Published:Updated:

முத்துநகர் படுகொலை... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அலசும் ஆவணப்படம்!

முத்துநகர் படுகொலை
பிரீமியம் ஸ்டோரி
முத்துநகர் படுகொலை

`முத்துநகர் படுகொலை’ ஆவணப்படத்தின் போஸ்டர் வெளியானபோதே ஸ்டெர்லைட் ஆதரவாளர்களால் எதிர்ப்புகள் கிளம்பின. காவல்துறையால் இயக்குநருக்கு நெருக்கடியும் கொடுக்கப்பட்டது

முத்துநகர் படுகொலை... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அலசும் ஆவணப்படம்!

`முத்துநகர் படுகொலை’ ஆவணப்படத்தின் போஸ்டர் வெளியானபோதே ஸ்டெர்லைட் ஆதரவாளர்களால் எதிர்ப்புகள் கிளம்பின. காவல்துறையால் இயக்குநருக்கு நெருக்கடியும் கொடுக்கப்பட்டது

Published:Updated:
முத்துநகர் படுகொலை
பிரீமியம் ஸ்டோரி
முத்துநகர் படுகொலை

இந்தியத் துணைக்கண்டத்தையே உலுக்கியெடுத்தது 2018-ம் ஆண்டு நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய 100-வது நாள் பேரணியில், காவல்துறை நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தக் கோரச் சம்பவம் நிகழ்ந்து, மே 22-ம் தேதியுடன் நான்காண்டுகள் நிறைவடைகின்றன. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய, விசாரணை ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன், துப்பாக்கிச்சூடு குறித்து 3,000 பக்க விசாரணை அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மே 18 அன்று வழங்கினார். இந்நிலையில், `முத்துநகர் படுகொலை’ எனும் பெயரில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைப் புலனாய்வு செய்து, மறைக்கப்பட்ட உண்மைகளைத் தோண்டியெடுத்து ஒரு முழு ஆவணப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் எம்.எஸ்.ராஜ்.

முத்துநகர் படுகொலை... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அலசும் ஆவணப்படம்!

ஏற்கெனவே, `மெரினா புரட்சி’ எனும் பெயரில் 2017 ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதிநாளில் நடந்த வன்முறைச் சம்பவங்களின் பின்னணியை ஆவணப்படமாக இயக்கி, தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தார் எம்.எஸ்.ராஜ். வரும் மே 20-ம் தேதி, ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள `முத்துநகர் படுகொலை’ ஆவணப்படம் குறித்து அவரிடம் பேசினோம். `` `தமிழ்நாட்டின் ஜாலியன்வாலா பாக் படுகொலை’ என்றுதான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைச் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு மிகக் கொடூரமாக நமது காவல்துறையைக்கொண்டே மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஓர் அரச வன்முறை அது. இந்த ஆவணப்படத்தின் மூலம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குக் காரணமானவர்கள் யார்... எப்படியெல்லாம் காவல்துறையால் விதிமுறைகள் மீறப்பட்டன... உண்மையில் உயிரிழந்தவர்கள் மொத்தம் எத்தனை பேர்... இப்போது அவர்களின் குடும்பத்தினர் என்ன நிலையில் இருக்கிறார்கள்... என அத்தனை திரைமறைவு ரகசியங்களையும் ஆதாரத்துடன் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறோம். மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு, வேதாந்தா நிறுவனம் தந்திரமாக முயன்றுவருகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான குரலை வலுப்படுத்தும்விதமாக இந்த ஆவணப்படம் இருக்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும், குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைக்க வேண்டும் என்பதே இப்படத்தின் நோக்கம்” என்றார்.

முத்துநகர் படுகொலை... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அலசும் ஆவணப்படம்!

`முத்துநகர் படுகொலை’ ஆவணப்படத்தின் போஸ்டர் வெளியானபோதே ஸ்டெர்லைட் ஆதரவாளர்களால் எதிர்ப்புகள் கிளம்பின. காவல்துறையால் இயக்குநருக்கு நெருக்கடியும் கொடுக்கப்பட்டது. டிரெய்லர் வெளியானபோது, படத்தைத் தடைசெய்ய வேண்டும் எனக் கோரி, வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் நீதிபதியின் அறிவுறுத்தலின்பேரில் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. அதேசமயம், சிங்கப்பூரில் நடைபெற்ற உலகத் திரைப்படவிழாவில் சிறந்த ஆவணப்படத்துக்கான விமர்சகர்கள் விருதையும், டெல்லியில் நடைபெற்ற தாதா சாஹேப் பால்கே திரைப்படவிழாவில் சிறந்த ஆவணப்படத்துக்கான சிறப்பு விருதையும் வென்றிருக்கிறது. மேலும், பிரேசிலில் நடைபெற்ற ECOCINE திரைப்பட விழாவிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது. பல விருதுகளை அள்ளிக் குவித்துவரும் இந்த ஆவணப்படம், உலகத் தமிழர்களால் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் திரையிடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.ராஜ்
எம்.எஸ்.ராஜ்

கலையின் முக்கியமான பணி, அதிகாரத்தின் குற்றங்களை நோக்கிக் கேள்வி எழுப்புவது. அதைச் செய்திருக்கிறது ‘முத்துநகர் படுகொலை!’