற்றும் அவரின் மனைவி கிரண் ராவ் இருவரும், கடந்த சனிக்கிழமை அன்று விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். முன்னதாக தன் முதல் மனைவி ரீனா தத்தாவை 2002-ம் ஆண்டு விவாகரத்து செய்திருந்தார் அமீர்கான். இவர்களுக்கு ஜூனைத் என்கிற மகனும், ஈரா என்கிற மகளும் உள்ளனர்.

`தங்கல்'
`தங்கல்'

அதைத் தொடர்ந்து கிரண் ராவை திருமணம் செய்தார். 15 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், இந்தத் தம்பதி தங்கள் விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர். இவர்களுக்கு ஆசாத் ராவ் கான் என்ற மகன் உள்ளார். இவர்களது விவாகரத்து செய்தி பாலிவுட் மட்டுமல்லாது இந்திய திரையுலகு முழுக்க பரபரப்பாகப் பேசப்படுகிறது.

இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆன நிலையில், அமீர்கானும் அவருடன் `தங்கல்' திரைப்படத்தில் நடித்த நடிகை பாத்திமா சனா ஷேக்கும் காதலித்து வருவதாகக் கூறப்படும் வதந்தியும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நடிகை பாத்திமா சனா ஷேக்கிற்கு சொந்த ஊர் ஐதராபாத். 29 வயதாகும் சனா ஷேக் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மும்பை சென்றார். அங்கு சென்ற அவர் பல படங்களில் சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தார். பின்னர் 2016-ம் ஆண்டு வெளிவந்த `தங்கல்' திரைப்படத்தில் அமீர்கானுக்கு மகளாக நடித்திருந்தார். இந்நிலையில் பல விருது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாகப் பங்கேற்றனர். மேலும், அமீர்கானுடன் அடுத்து இன்னொரு படத்திலும் இணைந்து நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து அப்போது இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவின. தற்போது அமீர்கான் - கிரண் ராவ் இருவரும் விவாகரத்து செய்திருக்கும் நிலையில் மீண்டும் இதேபோல சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிவருகின்றன. இந்த வதந்தி குறித்து அமீரும், பாத்திமாவும் தற்சமயம் எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. ஆனால், இதுபோன்ற வதந்திகள் குறித்த தன் வருத்தத்தை 2019-ம் ஆண்டு ஒரு பேட்டியில் பதிவு செய்திருந்தார் பாத்திமா.

``முன்னதாக, சின்னச் சின்ன பாதிப்புகளைக் கையாளப் பழகியிருந்தேன். ஆனால் இப்போது நான் மோசமாக உணர்கிறேன். ஏனென்றால், இதுபோன்ற பெரிய விஷயங்களை நான் ஒருபோதும் கையாண்டதில்லை.

அமீர்கான் - கிரண் ராவ்
அமீர்கான் - கிரண் ராவ்

நான் இதுவரை சந்தித்தது கூட இல்லை... அவர்கள் எல்லாம் என்னைப் பற்றி பல விஷயங்களை எழுதுகிறார்கள். அதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா என்று கூட அவர்களுக்குத் தெரியாது. மேலும் இதைப் படிக்கும் மக்கள் நான் நல்ல பிறவி அல்ல என்று கருதுகிறார்கள். `என்னிடம் கேளுங்கள், நான் உங்களுக்கு ஒரு பதில் தருகிறேன்' என்று அவர்களிடம் சொல்ல வேண்டும் போல் உள்ளது. இது என்னைத் தொந்தரவு செய்கிறது. ஏனென்றால் மக்கள் என்னை தவறாக யூகிப்பதை நான் விரும்பவில்லை. என்றாலும், இதையெல்லாம் புறக்கணிக்கக் கற்றுக்கொண்டேன். ஆனாலும், நான் சில நாள்களாக இந்த செய்திகளால் மிகவும் பாதிக்கப்பட்டது உண்மை" என்று வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு