Published:Updated:

‘ஐ.டி விங்தான் அரசியல்னு ஆகிப்போச்சு!’ - விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி
பிரீமியம் ஸ்டோரி
விஜய் சேதுபதி

விஜய் சார் சாதாரண விஷயம்கூட பெருசா பேச மாட்டார். ‘ஏன் சார், பேசவே மாட்டேங்கிறீங்க’ன்னுகூட கேட்டுட்டேன். அவர் இயல்பு அப்படி.

‘ஐ.டி விங்தான் அரசியல்னு ஆகிப்போச்சு!’ - விஜய் சேதுபதி

விஜய் சார் சாதாரண விஷயம்கூட பெருசா பேச மாட்டார். ‘ஏன் சார், பேசவே மாட்டேங்கிறீங்க’ன்னுகூட கேட்டுட்டேன். அவர் இயல்பு அப்படி.

Published:Updated:
விஜய் சேதுபதி
பிரீமியம் ஸ்டோரி
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி வசம் ஏராளமான படங்கள் என்பதால் ஏற்கெனவே ஆள் பிஸி. லாக்டௌன் தளர்வுக்குப் பிறகு படப்பிடிப்புகளில் இன்னும் பிஸி. புத்தாண்டு விடுமுறைகூட இல்லாமல் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தவரைச் சந்தித்தேன்.

``திரைத்துறைக்கு விஜய்சேதுபதி வந்து பத்து வருடங்கள். எப்படி உணர்கிறீர்கள்?’’

“கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷன்ல ‘காக்கா முட்டை’ மணிகண்டன் கேமராவுக்கு முன்னால் டிசம்பர் 24, 2009-ம் வருஷம் குறும்படம் நடிச்சிட்டிருக்கேன். அப்போ, ‘அப்பாவுக்கு உடம்பு முடியலை. உடல் சில்லுன்னு ஆகிடுச்சு’ன்னு அம்மாகிட்ட இருந்து போன். எனக்கு அன்னைக்கு நிலைகொள்ளலை. மறுநாள் அப்பா இறந்துட்டதா டாக்டர் உறுதிப்படுத்திட்டார். நான் எதிர்பார்க்கவே இல்லை... அதே டிசம்பர் 24, அடுத்த வருஷம் என் முதல் படம் வெளியாகும்னு.

‘ஐ.டி விங்தான் அரசியல்னு ஆகிப்போச்சு!’ - விஜய் சேதுபதி

இப்போதான் சினிமாவைக் கத்துக்கிட்டிருக்கேன். அதனால, பத்து வருஷம்கிறதை பெரிசாப் பார்க்கலை; கொண்டாடவும் விரும்பலை. இப்போதான் கதாபாத்திரமெல்லாம் புரிய ஆரம்பிக்குது. அறிவு வந்திருக்கு. இன்னும் ஆழமா வேலை பார்க்க ஆரம்பிச்சிருக்கேன். என் ரசிகர்களும் இந்தப் பத்தாம் ஆண்டைக் கொண்டாடணும்னு சொன்னாங்க. ‘வேண்டாம்டா, இதைக் கொண்டாடிட்டா மனசு திருப்தி அடைஞ்சிரும். நான் திருப்தி அடைய விரும்பலை’ன்னு சொல்லிட்டேன். ஏன்னா, என்னோட ஆத்தா என்னை ஒரு முறைதான் பெத்தா. ஆனா, கலை என்னை ஒவ்வொரு முறையும் பெத்துக்கிட்டே இருக்கு. இத்தனை விதவிதமான மனிதர்களா மாறி சிந்திக்க முடியும், உணர்வுகளை உள்வாங்க முடியும்கிறது எல்லாருக்கும் கிடைக்குற வரம் கிடையாது. சும்மா டயலாக்ஸ் பேசிச் சிரிச்சா நடிப்புன்னு சிலபேர் நினைக்கிறாங்க. ஆத்மார்த்தமா மனிதர்களைத் தொடுறதுதான் நடிப்பு. அதைத்தான் பழகிக்கிட்டிருக்கேன்!”

`` ‘மாமனிதன்’ - உங்கள் குருநாதர் சீனு ராமசாமியுடன் இணையும் நான்காவது படம். வேறு என்ன ஸ்பெஷல்?’’

“சீனு ராமசாமி தெளிவான ஸ்க்ரிப்ட் ரைட்டர். அதை இந்தப் படம் இன்னும் அழுத்தமா நிரூபிக்கும். ஒரு படத்தை அரைகுறையா ஆரம்பிக்கவே மாட்டார். நிறைய முறை சண்டை போட்டிருக்கோம். சண்டை போட்டதைவிட நிறைய முறை கட்டியும் பிடிச்சிருக்கோம். விலகியிருந்தாலும் எங்களுக்குள்ள எந்த இடைவெளியும் இதுவரை இருந்ததில்ல. தான் கண்ணியமான படைப்புகள் மட்டுமே எடுத்துக்கிட்டே இருக்கோம்னு பெருமைப்படுற மனுஷன் அவர். ‘தென்மேற்குப் பருவக்காற்று’ பட ஷூட்டிங் முடிச்சிட்டுப் போறப்போ, ‘என் நிலைமை எப்படியிருந்தாலும் சரிடா... சாராய வியாபாரம் பண்ணிப் பொழைக்க மாட்டேன். கடைசி வரைக்கும் இளநீர் வியாபாரம்தான்டா பண்ணுவேன்’னார். அதுதான் அவர்!

‘ஐ.டி விங்தான் அரசியல்னு ஆகிப்போச்சு!’ - விஜய் சேதுபதி

சீனு ராமசாமி சார் ‘மாமனிதன்’ கதையைச் சொன்னப்போ ரொம்பப் பிரமாதமா இருந்தது. வேற தயாரிப்பு நிறுவனங்களுக்கான முயற்சிதான் நடந்துகிட்டிருந்தது. ஒருநாள் யுவன் ஷங்கர் ராஜா, ‘எங்க கம்பெனிக்கு ஒரு படம் பண்ணித் தர்றீங்களா? நான், அப்பா, அண்ணன் மூணுபேரும் அந்தப் படத்துக்கு இசையமைக்கப்போறோம்’னு சொன்னப்போ, அந்தப் பெருமை சீனு சாருக்கும் அந்தக் கதைக்கும் போய்ச் சேரணும்னு நினைச்சேன். மாமனிதர்கள் இணையக்கூடிய இந்தப் படத்துக்கு ‘மாமனிதன்’ ரொம்பவே பொருத்தமான தலைப்பு. இது கணவன் - மனைவிக்கு இடையிலான புரிதல் பற்றிய, பொறுப்பான தகப்பன் பற்றிய, நல்ல குடும்பத்தலைவன் பற்றிய அழகான படம்.

ஹீரோயினா காயத்ரி நடிச்சிருக்காங்க. திறமையான நடிகை. ஆனா, இன்னும் காயத்ரி திறமை பெருசா வெளியே தெரியாம இருக்குறது வருத்தமான விஷயம். படம் முடிச்சிட்டு சீனு சார், ‘கொஞ்சம் விட்டிருந்தா, நீ படத்துல இருக்கேன்னு தெரியாத அளவுக்கு பண்ணியிருப்பாங்கடா’ன்னார். கஞ்சா கருப்பு அண்ணனும் குரு சோமசுந்தரம் சாரும் நடிச்சிருக்காங்க.”

‘ஐ.டி விங்தான் அரசியல்னு ஆகிப்போச்சு!’ - விஜய் சேதுபதி

``முக்கியமான விஷயத்தைச் சொல்லலையே, இளையராஜா இசை..?’’

“ஹையோ... அது அனுபவம் இல்லை, ஆசீர்வாதம்! படத்துக்கு ஒப்பந்தமாகும்போது வீட்டுல சந்திச்சேன். அப்போ ஒரு பேச்சு பேசினார், ஞானிதான்! ‘அன்னக்கிளி பாடல்கள் வெளியானபிறகு கொண்டாடினாங்க. ஆனா அதுக்கு முன்னாலயே அதுக்கான ரசிகர்கள் உருவாகிட்டாங்க என்பதுதான் உண்மை. அதேமாதிரிதான் விஜய்சேதுபதிங்கிற கலைஞன் உருவாகிறதுக்கு முன்னாலயே அதுக்கான ரசிகர்கள் உருவாகிட்டாங்கன்னு அர்த்தம்’னு சொன்னார். ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது!”

