Published:Updated:

“எங்க கல்யாணச் செய்தியை விஜய் நம்பவே இல்லை!”

சங்கீதா - சரவணன்
பிரீமியம் ஸ்டோரி
சங்கீதா - சரவணன்

இப்போ வர தமிழ்ப் படங்களில் பெண்களோட கேரக்டர் ரொம்பவே முக்கியமானதாக இருக்கு.

“எங்க கல்யாணச் செய்தியை விஜய் நம்பவே இல்லை!”

இப்போ வர தமிழ்ப் படங்களில் பெண்களோட கேரக்டர் ரொம்பவே முக்கியமானதாக இருக்கு.

Published:Updated:
சங்கீதா - சரவணன்
பிரீமியம் ஸ்டோரி
சங்கீதா - சரவணன்
‘பூவே உனக்காக’ படம் மூலம் பூத்ததுதான் ஒளிப்பதிவாளர் சரவணன் - நடிகை சங்கீதாவின் காதல். ‘பூவே உனக்காக’ படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்திருக்கும் இந்த சில்வர் ஜூப்லி வருடத்தில், இந்தப் படம் மூலம் காதலித்துக் கரம்பிடித்த சரவணன் - சங்கீதா ஜோடியைச் சந்தித்தேன்.

``நீங்கள் இருவரும் ‘பூவே உனக்காக’ படத்தில் கமிட்டான தருணம் பற்றிச் சொல்லுங்கள்’’

“நான் ஏற்கெனவே விக்ரமன் சாரோடு ‘புதிய மன்னர்கள்’ படத்தில் வேலை பார்த்திருந்ததனால, இந்தப் படத்திலும் நான் வொர்க் பண்ணினால் நல்லா இருக்கும்னு என்கிட்ட கதை சொன்னார். வேற ஒரு படத்துக்காக லொகேஷன் பார்த்திட்டு இருந்தப்போதான், இந்தப் படத்தோட கதையை என்கிட்ட சொன்னார். ‘பூவே உனக்காக’ கதையைக் கேட்டதுமே, ‘சார், இது வெள்ளி விழாக்கான படம் சார்’னு சொன்னேன். ஏன்னா, நாங்க சேர்ந்து வொர்க் பண்ணின ‘புதிய மன்னர்கள்’ படம் அவரோட ஸ்டைலில் இருக்காது. அதனால படம் சரியா போகலை. மறுபடியும் அவரோட ஸ்டைலில் ஒரு கதையைப் பண்ணிட்டு வந்து சொன்னதும், செம குஷியாகிட்டேன்’’ என சரவணன் சொன்னதும், தொடர்ந்தார் சங்கீதா. “எனக்கு விக்ரமன் சாரோட உதவி இயக்குநர் ரவிசங்கர்தான் படத்தோட லைனைச் சொன்னார். விக்ரமன் சாரோட படங்கள் எல்லாமே ரொம்ப ஹோம்லியாகத்தான் இருக்கும். எனக்கும் அதுமாதிரியான கேரக்டர்களில் ஆர்வம். அதனால, ஓகே சொல்லிட்டேன். அதுமட்டுமல்லாமல், இதில் நான் நடிப்பதுக்கு இன்னொரு முக்கியமான காரணம், படத்தில் நம்பியார் - நாகேஷ், சுகுமாரி - விஜயகுமாரின்னு ரொம்ப சீனியர் நடிகர், நடிகைகள் இருந்தாங்க.”

சரவணன் - சங்கீதா
சரவணன் - சங்கீதா

`` ‘பூவே உனக்காக’ படம் வெளியாகி 25 வருடங்கள் கடந்தபிறகும், இந்தப் படத்தின் அனுபவமாக உங்கள் மனதில் இருக்கும் விஷயங்கள் என்ன..?’’

“ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் ரொம்பவே அமைதியா இருப்பார். இயக்குநர்கிட்டேயும் என்கிட்டேயும் மட்டும்தான் பேசுவார். விஜய் அதுவரைக்கும் பண்ணிய ஸ்டைலில் இருந்து ரொம்ப வித்தியாசமான படமாக இது இருந்துச்சு. இந்தப் படத்துக்கு அப்புறம்தான் ‘லவ் டுடே’, ‘காதலுக்கு மரியாதை’ன்னு அவரோட ட்ராக்கே மாறுச்சு. விஜய்யோட பெரிய ப்ளஸ்ஸே, அவரோட அப்ஸர் வேஷன்தான். ஒரு விஷயத்தை நோட் பண்ணிட்டார்னா, அதை அழகா ஸ்கிரீனில் கொண்டு வந்திடுவார். ‘பூவே உனக்காக’ படத்துக்கு அப்புறம், `செல்வா’, ‘மதுர’, ‘திருப்பாச்சி’ன்னு அவரோடு தொடர்ந்து வொர்க் பண்ணியிருக்கேன். காதல் படங்களில் இருந்து கமர்ஷியல் படங்களுக்காக தன்னோட ஸ்டைலை அவர் மாற்றும்போதும், நான் பக்கத்தில் இருந்து அந்த மாற்றத்தைப் பார்த்திருக்கேன். அவர் தன்னைத் தானே ஒரு படத்துக்காகத் தயார் பண்ணிக்கிற அந்த டெடிகேஷன்தான் இப்போ ‘மாஸ்டர்’ படம் வரைக்கும் அவரைக் கொண்டு வந்திருக்கு. சங்கீதாவை இந்தப் படத்தோட ஷூட்டிங்கில்தான் முதல்முறை பார்த்தேன். சங்கீதா நடிச்ச முதல் ஷாட்டே நாகேஷ் சாரைக் கத்தியைக் காட்டி மிரட்டுறதுதான். அதோட க்ளோஸப்தான் முதலில் எடுத்தோம். அன்னைக்கு கத்தியைக் காட்டி மிரட்டினதுதான், இன்னைக்கு வரைக்கும் நான் அவங்ககிட்ட சரண்டராகி இருக்கேன்” என்றபடியே சிரித்த சரவணனைத் தொடர்ந்த சங்கீதா, “படம் ரிலீஸாகி 25 வருஷம் ஆச்சு; இப்போவரைக்கும் அந்தப் படத்தை டிவியில் ப்ரைம் டைமில்தான் டெலிகாஸ்ட் பண்ணுவாங்க. தமிழ்நாடு, கேரளான்னு ரெண்டு ஸ்டேட்லேயும் யார் என்னைப் பார்த்தாலும், அவங்களால ‘பூவே உனக்காக’ படத்தைப் பற்றிப் பேசாமல் இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு மக்கள் இன்னும் அந்தப் படத்துக்கு ஆதரவு கொடுத்துட்டு இருக்காங்கன்னு நினைக்கும்போது ரொம்பவே சந்தோஷமாக இருக்கு.”

``உங்களுக்குள் காதல் மலர்ந்த தருணத்தைப் பற்றிச் சொல்லுங்க..?’’

“நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் வேலையைத் தாண்டி மற்ற விஷயங்கள் பேசாததனால, சங்கீதாகிட்ட ‘பூவே உனக்காக’ சமயத்தில் எதுவும் பேசிக்கலை. அதுக்கப்புறம் ஒன்றரை வருஷம் கழிச்சு சுரேஷ் கிருஷ்ணா சாரோட ‘ஆஹா’ பட ஷூட்டிங்கில் ஏவிஎம்ல இருந்தேன். பக்கத்து செட்ல சங்கீதாவும் வேற ஒரு பட ஷூட்டிங்கில் இருந்தாங்க. அப்போ இவங்களைப் பார்த்துப் பேசினேன். அதுக்கப்புறம்தான் எங்களுக்குள்ள காதல் வந்திருக்கும்னு நினைக்கிறேன். எனக்கு அவங்களையும் அவங்களுக்கு என்னையும் பிடிச்சிருக்குன்னு பரஸ்பரம் தெரிஞ்சதுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறதைப் பற்றித்தான் பேசினோம். சங்கீதா வீட்டில் நான் பேசினப்போ, ‘முடியவே முடியாது’ன்னு சொல்லிட்டாங்க. அதுக்கு அப்புறம் நிறைய முறை பேசி, எல்லாரும் சமாதானம் ஆகி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.”

சரவணன் - சங்கீதா
சரவணன் - சங்கீதா

``நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்ட செய்தியைக் கேட்டு விஜய், விக்ரமன் என்ன சொன்னாங்க..?’’

“ரெண்டு பேருமே முதலில் நம்பவேயில்லை. விக்ரமன் சார்கிட்ட நாங்க காதலிக்கிறோம்கிற தகவலை வேற ஒருத்தர் சொன்னப்போ, ‘இருக்கவே இருக்காது. சரவணன் சார் ஸ்பாட்டில் பேசவே மாட்டார். பின்ன எப்படி, அவங்களை லவ் பண்ணியிருக்க முடியும். எல்லாரும் பொய் சொல்றீங்க’ன்னு சொல்லியிருக்கார். கல்யாணம் பண்ணிட்டு அவர்கிட்ட சொன்னப்போ, ‘எப்படி சார்... எப்போ நடந்துச்சு இதெல்லாம்’னு ரொம்பவே ஷாக்கானார். விஜய்யும் நம்பலை. எங்க கல்யாண செய்தி ரொம்பவே அதிர்ச்சியாகத்தான் இருந்துச்சு. கல்யாணத்துக்குப் பிறகு எப்போ பார்த்தாலும் ஃபேமிலி பத்தி விசாரிப்பார். ‘திருப்பாச்சி’ படம் பண்ணும்போது, ‘உங்க மகளைப் பார்க்கணும்’னு வரச்சொல்லி அவகூட போட்டோ எடுத்துக்கிட்டார்.”

``ஒளிப்பதிவாளராக, இயக்குநராக பிஸியாக இருந்தவர் கடந்த சில வருடங்களாக எந்தப் படமும் பண்ணாமல் இருப்பதற்கான காரணம் என்ன..?’’

“ ‘சிலம்பாட்டம்’ படம் பண்ணிட்டு கெளதம் கார்த்திக்கை வெச்சு ‘சிப்பாய்’னு ஒரு படம் பண்ணினேன். அது, தயாரிப்புல சில பிரச்னை இருந்ததனால பத்து நாள் ஷூட்டிங் எடுக்க வேண்டிய நிலையில் நிக்குது. அந்தப் படம் இப்போ வந்தாலும், கதை பழசு மாதிரி தெரியாது; அப்படி ஒரு கன்ட்டென்ட்தான் அது. சீக்கிரமே பிரச்னைகள் சரியானதும் அதை எடுப்பேன்னு நினைக்கிறேன். அதுமட்டுமல்லாமல், என் நண்பர்களோடு சேர்ந்து ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கிறேன். அதில் புதுமுகங்களை வெச்சு ‘தர டிக்கெட்’னு ஒரு படத்தை இயக்கப்போறேன். சில பெரிய ஹீரோக்கள்கிட்டேயும் கதைகள் சொல்லியிருக்கேன். எல்லாம் சரியாக நடந்தால் அதற்கான அறிவிப்புகளும் வரும்” என சரவணன் சொன்னதும், ‘திருமணத்திற்குப் பின் நீங்க நடிக்காததன் காரணம் என்ன?’ என சங்கீதாவிடம் கேட்டபோது, “பொண்ணு பிறந்ததுக்கு அப்புறம் அவளைப் பார்த்துக்கிட்டேன். அதனால, எனக்கு வேற எந்த வேலையும் பண்ணத் தோணலை. 2014-ல மலையாளத்தில் சீனிவாசன் சார் படத்தில் மட்டும் கேமியோ ரோலில் நடிச்சேன். ரெண்டு வருஷமாக எனக்கும் திரும்ப நடிக்கணும்னு ஆசை வந்திருக்கு. கதைகளும் கேட்டுட்டு இருக்கேன். பிடிச்ச மாதிரி கதைகள் வந்தால் நிச்சயமா நடிப்பேன். ஏன்னா, இப்போ வர தமிழ்ப் படங்களில் பெண்களோட கேரக்டர் ரொம்பவே முக்கியமானதாக இருக்கு. அப்படியான ரோல் வந்தால் கண்டிப்பா நடிப்பேன்” என்கிறார் நம்பிக்கையுடன்.

வரணும், பழைய சங்கீதாவா வரணும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism