Published:Updated:

`எத்தனையோ விபத்துகளை கடந்திருக்கிறேன்.. ஆனால் இது கொடூரமானது!'- கமல்ஹாசன் #Indian2

கமல்
கமல்

``முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது. இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்" - கமல்

நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் `இந்தியன் -2' படத்தில் நடித்து வருகிறார். 2021-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக `இந்தியன்-2' மற்றும் `தலைவன் இருக்கிறான்' ஆகிய படங்களை வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் கமல் நடித்து வருகிறார்.

இந்தியன் -2
இந்தியன் -2
Twitter/@MsKajalAggarwal

`இந்தியன் -2' படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியை அடுத்துள்ள ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. நேற்றைய படப்பிடிப்பில் நடிகர் கமலும் கலந்துகொண்டார், நேற்று இரவு, படப்பிடிப்பின்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது. இந்த கிரேன் மானிட்டர் எனும் படப்பிடிப்புக் காட்சிகளைப் பார்க்கும் கூடாரம் மீது விழுந்தது. அந்தப் பகுதியில்தான் இயக்குநர் ஷங்கர், உதவி இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும் இருந்தனர்.

இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, உதவி கலை இயக்குநர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது என மூன்று பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் படுகாயமடைந்தனர். நடிகர் கமல், தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு சற்று தள்ளி நின்றதால், அவருக்குப் பாதிப்பு இல்லை. காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். கமலும் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார். ராட்சத கிரேனில் அதிக எடைகொண்ட லைட்கள் அமைக்கப்பட்டிருந்தன. உயரத்தைக் குறைக்காமல் கிரேனை இயக்கியது விபத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது. எனினும் விபத்துக்கு காரணம் இன்னும் அதிகாரபூர்வமாக சொல்லப்படவில்லை.

இதனிடையே, இயக்குநர் ஷங்கருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாயின. எனினும் அத்தத் தகவலில் உண்மை இல்லை எனவும் வதந்திகளைப் பரப்பவேண்டாம் எனவும் படக்குழுவினர் சிலர் தெரிவித்துள்ளனர். படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்ற இந்த விபத்து ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக கமல், ``எத்தனையோ விபத்துகளை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன். எனது வலியைவிட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்" என தனது வருத்ததை ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.

`எத்தனையோ விபத்துகளை கடந்திருக்கிறேன்.. ஆனால் இது கொடூரமானது!'- கமல்ஹாசன் #Indian2

தொடர்ந்து நள்ளிரவு வரையில் மருத்துவமனையில் இருந்த கமல், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இது தொடர்பாக அவர், ``மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களைப் பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன். முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது. இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்து 3 பேர் பலி #Indian2 #NowAtvikatan
இயக்குநர் ஷங்கரின் இன்ஸ்டா பதிவு
இயக்குநர் ஷங்கரின் இன்ஸ்டா பதிவு

முன்னதாக இயக்குநர் ஷங்கர் நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்பு முடியும்போது ராட்சத கிரேனில் இருக்கும் லைட்டை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, `மீண்டும் ஒருநாள் விரைவாக படப்பிடிப்பை முடித்துள்ளோம்' என மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். தற்போது அந்த கிரேன் புகைப்படம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. திரையுலகைச் சேர்ந்த பலரும் இதை ஒரு கறுப்பு தினம் எனக் கூறியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு