Published:Updated:

சினிமாவாகும் ஜீவஜோதி வாழ்க்கை: 7 மொழிகளில், பெரும் பொருட்செலவில் தயாராகிறது! - கையெழுத்தான ஒப்பந்தம்

ஜீவஜோதி
News
ஜீவஜோதி ( தே.தீக்‌ஷித் )

ஜங்லீ பிக்சர்ஸ் (Junglee Pictures) நிறுவனம் ரூ.150 கோடி பட்ஜெட்டில் ஜீவஜோதி வாழ்க்கையைப் படம் எடுக்க முன்வந்தது. அதற்கான ஒப்பந்தத்தில் தயாரிப்பு நிறுவனத்துடன் ஜீவஜோதி கையெழுத்திட்டுள்ளார்.

ஜீவஜோதி தன் கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெரும் சட்டப் போராட்டம் நடத்தி, அதில் தொடர்புடைய ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் அண்ணாச்சி ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தந்தவர். `சினிமாவை விஞ்சும் அளவுக்கு தன் நிஜ வாழ்க்கைப் பரபரப்புகள் நிறைந்தது’ என ஜீவஜோதி கூறிவந்தார். இந்தநிலையில், ரூ.150 கோடி பட்ஜெட்டில் ஜீவஜோதியின் வாழ்க்கை சினிமாவாக எடுக்கப்படவிருப்பதாகவும், தயாரிப்பு நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தத்தில் ஜீவஜோதி கையெழுத்திட்டிருப்பதாகவும் தவகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஜீவஜோதி
ஜீவஜோதி

ஜீவஜோதி, தனது கணவர் சாந்தகுமாருடன் சென்னையில் வசித்துவந்தார். ஜீவஜோதியின் அப்பா ராமசாமி புகழ்பெற்ற சரவணபவன் ஹோட்டலில் மேலாளராகப் பணியாற்றிவந்தார். அப்போது சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால், ஜீவஜோதியை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார். இதற்குத் தடையாக இருந்த சாந்தகுமார் கொலை செய்யப்பட்டார். தனது கணவரை, ராஜகோபால் கொலை செய்ததாக ஜீவஜோதி புகார் கொடுத்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஹோட்டல் தொழிலில் கொடிகட்டிப் பறந்த ராஜகோபால் மீது கொலைப் புகார் கொடுக்கப்பட்டதால், இந்தச் சம்பவம் தமிழகத்தின் பேசுபொருளாக மாறியது. அப்போதைய முதல்வர் ஜெயலிலிதாவைச் சந்தித்து ஜீவஜோதி, தனது கணவர் கொலை செய்யப்பட்டதற்கான நீதி கிடைக்க வேண்டும் எனக் கண்ணீர்மல்க முறையிட்டார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வேகமெடுத்தது. வழக்கை விசாரித்த சென்னை செஷன்ஸ் நீதிமன்றம், ராஜகோபாலுக்கு 10 ஆண்டுச் சிறை தண்டனை விதித்தது.

கணவர் தண்டபாணியுடன் ஜீவஜோதி
கணவர் தண்டபாணியுடன் ஜீவஜோதி

இதை எதிர்த்து ராஜகோபால் மேல் முறையீடு செய்தார். அதில் பத்து ஆண்டுச் சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி பரபரப்பு தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார் ராஜகோபால். அங்கும் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டதுடன், உடனடியாக தண்டனையை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்தநிலையில், உடல்நிலைக் குறைபாட்டால் தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவந்த ராஜகோபால் 2019-ல் உயிரிழந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`அவர் ஒரு நாள்கூட சிறைத் தண்டனை அனுபவிக்காதது எனக்குப் பெரும் ஏமாற்றமே...’ என ராஜகோபால் மரணம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார் ஜீவஜோதி. வழக்கு நடைபெற்ற காலத்தில் பெரும் தொகை கொடுக்க முன்வந்து சமாதானம் பேசியதாகவும், அதற்கு ஒத்துக்கொள்ளததால், கொலை மிரட்டலுக்கு ஆளானதாகவும் ஜீவஜோதி வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். `சினிமாவை விஞ்சும் அளவுக்குப் பரபரப்புகள் நிறைந்தது என் வாழ்க்கை’ எனப் பல இடங்களில் கூறியிருக்கிறார்.

