Published:Updated:

என்னை மன்னித்துவிடு விஜய்! - ஏங்கும் எஸ்.ஏ.சி

விஜய்
பிரீமியம் ஸ்டோரி
விஜய்

எந்தத் தகப்பனும் பிள்ளை கெட்டுப் போகணும்னு நினைக்க மாட்டான். விஜய், நான் உனக்காகவே வாழ்கிறேன், உனக்காக வாழ்வேன், உனக்காகத்தான் இன்னமும் இருக்கேன்.

என்னை மன்னித்துவிடு விஜய்! - ஏங்கும் எஸ்.ஏ.சி

எந்தத் தகப்பனும் பிள்ளை கெட்டுப் போகணும்னு நினைக்க மாட்டான். விஜய், நான் உனக்காகவே வாழ்கிறேன், உனக்காக வாழ்வேன், உனக்காகத்தான் இன்னமும் இருக்கேன்.

Published:Updated:
விஜய்
பிரீமியம் ஸ்டோரி
விஜய்
வ்வளவு அன்போடு கைகொடுக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். அருமை மகனோடு பிரச்னை தொடங்கி இன்னும் சரிபண்ண முடியாமல் ஆயிரம் பேச்சுகள் வெளியே... ஆனால் அறைக்குள் மெல்லியதாகச் சிரித்து செம ஃப்ரஷ் எஸ்.ஏ.சி! ‘நான் கடவுள் இல்லை’ எனப் புதுப்படம் திரையைத் தொடத் தயாராக, நம்மிடம் எல்லாவற்றையும் பர்சனலாகப் பேசக் காத்திருந்தார். “சில விஷயங்களை பகிர்ந்துக்கலைன்னா மனசு தாங்காது. சிலவற்றை சொல்லலைன்னா ஊரு தாங்காது தம்பி” என ஆரம்பித்த வார்த்தைகளில் அன்பு, பாசம், வேதனை எனப் பல விதங்களில் வெளிப்பட்டார்.

“சார், நான் ‘புரட்சி இயக்குநர்’னு பெயர் எடுத்தவன். வெற்றி, தோல்வி இரண்டையும் சகஜமா பார்த்திருக்கேன். சினிமாவில் நான் செய்த பெரிய தப்பு ‘கேப்மாரி.’ சந்திரசேகர்கிட்டே இருந்து யாரும் இதை எதிர்பார்க்கலை. அப்படி இழந்த இமேஜ் சரியாகட்டும்னுதான் இப்ப ‘நான் கடவுள் இல்லை’ எடுத்திருக்கேன். தவறுகளைத் தட்டிக் கேட்க நமக்கு உரிமை இருக்கு. அந்த அநியாயங்களைச் செய்கிறவனை அழிக்க நமக்கு உரிமை இல்லை. இப்படியிருக்க, படத்தில் இரண்டு குழந்தைகள் கடவுள்கிட்ட விண்ணப்பங்கள் வைக்க, யதார்த்தமாக நல்லதெல்லாம் நடக்குது. இப்படி இரண்டு குழந்தைகளின் கதை எப்படி க்ரைமா மாறுது என்பதுதான் படம். இதில் எப்படி சிபிசிஐடி அதிகாரியாக சமுத்திரக்கனி வர்றார் என்பது, கதையோட துறுதுறு ஓட்டத்தில் தெரியும்” பேச ஆரம்பித்து, தொடர்கிறார்.

விஜய்
விஜய்

``சமுத்திரக்கனியை எப்படிப் பிடித்தீர்கள்?’’

“யதார்த்தமான ஆபீஸர் வேடம். சமூகப் பார்வையும் இருக்கு. கனியை எனக்கு ரொம்பப் பிடிக்குது. வாத்தியாரா, குழந்தைக்குத் தகப்பனா, கிராமத்து ஆளா, ஊற்றுகிற பாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி நிறைகிறார். முன்னாடி விஜயகாந்த் சமூக அக்கறையாகச் சொன்னால் ஜனங்களுக்குப் பிடிக்கும். இப்போ சமுத்திரக்கனி சொன்னால் பிடிக்குது. குடும்பத்திலும் இருந்துகிட்டு அவர் எப்படி சின்சியரா இந்தக் கெட்ட விஷயங்களைக் களையெடுக்கிறார்னு படம் தெளிவாகக் கொண்டு போகும். அவருக்கு பாலசந்தர், எஸ்.ஏ.சி படங்களில் நடிக்கணும்னு பிரியம் இருந்திருக்கு. ‘முன்னது முடியலை, உங்க படங்களில் வருஷத்துக்கு ஒரு படத்திலாவது நடிக்கணும் சார், கூப்பிடுங்க’ன்னு சொன்னாரு. இந்தக் காலத்து நடிகனுக்கும் நாம் சரியாக இருக்கோம்னு சந்தோஷமாக இருக்கு.”

என்னை மன்னித்துவிடு விஜய்! - ஏங்கும் எஸ்.ஏ.சி
என்னை மன்னித்துவிடு விஜய்! - ஏங்கும் எஸ்.ஏ.சி

``என்னதான் விஜய்யுடன் பிரச்னை?’’

“அவரை இன்னும் குழந்தையாகத்தான் நினைக்கிறேன். சின்ன வயதில் சரியாக ஹோம் ஒர்க் செய்யலைன்னா ஸ்கேலால தொடையில் அடிப்பேன். அப்புறம் உடனே தேங்காய் எண்ணெயும் தடவி விடுவேன். கண்டிப்பான தகப்பனா இருந்திருக்கேன். எப்படி ஆறு வயதில் விஜய்யைப் பார்த்தேனோ, அப்படித்தான் 35 வயசுலயும் பார்க்க ஆரம்பிச்சேன். அப்படி இருந்தது தப்பான்னு தெரியலை. இன்னைக்கு அவர் அடைந்திருக்கிற உச்சம் என் மனசில் இருக்க மாட்டேங்குது. புஸ்ஸி ஆனந்த் என்கிற புதுச்சேரி அரசியல்வாதியை மாநிலப் பொறுப்பாளராக விஜய் மக்கள் இயக்கத்திற்குப் போட்டேன். அது என் வாழ்க்கையில் செய்த பெரிய தப்பு. இதில் பிரச்னை வரும்போது இடைவெளி அதிகமாயிடுச்சு. அந்த தூரத்தை புஸ்ஸி பயன்படுத்தி விட்டார். ‘அப்பா இருக்கும்போது இயக்கம் நல்லா இல்லை. இப்ப நல்லா இருக்கு’ன்னு மாயையை உருவாக்குகிறார். பொய்யை உண்மையாக்கி உண்மையைப் பொய்யாக்குகிறார். இப்போது ஒரு நடிகை விஜய்யைத் தாக்கிப் பேசியதும் அதற்குக் கொதிக்காமல் எல்லாச் செய்திகளையும் தன்னைப் பற்றியே வரவைக்கிறார். விஜய் மனக்கதவைத் திறந்து என்னைப் பார்த்தால் என் மீதுள்ள கோபம் குறையும். அந்தக் கோபம் குறைந்தால்தான், நான் கூறுவதெல்லாம் விஜய்க்குப் புரியும். ஆரம்ப நாள்களில் அவரைத் திரைக்குக் கொண்டுவர நான் பட்ட அவமானங்கள், கேலி கிண்டல்கள், என் உழைப்பு அவர் தோல்வியை வெற்றியாக்கியது என எந்தத் தகப்பனும் செய்யாத சாதனை அவருக்குப் புரியணும். அவர்கூட பேசக்கூட முடியலை.”

என்னை மன்னித்துவிடு விஜய்! - ஏங்கும் எஸ்.ஏ.சி

``உங்களுக்கே மகன்கிட்ட பேச முடியலையா... என்னங்க இது?’’

“உண்மை. கடைசியாப் பார்த்துப் பேசியது 2020 நவம்பர் 5. மூணு மாசமாச்சு. அவரை ரீச் பண்ண முடியலை. ‘அப்பாதானே சொன்னாரு’ன்னு ஒரு விஷயத்தை நினைக்கலாம். அதையே, ‘அப்பா எப்படிச் சொல்லலாம்’னும் நினைக்கலாம். அவர் எப்படி நினைக்கிறார்னு தெரியலை.

எனக்கு ஈகோ கிடையாது. ‘துப்பாக்கி’ வரைக்கும் அவருக்கு மேனேஜர் மாதிரி இருந்திருக்கேன். மகனை நடிகனாக்க ஆசைப்பட்டு, மேக்கப் டெஸ்ட் எடுத்து, ஆல்பம் ரெடி பண்ணி பெரிய இயக்குநர்கிட்டயெல்லாம் கொடுத்தேன். ‘நானே தயாரிப்பாளராக இருக்கேன், படம் பண்ணுங்க’ன்னு சொன்னேன். யாரும் எடுத்துக் கொடுக்கலை. அவங்க மறுத்தப்ப நான்தான் ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் ஆரம்பிச்சு வரிசையா எடுத்தேன். ‘பிள்ளையை வைச்சே ரொமான்டிக்கா படம் எடுக்கிறார்’னு என்னைத் திட்டினாங்க. யூத்கிட்டே போய்ச் சேரணும்னு எடுத்தேன். ஹீரோவைப் பின்னாடி நடிகனா இயக்குநர் விக்ரமன் ஆக்கினார். அதை வாழ்க்கையில் மறக்க முடியாது. ஆக்‌ஷன் ஹீரோவாக ‘பகவதி’யில வெங்கடேஷ் ஆக்கினார். லேடீஸ் மத்தியில் பெயரெடுக்க ‘பிரியமானவளே’வில் நடிக்க வச்சேன். அப்ப மறுத்த இயக்குநர்கள் எல்லாம் இப்ப விஜய்யை வெச்சுப் படமெடுக்கிறாங்க. அப்போதெல்லாம் நல்லது கெட்டது சொல்லிக்கிட்டே இருப்பேன். அப்ப நான் அப்பாவா, அவர் பிள்ளையா இருந்தார். இப்ப அவர் இப்படி இருக்கிறதுதான் எனக்குப் புரியாத புதிரா இருக்கு.”

எஸ்.ஏ.சி
எஸ்.ஏ.சி

``அவரை விஜயகாந்த் மாதிரி அரசியலுக்குக் கொண்டு வர ஆசைப்பட்டீங்களா?’’

“விஜயகாந்த் குழந்தை மாதிரி. அவரை வைத்து 17 படங்கள் எடுத்திருக்கேன். அநியாயத்தைத் தட்டிக் கேட்கிற மாதிரியே நடித்து, அவரது கதாபாத்திரத்தை ட்ரிம் பண்ணுவார். விஜய் இப்பதான் சமூக உணர்வுள்ள படங்களில் நடிக்கிறார். அவர் அரசியலுக்கு வரணும்னு நான் தான் ஆசைப்பட்டேன். ஆனால், உடனடியாக அவர் வரக்கூடாது. வருஷத்துக்கு ஒரு மேடையில் பேசவே விஜய்க்கு எவ்வளவு தயாரிப்பு தேவைப்படுது! அப்ப அரசியலுக்கு எவ்வளவு தயாரிப்பு, முன்னெடுப்பு வேணும். அவர் இப்ப சினிமாவில் நல்ல நிலைமையில் இருக்கார். அதை அனுபவிக்கட்டும். ஆனால், அரசியலில் வர்றதுக்கு ஒரு பேஸ்மென்ட் ஸ்ட்ராங்கா வேணும். அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கு இன்னும் அதிக கவனம் தேவைப்படுது. பத்து வருஷம் கழிச்சு வந்து உடனே அரசியலில் குதிச்சுட முடியாது. அதற்கு ஒரு பிளாட்பாரம் வேணும். அவர் அரசியலுக்கு இப்பவே வரணும்னு நான் ஆசைப்படுவதாக எல்லோரும் நினைக்கிறார்கள். நான் அப்படி நினைக்கலை. ரசிகர்களுக்கு இப்ப இருந்தே அரசியல் உணர்வை ஊட்டிப் பக்குவப்படுத்தணும்னு சொல்றேன்.”

``விஜய் உலகம் புரியாதவரா... உங்களைப் புரிஞ்சிக்க முடியாதா?’’

“எந்தத் தகப்பனும் பிள்ளை கெட்டுப் போகணும்னு நினைக்க மாட்டான். விஜய், நான் உனக்காகவே வாழ்கிறேன், உனக்காக வாழ்வேன், உனக்காகத்தான் இன்னமும் இருக்கேன். நான் செய்த சின்னத் தப்பை மறந்துவிட்டு, என்னை மன்னித்துவிடு. என்னைக்கு என்னை மன்னிக்கிறியோ, அன்னைக்கு நான் சொன்னதெல்லாம் புரியும். நீ ஒரு கூட்டுக்குள்ளே இருக்கிறாய். வெளியே வா! நான் உன்கிட்ட நடிக்கலை. பிள்ளைகிட்ட அப்பன் நடிக்க மாட்டான். நான் செய்கிற அத்தனையும் தவறாக உன்கிட்டே சித்திரிக்கப்படுது. நான் செய்த தப்புக்கு பல தடவை மன்னிப்பு கேட்டு விட்டேன். இன்றைக்கும் கேட்கிறேன். என்னை மன்னித்துவிடு!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism