Published:Updated:

`சமூக வலைதளங்களில் அவமானப்படுத்துகிறார்!’- மஞ்சு வாரியார் புகாரால் ஒடியன் இயக்குநர் கைது!

இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன், நடிகை மஞ்சு வாரியார்
இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன், நடிகை மஞ்சு வாரியார்

சினிமா ஒப்பந்தத்துக்காக தான் வழங்கிய லெட்டர் பேடுகளை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக அச்சம் ஏற்பட்டிருப்பதாகவும் நடிகை மஞ்சு வாரியார் புகாரில் தெரிவித்திருந்தார்.

கேரளத்தைச் சேர்ந்த பிரபல நடிகை மஞ்சுவாரியார். இவர் தமிழில் அசுரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 2018-ம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் ஒடியன் சினிமாவில் மஞ்சுவாரியார் நடித்திருந்தார். இந்த சினிமாவில் மோகன்லால், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்த நிலையில் நடிகை மஞ்சு வாரியார் கேரள டி.ஜி.பி-யிடம் கடந்த மாதம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

நடிகை மஞ்சுவாரியார்
நடிகை மஞ்சுவாரியார்

அந்த மனுவில், ஒடியன் சினிமா இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும், அவரது நண்பர் மேத்யூ சாமுவேலுடன் சேர்ந்து சமூக வலைதளங்களில் தன்னை அவமானப்படுத்தும் விதமாக பதிவுகள் போடுவதாகவும், சினிமா ஒப்பந்தத்துக்காக தான் வழங்கிய லெட்டர் பேடுகளைத் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக அச்சம் ஏற்பட்டிருப்பதாகவும் நடிகை மஞ்சுவாரியார் புகாரில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு குறித்து சாவக்காடு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவர் ரகசிய வாக்குமூலம் அளித்திருந்தார்.

ஆனால், இந்தப் புகாரை சட்டப்படி சந்திப்பதாக இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் தெரிவித்திருந்தார். இதையடுத்து, வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷார்ட் உள்ளிட்ட சில ஆதாரங்களை மஞ்சுவாரியார் போலீஸிடம் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து நேற்று மாலை திருச்சூர் போலீஸ் கிளப்பில் வைத்து இயக்குநர் ஸ்ரீமார் மேனனிடம் போலீஸார் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினர். இரவு எட்டு மணிவரை நடந்த விசாரணையில் நடிகை மஞ்சுவாரியாரின் புகாரில் உண்மை இருப்பதாக போலீஸாருக்குத் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் கைது செய்யப்பட்டார்.

இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன், நடிகை மஞ்சு வாரியார்
இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன், நடிகை மஞ்சு வாரியார்

இந்த நிலையில், இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தார். இதையடுத்து, இரண்டுபேர் ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு குறித்த விரிவான விசாரணைக்கு அடுத்த வாரம் ஆஜராக வேண்டும் என்று ஸ்ரீகுமார் மேனனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு