பிரபல மலையாள நடிகையான அம்பிகா ராவ், ஜூன் 27 திங்கள் கிழமையன்று காலமானார்.
கேரளாவின் திருச்சூரில் வசித்து வந்த அம்பிகா ராவுக்கு 57 வயது. சிறுநீரக நோய்க்காக இவர் சிகிச்சையில் இருந்ததாகத் தெரிகிறது. அச்சமயத்தில் கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் இரவில் உயிர் பிரிந்துள்ளது.
இவரின் மறைவுக்கு, திரைத்துறை பிரபலங்களான பிருத்விராஜ் சுகுமாரன், டோவினோ தாமஸ் போன்ற பலரும் சமூக வலைத்தளத்தில், இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2002-ல், பாலச்சந்திர மேனன் இயக்கத்தில் உருவான “கிருஷ்ணா கோபால கிருஷ்ணா” என்ற படத்தில், இணை இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்கியவர் அம்பிகா ராவ்.
அதனைத் தொடர்ந்து தொம்மனும் மக்களும், சால்ட் அண்டு பெப்பர், ரோமியோ, டாடி கூல், பிக் பி, ராஜமாணிக்யம் போன்ற பல படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றினார்.
இயக்குநராக மட்டுமல்லாமல் மீசை மாதவன், தமாஷா, கும்பளங்கி நைட்ஸ் முதலிய படங்களில் திரையில் தோன்றி மக்களின் மனதையும் வென்றார். ‘மற்ற மொழி நடிகர்களுக்கு ஷூட்டிங்கின்போது மலையாள வசனங்களைக் கற்றுக்கொடுப்பதில் இணையற்றவர்’ என்று சோகத்துடனும் நன்றியுடனும் பகிர்கின்றனர் கேரள திரைத்துறையினர்.
திடீரென ஏற்பட்ட அம்பிகா ராவின் மரணம், அவரின் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.