Published:Updated:

``ஈரான் பெண்களின் தைரியத்தைப் பார்த்து வியக்கிறேன்'' - நடிகை பிரியங்கா சோப்ரா ஆதரவு

Priyanka Chopra

ஈரான் பெண்களின் போராட்டத்துக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் சுவீடன் எம்.பி சுவீடன் பாராளுமன்றத்தில், ``பெண்கள், வாழ்வு, விடுதலை" என்று முழக்கமிட்டு தனது முடியை வெட்டினார்.

``ஈரான் பெண்களின் தைரியத்தைப் பார்த்து வியக்கிறேன்'' - நடிகை பிரியங்கா சோப்ரா ஆதரவு

ஈரான் பெண்களின் போராட்டத்துக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் சுவீடன் எம்.பி சுவீடன் பாராளுமன்றத்தில், ``பெண்கள், வாழ்வு, விடுதலை" என்று முழக்கமிட்டு தனது முடியை வெட்டினார்.

Published:Updated:
Priyanka Chopra

கடந்த செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இருந்தே, ஈரானில் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஈரானியப் பெண்கள் பலரும், ஹிஜாப் அணியாமலும் தங்கள் முடியை வெட்டியும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் போராட்டம் அனைத்தும், மாசா ஆமினி என்னும் ஒற்றைப் புள்ளியில்தான் தொடங்கியது. மாசாஆமினி என்னும் 22 வயது பெண், தன் குடும்பத்துடன் ஈரானின் தலைநகரமான டெஹ்ரானுக்கு சென்றபோது, அவருக்கு அந்தக் கொடூர சம்பவம் நடந்தது.

நம்மூரில் போலீஸார் இருப்பதுபோல் ஈரான் போன்ற சில நாடுகளில் போலீஸார் மட்டுமல்லாமல், `Morality Police'-ம் அரசாங்கத்தால் பணி அமர்த்தப்படுவர். இந்தக் காவலர்களின் வேலையே தங்களது மதத்தையும், மதம் சம்பந்தமான நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் காப்பதுதான்.

Iran protest
Iran protest
static.euronews.com

மாசா ஆமினி, தன் தம்பியுடன் ஈரான் தலைநகரான டெஹ்ரானில் ஷாப்பிங் சென்றபோது, அவர் ஹிஜாபை தளர்வாக அணிந்துள்ளார் என்பதற்காக அவரை இந்த மொராலிட்டி போலீஸார் கைது செய்தனர். ஈரானில் ஹிஜாப் அணியாததற்கும் அல்லது தளர்வாக அணிவதற்கும் கைது செய்வது வழக்கமானது.

இப்படி மாசா ஆமினியைக் கைது செய்து அழைத்துச் சென்றபோது, மொராலிட்டி போலீஸார் அவரின் தலையில் அடித்ததாகவும், அவரின் தலையை வாகனத்தில் மோதியதாகவும் கூறப்படுகிறது. இதன் விளைவால், மாசா ஆமினி மூன்று நாள்கள் கோமாவில் இருந்து, கடந்த செப்டம்பர் 16-ம் தேதி இறந்துவிட்டார்.

மாசா ஆமினி, தன் சிறு வயதில் செய்த மூளை சம்பந்தமான அறுவை சிகிச்சையால் அவரால் ஹிஜாபை இறுக அணிய முடியாது என்று, அவரின் குடும்பத்தினர் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஆனால்,  ஈரான் போலீஸார், `அவர் மாரடைப்பால் இறந்தார்' என்கின்றனர். மாசா ஆமினியின் இறப்பையடுத்து ஈரானில் பெண்கள் ஹிஜாபை பொதுவிடங்களில் கழற்றி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். சில பெண்கள் தங்களது கூந்தலை வெட்டியும் எதிர்ப்பைக் காண்பித்தனர். மாசா ஆமினி மரணத்தையடுத்து ஈரானில் கலவரங்கள் மற்றும் போலீஸாரால் துப்பாக்கிச் சூடுகளும் நடந்தன.

Iran protest
Iran protest
media.npr.org

இப்படி ஆடை சுதந்திரக்காகத் தற்போது போராடி வரும் இந்த ஈரானின் முகம், 1978-ம் ஆண்டுக்கு முன்பு வேறானது. 1978-ம் ஆண்டு ஈரானிய புரட்சி நடப்பதற்கு முன்னர் ஈரானில் மேற்கத்திய பாணி பரவலாக இருந்து வந்தது. அப்போது ஆண்களும் பெண்களும் ஏறத்தாழ சமமாக இருந்தனர். மேலும் அப்போது ஹிஜாப் அணிவது கட்டாயமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் போராட்டத்தைத் தொடர்ந்து உலகநாடுகளைச் சேர்ந்த பல பெண்கள் தங்களது கூந்தலை வெட்டி, அதை இணையத்தில் வெளியிட்டு ஈரான் பெண்களது போராட்டத்துக்கு வலுசேர்த்தனர். இந்த எதிர்ப்புக்கு மேலும் வலுசேர்க்கும்வகையில் சுவீடன் எம்.பி, கடந்த புதன்கிழமை, ஈரான் பெண்களுக்கு ஆதரவாக சுவீடன் பாராளுமன்றத்தில், ``பெண்கள், வாழ்வு, விடுதலை" என்று முழக்கமிட்டு தன் முடியை வெட்டி ஈரான் பெண்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

priyanka chopra
priyanka chopra
instagram.com/priyankachopra/

இந்நிலையில் நேற்று, நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``திணிக்கப்பட்ட அமைதிக்கு பிறகான குரல்கள் எரிமலைபோல் வெடிக்கும். அவற்றைத்  தடுக்க முடியாது. உங்களது (ஈரானிய பெண்கள்)  தைரியத்தைப் பார்த்து வியக்கிறேன். உங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து, ஆணாதிக்க சமுதாயத்தை எதிர்த்து மற்றும் உங்கள் உரிமைக்காகப் போராடுவது எளிதல்ல. நாம் அனைவரும் அவர்களின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும். மேலும் அவர்களுடன் இணைய வேண்டும். நான் உங்களுடன் இருக்கிறேன். பெண்கள், வாழ்க்கை, விடுதலை" என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது #WomanLifeFreedom என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது.