Published:Updated:

`இடது வென்ட்ரிகுலர் செயலிழப்பு; உயிர் காக்கும் கருவிகள்!’ - தீவிர சிகிச்சையில் பாடகி லதா மங்கேஷ்கர்

இந்திய சினிமாவின் புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

லதா மங்கேஷ்கர்
லதா மங்கேஷ்கர்

இந்தி உட்பட 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடல்களைப் பாடி இந்தியாவின் இசைக் குயில் எனப் போற்றப்படுபவர் லதா மங்கேஷ்கர். மராத்தியப் பாடல் மூலம் அறிமுகமான இவரின் இசைப் பயணம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. லதா மங்கேஷ்கர், இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் தன் 4 வயதில் பாடல்களைப் பாடத் தொடங்கிய இவர் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவரின் சகோதரிதான் பிரபல பாடகி ஆஷா போஸ்லே.

லதா மங்கேஷ்கர்
லதா மங்கேஷ்கர்

1948-ம் ஆண்டு மஜ்பூர் என்ற திரைப்படத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய பாடல் இவருக்குத் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து வந்த படங்களான பர்சாத், அந்தாஸ், துலாரி, மகால் போன்ற படங்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தன. தன் தனித்த குரலால் பல கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த லதா மங்கேஷ்கர், பாரத் ரத்னா, தாதா சாஹேப் பால்கே ஆகிய விருதுகளுக்குச் சொந்தக்காரர். திருமணம் செய்யாமலே இருந்துவிட்டார்.

90 வயதான லதா மங்கேஷ்கர் தற்போது மும்பையில் தன் குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். இவருக்கு நேற்றுமுன் தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென சுவாசப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. உடனடியாக பிரெச் கேண்டி (Breach Candy) மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவருக்குத் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. பின்னர், நேற்று பிற்பகல் மீண்டும் உடல்நிலை மோசமானதால் ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

லதா மங்கேஷ்கர்
லதா மங்கேஷ்கர்

``லதா மங்கேஷ்கருக்கு நுரையீரல் பிரச்னை உள்ளது. அதனுடன் இடது வென்ட்ரிகுலர் (இதய கீழறை) செயலிழந்துள்ளதால் அவர் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் உயிர் காக்கும் கருவிகள் மூலம் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முதல் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை” என்று பிரெச் கேண்டி மருத்துவனை மருத்துவர் ப்ரதித் சம்தானி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் தற்போது குறிப்பிட்டுள்ளனர்.