Published:Updated:

“வெவசாய வேலைய முடிச்சுட்டுதான் சூட்டிங்!”

கடைசி விவசாயி
பிரீமியம் ஸ்டோரி
கடைசி விவசாயி

படப்பிடிப்புக்கு, விவசாய வேலைக்குச் செல்வதுபோலவே நல்லாண்டியும், ஊர் மக்களும் சென்று வந்துள்ளார்கள்

“வெவசாய வேலைய முடிச்சுட்டுதான் சூட்டிங்!”

படப்பிடிப்புக்கு, விவசாய வேலைக்குச் செல்வதுபோலவே நல்லாண்டியும், ஊர் மக்களும் சென்று வந்துள்ளார்கள்

Published:Updated:
கடைசி விவசாயி
பிரீமியம் ஸ்டோரி
கடைசி விவசாயி

உசிலம்பட்டி மலையாண்டி தியேட்டரில், ஹீரோ மாயாண்டியைப் பார்க்க நல்லாண்டியின் குடும்பத்தினருடன் ஊர் மக்களும் திரண்டு வந்திருந்தார்கள். சமீபத்தில் வெளியான ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தில் மாயாண்டியாகவே மாறி வாழ்ந்த நல்லாண்டியின் சுற்றமும் உறவும் அது. படம் பார்த்த பலரும் பாராட்டிக் கைகுலுக்க, கண்ணீரில் நெகிழ பெரியவர் நல்லாண்டி இல்லை என்பதுதான் பெருந்துயரம்.

இதுவரை எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய் என பிரபல நடிகர்களை மட்டும் தங்கள் ஊர் தியேட்டரில் பார்த்துக் கைதட்டியவர்கள், தங்களைத் திரையில் பார்த்துப் புல்லரித்துப் போனார்கள். அதிலும் நல்லாண்டி தாத்தா தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும், அவர் வசனம் பேசும்போதும் விசிலும் கைதட்டலும் பறக்கின்றன.

உசிலம்பட்டியிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, பெருங்காமநல்லூர் கிராமம். 100 வருடங்களுக்கு முன் பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்த கைரேகைச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதால், பலபேர் சுட்டுக் கொல்லப்பட்ட வரலாற்றுக்குச் சொந்தமான ஊர். அங்கு வசித்த நல்லாண்டி, சாகும் வரை விவசாயம் செய்துகொண்டிருந்தவர்.

“வெவசாய வேலைய முடிச்சுட்டுதான் சூட்டிங்!”

சூழலை அழிக்காத விவசாயத்தில் ஆழ்ந்த பரிச்சயம், பேராசை இல்லாத எளிய வாழ்க்கை, குறைந்த பேச்சு, இயல்பான செயல்பாடு, பிறருக்குத் தொந்தரவு செய்யாத குணம் என இயற்கை வகுத்த பாதையில் தடம் மாறாமல் வாழ்ந்துவந்தவர். விவசாயத்தில் கிடைத்த சொற்ப வருவாயில் ஐந்து பிள்ளைகள் பெற்று அவர்கள் மூலம் பேரப்பிள்ளைகள் என விரிந்த குடும்பத்தையும், ஆடு, மாடு, கோழி, பயிர் பச்சைகளையும் அன்பாகப் பார்த்துக் கொண்டவர். அவரின் இயல்பு வாழ்க்கையே படமானது ஆச்சரியம்தான்.

உண்மையான விவசாயியின் வாழ்வியலைச் சொல்லும் தன் லட்சியக் கதையைப் படமாக்க நினைத்த இயக்குநர் மணிகண்டனின் கதை நாயகர் தேடலில் சிக்கியவர்தான் நல்லாண்டி. ஊர் மந்தையில் கால் மேல் கால் போட்டு, தன் ஸ்டைலில் அமர்ந்துகொண்டிருந்த நல்லாண்டிதான், தான் தேடிக்கொண்டிருந்த ஹீரோ என்பதை முடிவு செய்தார் மணிகண்டன். பின்பு தெரிந்தவர்களை வைத்துப் பேசி, அவரைத் திரைப்படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்தார். அதன் பின்பு படப்பிடிப்பு உசிலம்பட்டியைச் சுற்றிப் பல இடங்களில் நீண்ட நாள்கள் நடந்தது.

படப்பிடிப்புக்கு, விவசாய வேலைக்குச் செல்வதுபோலவே நல்லாண்டியும், ஊர் மக்களும் சென்று வந்துள்ளார்கள். சில காட்சிகளை விளக்கிச் சொல்லிவிட்டு, அவர்கள் போக்கிலேயே நடிக்க வைத்துப் படமாக்கியுள்ளார் மணிகண்டன். அவரும் அப்பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், பொறுமையாகக் காத்திருந்து படமாக்கியிருக்கிறார்.

“வெவசாய வேலைய முடிச்சுட்டுதான் சூட்டிங்!”

படம் பார்க்க வந்திருந்த நல்லாண்டியின் மகள் மொக்கத்தாவுக்கு சில நிமிடங்கள் வார்த்தைகளே வரவில்லை. பிறகு இயல்புநிலைக்கு மீண்டவர், ‘‘அவரை தெரையில பார்த்தப்போ கண்ணீர் வந்துருச்சு. எங்கப்பா எப்படி இருந்தாரோ, எப்படி வாழ்ந்தாரோ, அதை அப்படியே படம் புடிச்சிருக்காங்க. படத்துல வர்றமாரி அவருண்டு தன் வேலையுண்டுன்னு இருப்பாரு. வேற எந்த விஷயத்துலயும் தலையிட மாட்டாரு. வெவசாயம் செய்யுறது, ஊர் மந்தையில உக்காந்து மனுஷ மக்களை கவனிக்கிறது, வூட்டுக்கு வந்து ஒறங்குறது இதுதான் அவரோட தினசரி வேலை. விடியுறதுக்கு முன்னால வயலுக்குப் போயிடுவாரு, மறுபடி எட்டு மணிக்கு வந்து இன்னைக்கு என்னென்ன வேலை செய்யணும், யாரு யாரு கூட வரணும்னு சொல்லுவாரு. அதோட நாங்களும் போயி வேலை பார்ப்போம். அங்கேயே வேலை பார்த்து சாப்ட்டுப்புட்டு சாயங்காலம் வீட்டுக்கு வருவோம். அதனாலதான் ஊருல யாருக்காவது பஞ்சாயத்துல கொழப்பம்னா அப்பாகிட்டே வந்து கேப்பாக. யாருக்கும் சாதக பாதகமில்லாமல் சரியான தீர்வைச் சொல்லிடுவாரு. மத்தவங்க என்ன நினைப்பாகளோன்னு நேர்மை தவற மாட்டாரு. சினிமாவுல நடிக்கக் கூப்புடுறாகன்னு வந்து சொன்னப்போ முதல்ல ஒத்துக்கல. அப்புறம் வெவசாய வேலைய முடிச்சுட்டுதான் வருவேன்னு சொல்லிட்டாரு. நெதமும் சூட்டிங்குக்குப் போவாரு, ஒரு நாளைக்கு ஆயிரம் ரூவா கொடுப்பாங்க. அதை வாங்கிட்டு வந்து வீட்டுல கொடுப்பாரு. பேரன், பேத்திகளோட வெளையாடுவாரு. இப்படி ஓடியாடி இளவட்டம் மாதிரி இருந்தவரு, நோய் நொடின்னு படுத்ததில்லை. திடீர்னு எங்களை விட்டுப் போவாருன்னு நெனைக்கல. இந்தப் படம் வரும்போது அவர் இல்லாதது ரொம்ப வருத்தமா இருக்கு’’ என்றார்.

“வெவசாய வேலைய முடிச்சுட்டுதான் சூட்டிங்!”

பேத்தி பிரியாவும், பேரன் செல்வமும், ‘‘சூட்டிங் போனீங்களே எப்படி இருந்துச்சுன்னு சீயான்கிட்டே கேட்டால், ‘அங்கிட்டு நடங்க, இங்கிட்டு வாங்க, வயல்ல இறங்கி வேலை செய்யுங்க, அப்படியே அங்க ஒக்காருங்கன்னு மணிகண்டன் தம்பி சொல்லுவாரு. இது நாம நெதமும் செய்யுறதுதானேன்னு செஞ்சு காட்டுவேன். ஏதாவது கேள்வி கேட்பாரு, நான் பதில் சொல்லுவேன், அவ்வளவுதான், போயிட்டு நாளைக்கு வாங்கன்னு அனுப்பிடுவாங்க’ன்னு சொல்லுவாரு. நாங்க சின்ன வயசுலேருந்து பாக்குறோம். ஒருநாகூட அவரு சும்மா இருந்தது இல்லை. இன்னைக்கு வேற வேலைக்கு நாங்க போனாலும் அவரைப் பார்த்துப் பார்த்து அவ்வளவு வெவசாய வேலைகளும் எங்களுக்குத் தெரியும். அவரோட வாழ்க்கையவே ஒரு சினிமாவா எடுக்கிற வாய்ப்பு எந்த விவசாயிக்குக் கிடைக்கும்? இதுவே எங்களுக்குப் பெருமையா இருக்கு. அவர் நடிச்ச படத்தை சீயான் இருந்து பாக்க முடியலையேன்னு வருத்தமா இருக்கு. அதிலும் சீயான் ஜெயில்ல கைரேகை வச்சுட்டு அந்தக் கறையை அழிக்கப் பார்ப்பாரு. அழியாது. அந்தக் கைரேகைக்குப் பின்னால ஒரு வரலாறு இருக்கு. அந்த வேதனை எங்க பகுதி மக்கள் எல்லோருக்கும் தெரியும். அந்த சீனைப் பார்த்து எங்களுக்கு அழுகை வந்திடுச்சு. டைரக்டர் மணிகண்டன் எங்க சீயானை ஒரு வரலாறா மாத்திட்டாரு. அதை மறக்கமாட்டோம்’’ என்கின்றனர் கண்ணீர் முனையில்.

இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள முனீஸ்வரன், ‘‘எங்க ஊரின் விவசாய பிரச்னையை, மக்களின் பிரச்னையைப் படம் எடுக்க நினைத்த மணிகண்டன் சார், அதில் எங்களையே நடிக்க வைத்துள்ளார். இது எங்களுக்குப் பெரிய கெளரவம். எங்க ஊரில் எடுத்த படத்தை எங்க ஊருலயே பாக்க வச்சதை நினைக்கும்போது, என் கல்யாண நாளைவிட அதிக சந்தோஷமா நெனைக்கிறேன். இதுபோன்ற படங்கள மக்கள் ஆதரிக்கணும்’’ என்றார்.

உசிலம்பட்டியில் படம் பார்த்து முடித்து நல்லாண்டியின் ஊரான பெருங்காமநல்லூருக்குச் சென்றோம். ஊர்க்காரர்கள் அனைவரும் நல்லாண்டியின் பெருமையைப் பேசுகிறார்கள். ஊரில் எங்கும் கல் வீடுகள் அதிகம் இருந்தாலும் அவர் வீடு சாதாரண கூரை வீடாகவே இருந்தது. பிள்ளைகள், பேரன்கள் அனைவரும் வெவ்வேறு ஊர்களில் வசித்துவருகிறார்கள். அந்த வீட்டில் கணவரின் நினைவுகளோடு கண்பார்வை இல்லாமல், செவித்திறன் குறைந்த நிலையில் அவர் மனைவி வாழ்ந்துவருகிறார். ‘‘உங்க வீட்டுக்காரர் நடிச்ச படம் உசிலம்பட்டி தியேட்டர்ல வந்திருக்கே... தெரியுமா?’’ என்றேன்.

“வெவசாய வேலைய முடிச்சுட்டுதான் சூட்டிங்!”

‘‘எனக்கு கண்ணு மங்கலா இருக்கு. உடம்பும் சொகமில்லை, அதனால போய் படம் பார்க்க முடியல. மணி தம்பி (இயக்குநர் மணிகண்டன்) எனக்கு வீட்டுல வந்து படம் காட்டுறதா சொல்லுச்சு. அவரு எப்பவுமே இப்படித்தான்... காட்டுலயும் மேட்டுலயும் வேல பாத்துக்கிட்டே இருப்பாரு. நான் வாக்கப்பட்டு வந்த நாள் மொதலா அவரோட சேந்து உழைப்பேன். எல்லாக் கஷ்டமும் பட்டோம். புள்ளைகளை ஆளாக்குனோம். கொஞ்ச நாளைக்கு முன்னால படம் நடிக்கப் போறேன்னு சொல்லுவாரு. என்ன நடந்துச்சுன்னு கேட்டா, அங்கிட்டும் இங்கிட்டும் போக வரச்சொல்றாகன்னு சொல்வாரு. மணி அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து விசாரிச்சுட்டுப் போகும். நல்லா தெடகாத்திரமா இருந்தவரு, கீழே விழுந்து முதுகுல அடிபட்டு உசிலம்பட்டி, மதுர ஆஸ்பத்திரியில வச்சுப் பார்த்தும் ஒன்னும் பண்ண முடியல. என்னை விட்டுட்டுப் போயிட்டாரு. இப்ப நான் மட்டும் இங்க கெடக்குறேன். எம் மகன், பேத்தி, பேரன் வந்து பாத்துக்கிருதுக’’ என்றார்.

ஒரு சாமானிய மனிதர் சாமானிய மனிதராகவே திரையில் தோன்றிக் கதையின் நாயகனாக நிலைத்து நிற்பது கலைச்சாதனை. நல்லாண்டி இப்போது இல்லாவிட்டாலும் சிறந்த தமிழ் சினிமாக்களின் வரிசையில் ‘கடைசி விவசாயி’யாக வாழ்வார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism