சுஷாந்த் இறப்பு: தொடர்ந்து அவதூறு, அவமானம்! - அதிர்ச்சி கொடுத்த 8 மணிநேர விசாரணை

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறப்பு விவகாரத்தில், சினிமா விமர்சகர் ராஜீவ் மசந்திடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14-ம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்தின் இறப்பு, மொத்த இந்தியத் திரையுலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நடிகருக்கு இருந்த அதிகப்படியான மன அழுத்தம் காரணமாகத்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என மும்பை போலீஸின் முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் தொழில் போட்டி காரணமாக ஏற்பட்ட மனஅழுத்தத்தில்தான் அவர் உயிரிழந்தார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

இதுதொடர்பாக மும்பை போலீஸார் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்தின் தற்கொலை சம்பவத்தில் அவர் தந்தை, குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணியாற்றிய இயக்குநர், நடிகர் நடிகைகள், அவர் காதலி, சினிமா பிரபலங்கள், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி போன்ற 35-க்கும் அதிகமானவர்களிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகப் பத்திரிகையாளரும் பாலிவுட் திரைப்பட விமர்சகருமான ராஜீவ் மசந்திடம் நேற்று தொடர்ச்சியாக சுமார் 8 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர் மும்பை போலீஸார்.
நடிகர் சுஷாந்தின் மறைவுக்குப் பிறகு விமர்சகர் மசந்த் மீது இணையத்தில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மசந்த், வாரக் கட்டுரை ஒன்றில் சுஷாந்தை கண்மூடித்தனமாக அவமானப்படுத்தித் துன்புறுத்தியதாகப் பலர் சுட்டிக்காட்டியிருந்தனர். அதனால் ராஜீவ் மசந்திடம் விசாரணை நடைபெற்றுள்ளது. அப்போது சுஷாந்தின் மனஅழுத்தம் தொடர்பாகவும் அவரது படத்துக்கு மசந்த் அளித்த மதிப்பீடுகள் மற்றும் சில கிசுகிசு கட்டுரைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விசாரிக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக சுஷாந்துக்கு மனநல ஆலோசனை வழங்கிய மருத்துவரின் வாக்குமூலத்தையும் காவலர்கள் பதிவு செய்துள்ளனர். ``சுஷாந்த் இறப்பு விவகாரம் தொடர்பாக அவருக்கு மனநல ஆலோசனை வழங்கிய நிபுணர்களிடம் கடந்த இரண்டு, மூன்று நாள்களாக விசாரணை நடத்தப்பட்டு அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று துணை போலீஸ் கமிஷனர் அபிஷேக் திரிமுக் கூறியுள்ளார்.