`` ‘மாஸ்டர்' பட ஷூட்டிங்கின்போது விஜய் அரசியல் குறித்து ஏதாவது பேசியிருக்காரா?’’

“அட, நீங்க வேற! விஜய் சார் சாதாரண விஷயம்கூட பெருசா பேச மாட்டார். ‘ஏன் சார், பேசவே மாட்டேங்கிறீங்க’ன்னுகூட கேட்டுட்டேன். அவர் இயல்பு அப்படி. என் அம்மா விஜய் சாரைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டாங்க. எனக்கே அது ஆச்சர்யமாத்தான் இருந்துச்சு. ஷூட்டிங் ஸ்பாட் கூட்டிவந்து, அவருடன் போட்டோ எடுக்கவெச்சேன். ‘என் பையன் ஒழுங்கா வேலை பார்க்கிறானா’ன்னு அம்மா கேட்டாங்க. அவங்க மனசு குளிருற அளவுக்குப் பேசிட்டார். விஜய் சார், ரொம்ப நன்றி சார்!”

‘ஐ.டி விங்தான் அரசியல்னு ஆகிப்போச்சு!’ - விஜய் சேதுபதி

`` ‘800' பட சர்ச்சைகள் பற்றி..?’’

“கடையை மூடியாச்சு. அவங்கவங்க வேலையைப் பார்க்கலாம். என்ன சொன்னாலுமே சிலருக்குப் புரியாது. சமூகத்துக்கு நெகட்டிவிட்டி மேல பெரிய ஈர்ப்பு வந்திருச்சு. புரிய வைக்க முயற்சி பண்ணினாலும் முடியலை. முத்தையா முரளிதரன் சார்கிட்ட, ‘இந்தப் பிரச்னையில் சிலர் குளிர்காய ஆரம்பிக்குறாங்க சார். அதுக்கு நாம இடம் கொடுக்க வேண்டாம்’னு சொன்னேன். உட்கார்ந்து பேசி முடிவெடுத்தோம். இனி யாரை எப்படிக் கையாளணும்னு கத்துக்கிறதுக்கான ஒரு பாடம் கிடைச்சது, அவ்வளவுதான்!”

‘ஐ.டி விங்தான் அரசியல்னு ஆகிப்போச்சு!’ - விஜய் சேதுபதி

``வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை வாக்காளரா எப்படிப் பார்க்குறீங்க?’’

“ரொம்ப முக்கியமான தேர்தலாகப் பார்க்குறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, மக்கள் மனசுல இடம் பிடிக்குறதுக்கு நிறைய பேர் நிறைய வேலைகள் செஞ்சிருக்காங்க. அவங்கவங்களுக்கு ஒரு ஐ.டி விங் வெச்சிக்கிட்டு சமூக வலைதளங்களில் செய்தியைப் பரப்புறதையே தொழிலா வெச்சிக்கிட்டு இருக்காங்க. என்ன வேணும்னாலும் சொல்லி மக்களை மயக்க முடியும், எதை வேணும்னாலும் நம்ப வைக்க முடியும்னு நிறைய முயற்சிகள் எடுத்திருக்காங்க. அந்த முயற்சிகளின் பலன் என்னன்னு இந்தத் தேர்தல்தான் சொல்லும்னு நம்புறேன்.

கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்தப்போ மக்கள் இவ்வளவு தூரம் அரசியலைக் கூர்ந்து கவனிக்கலைன்னு நினைக்கிறேன். ஏன்னா, ‘அவங்க எல்லாத்தையும் பார்த்துக்குவாங்க’ அப்படிங்கிற நம்பிக்கை இருந்தது. ஆனா இந்த அஞ்சு வருஷத்தில் மக்கள் எல்லாத்தையும் ரொம்ப கூர்ந்து கவனிக்க ஆரம்பிச்சிருக்காங்க. தேர்தலில் மக்களுடைய மனநிலை என்னன்னு தெரிஞ்சிக்குற ஆர்வத்துல இருக்கேன். நானும் எல்லாத்தையும் கூர்ந்து கவனிக்குறேன்.’’

‘ஐ.டி விங்தான் அரசியல்னு ஆகிப்போச்சு!’ - விஜய் சேதுபதி

`` ‘மாநகரம்' படத்தோட இந்தி ரீமேக்ல என்ன ரோல் பண்றீங்க?’’

“முனீஸ்காந்த் தமிழில் நடிச்ச ரோல் பண்றேன். படத்துல இந்த கேரக்டர் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அப்பாவித்தனமான கேரக்டர். அப்பாவித்தனம் வாழ்க்கையில் முக்கியமான விஷயம். ‘செக்கச்சிவந்த வானம்’ பட ஷூட்டிங்கின்போது சந்தோஷ் சிவன் சார் நல்ல பழக்கம். அவர் டைரக்‌ஷன்ல நடிக்குறதும் நல்ல விஷயம். அவர்தான் எனக்கு இந்த கேரக்டர் செலக்ட் பண்ணினார்.’’

``ஹீரோ, வில்லன், கேரக்டர் ரோல்னு எல்லாமே பண்றீங்க. இதனால ஹீரோ இமேஜுக்கு ஏதாவது பாதிப்பு வரும்னு எப்போதாவது நினைச்சது உண்டா?’’

“விஜய் சேதுபதி ஒரு நடிகர், அவ்வளவுதான். ஏதாவது ஒரு இமேஜுக்குள்ள சிக்கிட்டா சிந்தனை சிறைப்பட்டுப்போயிடும். எத்தனையோ கேரக்டர்களில் நடிச்சுட்டேன். ‘ஜானு, ஒண்ணு சொல்லட்டுமா?’ன்னு கேட்ட ‘96’ ராமா நடிச்சுட்டேன். ‘சூப்பர் டீலக்ஸ்’ திருநங்கை கேரக்டர் பண்ணிட்டேன். அவ்வளவு ஏன், ‘ஓ மை கடவுளே’ படத்தில் கடவுளாகவும் நடிச்சிட்டேன். விதவிதமான கேரக்டர்களுக்கு உள்ளே போய் அதுவா மாறி நடிக்கிறது பெரிய பாக்கியம். ஹீரோ இமேஜுக்காக அதை நான் இழக்கத் தயாராயில்லை. எனக்கு எந்த இமேஜும் முக்கியமில்லை!”

“ ‘லாபம்’ ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து ஸ்ருதிஹாசன் வெளியேறிட்டாங்க, பிரச்னைன்னு செய்திகள் வந்ததே?”

“எந்தப் பிரச்னையும் இல்லை. அவங்களுக்கு கோவிட் பற்றிய பயம் வந்ததால்தான் போனாங்க. எங்களுக்கு அவங்கமேல் எந்த வருத்தமும் இல்ல. அதுக்குப் பிறகு நாங்க யாருமே ஸ்ருதியைத் தொடர்புகொண்டு தொந்தரவு கொடுக்க விரும்பலை. முதல் ஷெட்யூலில் ஸ்ருதி நல்லாவே ஒத்துழைப்பு கொடுத்தாங்க. ரொம்பப் பிரமாதமா வேலை செஞ்சாங்க. ஆனா, கடைசியில அவங்களுக்கு கோவிட் பயம் வந்திருச்சு. அவங்களைப் பொறுத்தவரைக்கும் அவங்க எடுத்த முடிவு சரிதான். கடைசி ரெண்டு நாள் ஷூட்டிங் இருந்தது. ஸ்ருதி இல்லாததால் அதுக்கேற்றபடி கதையில் சில மாற்றங்கள் செஞ்சுக்கிட்டோம்!’’

``மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்'?’’

“என் பையனும் நானும் சமந்தா ரசிகர்கள். இன்னும் சொல்லப்போனால் எங்க குடும்பமே சமந்தா ரசிகர்கள்தான். அந்த சமந்தாவுடன் இந்தப் படத்தில் நடிக்கிறதில் சேது ஹேப்பி அண்ணாச்சி!

விக்னேஷ் சிவன் ரொம்ப அற்புதமா கதை எழுதியிருக்கார். அவர்கூட வேலை பார்த்த அனுபவம் என் மண்டையை விட்டு இன்னும் போகல. விக்னேஷ் சிவன் ரைட்டிங், பார்க்குறதுக்கு சிம்பிளாத் தெரியும். ஆனா, நடிக்கிறது ரொம்பக் கஷ்டம். ‘நானும் ரெளடிதான்’ எத்தனை பேருக்கு சிம்பிளா தெரிஞ்சதுன்னு தெரியல. ஆனா நான் நடிக்க ரொம்பக் கஷ்டப்பட்டேன். படம் பார்த்தப்போதான் அதன் அர்த்தம், சந்தோஷம் தெரிஞ்சது. அதே மாதிரி ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஸ்க்ரிப்ட் படிச்சிட்டு ரொம்ப இம்ப்ரஸ் ஆகிட்டேன். படத்தோட அடிநாதம் பிரமாதமா இருந்தது. ‘டேய் விக்கி, பிச்சிட்டடா’ன்னு போன்ல சொன்னேன். என் கோடி முத்தங்கள் அவனுக்கு சமர்ப்பணம்!’’

``எம்.ஆர்.ராதா பயோபிக்ல நீங்க நடிச்சா நல்லாருக்குணும்னு இயக்குநர் வசந்தபாலன் ஆனந்த விகடனில் சொல்லியிருந்தார். உங்களுக்கு இப்படி ஏதாவது ஆசையிருக்கா?’’

‘‘பெரியார், புத்தர், அம்பேத்கர், கண்ணதாசன் இவங்க பயோபிக்ல நடிக்கணும்னு ஆசையிருக்கு. ஆனா, என் மூஞ்சி செட் ஆகுமான்னு தெரியாது. இவங்க பயோபிக்ல நடிச்சுக் கிழிப்பேனான்னும் தெரியாது. ஆனா, இவங்க சிந்திச்ச வழியில போயி நல்ல விஷயத்தைச் சொல்றதுல இவங்களைத் தொடுற உணர்வு இருக்குன்னு நினைக்குறேன். சில புத்தகங்கள் படிக்குறப்போ அந்தப் பார்வை வழியா உலகத்தை அணுகுவோம். புத்தகத்தை எழுதியவர் சிந்தனையில இருந்து புரிஞ்சிக்குறது எவ்வளவு முக்கியமோ, அதே மாதிரி இந்தப் பெருந்தலைவர்களுடைய ஆழத்துல போயிட்டு ஒரு விஷயத்தை சொல்றப்போ இவங்களே நமக்குள்ள வர மாதிரியான உணர்வு இருக்கும். யாராவது சிறப்பா ஸ்கிரிப்ட் எழுதி அதில் எனக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைச்சா அது பெரிய விஷயம்!’’

“ ‘இடம் பொருள் ஏவல்’ ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் வாய்ப்பிருக்கிறதா?

“இது தயாரிப்பாளரிடம் கேட்க வேண்டிய கேள்வி. நடிகர்களுக்கு எல்லாமே தெரியும்னு எல்லாரும் நினைச்சிட்டிருக்காங்க. அப்படிலாம் இல்ல. எங்க மூஞ்சி போஸ்டர்ல வர்றதால எங்களையே கேள்வி கேட்டா எப்படி?”

`` ‘கட்சி தொடங்கப்போவதில்லை’ என்ற ரஜினியின் அரசியல் முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன?’’

‘‘ரஜினி சார்க்கு நன்றி சொல்ல விரும்புறேன். வருவாரா, வர மாட்டாரான்னு ரொம்ப நாளா இருந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வெச்சதுக்கு நன்றி. மத்தபடி அரசியலுக்கு வருவதும் வராததும் அவரின் தனிப்பட்ட விஷயம். அதைப் பற்றிக் கருத்து சொல்ல எனக்கு எந்த உரிமையும் இல்ல. ஆனா, ரொம்ப நாளா அவர் வந்திடுவார்னு எதிர்பார்த்துட்டே இருந்தோம். திரைப்படங்கள் மற்றும் படவிழாக்கள் வழியாகவும் அவர் அந்த எதிர்பார்ப்புக்குப் பதில் சொல்லிட்டிருந்தார். அதுக்கெல்லாம் இப்போ முற்றுப்புள்ளி வெச்சிட்டாரே. அதுக்குத்தான் என் நன்றி!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism