Published:Updated:

`சுஷாந்த் செய்த ஒரே தவறு; நிராகரித்ததா பாலிவுட்?' -எதிர்ப்புகளுக்குப் பதிலடி கொடுத்த கங்கனா

``கடைசியாக சுஷாந்த் அளித்த நேர்காணல்களில், `பாலிவுட் ஏன் என்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது?’ என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்”

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் பலரையும் கவலைக்கு ஆளாக்கியுள்ளது. இந்தியாவின் முக்கிய நடிகர்கள் மற்றும் திரைப்பட ரசிகர்கள் பலரும் அவரின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். கடுமையான மன அழுத்தத்தின் காரணமாக சுஷாந்த் இந்த முடிவை எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், சமூக வலைதளங்களில் மன அழுத்தம் தொடர்பான தங்களது கருத்துகளைப் பலரும் பதிவு செய்து வருகின்றனர். மேலும், சுஷாந்துக்கு மன அழுத்தத்தை சரியாக கையாளத் தெரியவில்லை என்றும் போதிய தைரியம் அவருக்கு இல்லை என்றும் சிலர் கூறியுள்ளனர். இதனால் கடும் கோபமடைந்த நடிகை கங்கனா ரனாவத், அவர்களை விமர்சிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுஷாந்த் மனதளவில் வலிமை இல்லாதவர் என்பதை நிராகரித்த கங்கனா, ``ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் உதவித்தொகை பெற்ற ஒருவர் எவ்வாறு மனரீதியில் பலவீனமாக இருக்க முடியும்? சுஷாந்தின் கடைசியான பதிவுகளை கவனித்தால்.. அவர் மிகத் தெளிவாக, `எனக்கு காட்ஃபாதர் என்று யாரும் இல்லை. எனது திரைப்படங்களை தயவு செய்து பாருங்கள். இல்லையென்றால், என்னை இந்தத் துறையிலிருந்து வெளியேற்றிவிடுவார்கள்’ என்று கூறியுள்ளார்.

கடைசியாக அவர் அளித்த நேர்காணல்களில், `பாலிவுட் ஏன் என்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது?’ என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். சுஷாந்தின் முதல் திரைப்படமான கை போ சே-வில் அவரது நடிப்பு ஏன் அங்கீகரிக்கப்படவில்லை? சிச்சோர் போன்ற அற்புதமான படம் புறக்கணிக்கப்பட்டது. ஆனால், கல்லிபாய் போன்ற மோசமான திரைப்படம் அனைத்து விருதுகளையும் வென்றது ஏன்?” என்று சில கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

எம்.எஸ்.தோனி : தி அன்டோல்டு ஸ்டோரி, கேதர்நாத் போன்ற படங்களுக்காகவும் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கங்கனா குறிப்பிட்டார்.

`மரணச் செய்தியைத் தாங்கமுடியாமல் தவித்த உறவினர் பெண்’ -சுஷாந்த் சிங் குடும்பத்தில் அடுத்த அதிர்ச்சி

வாழ்க்கையில் எந்தவிதமான தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று கூறும் நபர்களிடம் இருந்து எனக்கும் மெசேஜ்கள் வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ``நான் தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை என்னுடைய மனதில் அவர்கள் வைக்க விரும்புகிறார்கள். ஆனால், சுஷாந்த் அந்த விஷயத்தை ஏற்றுக்கொண்டார். அவர் எதற்கும் பயன் இல்லாதவர் என்று அழைக்கப்பட்டார். அதையும் அவர் ஒப்புக்கொண்டார். சுஷாந்தின் தாய் சொன்னதை அவர் தனது நினைவில் வைக்கவில்லை. வரலாற்றை யார் எழுதுவார்கள் என்பதை இப்போது நாம்தான் தீர்மானிக்க வேண்டும். சுஷாந்தின் மரணம் தற்கொலை அல்ல; திட்டமிட்ட கொலை. சுஷாந்த் செய்த ஒரே தவறு அவர்கள் கூறியதை ஒப்புக்கொண்டதுதான்” என்று கூறியுள்ளார்.

மேலும், ``நாங்கள் பாலிவுட் நட்சத்திரங்களின் வாரிசுகள் கிடையாது. நாங்கள் உங்களிடம் இருந்து எதையும் விரும்பவில்லை. நாங்கள் படங்களில் நடிக்கிறோம். நீங்கள் ஏன் அதை அங்கீகரிப்பது இல்லை?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கங்கனாவின் கருத்துகள் பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும், `சுஷாந்த் பாலிவுட் வட்டாரங்களில் இருந்து ஒதுக்கப்பட்டாரா?’ என்ற கேள்வியும் பலரை குழப்பியுள்ளது. இதையடுத்து, பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சம்பித் பத்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், ``ஒவ்வொரு முறையும் அவரது கருத்துகள் மிகவும் தெளிவாக இருப்பதைக் காண்கிறேன். ஒவ்வொரு பெண்ணும் கங்கனாவைப் போல சுதந்திரமாகவும் அச்சமின்றியும் இருக்க வேண்டும்” என்று கங்கனா பேசியதைக் கருத்தில்கொண்டு பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, கங்கனாவின் கருத்துக்கு ஆதரவாகவும் அவரை விமர்சிக்கும் வகையிலும் கருத்துகள் சமூக வலைதளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன.

`கேரளாவுக்கு நிதியுதவி; நினைவுகூர்ந்த முதல்வர் பினராயி விஜயன்!’ - சுஷாந்த் முடிவால் கலங்கும் ரசிகர்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு