அலசல்
Published:Updated:

கொரோனா பாதிப்பு... கடன் கூடும்... வட்டி எகிறும்...

கோலிவுட்
பிரீமியம் ஸ்டோரி
News
கோலிவுட்

என்னவாகும் கோலிவுட் நிலைமை?

கோலிவுட்டை முற்றிலுமாக முடக்கியிருக்கிறது கொரோனா. வைரஸ் தாக்கத்தின் தொடக்க நாள்களிலேயே பல கோடி ரூபாய் இழப்புகளைச் சந்திக்க ஆரம்பித்திருக்கிறது கோலிவுட். பல நூறு கோடி ரூபாயை வட்டிக்கு வாங்கி தொழிலில் கொட்டியிருக்கும் தயாரிப்பாளர்கள் தொடங்கி தினக்கூலி வாங்கும் ஃபெப்ஸி யூனியன் தொழிலாளர்கள் வரை எதிர்காலம் என்னவாகுமோ என்று அச்சத்தில் உறைந்துள்ளனர்.

பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட ரஜினியின் ‘அண்ணாத்த’, கமல்ஹாசனின் ‘இந்தியன் - 2’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட பெரிய படங்களும் ஏராளமான சிறு பட்ஜெட் படங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. ‘இந்தியன் 2’, ஆரம்பத்திலிருந்தே பல சிக்கல்களைச் சந்தித்துவருகிறது. படப்பிடிப்பு ஆரம்பமான சில நாள்களிலேயே கமலின் உடல்நிலை, அவரின் அரசியல் கூட்டங்கள் என சில காரணங்களால் படப்பிடிப்பு அவ்வப்போது நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு, ஷூட்டிங் ஆரம்பித்து நல்லபடியாகச் சென்றுகொண்டிருக்கையில் மிகப்பெரிய விபத்து நடந்து மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. மார்ச் 23-ம் தேதி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவிருந்த நிலையில்தான் கொரோனாவால் மீண்டும் சிக்கல்.

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு

‘அண்ணாத்த’ படத்தின் மூன்றாவது ஷெட்யூல் தொடங்கப்படும் நேரத்தில், கொரோனா காரணமாக அதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, புதுச்சேரி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் தீவிரமாக நடந்தது. அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. ஏகப்பட்ட நடிகர்கள் நடிக்கும் படம் என்பதால், அந்த நடிகர்கள் நடிக்கவிருக்கும் அடுத்தடுத்த படங்களிலும் அதன் தாக்கம் இருக்கும்.

விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக பாரிஸ் சென்றிருந்த படக்குழு, உடனே சென்னை திரும்பியது.

படப்பிடிப்பில் இருக்கும் படங்களுக்கு மட்டுமல்ல, ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் படங்களுக்கும் பிரச்னைதான். விஜய்யின் ‘மாஸ்டர்’, சூர்யாவின் ‘சூரரைப் போற்று’, தனுஷின் ‘ஜகமே தந்திரம்’, ஜெயம் ரவியின் ‘பூமி’ இவை அனைத்தும் எப்படி, எப்போது வெளியாகும் எனத் தெரியவில்லை.

2018-ம் ஆண்டின் தொடக்கத்தில் 48 நாள்கள் தமிழ் சினிமாவில் வேலைநிறுத்தம் நடந்தது. அப்போது ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த பல படங்கள் நல்ல ரிலீஸ் தேதி கிடைக்காமல் தடுமாறின. அப்போதாவது பிரச்னையைச் சமாளிக்க தயாரிப்பாளர் சங்கம் இருந்தது. ஆனால் இப்போது, சங்கமே செயல்பாட்டில் இல்லை. இதனால் பிரச்னைகள் யார் மேற்பார்வையின்கீழ் தீர்வுக்கு வரும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

மார்ச் 31-ம் தேதி வரை எந்தப் படமும் திரையிடப்படாது என்ற நிலையில், ஏற்கெனவே இந்தத் தேதிகளில் தங்களது படத்தை வெளியிட அனுமதி வாங்கியிருந்த படங்களின் வெளியீடு தொடர்பாகவும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் தரப்பில், “நாங்கள் வாங்கிய ரிலீஸ் தேதியை அப்படியே தள்ளிவையுங்கள். பெரிய படம் வருகிறது என அதற்கு முன்னுரிமை கொடுக்காதீர்கள். உதாரணத்துக்கு, படங்கள் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து வெளியாகும் என்றால், மார்ச் 21-ம் தேதி வெளியாவதாக இருந்த படத்துக்கு முன்னுரிமை கொடுத்து அதை முதலில் வெளியிட வழிவகை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

கோலிவுட்
கோலிவுட்

கடந்த வாரம் வெளியான ‘தாராள பிரபு’ படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக அந்தப் படத்தை மூன்று நாள்களுக்குமேல் திரையிட இயலவில்லை. அதனால் அந்தப் படத்தை மீண்டும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் பிரச்னைகள் குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் பேசினோம். “இப்படி ஒரு பிரச்னையை யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால் நிச்சயமாக பெரிய பாதிப்பு ஏற்படும். ஹீரோக்கள்கூட ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகுதான், அடுத்த படத்துக்கான கால்ஷீட்டைக் கொடுப்பார்கள். ஆனால் ஹீரோயின்கள், குணச்சித்திர நடிகர்கள், காமெடி நடிகர்கள் ஆகியோரின் கால்ஷீட்டில் பெரிய குழப்பம் ஏற்படும்.

பெரும்பாலான படங்கள் கடன் வாங்கித்தான் எடுக்கப்படுகின்றன. குறிப்பிட்ட காலத்துக்கு, குறிப்பிட்ட சதவிகிதம் வட்டி கொடுக்க வேண்டும். இப்போது காலதாமத மாவதால் அதிக வட்டி கொடுக்க நேரிடும். அதனால், தயாரிப்பாளரின் லாபத்தில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் நஷ்டம் ஏற்படும். தவிர, தியேட்டர் உரிமையாளர்களிடம் இருந்து விநியோகஸ்தருக்கும் தயாரிப்பாளருக்கும் கிடைக்கும் வழக்கமான லாபமும் கிடைக்காது.

நடிகர்களின் மார்க்கெட், எதிர்பார்ப்பு, பட்ஜெட் எனப் பல விஷயங்கள் இருப்பதால் பெரிய படங்களுக்கு சிக்கல் குறைவு. சிறு பட்ஜெட் படங்களுக்கு சரியான ரிலீஸ் தேதி, புரமோஷன் உள்ளிட்ட விஷயங்கள் என பிரச்னைகள் அதிகம். கொரோனா, தமிழ் திரையுலகை மட்டுமல்ல ஒட்டுமொத்த சினிமா உலகிலும் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

கொரோனா பாதிப்பு... கடன் கூடும்... வட்டி எகிறும்...

சினிமா தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஃபெப்ஸி) தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணியிடம் பேசினோம். ‘‘ஃபெப்ஸி யூனியனில் 25,000 பேர் இருக்கிறார்கள். அதில் 15,000 பேர் தினக்கூலி வாங்குபவர்கள். இப்போது ஷூட்டிங் இல்லாததால் அவர்களுக்கு மிகப்பெரிய பணச்சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அவர்கள் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டுதான் அவர்களின் குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம் கட்டுவார்கள். தற்போது பள்ளிக்கட்டணம் கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். ஷூட்டிங் நடந்தால் மட்டுமே அவர்களின் வாழ்க்கையில் இயல்புநிலை திரும்பும்.

ஆனால், அவர்கள் இப்படிச் சந்திக்கும் சிரமங்களைவிட, அவர்களின் உயிரும் உடல்நிலையும் மிகவும் முக்கியம். எங்கள் யூனியனில் பலரும் அதிகம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். படப்பிடிப்புக்காக இன்று மும்பையில் இருந்தால் நாளை கொல்கத்தா செல்ல வேண்டியிருக்கும். அப்படி பயணிக்கும்போது கொரோனா வைரஸ் எளிதாக அவர்களைத் தாக்க வாய்ப்பிருக்கிறது. தவிர, படப்பிடிப்பில் அவ்வளவு பேர் பணியாற்றும்போது ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால்கூட, அது அத்தனை பேருக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது. ஷூட்டிங் நடக்காதது தொழிலாளர்களுக்கு சிரமம்தான். ஆனால், அவர்கள் உடல்ரீதியாக நன்றாக இருந்தால்தான் அவர்கள் குடும்பத்தையும் நன்றாக கவனித்துக்கொள்ள முடியும். விரைவில் இந்த நிலை மாறும் என நம்புகிறோம்” என்றார்.

உலகமே அந்த நம்பிக்கையில்தான் கொரோனாவை எதிர்த்துப் போராடிவருகிறது!