Published:Updated:

“பீரியட் படங்களில்தான் நாங்க தெரிவோம்!”

 டி.சந்தானம்.
பிரீமியம் ஸ்டோரி
News
டி.சந்தானம்.

ஒரு படத்துக்கு ஆர்ட் டைரக்‌ஷன் பண்றதுக்கு முன்னாடி ஸ்கிரிப்ட்டை நல்லா படிச்சிடுவேன்.

“சின்ன வயசுல இருந்தே ஓவியம் நல்லா வரைவேன். ஸ்கூல் முடிச்சதுக்கு அப்புறம் ஓவியம் சார்ந்தே படிக்க ஆசைப்பட்டேன். அப்படிப் படிச்சிட்டிருந்த சமயத்தில்தான், சினிமா மேலேயும் ஆர்வம் வர ஆரம்பிச்சது.

ஆர்ட் டைரக்‌ஷன் எனக்கு சரியா இருக்கும்னு தோணுச்சு. காலேஜ் முடிச்சதும் விளம்பரப் படங்களுக்கு ஆர்ட் டைரக்‌ஷன் பண்றவங்ககிட்ட அசிஸ்டென்ட்டா வொர்க் பண்ண ஆரம்பிச்சேன். சில மாதங்களிலேயே சினிமா ஆர்ட் டைரக்டர் எம்.பிரபாகரன் சார்கிட்ட அசிஸ்டென்ட்டா வேலை பார்க்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘உன்னைக்கொடு என்னைத் தருவேன்’, ‘டும் டும் டும்’னு ஐந்து வருடங்களில் கிட்டத்தட்ட 15 படங்கள் வொர்க் பண்ணினேன். அந்தச் சமயத்தில் கிடைத்த ஒரு உதவி இயக்குநரின் நட்புதான், ‘சொக்கத்தங்கம்’ படத்தில் நான் ஆர்ட் டைரக்டராக காரணமாக இருந்துச்சு’’ எனத் தன் கரியரின் ஆரம்பக்காலத்தில் இருந்தே பேச ஆரம்பித்தார், கலை இயக்குநர் டி.சந்தானம்.

“பீரியட் படங்களில்தான் நாங்க தெரிவோம்!”
“பீரியட் படங்களில்தான் நாங்க தெரிவோம்!”

`` ‘ஆயிரத்தில் ஒருவன்’, உங்க கரியரில் மிக முக்கியமான படம். அதில் எப்படி கமிட்டானீங்க?’’

“செல்வராகவன் சாரோட ஆஸ்தான கேமராமேன் அரவிந்த் கிருஷ்ணாவும் நானும் நிறைய விளம்பரப்படங்களில் வேலை பார்த்திருக்கோம். அப்போ என் வொர்க்கைப் பார்த்த அரவிந்த் கிருஷ்ணா, ‘புதுப்பேட்டை’ படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி செல்வா சார்கிட்ட என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். ‘7ஜி ரெயின்போ காலனி’ பட ஷூட்டிங் போயிட்டிருந்த சமயத்தில் நான் அவரைப் போய்ப் பார்த்தேன். ‘அடுத்து நாங்க கேங்ஸ்டர் படம் பண்றோம். நார்த் மெட்ராஸில் நடக்குற கதை. பண்றீங்களா’ன்னு கேட்டார். நான் ஓகே சொன்னதுக்கு அப்பறம், ஒரு வாரம் கழிச்சு வரச்சொன்னார். ஒரு வாரம் கழிச்சுப் போகும்போதே, கொஞ்சம் வொர்க் பண்ணி சில ஸ்கெட்சஸ் வரைஞ்சிட்டுப் போனேன். அது அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததனால, அப்படியே அவரோடு டிராவல் பண்ண ஆரம்பிச்சிட்டேன். செல்வா சாருக்கு செட் போட்டு ஷூட் பண்றதுதான் பிடிக்கும். அதனாலேயே ‘புதுப்பேட்டை’ படத்துல கொக்கி குமாரோட வீடு, ரயில்வே ஸ்டேஷன், ரெளடிகள் தங்கியிருக்கிற இடம்னு நிறைய செட் போட்டோம். என் வொர்க் ரொம்பப் பிடிச்சிருந்ததால, அடுத்ததா ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திலேயும் வொர்க் பண்ணச் சொன்னார்.”

“பீரியட் படங்களில்தான் நாங்க தெரிவோம்!”
“பீரியட் படங்களில்தான் நாங்க தெரிவோம்!”

`` ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் வேலைகளில் எவ்வளவு மெனக்கெடல்கள் இருந்தன?’’

“ஒரு படத்துக்கு ஆர்ட் டைரக்‌ஷன் பண்றதுக்கு முன்னாடி ஸ்கிரிப்ட்டை நல்லா படிச்சிடுவேன். இயக்குநர் தனக்கு என்ன தேவைங்கிறதை அந்த ஸ்கிரிப்ட்லேயே சொல்லியிருப்பார். அதுபோக, தஞ்சாவூரில் பல கோயில்களுக்கும் போய், சோழர்கள் பற்றிய ரெஃபரன்ஸ் எடுத்தேன். பல புத்தகங்கள் படிச்சேன். நிறைய நாள்கள் ரிசர்ச் வொர்க் பண்ணிட்டுத்தான் செட் போடுற வொர்க்கை ஆரம்பிச்சோம். பேப்பர் வொர்க் பண்றதுல இருந்த சிரமங்கள் மாதிரியே, செட் போடுற இடங்களிலும் சிரமங்கள் இருந்தன. படத்தோட முதல் பாதியில் வர்ற செட்கள் எதுவுமே சமமான நிலப்பரப்புல போடவேயில்லை. காடுகளிலும், மலைகளிலும்தான் போட்டோம். பார்த்திபன் சாரோட போர்ஷனுக்கு ராமோஜி ராவ் ஸ்டூடியோவில்தான் செட் போட்டோம். சோழர்கள் வாழ்ற குகை, அரசர் இருக்கிற அரண்மனை, சண்டை போடுற மைதானம்னு பெரிய பெரிய செட்களாகப் போட்டோம். ஒரு செட்டுக்காக 300 ஆட்கள் கிட்டத்தட்ட 45 நாள்கள் வொர்க் பண்ணினோம்”

“பீரியட் படங்களில்தான் நாங்க தெரிவோம்!”
“பீரியட் படங்களில்தான் நாங்க தெரிவோம்!”

`` ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் வெளியான சமயத்தில் கிடைத்த வரவேற்பைவிட, இப்ப ரசிகர்கள் படத்தைக் கொண்டாடுறதைப் பார்க்கும்போது எப்படி இருக்கு?’’

ரொம்ப பெருமையாக இருக்கும். கூடுதல் மகிழ்ச்சியா, ‘ஆயிரத்தில் ஒருவன்’ இரண்டாம் பாகத்தின் அறிவிப்பையும் செல்வா சார் வெளியிட்டிருக்கிறார். 2024-ம் ஆண்டுதான் படம் வரும்னு சொல்லியிருக்கார். இப்போ அவர் வேற படத்தில் பிஸியாக இருக்கிறதால, அதை முடிச்சிட்டு ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எழுதும்போது என்னைக் கூப்பிடுவார்னு நம்புறேன்.”

“பீரியட் படங்களில்தான் நாங்க தெரிவோம்!”

`` ‘காவியத்தலைவன்’ படத்திலேயும் உங்க ஆர்ட் டைரக்‌ஷன் பேசப்பட்டதே..?’’

“ ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் மூலமாகத்தான் எனக்கு ‘காவியத்தலைவன்’ பட வாய்ப்பு கிடைச்சது. ‘ஒய் நாட் ஸ்டூடியோஸ்’ சஷிகாந்த் எனக்கு நெருங்கிய நண்பர். அவர்தான் என்னைப் பற்றி இயக்குநர் வசந்தபாலன் சார்கிட்ட சொல்லியிருக்கார். அதுவும் பீரியட் படமாக இருந்ததால, நிறையவே வொர்க் பண்ணினோம். சுதந்திரத்துக்கு முன்னாடி தமிழ்நாடு எப்படி இருந்தது, நாடக மேடைகள், நாடகக் கலைஞர்களோட இருப்பிடம் எப்படி இருக்கும்னு மதுரையில் இருந்த நாடகக் கலைஞர்கள் பல பேர்கிட்ட விசாரிச்சோம். புகழ்பெற்ற நாடகக் கலைஞரான ஆர்.எஸ்.மனோகர் சாரிடம் பல வருஷங்களாக பணியாற்றிய வி.என்.எஸ்.நாகராஜ் சார்கிட்ட நிறைய விஷயங்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டுத்தான் செட் வொர்க் பண்ணினோம். அந்த அனுபவமும் ரொம்பவே சேலஞ்ஜிங்கா இருந்துச்சு.”

“பீரியட் படங்களில்தான் நாங்க தெரிவோம்!”
“பீரியட் படங்களில்தான் நாங்க தெரிவோம்!”

``பீரியட் படங்கள் பண்றதுதான் உங்களுக்குப் பிடிக்குமா?’’

“பீரியட் படங்கள்தான் ரொம்பவே சவாலா இருக்கும். ஏன்னா, நம்ம ஊர் 20, 25 வருடங்களுக்கு முன்னாடி எப்படி இருந்ததுன்னு நம்மகிட்ட புகைப்படப் பதிவுகளாக இருக்கு. அதுக்கு முன்னாடி காலகட்டம் எல்லாம் எழுத்து வடிவில்தான் பதிவுகளாக இருக்கு. கதைக்குத் தேவையான விஷயங்களைத் தேடித் தேடிச் சேகரிக்க வேண்டியது இருக்கும். குறிப்பா சொல்லணும்னா, இந்த மாதிரியான படங்களில்தான் எங்களோட வேலை மக்களுக்கு தெரியும். மற்ற படங்களில் எங்களோட வேலை மக்களுக்கு தெரியாமல் இருந்தால்தான், அது எங்களோட வெற்றி. புதுப்பேட்டை, சர்கார் படங்களுக்காக நிறைய செட் போட்டேன். எதுவுமே மக்களுக்கு செட்டுனே தெரியலை. அதுதான் எனக்கு சந்தோஷம்.”

“பீரியட் படங்களில்தான் நாங்க தெரிவோம்!”
“பீரியட் படங்களில்தான் நாங்க தெரிவோம்!”

``இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸோடு ‘சர்கார்’, ‘தர்பார்’னு தொடர்ந்து வேலை பார்க்கிற அனுபவம் எப்படி இருக்கு..?’’

‘‘விஜய் சார் படத்தில் ஆர்ட் டைரக்டரா வொர்க் பண்ணணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. அது நடந்தப்போ ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ‘சர்கார்’ முடிக்கிற சமயத்தில் முருகதாஸ், ‘உங்களுக்கு ஒரு பரிசு இருக்கு சந்தானம்’னு சொன்னார். அப்படித்தான், ‘தர்பார்’ பட வாய்ப்பைக் கொடுத்தார். முருகதாஸ் சார் மாதிரியே நானும் ரஜினி சாரோட தீவிரமான ரசிகன். அவர் படத்துல என்னை வொர்க் பண்ண வெச்சதுக்காக முருகதாஸ் சாருக்கு நான் எப்போதுமே நன்றி சொல்லிட்டே இருப்பேன்.

ரஜினி சாரோடும், விஜய் சாரோடும் வொர்க் பண்ணும்போது, அவங்க செட்டுக்குள்ள வந்ததும் எங்க வொர்க்கைப் பார்த்துட்டு, ‘ஆர்ட் டைரக்டரைக் கூப்பிடுங்க’ன்னு வரச்சொல்லிப் பாராட்டுவாங்க. ‘சர்கார்’ படத்தைப் பொறுத்தவரைக்கும் செட் வொர்க் ரொம்பவே இருந்துச்சு. மக்கள் கூட்டமா இருக்கிற மாதிரியான காட்சிகள் படத்தில் அதிகமா இருந்ததால, அதுக்கு ஏற்றமாதிரி தெருக்களையும், குவாட்டர்ஸையும் செட் போட்டோம். கட்சி ஆபீஸ், பிரசார மேடைகள், ‘சிம்டாங்காரன்’, ‘ஓஎம்ஜி பொண்ணு’ பாடல்களுக்கும் மெட்ரோ கட்டடத்தில் நடக்குற சண்டைக்காட்சிக்கும் செட் போட்டோம். விஜய் சாரும், ‘ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க’ன்னு சொன்னார். ‘தர்பார்’ படத்துலேயும் ஓப்பனிங் சீன், ‘கண்ணுல திமிரு’ பாட்டுல வரும் ரயில்வே ஸ்டேஷன், க்ளைமாக்ஸ் சீன்னு பல காட்சிகளுக்கு செட் போட்டோம். ரஜினி சாரும் ஒவ்வொரு செட் வொர்க்கைப் பார்த்துட்டும் பாராட்டுவார். இப்படித்தான நடிகர்களுக்கும் ஆர்ட் டைரக்டருக்குமான நட்பு உருவாகும்.”