Published:Updated:

தூத்துக்குடி படுகொலையில் விடைதெரியாத கேள்விகள்!

முத்துநகர் படுகொலை
பிரீமியம் ஸ்டோரி
முத்துநகர் படுகொலை

முத்துநகர் படுகொலை' ஆவணப்படம்

தூத்துக்குடி படுகொலையில் விடைதெரியாத கேள்விகள்!

முத்துநகர் படுகொலை' ஆவணப்படம்

Published:Updated:
முத்துநகர் படுகொலை
பிரீமியம் ஸ்டோரி
முத்துநகர் படுகொலை

நான்காண்டுகளாகிவிட்டன அந்தக் கோரம் நிகழ்ந்து. ஊர்வலமாக கலெக்டரிடம் மனு கொடுக்கச் சென்ற மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையில் 13 உயிர்கள் பறிபோயின. 106 பேர் படுகாயமுற்றார்கள். 4 பேர் கால்களை இழந்தார்கள். இன்றுவரை அந்தக் கொடூரத்துக்குக் காரணமானவர்கள்மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் நான்காண்டுக்கால விசாரணைக்குப் பிறகு இப்போதுதான் அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறது.

தூத்துக்குடி படுகொலையில் விடைதெரியாத கேள்விகள்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அந்தப் போராட்டத்தில் அப்பாவி உயிர்களைச் சுட்டு வீழ்த்தியது யார்? அவர்களுக்குப் பின்னணியாக இருந்தது யார்? அவர்களை இயக்கியது யார்? முதல்வருக்கே தெரியாமல் நடத்தப்பட்ட அந்தத் துப்பாக்கிச் சூட்டை யார்தான் வழிநடத்தியது? எந்தக் கேள்விக்குமே விடைதெரியவில்லை. வாகனத்தின் மேலிருந்து சுட்டவர்களை ஊடகங்கள் அடையாளம் காட்டியும் அவர்கள்மீது விசாரணையில்லை. கணவனை இழந்த மனைவியரும் பிள்ளைகளை இழந்த அம்மாக்களும் நீதி கேட்டு அதே கலெக்டர் அலுவலகத்துக்கு நடந்துகொண்டிருக்கிறார்கள். வேறு வேறு சுவாரசியங்களிலும் அழுத்தங்களிலும் அந்தக் கொடிய நிகழ்வை மக்கள் மறந்தேவிட்ட நிலையில் tamilsott, vimeo ஓ.டி.டி தளங்களில் வெளியாகியுள்ள ‘முத்துநகர் படுகொலை' என்ற ஆவணப்படம் ரத்தமும் சதையுமாக மீண்டும் அந்த நாள்களைக் கண்முன் நிறுத்துகிறது.

எம்.எஸ்.ராஜ்
எம்.எஸ்.ராஜ்

நாச்சியாள் பிலிம்ஸ், தருவை டாக்கீஸ் இணைந்த தயாரிப்பில் தூத்துக்குடியைப் பூர்வீகமாகக் கொண்ட வெளிநாடு வாழ் தமிழர்களின் பங்களிப்பில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படத்தை `மெரினா புரட்சி' படத்தை இயக்கிய எம்.எஸ்.ராஜ் இயக்கியுள்ளார். கடும் நெருக்கடிக்கு மத்தியில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும் போராட்ட முன்னணியினரையும் சந்தித்துப் பேசிய ராஜ், போராட்டம், துப்பாக்கிச்சூட்டின் முன் பின் சம்பவங்களை அலசி நிகழ்வுகளைக் கோவையாக்கியிருக்கிறார். 68 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப்படம் ஊடகங்களில் சிறிது சிறிதாகச் சிதறிக்கிடந்த காட்சிகளைக் கோத்து உயிரைப் பதைபதைக்க வைக்கிறது.

‘‘இந்த ஆவணப்படத்தை எடுத்ததற்கான நோக்கம், காவல் வன்முறையின் விளைவுகளை சர்வதேச சமூகத்தின் முன் நிறுத்துவதும், நீதிக்காக ஏங்கும் பாதிக்கப்பட்டோரின் மனக்குமுறலை வெளிப்படுத்துவதும்தான். இதற்காக பல சவால்களை எதிர்கொண்டேன். சட்டம், நீதி, விதிமுறைகள், வரையறைகள் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு நிறுவனத்துக்காகத் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் இவை. இந்த வன்முறைக்குக் காரணமான வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பதவி உயர்வுபெற்று வேறு வேறு பணிகளுக்குச் சென்றுவிட்டார்கள். குறைந்தபட்சம் அவர்கள்மீது முறையான விசாரணைகூட நடத்தப்படவில்லை. சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சியில் இருந்தது. அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்து ஓராண்டாகிவிட்டது. அவர்களும் தவறிழைத்தவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தச் சம்பவத்தின் பின்னணியை அலசி சர்வதேச சமூகத்தின் முன் வைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த ஆண்டு இந்த முயற்சியைத் தொடங்கினோம். ஜெர்மனியில் பணியாற்றும் ஜெகதீஸ், ரம்யா மெர்வின், அமெரிக்காவில் பணியாற்றும் ஜோசப் பிரமானந்த், இளங்கோவன் சந்திரன் நான்கு பேரும் கரம் கோத்தனர். நால்வருமே தூத்துக்குடியில் பிறந்தவர்கள்.

படப்பதிவுக்காகத் தூத்துக்குடிக்குள் நுழைவதே அவ்வளவு சிரமமாக இருந்தது. உயிர்களை இழந்த குடும்பங்களை யார் யார் சந்திக்கிறார்கள் என்பதை உளவுப்பிரிவு கண்காணித்துக்கொண்டேயிருக்கிறது. பெரிய யூனிட்டோடு போய் படப்பதிவு செய்ய முடியவில்லை. கேமராமேனும் நானும் மட்டுமே ஆட்டோவில் பயணித்தோம். ஸ்னோலின் அம்மாவை பெரியதாழையில் உள்ள தம்பியின் வீட்டுக்கு வரவழைத்துப் பேசினோம். போராட்டத்தின் முன்களத்தில் நின்ற கிருஷ்ணமூர்த்தியை கன்டெய்னர் லாரிகள் நிற்கும் இடத்தில் மறைவாக நின்று பேசவைத்தோம். கிளஸ்டன் வீட்டுக்கு விருந்தினர் போல போய்ப் பதிவு செய்தோம். பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள், நீதிமன்றத்தில் காவல்துறை சமர்ப்பித்த அபிடவிட்டில் உள்ள முரண்கள் எனப் பல விஷயங்களைப் பதிவு செய்துள்ளோம்.

படப்பிடிப்பில்...
படப்பிடிப்பில்...

துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதியளித்த மூன்று வருவாய்த்துறை அதிகாரிகளில் இருவர், சம்பவம் நடந்த இடத்தில் இல்லை. கலெக்டர் அலுவலகத்தில் துப்பாக்கி பிரயோகிக்க அனுமதியளித்த அதிகாரி 12 கி.மீ-க்கு அப்பால் பாத்திமா நகரிலும், திரேஸ்புரத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதியளித்த அதிகாரி 11 கி.மீ-க்கு அப்பால் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் அருகேயும் இருந்துள்ளார்கள். எந்த அடிப்படையில் இவர்கள் சூழலை உள்வாங்கி துப்பாக்கிப் பிரயோகத்துக்கு அனுமதித்தார்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லை. டி.ஜி.பி-யாக இருந்த ராஜேந்திரன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில், கலெக்டர் அலுவலகம், எப்.சி.ஐ குடோன், திரேஸ்புரம், அண்ணாநகர் பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடந்ததாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அந்தோணி செல்வராஜ் என்பவர் சுடப்பட்டது தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் வாசலில். பிரின்ஸ்டன் சுடப்பட்டது, அரசு பாலிடெக்னிக் வாசலில். இப்படி ஏராளமான முரண்களை அம்பலப்படுத்தியுள்ளோம்.

எஸ்.பி-யின் கடிதத்தின் அடிப்படையில் கலெக்டர் தடையுத்தரவு போடுகிறார். அந்த உத்தரவில் கலெக்டரின் ஒப்பீனியனே இல்லை. அந்தத் தடையுத்தரவு பற்றி மக்களுக்குத் தெரிவிக்கப்படவே இல்லை. மொத்தமாக காவல்துறையின் கையில் மாவட்டத்தை ஒப்படைத்துவிட்டு கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி, உதவி ஆட்சியர் எல்லோரும் வெளியேறிவிட்டார்கள். அதையும் சுட்டிக்காட்டியிருக்கிறோம். இந்தக் கோர காவல் வன்முறையில் 13 பேர் மட்டும் இறந்ததாகப் பதிவு செய்திருக்கிறார்கள். பரத்ராஜா, ஜஸ்டின் என இருவர் காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். அதுபற்றி எந்தப் பதிவுமே இல்லை. அதையும் இந்த ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளோம்'' என்கிறார் ராஜ்.

10 நாடுகளில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் திரையிடப்பட்டு, நீதிகோரி அவர்களிடம் கையெழுத்தும் பெற்று, ஓர் இயக்கமாக இதை முன்னெடுத்து வருகிறார் ராஜ். ‘‘விரைவில் முதல்வரிடம் அந்தக் கையெழுத்துகள் அளிக்கப்படும்'' என்கிறார். தூத்துக்குடி படுகொலைகள் மிகப்பெரும் தேசிய அவமானம். சம்பந்தப்பட்டவர்கள், பின்னணியில் இருந்தவர்கள் அனைவரின் மீதும் சமரசமில்லாமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.