சினிமா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எல்லாம் பணம் படைத்தவர்கள் என்ற பொதுப்புத்தி கருத்துதான் இன்று பலரிடமும் இருந்து வருகிறது. ஆனால், சினிமாவில் தினக்கூலிகளாக வேலை செய்பவர்கள்தாம் அதிகம் என்பதை நம்மில் பலரும் மறந்துவிடுகிறோம்.
நேற்று முன்தினம் ஈ.வி.பி-யில் நடைபெற்ற `இந்தியன் 2' படப்பிடிப்பின்போது ராட்சத கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களிலும் இவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். மேலே சொல்லப்பட்ட கஷ்டமான வேலைகளில் ஒன்றைச் செய்து வந்தவர்கள்தாம். ஒருவர் சந்திரன், இவர் கலை இயக்கக் குழுவில் உதவியாளராக இருந்தவர். அடுத்தவர் மது, தயாரிப்புக் குழுவில் உதவியாளராக இருந்தவர். மூன்றாம் நபர் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிருஷ்ணா.

இந்த மூவரும் உயிரிழந்த செய்தி, சினிமாக்காரர்களை மட்டுமல்ல, பொது மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர்கள் மூன்று பேரைத் தவிர, இந்த விபத்தில் சிக்கிய 9 பேர் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
`மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களைப் பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன். முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கின்றன. இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்.'கமல்ஹாசன்
இது ஈ.வி.பி-யில் நடக்கும் முதல் விபத்து அல்ல. இதற்கு முன்னர் அங்கு நடந்த சில விபத்துகளைக் கீழே பார்க்கலாம்.
ஈ.வி.பி தீம் பார்க்
* 2012-ம் ஆண்டு சென்னை பூந்தமல்லி அருகே ஈ.வி.பி தீம் பார்க் தொடங்கப்பட்டது. தொடங்கிய சில நாள்களிலேயே விபத்துகளும் நடக்கத் தொடங்கின. முதல் இரண்டு விபத்துகளில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாத நிலையில், மூன்றாவது விபத்தில் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தது மிகப் பெரிய சர்ச்சையானது.
* ஏப்ரல், 2012-ம் ஆண்டு இளம்பெண் ராட்டினத்திலிருந்து தவறி விழுந்து கால் முறிவு ஏற்பட்டது.
* செப்டம்பர், 2012-ல் 15 வயது சிறுவன் நீரில் சறுக்கி விளையாடும்போது தவறி விழுந்து சிறு காயங்களோடு உயிர் தப்பினான்.
* அக்டோபர், 2012-ம் ஆண்டு நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆக்டோபஸ் ராட்டினத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
இப்படித் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே அடுத்தடுத்து விபத்துகளைச் சந்தித்த ஈவிபி தீம் பார்க், இறுதியில் நில அபகரிப்பு புகாரைச் சந்தித்தது. அரசாங்க நிலத்தை ஈவிபி அபகரித்ததாக எழுந்த புகாரை அடுத்து 2012-ம் ஆண்டின் இறுதியில் தீம் பார்க் மூடப்பட்டது. அடுத்த ஆண்டே ஈவிபி படப்பிடிப்புத் தளமாக மாற்றப்பட்டது. ஈவிபி தீம் பார்க் ஈவிபி பிலிம் சிட்டியானது.
படப்பிடிப்புத் தளமாக மாறிய பின்னும் விபத்துகள் நிகழ்வது குறைந்தபாடில்லை.
காலா
2017-ம் ஆண்டு ரஜினியின் `காலா' திரைப்படத்துக்காக 5 கோடிக்கு ஈவிபியில் செட் போடப்பட்டது. செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மைக்கேல் என்ற தொழிலாளி, அவரது பணியைச் செய்துகொண்டிருக்கும்போதே மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். உயிரிழந்த மைக்கேலின் குடும்பத்துக்கு நடிகர் ரஜினி, இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் ஆகியோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

பிக் பாஸ்
பிக் பாஸ் சீஸன் 2-வுக்காக ஈவிபியில் பிரமாண்ட செட் போடப்பட்டிருந்தது. அந்த செட்டின் இரண்டாம் தளத்தில் பொருத்தப்பட்டிருந்த ஏசியில் ஏற்பட்ட கோளாறை சரி செய்துகொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்தார் ஏசி மெக்கானிக் குணசேகரன் என்பவர். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த குணசேகரனின் குடும்பத்துக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்தார் கமல்ஹாசன்.

பிகில்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த `பிகில்' படத்துக்காக பிரமாண்டமான கால்பந்து மைதான செட் ஈவிபியில் அமைக்கப்பட்டது. அந்த செட்டில் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கிரேனிலிருந்த ஃபோகஸ் லைட் தவறி, செல்வராஜ் என்பவர் தலையில் விழுந்து படுகாயம் ஏற்பட்டது. அவரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
படப்பிடிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, செல்வராஜ் குடும்பத்தினரை மருத்துவமனைக்குச் சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய், அவர் சிகிச்சைக்குத் தேவையான பண உதவிகளையும் செய்தார். 4 மாத காலம் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ், கடைசியில் சிகிச்சைப் பலனின்றி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார். இதன்பின் `பிகில்' படத் தயாரிப்பு குழு மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் செல்வராஜ் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் சொன்னதாகத் தகவல்கள் வெளியாகின.

நேற்று `இந்தியன் 2' செட்டில் நிகழ்ந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன் `பிகில்' படத்தில் நடித்த நடிகை அமிர்தா, செல்வராஜ்க்கு ஏற்பட்ட விபத்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
குறுகிய காலத்தில் இவ்வளவு விபத்துகளையும் உயிரிழப்புகளையும் ஈவிபி சந்திப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் எழத் தொடங்கியிருக்கிறது. கிரேன் மூலமாக நடந்த விபத்துகளுக்கு, இந்தப் பகுதியில் வீசும் அதிகப்படியான காற்றே காரணம் என்று ஒருதரப்பினர் கூறிவருகின்றனர்.

எது எப்படியோ, இனி அங்கு நடைபெற உள்ள படப்பிடிப்புகளில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பதே அனைவரின் ஒருமித்த வேண்டுகோளாக இருக்கிறது.