கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

“தமிழ் சினிமாவில் நடிக்க பத்து வருஷம் காத்திருந்தேன்!”

ராணா
பிரீமியம் ஸ்டோரி
News
ராணா

ஆரம்ப நாள்கள்ல தமிழ்ல எனக்குத் தெரிஞ்ச ரெண்டு டைரக்டர்ஸ் இவங்கதான். நிறைய முறை பேசிட்டிருந்திருக்கேன்.

‘`லாக்டெளன் நேரத்துல நடந்த பெரிய நல்ல விஷயம், என் திருமணம். வாழ்க்கையோட அடுத்த நிலைக்குப் போயிருக்கேன். திருமணத்துக்கு உறவுகள் தாண்டி பெரிய நட்சத்திரங்கள் யாரையும் கூப்பிட முடியல. என் ஆபீஸ்லதான் கல்யாணம் நடந்தது. அங்கே நல்ல கார்டன் இருந்தது. நல்ல இடத்துல கல்யாணம் பண்ணணும்னு சொல்லுவாங்க. இங்கேதான் என் படத்துக்கான எல்லா வேலைகளும் நடந்துட்டு இருக்கு. இதைவிட நல்ல இடம் வேற எது? அதனால, அங்கேயே கல்யாணத்தை முடிச்சிட்டேன். வாழ்க்கை சூப்பரா போயிட்டு இருக்கு’’ என்கிறார் நடிகர் ராணா.

`` ‘காடன்’ பற்றிச் சொல்லுங்க?’’

“என் கரியர் ஆரம்பிச்சப்போ முதல் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் சார். அப்போ இருந்து எப்படியாவது தமிழ்ல நடிக்கணும்னு முயற்சி பண்ணுனேன். ஏன்னா, ரொம்ப தனித்துவமானது தமிழ் சினிமா. பிரபு சாலமன் மாதிரியான டைரக்டர்லாம் எங்கேயும் கிடைக்க மாட்டாங்க. கடந்த பத்து வருஷமா தமிழ்ல நல்ல படம் பண்றதுக்கு ஆர்வமா இருந்தேன். அடிக்கடி சென்னை வந்துட்டு போயிட்டு இருக்கேன். இதுக்கு இடையில இந்தி, தெலுங்கு சினிமாலாம் பண்ணிட்டேன். சொல்லப் போனா பிரபுசாலமனை ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடியே சந்திச்சிருக்கேன். ஆனா, அப்போ படம் பற்றிப் பேசல. இப்போ தயாரிப்பு நிறுவனம் ஈராஸ் மூலமா பிரபு சாலமன் சாரைப் பார்த்துக் கதை கேட்டேன். ‘காடன்’ படத்துல கேரக்டர் இப்போ ரொம்ப முக்கியமான ஒண்ணு. நிறைய அட்வெஞ்சர்ஸ் மற்றும் ஆக்‌ஷன்லாம் கதையில இருக்கும். இதையெல்லாம் தாண்டி, காடுகள் மற்றும் யானைகள் பற்றித் தெரிஞ்சிக்க முடிந்தது. சூழலைக் கெடுத்துட்டு நாம வாழ்ந்துட்டு இருக்கோம்னு புரிஞ்சது. கிட்டத்தட்ட 25 வருஷத்துக்கு மேல காடுகள்ல வாழ்ந்த ஒரு ரியல் ஹீரோவை இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டு கதையை பிரபு சாலமன் எழுதியிருந்தார். ஆறு காடுகள்ல 11 யானைகளை வெச்சிட்டு படத்தோட ஷூட்டிங்கை முடிச்சிருக்கோம்’’

ராணா
ராணா

``தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஷாட் எடுத்தப்போ எப்படி உணர்ந்தீங்க?’’

‘‘ரொம்ப கஷ்டப்பட்டேன். இருந்தாலும் இந்தப் படத்துக்கு இது அவசியம். தமிழக மற்றும் ஆந்திர மக்கள் வாழ்க்கைமுறையில நிறைய ஒற்றுமைகள் இருக்கும். வட இந்தியா வேற மாதிரி. அதனால், இந்தியில காட்டுறப்போ இன்னும் வித்தியாசமா இருக்கும். அதுக்காக, மூணு மொழிகளுக்கும் தனித்தனியா சீன்ஸ் எடுப்போம். தமிழ் மற்றும் தெலுங்குல நானும், விஷ்ணுவும் இருப்போம். இந்தி போறப்போ என்கூட ஹூசைன் இருப்பார். தமிழ்ல நானே டப்பிங் பேசியிருக்கேன். சின்ன வயசுல தமிழ் சரளமா பேசிட்டு இருந் தேன். ஹைதராபாத் வந்ததுக்குப் பிறகு கொஞ்சம் டச் விட்டுருச்சு.’’

``விஷ்ணு விஷால்கூட நடிச்சது எப்படியிருந்தது?’’

“ரொம்ப நல்ல மனுஷன். ஷூட்டிங் லொகேஷனுக்குப் போன உணர்வை படம் கொடுக்கல. விடியற்காலை நேரத்துல காட்டுக்குள்ள போயிட்டா ஈவினிங் கிளம்ப ஏழு மணி ஆகிரும். இடையில எந்த நெட்வொர்க்கும் காட்டுக்குள்ள எடுக்காது. நானும், விஷ்ணுவும் ஸ்டூடன்ட் மாதிரிதான் இருந்தோம். ‘எங்க ஸ்கூல் காடு, எங்க வாத்தியார் பிரபு சாலமன்’னு சொல்லலாம்.’’

ராணா
ராணா

``யானைகள்கூட எப்படிப் பழகுனீங்க?’’

‘‘ரொம்ப ஸ்பெஷலான அனுபவம். ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி பத்து நாள் பயிற்சிக்காக தாய்லாந்து போனேன். பூனை, நாய்கூட பழகிருப்போம். ஆனா, இங்கே யானைகள்கூடப் பழகினது வேற மாதிரியான அனுபவம் கொடுத்தது. யானை ஒரு மணிநேரத்துல நம்மகிட்ட பழகிரும். குழந்தை மாதிரினு சொல்லலாம். யானைகிட்ட ஒரு ஆப்பிள் கொடுத்தேன். சாப்பிடாம ஏதோ பந்துன்னு நினைச்சிட்டு திரும்பக் கொடுத்திருச்சு. ‘ஆப்பிள் கெடாம இருக்க மேல மெழுகு ஒட்டியிருப்பாங்க. அதை சீவிட்டுக் கொடுங்க, சாப்பிடும்’னு பிரபு சார் சொன்னார். மெழுகைச் சுரண்டிட்டுக் கொடுத்தேன். உடனே வாங்கிருச்சு. யானைக்குத் தெரியும், எது ஒரிஜினல்னு. நமக்கு இதெல்லாம் தெரியாது. யானைகள்கூட இயற்கையான ஒரு பயணத்தைப் படத்துல பார்க்கலாம்.’’

`` ‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்?’’

‘‘மலையாளத்துல படம் பார்த்தேன். ரொம்ப நல்ல ஸ்டோரி. திரைக்கதை வடிவமைப்பும் நல்லாருந்தது. இந்த மாதிரியான படம் பண்ணணும்னு நினைச்சிட்டு இருந்தேன். சரியான நேரத்துல தெலுங்கு ரைட்ஸ் வாங்கினாங்க. என்னை நடிக்கக் கேட்டாங்க. உடனே ஓகே சொல்லிட்டேன். பிஜு மேனன் கேரக்டரில் ராம் சரணும் ப்ரித்வி ராஜ் கேரக்டரில் நானும் பண்றோம். தெலுங்கு ஆடியன்ஸுக்கு ஏத்த மாதிரியான வசனங்கள்ல படத்தை உருவாக்கியிருக்காங்க.’’

ராணா
ராணா

``உங்கள் ஃபேவரைட் ஹீரோவா... இல்ல, வில்லனா?’’

‘‘எப்போவும் குட் பாய்னு இருந்தா எனக்கு போர் அடிக்கும். ‘ரொம்ப நல்ல பையன், எந்த வம்புக்கும் போக மாட்டார். தப்பைத் தட்டிக் கேட்பார்’னு இருந்தா கடுப்பா இருக்கும். இந்த மாதிரியான கதைகளைக் கேட்கவே மாட்டேன். வாழ்க்கையில பல தரப்பட்ட கேரக்டர்ஸ் இருக்கும். கேரக்டருடைய பயணம் பிடிச்சிருந்தா ஹீரோ அல்லது வில்லன் எதுவா இருந்தாலும் ஓகே சொல்லிருவேன்.’’

``தமிழ் சினிமால யாரைப் பிடிக்கும்?’

‘‘எல்லாமாகவும் இருக்குற கமல் சார்தான். அவர்கிட்ட இருந்துதான் சினிமாவைக் கத்துக்கிட்டேன். அவரை ரொம்ப ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுல இருந்து அவருடைய படங்களைப் பார்த்து வளர்ந்தவன். என் ஃபேவரைட் ஹீரோ அவர்தான்.’’

``ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு கேரக்டர்ல நடிச்சிருந்தீங்களே?’’

‘‘ஆமா. என்.டி.ஆர் பயோபிக்ல சந்திரபாபு நாயுடுவா நடிச்சிருந்தேன். படம் பண்றதுக்கு முன்னாடியே ஒருநாள் முழுக்க இவர்கூட இருக்குறதுக்கு அனுமதி கொடுத்தார். அவருடைய சில உடல்மொழிகளை எல்லாம் கவனித்தேன். இளவயது சந்திரபாபு கேரக்டர்லதான் பண்ணியிருந்தேன். ‘பாகுபலி’ முடிச்ச கையோட இந்த கேரக்டருக்குக் கமிட்டாகியிருந்தேன். படத்தோட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படம் பார்த்துட்டு, ‘ரொம்ப நல்லா பண்ணியிருக்கே’ன்னார்.’’

``செல்வராகவன் மற்றும் கெளதம் மேனன் படங்கள்ல நடிக்க ஆசைன்னு சொல்லி யிருக்கீங்களே?’’

‘‘ஆரம்ப நாள்கள்ல தமிழ்ல எனக்குத் தெரிஞ்ச ரெண்டு டைரக்டர்ஸ் இவங்கதான். நிறைய முறை பேசிட்டிருந்திருக்கேன். ஆனா, சில படங்கள் அமையல. இருந்தும் நல்ல ப்ரெண்ட்ஸ். ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்துல சின்ன கேமியோ பண்ணிட்டேன். பார்ப்போம்.’’