Published:Updated:

‘‘விபத்துக்கு கமல்ஹாசன்தான் காரணமா?’’

இந்தியன்-2
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியன்-2

- இன்னும் ஓயாத ‘இந்தியன்-2’ சர்ச்சை

‘இந்தியன்-2’ படப்படிப்பில் ஏற்பட்ட திடீர் விபத்து, கமல்ஹாசனுக்கும் லைகா தயாரிப்பு நிறுவனத்துக்குமிடையே புகைந்து கொண்டிருந்த பிரச்னையை இன்னும் பெரிதாக்கியுள்ளது.

‘படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுமா என்பதே சந்தேகம்’ என்று செய்தி பரவ, கோடம்பாக்கம் பரபரக்கிறது.

இதுகுறித்து விவரமறிந்த வட்டாரத்தினரிடம் பேசியபோது, ‘‘சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ‘இந்தியன்-2’, ‘தலைவன் இருக்கின்றான்’ ஆகிய இரண்டு படங்களையும் திரைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதுதான் கமல்ஹாசனின் திட்டம். இப்போதைய சூழலைப் பார்த்தால் அது சாத்தியப்படாதுபோலிருக்கிறது. ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்பதுபோல் ‘இந்தியன்-2’ படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே பஞ்சாயத்துதான். ‘ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடிக்கவிருக்கிறேன்’ என்று 2017-ம் ஆண்டில் ‘பிக் பாஸ் 1’ நிகழ்ச்சியின் இறுதியில் அறிவித்தார் கமல்ஹாசன். தெலுங்குப் பட உலகின் முன்னணித் தயாரிப்பாளரான தில் ராஜுதான் இந்தப் படத்தைத் தயாரிக்கப்போவதாகச் சொல்லப்பட்டது.

ஆனால், லைகா நிறுவனம் இடையில் கட்டையைப் போட்டது. காரணம் ‘சபாஷ் நாயுடு’. லைகா தயாரிப்பில் இந்தப் படம் தொடங்கப்பட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இந்தச் சூழலில்தான், வீட்டில் தவறி விழுந்து கமல்ஹாசனின் கால் உடைந்தது. இதனால், ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு அப்படியே ரத்துசெய்யப்பட்டது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு லைகா நிறுவனம் சம்பளம் கொடுத்திருந்தது. அதனால், ‘இந்தியன்-2 படத்தை எங்கள் நிறுவனத்துக்குச் செய்துகொடுங்கள்’ என்றது லைகா.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதைத் தொடர்ந்து ‘இந்தியன்’ படத்தைத் தயாரித்த ஏ.எம்.ரத்னம், இரண்டாம் பாகத்தையும் முதல் பிரின்ட் அடிப்படையில் லைகா நிறுவனத்துக்குத் தயாரித்துக் கொடுப்பார் என்று ‘டீல்’ பேசப்பட்டது. ஆனால், கமல்ஹாசனுக்கு இதில் உடன்பாடில்லை. ‘லைகாவே தயாரிக்கட்டும்’ என்று கமல் சொல்ல,

ஏ.எம்.ரத்னத்திடம் சமரசம் பேசப்பட்டது. அதாவது, ‘இந்தியன்-2’ ரிலீஸாகும்போது தெலுங்கில் இந்தப் படம் என்ன விலைக்கு பேரம் பேசப்படுகிறதோ, அதைவிட ஐந்து கோடி ரூபாய் குறைவாக ஏ.எம்.ரத்னத்துக்கு தெலுங்கு உரிமையைக் கொடுப்பதாக லைகா உறுதிகொடுத்தது. அதன் பிறகே ‘இந்தியன்-2’-வை லைகாதான் தயாரிக்கப்போகிறது என முடிவானது.

இந்தியன்-2
இந்தியன்-2

எல்லாம் சுமுகமாகி ஷூட்டிங் தொடங்கிய சில வாரங்களுக்குப் பிறகு, கமல்ஹாசனுக்கும் லைகா நிறுவனத்துக்குமிடையே விரிசல் ஆரம்பித்திருக்கிறது. ‘சபாஷ் நாயுடு’வுக்காக வாங்கிய சம்பளம்போக ‘இந்தியன்-2’ படத்துக்காக சில கோடிகளை கமல்ஹாசன் சம்பளமாகக் கேட்டிருக்கிறார். இதைக் கொடுக்காமல் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்திருக்கிறது லைகா. ஒருகட்டத்தில், ‘ஷூட்டிங்குக்கே வர மாட்டேன்’ என்று கமல்ஹாசன் மறுக்க, அதன் பிறகே சம்பளப் பேச்சுவார்த்தை நடந்தது’’ என்கின்றனர் அவர்கள்.

‘இந்தியன்’ முதல் பாகத்தின் க்ளைமாக்ஸில், இந்தியன் தாத்தா கமல்ஹாசன் சீனாவிலிருந்து தொலைபேசியில் பேசுவதுபோல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதன் தொடர்ச்சியாக, ‘இந்தியன்-2’ சீனாவிலிருந்து தொடங்குவதுபோல் ஷூட்டிங் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவியதால், சீனா திட்டத்தை ரத்துசெய்துவிட்டு ஈ.வி.பி பிலிம் சிட்டியில் வேறு காட்சிகளைப் படமாக்கத் தொடங்கினர். இந்த நிலையில்தான் துரதிர்ஷ்டவசமாக விபத்து ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘`தயாரிப்பு நிறுவனத்தின் அலட்சியம்தான் விபத்துக்குக் காரணம்’’ என்று கமல்ஹாசன் குற்றம்சாட்ட, ‘‘இயக்குநர் ஷங்கரையும் உங்களையும் நம்பித்தான் நாங்கள் படப்பிடிப்பை ஒப்படைத்திருந்தோம். அதனால், விபத்துக்கு நீங்களும்தான் பொறுப்பு’’ என்று பதில் சொன்னது லைகா தரப்பு. இதற்கிடையே, ‘ஈ.வி.பி-யில் சண்டைக்காட்சிகள் பகலில்தான் படமாக்கப்பட்டிருக்க வேண்டும். கமல்ஹாசன் பகலில் கால்ஷீட் தராததால்தான் இரவில் படப்பிடிப்பு நடந்தது. இரவுப் படப்பிடிப்புக் காகத்தான் கிரேன்கள் பயன்படுத்த வேண்டியிருந்தது’ என, சமூகவலைதளத்தில் ஒரு தகவல் வைரலாகப் பரவிவருகிறது.

இதுகுறித்து கமல் தரப்பில் விசாரித்தோம். ‘‘இது முழுக்க முழுக்கப் பொய். கமல்ஹாசனுக்காக இரவில் படப்பிடிப்பு நடக்கவில்லை. நிறைய ஸ்டன்ட் கலைஞர்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டதால், பகலில் படப்பிடிப்பு நடத்துவதைவிட இரவில் நடத்துவது தான் சுலபம். அதனால்தான் இரவு நேரத்தில் படப்பிடிப்பை நடத்தினர். ஆனால், கமல்ஹாசனுக்காகத் தான் இரவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது என்ற பொய்யான செய்தியை யாரோ திட்டமிட்டுப் பரப்புகின்றனர்’’ என்று மறுக்கின்றனர்.

‘இந்தியன்-2’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்குமா, கமல்ஹாசன் - லைகா - ஷங்கர் என மூவரும் மீண்டும் இணைந்து படத்தை முடிப்பார்களா அல்லது ‘இந்தியன்-2’ வேறு தயாரிப்பு நிறுவனத்துக்கு கைமாறுமா என விடை தெரியாத பல கேள்விகள் எழுந்திருக்கின்றன.