Published:Updated:

‘கார்ப்பரேட்’ மோடிக்கு... அவர் பாணியிலேயே பதிலடி! - உண்மைகளை உரித்துக்காட்டும் ‘பூமி!’

பூமி
பிரீமியம் ஸ்டோரி
News
பூமி

பசுமை திரை

பொதுவாகவே, ‘விவசாயம் சார்ந்த திரைப்படம்’ என்று பேசப்பட்டாலே கொஞ்சம் பயம் எட்டிப்பார்க்கும். ‘என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க’ என்பதுதான் படத்தை முடித்துவிட்டு வெளியில் வரும்போது நம்முடைய மனக்குமுறலாக இருக்கும். ஊறுகாய்போலத்தான் விவசாயத்தைத் தொட்டிருப்பார்கள். ஒன்றிரண்டு வீரவசனங்களைப் பேசிவிட்டு, வழக்கம்போல பாட்டு, ஆட்டம், சண்டை என்று மசாலாக்களை அள்ளித் தூவி ‘அல்லு’ கிளப்புவார்கள். ஆனால், ‘ஜெயம்‘ ரவி நடிப்பில் இந்த உழவர் திருநாளில் ஓடிடி திரையில் வெளியாகியிருக்கும் ‘பூமி...’ முழுக்க முழுக்க விவசாயம் பேசுகிறது.

படத்தில் லாஜிக் மீறல்கள் நிறையவே இருக்கின்றன. ஆனால், கொஞ்சம்கூட லாஜிக்கே இல்லாமல் சட்டம், ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், கவர்ச்சி அறிவிப்புகள் என அனைத்தையும் சேர்த்துக்கொண்டு, ஒட்டுமொத்த தேசத்தையே நிஜத்திலேயே சூறையாட நினைக்கின்ற கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக மட்டுமே மொத்தப் படமும் சமர்ப்பணம் எனும்போது, லாஜிக்காவது... கீஜிக்காவது என்றே சொல்லத் தோன்றுகிறது.

விடுமுறையில், தமிழகத்தில் இருக்கும் சொந்தக் கிராமத்துக்கு வரும் அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையத்தின் விஞ்ஞானி பூமிநாதன், இங்கே விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளைக்கண்டு கொந்தளிக்கிறார். விவசாயிகள், கடன்தொல்லையில் சிக்கித் தவிக்கிறார்கள். அதிகாரிகளோ, அரசுப்பிரதிநிதிகளோ அவர்களை துச்சமாகத் துரத்தும் சூழலில், ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார். குமுறி எழும் பூமிநாதன், செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் வாய்ப்பைத் தூக்கி வீசிவிட்டு, விவசாயத்தில் கால்பதிக்கிறார். மரபணு மாற்றப்பட்ட விதைகள், வீரிய விதைகள், உரம், பூச்சிக்கொல்லி போன்றவைதான் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணம் என்பதை உணர்ந்து, அவை அனைத்துக்கும் விடை கொடுத்துவிட்டு, தற்சார்பு விவசாயமான இயற்கை விவசாயத்தைக் கையில் எடுக்கிறார்.

‘கார்ப்பரேட்’ மோடிக்கு...
அவர் பாணியிலேயே பதிலடி! - 
உண்மைகளை உரித்துக்காட்டும் ‘பூமி!’

கார்ப்பரேட்டுகள் தூக்கி வீசும் எலும்புத்துண்டுக்காக வேலை பார்க்கும் அமைச்சர், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளின் கூட்டணி அதிர்ந்துபோகிறது. சர்வதேச கார்ப்பரேட் முதலாளியின் கட்டளைகளை அடுத்தடுத்து நிறைவேற்றுகிறார்கள். பூமிநாதன் நடத்தும் இயற்கை விவசாயத் திருவிழாவின்போது விவசாயிகள் சிலருக்கு வைரஸைப் பரப்பி பிரச்னை கிளப்புகிறார்கள். இயற்கை விவசாயத்துக்காகப் பூமிநாதன் தயாரித்த இடுபொருள்களிலிருந்துதான் வைரஸ் உருவாகி, 26 விவசாயிகளின் பார்வையைப் பறித்துவிட்டது என்று சொல்லி, விவசாய பண்ணையையே அழிக்கிறார்கள். பூமிநாதனைக் கைது செய்து, கார்ப்பரேட் முதலாளி முன் நிறுத்துகிறார்கள்.

“உங்க நாடே எனக்கு அடிமை... நீங்களெல்லாம் எனக்கு அடிமை. காலையில எழுந்ததிலிருந்து, தூங்கற வரைக்கும் நீங்க என்னென்ன செய்யணும், எது எதைப் பார்க்கணும், எது எதைச் சாப்பிடணும்னு எல்லாத்தையுமே நாங்கதான் தீர்மானிக்கிறோம். உங்களால எதையுமே மாத்த முடியாது. இப்ப நீ ஜெயிலுக்குப் போகப்போறே. இன்னும் 50 வருஷத்துக்கு உள்ளயே இருந்து, நாங்க நடத்தற எல்லாத்தையும் உள்ள இருக்கிற டி.வியில பார்த்துப் பார்த்து செத்துப்போ’’ என்று டயாலாக் பேசுகிறார்.

“என்ன இப்பவே கொன்னுடு... இல்லாட்டி, இந்த நாட்டை விட்டே உன்னை நான் துரத்திடுவேன்’’ என்று பூமிநாதன் பேசும் வசனத்தை அசட்டை செய்தபடி சிரித்துக்கொண்டே அடுத்த நாட்டுக்குப் பறக்கிறார் கார்ப்பரேட் முதலாளி.

இதைத் தொடர்ந்து, பூமிநாதன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்பதும், ஒவ்வொன்றாக கார்ப்பரேட் முதலாளி தகர்த்துக்கொண்டே வருவதும்... நேற்றைய பசுமைப் புரட்சி, இன்றைய மரபணு மாற்று விதைகள், நாளைய கார்ப்பரேட் சந்தை என அனைத்தும் நாம் அனுபவித்து வரும் நிஜங்களே!

இயற்கையான நாட்டு விதைகள், ஒற்றை நாற்று நடவு, பஞ்சகவ்யா, நாட்டுக்கோழி, நாட்டுமாடு, நாட்டு ஆடு, அசோலா, நேரடி விற்பனை.... என்று கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக விவசாயிகளால் மீண்டும் கையிலெடுக்கப்பட்டுவரும் பாரம்பர்ய விவசாய நுணுக்கங்கள் அனைத்தையும் தூக்கிப்பிடிக்கிறார் பூமிநாதன்.

பசுமைப்புரட்சியின் பாதிப்பு, மரபணு மாற்றப்பட்ட விதைகளைத் தயாரிக்கும் நிறுவனம், அதற்குத் துணைபோகும் அதிகாரவர்க்கம் என்று கிடைத்த இடங்களிலெல்லாம் துணிச்சலாக அடித்துத் துவம்சம் செய்கிறார்கள். கார்ப்பரேட்டுகள் நினைத்தால், எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்; எந்த எல்லைக்கும் செல்லமுடியும்; அரசாங்கத்தையே விலைக்கு வாங்கமுடியும் என்பதெல்லாம் நிஜத்தில் நடந்துகொண்டிருக்கும் உண்மையை அத்தனை தைரியமாகத் தோலுரித்திருக்கிறார்கள்.

படத்தில் லாஜிக் ஓட்டை, நீளம், தேவையில்லாத காட்சிகள் என்று பலவும் இருந்தாலும்... இப்படியொரு சப்ஜெக்ட்டை துணிச்சலாகத் தொட்டதற்காகவே போற்றிப்பாடுவோம் ‘பூமி’யை. ஆம், இது பசுமை பூமி!

-விகடன் இணைய தளத்திலிருந்து...

கட்டுரையை முழுமையாகப் படிக்க க்ளிக் செய்யவும்.