பிரீமியம் ஸ்டோரி
ப்பாவின் மறைவுச் செய்தியைக் கேட்டு ஊர் திரும்புகிறார் மகன். அதையொட்டி நிகழும் சம்பவங்களும், குறும்புக்கார அப்பா செய்யும் தகிடுதத்தங்களும்தான் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ‘ஏலே’ திரைப்படம்.

அப்பாவின் மரணத்துக்குத் துளிக் கண்ணீர் சிந்தாமல், முழுதாக சாப்பிட்டுவிட்டு தேமே என ஒருவன் நிற்பதற்கான காரணங்கள் என்ன? அவன் வாழ்வில் அவனுக்குத் தெரியாமல், அப்பா செய்த விஷயங்கள் அவனை அழுத்த ஆரம்பிக்கிறது. அவனையும் அறியாமல் அப்பாவுக்காக மகன் நிற்பது, ‘என்ன இருந்தாலும் அவர் எங்க அப்பா’ என எமோஷனல் கதையை இந்த முறை சொல்ல முயன்றிருக்கிறார் ஹலீதா ஷமீம்.

MOVIE
MOVIE
சினிமா விகடன் : OTT கார்னர்

அப்பா என்னும் வார்த்தைக்குப் பொருந்தாத தந்தையின் வாழ்க்கையைப் பின்னோக்கி அசைபோடும் மகனாக மணிகண்டன். டீன் ஏஜ் கதாபாத்திரமும் சரி, அதற்குப் பின்னான பகுதிகளும் சரி, மணிகண்டன் ஒவ்வொரு படத்திலும் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை நிலைநிறுத்திக்கொண்டே இருக்கிறார். சூதாடித் தீர்ப்பதும், ஊர் முழுக்க ஒரண்டை இழுப்பதுமாக அட்வைஸ் செய்யாத மாறுபட்ட வேடத்தில் சமுத்திரகனி. அதனாலேயே அவரைப் பார்க்க நிம்மதியாக இருக்கிறது. மணிகண்டனின் காதலியாக மதுமதி பத்மநாதன். குறையில்லாத நடிப்பு. சமுத்திரக்கனி, மணிகண்டன் தவிர படத்தில் தெரியும் அநேக முகங்கள் அந்தக் கிராமத்து நடிகர்கள். அதனாலேயே அந்தக் காட்சிகள் இயல்பாக இருக்கின்றன.

கிராமத்துப் படங்களுக்கே உரிய கதைக்களம், அதைச் சார்ந்த காட்சிகள் எனப் படத்தில் நம்மைச் சிரிக்க வைக்க ஓராயிரம் இடங்கள் இருந்தும், அந்த இடங்கள் சரியாக முழுமைபெறவில்லை. ஒரு கட்டம் வரைக்கும் கதை எதை நோக்கி நகர்வது என்கிற தெளிவில்லாமல் அலைபாய்கிறது திரைக்கதை. அதனாலேயே படம் ரொம்பவே நம் பொறுமையைச் சோதிக்கிறது. அதேபோல், இன்னொரு சமுத்திரகனிக்கான டப்பிங் சுத்தமாக எடுபடவில்லை. படத்தொகுப்பாளர் ரேய்மண்ட் டெர்ரிக் இன்னும் தாராளமாகவே கத்தரி போட்டிருக்கலாம்.

எமோஷனல் கதைக்கு இன்னும் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்துக் காட்சிகள் இணைத்திருந்தால், நாமும் ‘ஏலே’வுக்கு ஓகே சொல்லியிருக்கலாம்.

தீனி

MOVIE
MOVIE
சினிமா விகடன் : OTT கார்னர்

வ்வொரு படத்துக்கும் தனித்தனியாகக் காசு கட்டிப் பார்க்கும் Zee5-ன் Zeeplex-ல் வெளியாகியிருக்கிறது அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா நடித்திருக்கும் இந்தப்படம். அடிக்கடி தசை இழுப்பினால் பாதிக்கப்படும் செஃப் அசோக் செல்வன், லண்டனின் பிரபல செஃப் (நாசர்) ஒருவரின் ரெஸ்டாரன்ட்டுக்கு வேலைக்குச் செல்கிறார். அங்கு வேலை பார்ப்பவர்களெல்லாம் முசுடு நாசருக்கு அஞ்சி நடுங்க, அசோக் அவருக்கு சமைத்துக்கொடுத்தே இம்ப்ரஸ் செய்கிறார். அங்கிருந்து மெல்ல நகரும் கதை, அசோக், நாசர், உடன் பணியாற்றும் ரிது வர்மா இவர்களின் பின்னணியைத் தொட்டுச் சென்று முடிகிறது. குழந்தைகளே கணித்துவிடக்கூடிய திரைக்கதைதான். ஆனால் அதை ஜாலியாகச் சொன்னவிதத்தில் கரைசேர்கிறது தீனி. பாடல்கள் ஓகே ரகம். வசனங்கள் ஆங்காங்கே ரசிக்க வைத்தாலும் சில இடங்களில் இயல்பிற்கு மீறியதாய் உள்ளன. அஞ்சலிப் பாப்பாவின் மேனரிசம் பயிலும் நித்யா மேனன்தான் படத்தின் பலவீனம். சமையலை மையமாக வைத்து வெளியாகும் படங்கள் மிகக்குறைவே என்பதால், ஒரு வீக்கெண்டில் குடும்பமாய் உட்கார்ந்து பார்க்கும் ஃபீல் குட் பட வகை இது.

வாண்டாவிஷன்

SERIES
SERIES
சினிமா விகடன் : OTT கார்னர்

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் பிரமாண்ட ‘அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்’ படத்துக்குப் பிறகு அதன் இரு முக்கிய பாத்திரங்களான வாண்டா மேக்ஸிமாஃப், விஷன் காதல் ஜோடியின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதாக விரிகிறது இந்த 9 எபிசோடுகள் கொண்ட வெப்சீரிஸ். விஷனின் மரணத்துக்குப் பிறகு, அதிலிருந்து மீள்வதற்காக வாண்டா உருவாக்கும் புதிய உலகத்தில் தொடங்குகிறது கதை. அங்கிருந்து நூல் பிடித்து, பல ட்விஸ்ட்கள் அடித்து, பல புதிய கதாபாத்திரங்களைக் கண்முன் நிறுத்தி, நேர்த்தியான திரைக்கதை மூலம் நம்மை அசரடிக்கிறது. ஒரு பழங்கால சிட்காம் (அன்றாட வாழ்க்கைப்பாடுகளை மேடை நாடக பாணியில் காட்சிப்படுத்துதல்) போல விரியும் தொடக்க எபிசோடுகள், பல்வேறு காலகட்டங்களைக் கடந்து நிகழ்கால மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்குள் தஞ்சம் புகுவது சுவாரஸ்யமான யுக்தி. சிட்காம் என்பதால் அதனிடையே காட்டப்படும் விளம்பரங்களைக்கூட இவர்களே வடிவமைத்து, அதிலும் பல ரகசியங்களையும் குறியீடுகளையும் புதைத்துவைத்து ‘இது மார்வெல் படமா, நோலன் படமா’ எனக் கேட்கும் அளவிற்குச் செய்துள்ளனர். வாண்டா பாத்திரம் இப்பிரபஞ்சத்தின் அதீத சக்திவாய்ந்த ஸ்கார்லெட் விட்ச்சாக மாறுவதுதான் ஒன்லைன் என்றாலும், அதில் காதல், இழப்பு, துரோகம், சோகம் எனப் பல உணர்வுகளைப் புதைத்து, வாண்டாவுடன் நம்மையும் ஒன்றச் செய்துள்ளனர். மார்வெல் படங்களை ரசித்தவர்கள் நிச்சயம் இந்த வாண்டாவிஷனுக்கும் ஹலோ சொல்லலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு