Published:Updated:

இளைய நிலா பொழிந்த ஆர்க்கெஸ்ட்ரா!

எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.பி.பாலசுப்ரமணியம்

அவர்கூட லண்டன் சிம்பொனி ஹால்ல நிகழ்ச்சி நடத்தினதை மறக்கவே முடியாது.

இளைய நிலா பொழிந்த ஆர்க்கெஸ்ட்ரா!

அவர்கூட லண்டன் சிம்பொனி ஹால்ல நிகழ்ச்சி நடத்தினதை மறக்கவே முடியாது.

Published:Updated:
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.பி.பாலசுப்ரமணியம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் எனும் இசை சகாப்தம் தாமரைப்பாக்கத்தில் மீளா உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது. பாடகர், இசையமைப்பாளர், நடிகர் எனப் பன்முகம் கொண்டு சாதனை படைத்த எஸ்.பி.பியின் வாழ்க்கை ஆர்க்கெஸ்ட்ராவில்தான் தொடங்கியது. உலகம் முழுக்க எத்தனையோ நாடுகளில் இவர் குரல் ஒலித்திருக்கிறது. மாபெரும் இசை ஆளுமையான எஸ்.பி.பி சக இசைக்கலைஞர்களிடம் எப்போதும் தன் மேதைமையைக் காட்டியதில்லை. அவர் வார்த்தைகளிலும் செயல்பாடுகளிலும் பணிவும் அன்பும் அக்கறையும் நிறைந்திருக்கும் என்கிறார்கள் ஆர்க்கெஸ்ட்ராவில் அவருடன் பணியாற்றியவர்கள்.

“அவர் எவ்வளவு பெரிய ஜாம்பவான்... ஆனா, அதை வெளிக்காட்டவே மாட்டார். பல நாடுகளுக்குப் போயிருக்கோம். படத்துக்கான ரெக்கார்டிங்ல எப்படிப் பாடுவாரோ அதேமாதிரிதான் மேடையிலயும் பாடுவார். ‘எந்த மொழியில பாடினாலும் வார்த்தைகளுடைய பொருளைப் புரிஞ்சுக்காமப் பாடக்கூடாது’ன்னு சொல்வார். நிகழ்ச்சிக்கு வந்தா, நாங்க எந்தெந்தப் பாடல்களுக்கு ரிகர்சல் பண்ணிருக்கோம்ன்னு கேட்டு அதைத்தான் பாடுவார். ‘நான் பாடுற பாடலுக்கு வாசிங்க’ன்னு சொல்லமாட்டார். சில இடங்களில் ஆடியன்ஸ் விரும்பி ‘இந்தப் பாடலைப் பாடுங்க’ன்னு கேட்கும்போது, ‘நோ’ சொல்லாமல் ஒரு சரணமாவது பாடுவார்.

இளைய நிலா பொழிந்த ஆர்க்கெஸ்ட்ரா!

அவர்கூட லண்டன் சிம்பொனி ஹால்ல நிகழ்ச்சி நடத்தினதை மறக்கவே முடியாது. பாடல் குறிப்புகளைத் தெலுங்குல எழுதி வச்சுக்குவார். ‘தாய்மொழிக்கு ஒரு பவர் இருக்கு’ன்னு சொல்வார். வாசிக்கிறது அவருக்குப் பிடிச்சிடுச்சுன்னா, உடனே மேடையிலேயே பாராட்டுவார். கடைசியா, மனோ சாருடைய பொண்ணு கல்யாணத்துல கச்சேரி பண்ணினோம். மருத்துவமனையில இருந்து வந்ததும் பெண் பாடகர்கள் பாடின பாடல்களை இவர் குரல்ல பாடுறமாதிரி ஒரு கான்சர்ட் பிளான் பண்ணியிருந்தோம். ஆனா, அது நடக்காமப்போயிடுச்சு. அவர் பாடல்களைக் கேட்டுதான் நாங்க இந்தத் துறைக்கு வந்தோம். அவர் பாடல்கள்தான் எங்களுக்குச் சோறு போடுது. அவர் இல்லைன்னு நினைச்சுப் பார்க்கவே முடியலை” என்கிறார் ‘சாதகப் பறவைகள்’ சங்கர்.

இளைய நிலா பொழிந்த ஆர்க்கெஸ்ட்ரா!

‘லஷ்மண் ஸ்ருதி’ லஷ்மண், தளுதளுத்த குரலில் பேசுகிறார். “சுமார் 300 நிகழ்ச்சிகளுக்கு மேல அவர் எங்க ட்ரூப்ல பாடியிருக்கார். பத்து நாடுகளுக்கு அவர்கூட பயணம் பண்ணிருக்கோம். காஞ்சிபுரத்துல ஒரு நிகழ்ச்சி. 20 வருஷத்துக்கு பிறகு, எஸ்.பி.பி சார் அந்த ஊருக்கு வந்திருக்கார். 20,000 பேர் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கக் கூடியிருக்காங்க. சரியான மழை. முழங்கால் வரை தண்ணீர் நிக்குது. ஆனா மக்கள் கலையல. மழை கொஞ்சம் நின்ன பிறகு, எஸ்.பி.பி சார்கிட்ட ‘என்ன பண்ணலாம்’னு கேட்டோம். ‘நிகழ்ச்சி நடத்தலைன்னா என்னாகும்?’னு கேட்டார். ‘இதை ஏற்பாடு பண்ணுனவங்க நஷ்டமாவாங்க. நீங்க வருவீங்கன்னு 20,000 ரசிகர்கள் காத்திட்டிருக்காங்க’ன்னு சொன்னோம். உடனே மேடைக்கு வந்து நாலு மணி நேரம் பாடினார்.

ஒருமுறை அயர்லாந்து, ஸ்காட்லாந்து நாடுகளுக்கு நிகழ்ச்சிகளுக்காகப் போயிருந்தோம். அடுத்தடுத்து ரெண்டு நிகழ்ச்சிகள். இடையில ஐந்து நாள்கள் இடைவெளி. அப்போ அவருடைய அம்மா தவறிட்டாங்கன்னு செய்தி வருது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சவங்களே ‘நிறுத்திடலாம்’னு சொல்லிட்டாங்க. ஆனா, ‘கடல் கடந்து வந்து இங்க இருக்கிறவங்க எல்லோரும் குடும்பமா சேர்ந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணியிருக்காங்க. எனக்காக இதை கேன்சல் பண்ணவேண்டாம். நான் ஊருக்குப் போயிட்டு வந்திடுறேன்’னு சொல்லி அந்த ஐந்து நாள்களில் ஊருக்கு வந்து அம்மாவுக்கு அஞ்சலி செலுத்திட்டு மறுபடியும் நிகழ்ச்சிக்கு வந்துட்டார். எந்த வருத்தத்தையும் வெளிக்காட்டாம அவ்ளோ ஜாலியா பாடி அந்த மக்களை சந்தோஷப்படுத்தினார். ‘என்ன மனுஷன்யா இவர்’னு தோணுச்சு.

கூடப் பாடுறவங்க, இசைக் கலைஞர்கள், சவுண்ட் இன்ஜினீயர்கள், செட் போட்டவங்கன்னு எல்லோரையும் கூப்பிட்டுப் பாராட்டுவார். அவர் இல்லாத இசைக் கச்சேரிகள் எப்படியிருக்கும்னு நினைச்சுப்பார்க்கவே முடியலை” என்கிறார்.

இளைய நிலா பொழிந்த ஆர்க்கெஸ்ட்ரா!

எஸ்.பி.பியோடு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் கிட்டாரிஸ்ட் அலெக்ஸ். “எஸ்.பி.பி மேடையில ஏறும்போது ஒரு சிங்கம் ஏறுற மாதிரி இருக்கும். ஒருமுறை ‘சங்கராபரணம்’ படத்துல வர்ற பாடலைப் பாடினார். அப்போ ஒரு சின்ன கேப் வரும். ஆனா, நான் வாசிக்கிறதுக்கு மேலேயே பாடிட்டார். உடனே நிறுத்திட்டு, என்னைப் பார்த்தார். ‘தப்பு பண்ணிட்டோம். திட்டப்போறார்’னு நினைச்சேன். ஆனா அவர், ‘ஸாரி ஸாரி... அந்த இடத்துல சின்ன கேப் வரும். என் மிஸ்டேக்தான் ஸாரி... முதல்ல இருந்து போலாமா?’ன்னு கேட்டார். அவர் இருக்கிற இடத்துக்கு இப்படியெல்லாம் கேட்கணும்னு அவசியமே இல்லை. எங்க நிகழ்ச்சிக்கு எஸ்.பி.பி சார் வந்தா, முதல்ல பாடுறது ‘இளைய நிலா பொழிகிறது’தான். அந்தப் பாடல்ல முதல்ல கிட்டார் சவுண்ட்தான் வரும். என்னைப் பார்ப்பார். நான் ‘தம்ப்ஸ் அப்’ காட்டினவுடன் அவர் வாய்ஸ் எடுப்பார். ரொம்பப் பதற்றமாவும் சந்தோஷமாவும் இருக்கும். அவர் இல்லாம ‘இளைய நிலா’ பாடலை நினைக்க முடியலை” என்கிறார் மிகுந்த வருத்தத்துடன்.

“நிறைய வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கு எஸ்.பி.பி சார்கூட போயிருக்கேன். ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ பாடல்ல ட்ரம்பெட் சவுண்ட் அதிகமா இருக்கும். அந்தப் பாடலை அவர் பாடப்போறார்னா எனக்கு ரொம்பவே சந்தோஷமாகிடும். அவரை அண்ணன்னுதான் கூப்பிடுவேன். என் பெயர் பாஸ்கர். ஆனா, அவர் என்னை ‘பாக்ஸர்’னு கூப்பிட்டுக் கலாய்ப்பார். அவர் இல்லாதது பெரிய வெறுமையை உருவாக்கியிருக்கு...” என்று கலங்குகிறார் ட்ரம்பெட் கலைஞர் பாஸ்கர்.

“எல்லோரும் மைக்கை எடுத்தவுடன் ‘செக்... செக் 123’னு வழக்கமா சொல்லுவோம். அது அவருக்குப் பிடிக்காது. ‘என்ன செக்... கேஷ்னு சொல்லிக்கிட்டு... எத்தனையோ கடவுள் பெயர்கள் இருக்கு. அதையெல்லாம் சொல்லலாமே’ம்பார். ஒரு முறை அவர்கூட நான் பாடும்போது என் மைக் வேலை செய்யலை. என்னைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் என்னுடைய போர்ஷனையும் பாடிட்டார். எனக்கு ரொம்ப சங்கடமாப்போயிடுச்சு. பேக் கிரவுண்ட் மியூசிக் போய்க்கிட்டிருக்கும்போது, ‘என்னம்மா என்னாச்சு?’ன்னு மெதுவா கேட்டார். ‘மைக் வொர்க் ஆகலை சார்’னு சொன்னவுடன், அவரே வேறொரு மைக் வாங்கி செக் பண்ணிக் கொடுத்தார். பாடும்போதே ‘சூப்பர் சூப்பர். நல்லாப் பாடுறீங்க’ன்னு பாராட்டி ஊக்கப்படுத்துவார். உச்சரிப்புகளைச் சொல்லிக்கொடுப்பார். அவர்கூட பாடும்போது அவ்ளோ கத்துக்கலாம். அவர் நிகழ்ச்சிக்கு வர்றார்னா, வீட்டு விசேஷம் மாதிரி இருக்கும். இடையில ராஜா சாருடைய பாடல்களைக் கொஞ்ச நாள்கள் பாடாமல் இருந்தார். அந்தப் பிரச்னை சரியானவுடனே ரொம்ப சந்தோஷப்பட்டோம். ஆனா, இனிமே எஸ்.பி.பி சாரே இல்லைன்னு நினைச்சா கலக்கமா இருக்கு” என்று வருந்துகிறார்கள் பாடகிகள் சியாமளாவும்் கவிதாவும்.

இசையால் பலரது வாழ்க்கையை மாற்றிய எஸ்.பி.பி, பலநூறு பேருக்கு வாழ்க்கையாகவும் வாழ்வாதாரமாகவும் இருந்திருக்கிறார். நிறைய உள்ளங்கள் இன்னும் அவரது மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் கலங்கித் தவித்துக்கொண்டிருக்கின்றன!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism