Published:Updated:

பாலிவுட் முதல் கோலிவுட் வரை பாடம் எடுத்த ‘மாஸ்டர்’

மாஸ்டர்
பிரீமியம் ஸ்டோரி
News
மாஸ்டர்

லெட் மீ டெல் எ சக்சஸ் ஸ்டோரி!

2020 இந்தியா வல்லரசு ஆகும் என்று அப்துல் கலாம் கனவு கண்ட ஆண்டு. ஆனால் ஒட்டுமொத்த உலகமே கொரோனாவாலும் பொது முடக்கத்தாலும் முடங்கிப்போனது. அது தமிழ் சினிமாவையும் பாதித்தது.

ரஜினிகாந்தின் `தர்பார்’, தனுஷின் `பட்டாஸ்’ என அதிரடியாகத்தான் அந்த ஆண்டை ஆரம்பித்தது தமிழ் சினிமா. இன்னொருபுறம் `நான் சிரித்தால்’, `ஓ மை கடவுளே’, `கன்னி மாடம்’, `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என அறிமுக இயக்குநர்களின் படங்களும் மார்ச் மாதம் வரை திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றுவந்தன. ஏப்ரல் 9ஆம் தேதி கோடை விடுமுறைக்காக `மாஸ்டர்’ படத்தின் ரிலீஸுக்காகக் காத்திருந்த போதுதான், மார்ச் மாதத்தில் பொதுமுடக்கம் இந்தியா முழுக்க அறிவிக்கப்பட்டது. திரையரங்குகள் மூடப்பட்டன.

பாலிவுட் முதல் கோலிவுட் வரை பாடம் எடுத்த ‘மாஸ்டர்’

கடந்த சில மாதங்களாகத்தான் தமிழகம் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு மாறி வருகிறது. திரையரங்குகளும் நவம்பர் மாதம் முதல் 50 சதவிகித இருக்கை வசதியோடு திறக்கப்பட்டன. மக்கள் அச்சமின்றி திரையரங்குகளுக்கு வருவார்களா என்கிற பயத்தோடு சில படங்கள் நேரடியாக ஓ.டி.டி தளங்களில் வெளியிடப்பட்டன. தயாரிப்பாளர்கள் எடுத்த படங்களை என்ன செய்வதென்று அறியாமல், சில படங்களை தியேட்டரில் ரிலீஸும் செய்தனர். பெரிய படங்கள் எதுவும் வெளியாகாததால் ரிலீஸான படங்களையும், ரீ ரிலீஸ் செய்யப்பட்ட பழைய படங்களையும் வெகு சில மக்களே பார்த்தனர்; அதில் `ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்கு மட்டும் பரவலாகக் கூட்டம் வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழ் சினிமா தனது பழைய இயல்புக்குத் திரும்ப இவை போதுமானதாக இல்லை. தற்போது அதையெல்லாம் மாற்றி, தனது மாஸ் ஓப்பனிங் மூலம் பலருக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார், விஜய்யின் ’மாஸ்டர்.’

பாலிவுட் முதல் கோலிவுட் வரை பாடம் எடுத்த ‘மாஸ்டர்’
பாலிவுட் முதல் கோலிவுட் வரை பாடம் எடுத்த ‘மாஸ்டர்’

பொது முடக்கத்தின் ஒவ்வொரு தளர்விலும் திரைத்துறைக்குத் தளர்வுகள் இருக்குமா, திரையரங்குக்குத் தளர்வுகள் இருக்குமா என்ற ஏக்கம் எழுந்தது. ‘படப்பிடிப்புக்குத் தளர்வு; 50 சதவிகித இருக்கைகளோடு திரையரங்குகள் இயங்கலாம்’ என்ற அறிவிப்புகள் நம்பிக்கையை அளித்தன. ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரை திரையரங்குகள் செயல்படாமல் இருந்த சமயத்தில் ‘மாஸ்டர்’ படத்தை ஓ.டி.டியில் ரிலீஸ் செய்வதற்கு பேச்சுவார்த்தை நடக்கிறது என்ற செய்தி திரையரங்கு உரிமையாளர்களுக்கு வருத்தமளித்து வந்தநிலையில், `மாஸ்டர்’ படம் திரையரங்கில்தான் வெளியாகும் எனத் திட்டவட்டமாக அறிவித்தது படக்குழு. 50 சதவிகித இருக்கை அளவை அதிகரித்தால், `மாஸ்டர்’ படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாம் எனப் படக்குழு முயற்சி எடுத்த நிலையில், படத்தைத் தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும், உலகின் வேறு எந்தப் பகுதியிலும் வெளியிட முடியாது என்பதால் தீபாவளி ரிலீஸ் தள்ளிப்போனது.

பாலிவுட் முதல் கோலிவுட் வரை பாடம் எடுத்த ‘மாஸ்டர்’
பாலிவுட் முதல் கோலிவுட் வரை பாடம் எடுத்த ‘மாஸ்டர்’

நாளடைவில், இந்தியா முழுக்க கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதும், மத்திய - மாநில அரசுகளின் பொது முடக்கத் தளர்வுகளும் தொழில்துறை வாய்ப்புகளுக்கு உதவியாக அமையத் தொடங்கின. ‘மாஸ்டர்’ படக்குழுவும் படத்தை இந்தியா முழுக்க பொங்கலுக்கு வெளிக்கொண்டுவரத் திட்டமிட்டது. இருப்பினும் ‘ஒரு துறையை முழுவதுமாக சீரமைக்க ஒரு தயாரிப்பாளரையோ, படத்தையோ பலி ஆடாக ஆக்க முடியுமா; பெரிய பொருட்செலவில் எடுத்த படத்திற்கு நிகராக திரையரங்குகளுக்கு மக்கள் வருகை இல்லையெனில் தயாரிப்பாளரின் நிலை என்னவாகும்’ என்ற தயக்கமும் தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் இருந்தது. இந்த அச்சத்தை முன்வைத்தே, 50 சதவிகித இருக்கைகள் என்ற விதியைத் தளர்த்திட சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களைத் தமிழ்த் திரையுலகினர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர். இதன் பிறகு, நடிகர் விஜய் தமிழக முதல்வரைச் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து ‘100 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கலாம்’ என்ற அறிவிப்பும் வெளியானது. பட ரிலீஸ் வேலைகளும் வேகமாக நடந்தன. ஆனால் மத்திய அரசின் அறிவுறுத்தல், நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றால் ‘50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி’ என்ற நிலை உருவானது.

பாலிவுட் முதல் கோலிவுட் வரை பாடம் எடுத்த ‘மாஸ்டர்’

100 சதவிகித இருக்கைகள் என்கிற ஆவலோடு பட ரிலீஸ் வேலைகளைச் செய்துகொண்டிருந்த படக்குழுக்கு, இந்த 50 சதவிகித மாற்றம் ஒரு பின்னடைவாக இருந்த அதே வேளையில்தான், `மாஸ்டர்’ படத்தின் சில காட்சிகளும் இணையத்தில் லீக் ஆகி, அது சமூக வலைதளங்களில் அதிகமாகவும் பகிரப்பட்டது. இதனால், மன உளைச்சலில் இருந்த படக்குழுவுக்கு, `மாஸ்டர்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சி மருந்தாக இருந்திருக்கும். ஏனென்றால், எந்த மாற்றமும் இல்லாமல் தமிழகமெங்கும் அதிகாலை 4 மணிக்கு `மாஸ்டர்’ படம் வெளியானது. முதல் இரண்டு காட்சிகளுக்குப் பல திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கை அளவைக் கடைப்பிடிக்காமல், 100 சதகிவித இருக்கைகளோடு இயக்கினாலும், அடுத்தடுத்த காட்சிகளில் அதைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தமிழகம் முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்ததைப் போலவே, கேரளாவிலும், தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான ஆந்திராவிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல்முறையாக விஜய்யின் படம் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு, மும்பைத் திரையரங்குகளிலும் வெளியானது. இந்தியில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், அக்‌ஷய் குமார், ஆயுஷ்மான் குரானா எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களே ஓ.டி.டியில் ரிலீஸாக, இந்தியில் டப் செய்யப்பட்ட ஒரு தமிழ்ப்படம், மும்பையில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரவேற்பைப் பார்த்தபிறகு, கிட்டத்தட்ட ஓ.டி.டி வெளியீட்டுக்குத் தயாராக இருந்த தனது `ராதே’ படத்தைத் திரையரங்குகளிலேயே வெளியிட முடிவெடுத்திருக்கிறார் சல்மான் கான்.

பாலிவுட் முதல் கோலிவுட் வரை பாடம் எடுத்த ‘மாஸ்டர்’

`மாஸ்டர்’ படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் எட்டு மாதங்களாக மக்கள் திரையரங்கிற்கு வராமல் இருந்ததாலும், பொங்கல் பண்டிகையை யொட்டிப் படம் வெளியா னதாலும், விஜய் - விஜய் சேதுபதி எனப் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட இரு நடிகர்கள் இணைந்து நடித்திருப்பதாலும் இந்தப் படத்தைப் பார்ப்பதற்காகத் தமிழகம் முழுக்க மக்கள் திரையரங்கை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். அதன் சாட்சியாகத்தான், படம் வெளியான ஒரு வாரத்திலேயே 100 கோடி வசூலை எட்டியிருக்கிறது. ஒரு பெரிய நடிகரின் படம் ஒரே வாரத்தில் 100 கோடி வசூலை எட்டுவது சாதாரணம்தான். ஆனால், தற்போது இருக்கும் அசாதாரணமான சூழ்நிலையில், இது நிகழ்ந்திருப்பதுதான், சாதாரணத்தை அசாதாரண சாதனை ஆக்கியிருக்கிறது.

இதுகுறித்து ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித் குமாரிடம் பேசியபோது, “அனுமதிக்கப் பட்ட 50 சதவிகித இருக்கைகள்தான் என்ற நிலையிலும் படம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையோடு இருந்தோம். எங்களைப் போன்றே படத்தின் மீது திரையரங்க உரிமை யாளர்களுக்கும் விநியோ கஸ்தர்களுக்கும் நம்பிக்கை அதிகமாக இருந்ததுதான் படம் ரிலீஸாகக் காரணம்” என்றார். “100 சதவிகித இருக்கை களிலிருந்து 50 சதவிகித இருக்கைகளானது; வெளிநாடுகளில் குறைவான ஊர்களில் குறைவான தியேட்டர்களில் ரிலீஸானது என இப்படிப் பல பிரச்னைகளுக்கு மத்தியில் படம் வெளியானதற்கு விஜய் என்ன சொன்னார்?” என்று கேட்டோம்.

சுப்பிரமணியம், லலித் குமார், தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு
சுப்பிரமணியம், லலித் குமார், தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு

“இந்தப் பிரச்னைகளை நாங்க அவர்கிட்ட கொண்டு போகவேயில்லை. `50 சதவிகித இருக்கைதான்’ என அரசின் அறிக்கை வந்தபோது மட்டும், ‘படத்தை ரிலீஸ் பண்றோமா?’ன்னு கேடடார். நான், `கண்டிப்பா ரிலீஸ் பண்றோம்’னு சொன்னேன்; அவ்வளவுதான். இது பெரிய ரிஸ்க்னு தெரிஞ்சுதான் படத்தை ரிலீஸ் பண்ணினோம். இன்னைக்கு ‘மாஸ்டர்’ எல்லோருக்கும் பெரிய தைரியத்தைக் கொடுத்திருக்கு” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன், `` ‘மாஸ்டர்’ படம் தியேட்டரில் வெளிவரணும்னு நான் சொன்னபோது, என்னை எல்லோரும் கிண்டல் பண்ணுனாங்க. ஆனால், இந்தப் படம் வெளியான எல்லா இடங்களிலும் இப்போ நல்லா ஓடிட்டு இருக்கு. அதையும் தாண்டி கேரளா மற்றும் வடமாநிலங்கள், சில நாடுகளில் கொரோனாவுக்குப் பிறகு வெளியாகுற முதல் படமே ‘மாஸ்டர்’தான். ‘மாஸ்டர்’ படத்தின் வசூல், சினிமாத்துறையின் உயிர்ப்புக்குப் பேருதவி செய்திருக்கு” என்கிறார்.

தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், “தீபாவளிக்கு முன்னர் 50 சதவிகித இருக்கைகளோடு இயங்க அனுமதிச்சாங்க. தியேட்டருக்கு புதுப்படங்கள் சில, ஆங்கிலப் படங்கள் இரண்டு என ரிலீஸ்கள் இருந்தும் பார்வையாளர்கள் பெரிய அளவில் வராதது மிகுந்த கவலையளிக்கிற விஷயமா இருந்துச்சு. பொங்கலுக்கு வந்த `மாஸ்டர்’, கடந்த 10 மாதங்கள் நாங்க பட்ட கஷ்டத்தையெல்லாம் போக்கி ஒரு புத்துணர்வைத் தந்திருக்கு. நிறைய தியேட்டர்களில் வேலையிலிருந்து விடுவிக்கப்பட்ட நபர்களைத் திருப்பிக் கூப்பிடும் அளவுக்கு வியாபாரத்தைத் தந்திருக்கு. இது விஜய்க்காக வந்த கூட்டம். அடுத்து, அஜித்துக்கு வரலாம். அதைத்தாண்டி அந்தந்த நடிகர்களுக்கு என்ன வியாபாரமோ அதுவே நடக்கும். நல்ல படம் என்றால் கண்டிப்பாக மக்கள் கூட்டம் வரும். ஆங்காங்கே சில விதிமுறை மீறல்கள் முதல்நாள் மட்டுமே இருந்தது. அதுவும் கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டத்தினால், வேலையாட்கள் குறைவாக இருக்கும் ஒற்றைத்திரை திரையரங்குகளில் மட்டுமே அப்படி நடந்தது. மல்ட்டிப்ளக்ஸ், காம்ப்ளக்ஸ் திரையரங்குகளில் அப்படியான விதிமீறல்கள் நடக்கவில்லை. இரண்டாம் நாள் முதல் ஒரு விதிமீறல் புகாரும் வரவில்லை” என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு “திரையரங்குக்கு வருவதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் `மாஸ்டர்’ படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன நிலையில் தமிழகத்தில் எங்கும் இதனால் கொரோனாப் பரவல் அதிகரித்ததாகத் தெரியவில்லை. இது மக்களிடம் இருக்கும் பயத்தைக் குறைத்திருக்கிறது. `மாஸ்டர்’ படத்தின் இந்த வசூல் எங்களைப்போன்ற தயாரிப் பாளர்களுக்கு மட்டுமல்லாமல், முதலீட்டாளர்களுக்கும் சினிமாவில் முதலீடு செய்யும் தைரியத்தைக் கொடுத்துள்ளது. தியேட்டர்கள் மூலமாக இருக்கும் வியாபாரம் என்னவாகும் என்ற கேள்வியையும் தகர்த்துள்ளது `மாஸ்டர்.’ ஓ.டி.டிக்காக படத்தை விற்க நினைத்த பலரும் இன்று தியேட்டர் பக்கம் திரும்பிப் பார்க்கும் நிலை வந்துள்ளது. இதே வரவேற்பு சின்ன பட்ஜெட் படங்களுக்கும் கிடைக்குமா என்ற அச்சம் வேண்டாம். அந்தந்தப் படங்களுக்கு ஏற்ற வரவேற்பு நிச்சயமாக இருக்கும்” என்றார்.

`மாஸ்டர்’ படத்தின் ஒட்டுமொத்த வியாபாரம் இந்தியத் திரையுலகுக்குப் பெரும் நிம்மதியை அளித்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஒரு துறையை மீட்டெடுக்கப் பாடுபட்ட பல்வேறு நபர்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி எனப் பாராட்டும் அதே வேளையில், கொரோனா போன்ற பெருந்தொற்று மற்றும் அதன் விளைவுகளை மனதில் வைத்து திரையரங்குகளும் பார்வையாளர்களும் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதும் அவசியம்.