ராஜகோபால்
ராஜகோபால்

இந்தநிலையில், அவருடைய வாழ்க்கையை சினிமாவாக எடுக்கப் பலர் முயன்று, போட்டி போட்டுவந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனம் அதில் வெற்றிகண்டிருக்கிறது. ரூ.150 கோடி பட்ஜெட்டில் ஜீவஜோதி வாழ்க்கையைப் படமாக எடுக்கவிருக்கிறது. முறைப்படி அதற்கான பேச்சுவார்த்தை முடிந்திருக்கிறதாம். இதற்குச் சம்மதம் தெரிவித்து தயாரிப்பு நிறுவனத்துடன் ஜீவஜோதி ஒப்பந்தம் கையெழுத்திட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.

இது குறித்து விவரம் அறிந்த சிலரிடம் பேசினோம். ``தன் நிஜ வாழ்க்கையில் ஏகப்பட்ட போராட்டங்களைச் சந்தித்தவர் ஜீவஜோதி. ஒரு பெண்ணாக எதற்கும் அஞ்சாமல், தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து, பல்வேறு விமர்சனங்களைக் கடந்து தனக்கான நீதியைச் சட்டத்தின் மூலம் பெற்றவர். பணம், புகழ் என எதற்கும் அசைந்து கொடுக்காமல், தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காகக் கடைசிவரை உயிர்ப்புடன் போராடி வெற்றிகண்டவர்.

தற்போது தஞ்சாவூர் எல்.ஐ.சி காலனியில் தனது இரண்டாவது கணவர் தண்டபாணி, மகன் பவினுடன் வசித்துவருகிறார். பெண்களுக்கான தையல் தொழிலில் சிறந்துவிளங்குகிறார். வல்லம் அருகே தனது அப்பா ராமசாமி பெயரில் அசைவ ஹோட்டல் ஒன்றையும் நடத்திவருகிறார். குடும்பம், தொழில் என மகிழ்ச்சியாகச் சென்றுகொன்டிருக்கிறது அவரது வாழ்க்கை. இதற்கிடையில் பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக்கொண்டவருக்கு பா.ஜ.க-வின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. தற்போது தீவிர அரசியலிலும் தடம்பதித்து பயணித்துக்கொண்டிருக்கிறார்.

இந்தநிலையில், மும்பையைச் சேர்ந்த ஜங்லீ பிக்சர்ஸ் என்ற பிரபல பெரிய தயாரிப்பு நிறுவனம், ஜீவஜோதி வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க முன்வந்தது. இது குறித்த பேச்சுவார்த்தை ஐந்து மாதங்களுக்கு முன்பே தொடங்கி நடைபெற்றுவந்தது. ஜீவஜோதி தரப்பில் அவசரம் காட்டாமல், தனக்கு நெருக்கமானவர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. ஜீவஜோதியின் தம்பி குமார் திரைத்துறையில் இருப்பது, இந்தப் பணிகள் அனைத்தும் விரைந்து முடிவதற்குக் காரணமாக அமைந்தது.

ஜீவஜோதி
ஜீவஜோதி

இதைத் தொடர்ந்து ஜங்லீ பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.150 கோடி பட்ஜெட்டில் ஜீவஜோதி வாழ்க்கையைப் படமாக எடுக்க முன்வந்தது. இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு என ஏழு மொழிகளில் படமாக்கப்படவிருக்கிறது. பேச்சுவார்த்தை முடிந்து அதற்கான ஒப்பந்தத்தில் தயாரிப்பு நிறுவனத்துடன் ஜீவஜோதி கையெழுத்திட்டுள்ளார். பல மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் ஹிரோயின் ஒருவர் இந்தப் படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. படம் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெளியாகும்” எனத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஜீவஜோதியிடமே பேசினோம். ``வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகளில் உள்ள முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை படமாக எடுப்பதற்காக என்னை அணுகின. ஆனால் அப்போது அதற்கான நேரம் கைகூடவில்லை. தற்போது மும்பையைச் சேர்ந்த ஜங்லீ பிக்சர்ஸ் என்ற மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் பெரும் பொருட்செலவில் எனது வாழ்க்கையைப் படமாக்கவிருக்கிறது. இதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டிருக்கிறேன். அடுத்தகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. தயாரிப்பு நிறுவனம் முறைப்படி இதை அறிவித்திருக்கிறது” என்றார்.