Published:Updated:

`அந்த நொடியிலும் ஒரு பெண்ணைக் காப்பாற்றினார் கிருஷ்ணா!' -விபத்தை விவரிக்கும் `இந்தியன் 2' படக்குழு

கிருஷ்ணா
கிருஷ்ணா

ஷூட்டிங் ஸ்பாட்டில், கிருஷ்ணா மற்றும் மது ஆகியோருடன் நெருங்கிப் பழகிய ஆர்ட்டிஸ்ட் ஒருவர் நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

'இந்தியன் 2' படப்பிடிப்பின்போது நடந்த கோர விபத்தில், உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களின் இழப்பால் ஒட்டுமொத்த படக்குழுவும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

ஷூட்டிங் ஸ்பாட்டில், கிருஷ்ணா மற்றும் மது ஆகியோருடன் நெருங்கிப் பழகிய ஆர்ட்டிஸ்ட் ஒருவர் நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ``இந்தச் சம்பவம் குறித்துப் பேசினால், தயாரிப்பு தரப்பில் பிரச்னை வரும். எனவே, பெயர் குறிப்பிட வேண்டாம்" என்றவர்,

விபத்தில் உயிரிழந்த மது
விபத்தில் உயிரிழந்த மது

``ரொம்ப ஜாலியா நடந்துட்டு இருந்த படப்பிடிப்பு, யார் கண்ணு வெச்சாங்களோ தெரியல, இப்படி ஆகிருச்சு. ஷங்கர் சாருக்கு கால் உடைஞ்சிருச்சுனு தகவல் பரப்பறாங்க. அது தவறான தகவல். ஒரு ஸ்டன்டு மாஸ்டருக்குத்தான் கால் உடைஞ்சிருச்சு. நேற்று இரவு 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது.

`கிருஷ்ஷ்ணா...!?' கதறிய கமல்! 
இந்தியன்-2 விபத்தும், ஈ.வி.பி ஃபிலிம் சிட்டி திக்திக் பின்னணியும்

விபத்தில் இறந்த டெக்னீஷியன் சங்கரன், எல்லார்கிட்டயும் நல்லா பேசுவார். ரொம்ப நல்ல டைப். இந்த விபத்தில் இறந்த மது, எனக்கு ரொம்ப குளோஸ். ரொம்ப சின்னப் பையன். 25 வயசுதான் இருக்கும். புரொடக்‌ஷன்ல இருந்தார். எல்லாருக்கும் அவர்தான் சாப்பாடு, ஸ்னாக்ஸ் பரிமாறுவார். ரொம்பப் பாசமான பையன். துறுதுறுனு இங்கும் அங்கும் சுத்திக்கிட்டிருப்பார். அவர் வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆனாலும் புரொடக்‌ஷன்ல எல்லாரும் தேடுவாங்க. இனி அவர் இல்லாம ஷூட்டிங் ஸ்பாட் வெறிச்சோடித்தான் இருக்கும்.

கிருஷ்ணா
கிருஷ்ணா

அதே மாதிரி, கிருஷ்ணாவைப் போல ஒரு மனிதரைப் பார்க்க முடியாது. ஒவ்வொரு ஆர்ட்டிஸ்ட்கிட்டயும் அன்பா சொல்லிக் கொடுப்பார். அவர் கோபப்பட்டு நாங்க பார்த்ததே இல்ல. இந்தியன் 2 படத்துக்கான ஸ்டண்ட்மேன் உள்ளிட்ட சில கலைஞர்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருக்காங்க. அவங்க சொல்றது சிலருக்குப் புரியாது. இவர்தான் மொழிபெயர்த்து உதவி செய்வார். கொஞ்சம்கூட முகம் சுளிக்க மாட்டார். அவருக்கு கல்யாணம் ஆகி 4 வருஷம் ஆச்சு. பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் இளைய மகளைக் கல்யாணம் பண்ணியிருக்கார். ஒரு ஆண் குழந்தை இருக்கு. அவருக்கு நேர்ந்த சோகத்தை நெனச்சுப் பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.

சம்பவம் நடந்தப்போ, கிரேன் விழப்போவதைப் பார்த்த கிருஷ்ணா, அங்கிருந்த ஒரு துணை நடிகையோட கையைப் புடிச்சு தள்ளிவிட்டுட்டார். அவங்கள காப்பாத்திட்டு, இவர் மாட்டிக்கிட்டார். அந்த நடிகை, `அண்ணா நீங்களும் வந்துருங்கண்ணான்னு சொல்றதுக்குள்ள இப்படி நடந்துருச்சு'ன்னு சொல்லி அழுதுட்டே இருந்தாங்க. அவங்கள சமாதானப்படுத்தி நாங்கதான் ஆட்டோ ஏத்திவிட்டோம். அவங்க இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து வெளியில வரலை.

இந்தியன் 2
இந்தியன் 2

இந்தச் சம்பவம் நடந்த சமயத்துல, கிரேன், அதன் மேல இருந்த லைட் எல்லாம் ஃபிக்ஸ் பண்ணதுக்கு நேரா கமல் சார், காஜல், ஷங்கர் சார் எல்லாரும் நின்னுட்டு இருந்தாங்க. ஆனா, கிரேன் விழறதுக்கு சில நொடிகள் முன்னாடிதான் கொஞ்சம் நகர்ந்து போனாங்க.

ஆனாலும், கிரேன் விழுந்தப்போ கமல், காஜல் ஆகியோர் கீழே விழுந்துட்டாங்க. அவங்களைப் படக்குழு சேஃப் பண்ணிடுச்சு. எல்லாமே கண் இமைக்கும் நேரத்தில் நடந்துருச்சு. அதே மாதிரி கிரேனுக்கு மேலேயும் ஒரு டெக்னீஷியன் இருந்தார். அவர் வீடியோ கவர் பண்ண, கேமிராவை ரெடி பண்ணிட்டு இருந்தார். அவரும் கீழ விழுந்துட்டார். அவருக்கு லேசான காயங்கள் மட்டும்தான். ஒரு குடும்பமா, ஷூட்டிங் ஸ்பாட் கலகலப்பா இருந்துச்சு. இப்படி ஆகிருச்சு’’ என வேதனைநிறைந்த குரலில் பேசி முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு